``கண்ணனை தத்தித்தவழும் குழந்தையாக்கி தன் சின்னஞ்சிறு பாதங்களை அவன் தரையில் பதித்துத் தளிர் நடைபயிலும் அழகை மனக் கண்ணில் நினைத்துப் பார்க்காதவர்களும் நம்மில் உண்டா? ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் பதங்களில் ``ஆடாது அசங்காது வா - என்பார்.... கண்ணா'' என்ற பாடலில் சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை செவி மடுத்தால் பிறவித் துயர் களைந்திடுமே'' - எத்தனை அழகான பாடல்! இவையெல்லாமே கண்ணன் நடை பயின்றுவரும் அழகைக் காட்டும் சொற்கட்டுக்கள்.
கண்ணன் பிறந்த தினமான கோகுலாஷ்டமி அன்று அவன் நடந்து வருவது போன்ற சின்னச் சின்ன பாதங்களை நாம் கோலமாகப் போடுவதுமனதில் எழுகிறதா!
``எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் செய்வேன்'' என்றார் மகாவிஷ்ணு. துவாபர யுகத்தின் முடிவில் இந்தப்பூவுலகில் அதர்மம் தலை விரித்தாடியது. தேவர்களின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு இந்தப் பூவுலகில் அவதாரம் கொள்ளத் திருவுளம் கொண்டார்.
அதன்படியே ஆவணிமாதம் ரோஹிணி நட்சத்திரம் தேய்பிறை அஷ்டமி திதி கூடிய ஒரு நள்ளிரவில் கண்ணனின் திரு அவதாரம் நடந்தது.
அதுவும் எங்கே?
கண்ணனின் மாமனான கம்ஸனின் சிறையில். வசுதேவருக்கும் - தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கண்ணபிரான் அவதாரம் செய்தார். தனக்கு அழிவு, தேவகியின் எட்டாவது குழந்தையால்தான் என்று அசரீரியின் வாக்கைக் கேட்ட கம்சன் முதல் ஏழு குழந்தைகளையும் கொன்று விடுகிறான்.
ஆனால் எட்டாவதாகப் பிறந்த குழந்தையான கண்ணனோ, தன்னை கோகுலத்தில் கொண்டு சேர்க்கும்படி சொன்னார். காவலர்கள் மாயை வசப்பட்டு உறங்க, சிறைச்சாலைக் கதவுகள் தானாகவே திறந்தன. கண்ணனைக் கூடையில் சுமந்து வசுதேவர் கொட்டும் மழையில் யமுனைஆற்றில் இறங்குகிறார். குழந்தை நனையாமல் இருப்பதற்கு ஆதிசேஷன் குடை பிடிக்கிறார். அந்தக் குழந்தைதான் கோகுல கிருஷ்ணனாக யசோதையின் இளஞ்சிங்கமாக ஆயர்பாடியில் வளர்கிறான்.
இந்தக் கதையைத்தான் ஆண்டாள் நாச்சியார் தம் திருப்பாவையில் ``ஒருத்தி மகனாய் ஒளித்து வளர'' என்று பாடி இருக்கிறாள்.அஷ்டமி திதி ஆகாதென்று ஒதுக்கி வைக்க முடியாதபடி கண்ணபிரான் அவதாரம் செய்தது அஷ்டமி திதியன்றுதான் கோகுலாஷ்டமி என்று அவன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். இதைத்தான் நாம் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கூறுகிறோம்.
கண்ணன் இரவு பன்னிரண்டு மணிக்கு அதாவது நள்ளிரவில் பிறந்ததால் வட இந்தியாவில் அந்த நேரத்தில் பஜனை செய்து பாடல்கள் பாடுவது வழக்கம். பகலில் உபவாசம் இருந்து பட்சணங்கள் தயாரித்து மாலைச் சூரியன் மறையும் நேரத்தில் கண்ணனைப் பூஜிப்பார்கள்.கோகுலாஷ்டமி தினத்தன்று வீட்டை நன்றாகப் பெருக்கி மெழுகி வாசலில் பெரிதாகக் கோலமிட வேண்டும். வாசலிலிருந்து பூஜையறை வரையில் கண்ணன் நம் வீட்டிற்கு வருவதாக அவனுடைய சின்னஞ்சிறு சிற்றடிகளைக் கோலமிடல் வேண்டும். இப்படி சிற்றடிகளை வரைவதற்கு என்ன ஐதீகம்?
இருக்கிறதே! கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனுக்கு `நவநீத சோரன்'' என்றுகூட ஒரு பெயர் உண்டு. நவநீதம் என்றால் வெண்ணெய். இந்த வெண்ணெயைத் திருடித் தின்பவன் கண்ணன். சோரன் என்றால் திருடன். அதனால்தான் கண்ணனை `நவநீத சோரன்'' என்று அழைப்பார்கள்.
கோகுலகிருஷ்ணன் ஆயர்பாடியில் அனைத்து வீடுகளிலும் கைகள் வழிய வழிய வெண்ணெயை எடுத்து வாரி உண்பவன். அப்படி உண்ணும் பொழுது தரையில் விழுந்த வெண்ணெயை அவன் மிதித்து நடந்த பாதச் சுவடுகள்தான் கோகுலாஷ்டமியன்று நாம் வரையும் சிற்றடிகள். இந்தச் சிற்றடிகளை வைத்து தங்கள் வீட்டில் வெண்ணெய் திருடியவன் கண்ணன் தான் என்று ஆயர்பாடிப் பெண்கள் தெரிந்து கொள்வார்கள்.அந்தக் காலத்தில் வீடுகளில் நிறைய மாடுகளை வைத்திருப்பார்கள். பால் கறந்து உறை ஊற்றித் தயிராக்கி வெண்ணெய் எடுப்பது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று அந்த வெண்ணெயைத் தொட்டு பாதச் சிற்றடிகளை வரைவார்களாம். ஆனால் தற்காலத்தில் கோலமிட்டு அதாவது மாக்கோலத்தில் சிற்றடி இட்டு கண்ணனை வரவேற்கிறோம்.
மனத்தில் பக்தியுடன் கண்ணனை அழைத்தால் அவன் வரமாட்டானா என்ன?
அவல் ஒரு சிறந்த உணவு. வைட்டமின் ஏ அடங்கிய உணவு. திருப்புகழைப் பற்றிச் சொல்லும் பொழுது அருணகிரி நாத பெருமான் ``இருப்பு அவல்'' என்பார். அவலுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. அற்புதமான கதையும் உண்டு.
குசேலர் என்பவர் கண்ணனின் பால்ய நண்பர். இருவரும் குருகுலத்தில் ஒன்றாகக் குருவிடம் பாடம் படித்தவர்கள். குசேலர், சுசீலை என்னும் குணவதியை மணம் புரிந்து கொண்டு போய்விட இருவரின் சந்திப்பும் நீண்ட காலம் நிகழவில்லை. இப்படியே காலம் செல்லச் செல்ல குசேலர் 27 குழந்தைகளுக்குத் தந்தையானார். அவரை வறுமையும் பிடித்து ஆட்டியது. குடும்பம் பசியைத் தவிர வேறு எதையும் அறியவில்லை.ஒரு நாள் மனைவி சுசீலை, குசேலரிடம் வறுமை தாங்க முடியாத நிலையில் அருமை நண்பர் கண்ணபிரானிடம் போய் உதவி கேட்கும்படி கூறினாள். குசேலரும் சரியென்று கிளம்பினார். யாரையாவது பார்க்கச் சென்றால் ஏதாவது கையில் எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா? வீட்டில் எதுவும் இல்லை. இருந்த மூன்று பிடி அவலை எடுத்து குசேலரின் மேல் துண்டு கந்தையின் ஓரத்தில் முடிச்சுப் போட்டு அனுப்பினாள் சுசீலை.
நீண்ட காலமாகச் சந்திக்காத நண்பன், தற்போது உயர்ந்த இடத்தில் இருப்பவன். தன்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகத்துடன் சென்றார் குசேலர். ஆனால் அங்கு கண்ணனோ நண்பனை அடையாளம் கண்டதுடன் நில்லாமல் அதீத உபசாரம் செய்து அசத்திவிட்டான். கண்ணனும், குசேலனும் உணவு உண்டு ஓய்வாக இருந்த சமயம் குசேலனின் கந்தை முடிச்சில் இருந்ததைப் பார்த்துவிட்டார் கண்ணன்.
``அண்ணி, எனக்குக் கொடுத்துவிட்டதா! என்ன அது?'' என்று முடிச்சைப் பார்த்துக் கேட்டார்.
சங்கடத்துடன் குசேலர் அவலை எடுத்து நீட்டினார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் ரசிக்க, குசேலர் தன் வறுமையைச் சொல்லாமலேயே அங்கே குசேலரின் வீடு செல்வச் செழிப்பாக மாறியது. வறுமையைச் சொல்ல வந்த குசேலரோ சொல்லாமலேயே கூச்சப்பட்டுக் கொண்டு வீடு திரும்பிய பொழுது ஆனந்தத்தில் அதிர்ந்து போனார்.
ஒரு பிடி அவலுக்கே இத்தனை செல்வங்களை கண்ணன் அள்ளிக் கொடுத்தார் என்றால், நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்யங்களுக்கு எப்படி அள்ளிக் கொடுப்பார்?
பட்சணங்கள் செய்ய இயலாதவர்கள் வெண்ணெய், பால், தயிர், அவல், பழங்கள் வைத்து நைவேத்யம் செய்யலாம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உபவாசம் இருப்பார்கள். பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், பாகவதம், புராணங்களைப் படிக்கலாம். கண்ணன் மீது பாடல்களைப் பாடலாம். கிருஷ்ணாஷ்டகம் சொல்லி அர்ச்சிக்கலாம்.
கண்ணன் யாதவ குலத்தில் உதித்தவன் என்பதால் மாடுகளுக்குப் பழங்கள் கொடுப்பது வழக்கம். கண்ணனுடைய புல்லாங்குழல் இசைக்கு பசுக்களே மயங்கி கண்ணன் பின்னால் வந்தன என்று கண்ணனின் கதைகள் நமக்குச் சொல்லுகின்றன.
ஆலயங்களிலும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் பூஜையை முடித்துவிட்டு ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதும், அர்ச்சனை செய்வதும் பக்தர்களின் வழக்கமாகும்.
கோயில்களில் ஸ்ரீஜெயந்தியைக் கொண்டாடும் கச்சேரிகளும், சொற்பொழிவுகளும் வைப்பார்கள்.
கண்ணன் பிறந்த நாளையொட்டி கோயில்களில் பத்து தினங்கள் உற்சவம் நடத்துவார்கள். அதில் சிறந்தது உறியடி உற்சவம். பெரிய குச்சியின் நுனியில் பானை ஒன்றைக் கட்டி வைப்பார்கள். கீழிருந்து எம்பி எம்பி அடிக்க வேண்டும். அந்தப் பானை கீழேயும் மேலேயும் போக்குக் காட்டும். சரியான சமயம் பார்த்து அடிக்க வேண்டும். அப்படி அடித்தவர் வெற்றி பெறுபவர் ஆவார்.
கோகுலாஷ்டமியில் பிறந்த கோபாலன் பாரதியார் கூறியதுபோல் நண்பனாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலேசேவகனாய் வந்து காப்பான்.
0 comments:
Post a Comment