Saturday, August 23, 2008

``நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில்


கல்யாணப் பெண்ணைப் போல சந்தோஷத்துடனும், அழகுடனும், வெட்கத்துடனும், நளினத்துடனும், கருணையுடனும், காதலுடனும், கனிவுடனும் காட்சி தரும் திருநெல்வேலி காந்திமதி அம்மனை முதல் முறை பார்ப்பவர்கள், மெய்சிலிர்த்துப் போவார்கள். அம்மனின் எழிலில், வேண்டுதல் கூட மறந்து போய்விடும். தெய்வத் திருமணத்திற்கு வந்த உணர்வுதான் ஏற்படும்.
மணப்பெண்ணின் அலங்காரத்தைப் பார்க்கலாமா? தலையில் வைர மணிமுடி, இராக்குடி, திருமுகத்தில் வைரப் பொட்டு மூக்குத்தி, புல்லாக்கு, மார்பில் நவரத்ன வடம், திருவடியில் மணிச்சிலம்பு, உயர்த்திய வலக்கரத்தில் பச்சைக்கிளியுடன் கூடிய செண்டு என, தகதக தங்க ஜரிகையில் பளபளக்கும் பட்டுப் புடவை அணிந்து கண்களில் மைதீட்டி நெற்றியில் குங்குமம் தரித்து நம்மைக் கருணையுடன் அம்மன் பார்க்கும் பார்வை இருக்கிறதே... சொன்னால் தவறோ, சரியோ தெரியவில்லை. அழகு கொஞ்சும் காந்திமதியம்மனுக்கே தினமும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
எப்போதும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நெல்லை காந்திமதியை தரிசனம் செய்தாலே, திருமண பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மனே இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார் என்பதால் திருமண வரம் கியாரண்டி!நெல்லையப்பர் கோயிலின் ராஜகோபுரமே வினோதமான தோற்றத்தைக் கொண்டது. மற்ற கோயில்கள் போல ஓங்கி, உயர்ந்து காணப்படாமல், உயரமாகக் கட்டிப் பின் மேலேயிருந்து அழுத்தம் கொடுத்து தட்டி அமுக்கியது போல அடி பரந்து குட்டையான அமைப்பு! திருநெல்வேலி நகரின் மத்தியில் 850 அடி நீளமும் 756அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஆலயம். அனுபவித்து தரிசனம் செய்ய ஒரு நாளும், இறைவனின் அனுக்ரகமும் வேண்டும்.
அந்தக் காலத்தில் அம்மன் கோயிலும் சுவாமி கோயிலும் தனித்தனியாகத்தான் இருந்தன. புராணப்படி முழுவதும் கண்ட ராம பாண்டியனாலும், ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறனாலும் இவை கட்டப்பட்டன.
கி.பி.1647ல் வடமலையப்ப பிள்ளையன், இரண்டு கோயிலையும் ஒன்றாக இணைக்க, சங்கிலி மண்டபத்தை அமைத்தான் என்கிறது வரலாறு.சரி அதென்ன முழுவதும் கண்ட ராம பாண்டியன்?
இதோ அந்தக் கதை,
ஜோதி மயம்!
அந்தக் காலத்தில் மூங்கில் காடாக இருந்தது இந்தப் பகுதி. அருகில் இருந்த ஒரு தொழுவத்திலிருந்துதான் அரசனுக்கு தினசரி பால் போகும். அந்தக் கடமையைச் சரிவர செய்து கொண்டிருந்தார் ஓர் ஆயர்.
அவர் செல்லும்போது மூங்கில் காட்டில் தினசரி அவரது கால் தடுக்கி குடங்கள் கீழே விழுந்து பால் கொட்டிற்று.
தரையில் முளை விட்டிருந்த மூங்கில்தான் இதற்குக் காரணம் என்று எண்ணிய ஆயர், கோடரியால் மூங்கிலை வெட்ட, ரத்தம் கிளம்பிற்று.பதறிப்போய் மன்னரிடம் சொல்ல, அரசன் ராமபாண்டியனும் விரைந்து வந்து பார்க்க, அங்கே சிறிதாய் ஒரு லிங்கம் இருப்பது தெரிந்தது. ஆயரால் வெட்டுப் பட்ட லிங்கம்!
பரிதவித்த மன்னன் அந்த லிங்கத்திற்கு ஓர் ஆவுடையார் அமைக்க, லிங்கம் அதற்கேற்ப வளர்ந்தது. மீண்டும் ஒரு ஆவுடையார் என்று மன்னனும் 21 பீடங்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்க லிங்கமும் அதற்கேற்ப வளர்ந்தது.
சோதித்தது போதும் என்று மன்னன் ராமபாண்டியன் கைதொழ, சிவபெருமான் அவனுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். உருவத்தைக் குறுக்கி சகஜ அளவுக்கு வந்தார்.
``ஜோதி மயமாய் என்னை நீ முழுவதும் கண்டதால் உன் பெயர் இனி, `முழுவதும் கண்ட ராம பாண்டியன்' என்று அழைக்கப்படும்'' என்று ஆசி வழங்கினார்.
அந்த முழுவதும் கண்ட ராம பாண்டியன் கட்டியதுதான் இந்தக் கோயில். மூங்கில் என்றால் வேணு. எனவே வேணுவனநாதர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. தல விருட்சம் மூங்கில்தான்!
நான்கு வேதங்களும் இங்கே மூங்கிலாக இருப்பதாக ஐதிகம். ``நான் நடனம் புரியும் 21 தலங்களில் மிகவும் சிறந்த திருநெல்வேலியில் என்னுடனேயே நீங்களும் மூங்கிலாக இருங்கள்'' என்று இறைவனே கூறியிருக்கிறார் என்றால், இதன் சிறப்பை சொல்லி மாளாது.
மதுரைக்கும், நெல்லைக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. அங்கே வைகை. இங்கே தாமிரபரணி. அங்கே மீனாட்சி ஆட்சி. இங்கே காந்திமதியின் ஆட்சி. இரு நகரங்களுமே கோயிலைச் சுற்றித் திருவீதிகளாக விளங்குகின்றன. மதுரையில் பொற்றாமரைக் குளம் இருப்பதுபோல இங்கும் பொற்றாமரைத் தீர்த்தம் அமைந்திருக்கிறது!
கிழக்கு வாசலில் நுழைந்து, நந்தியையும், சூரியனையும் வணங்கி, மணிமண்டபம் செல்லும்போது அங்கேயுள்ள இசைத்தூணைக் காண மறவாதீர்கள். ஒரே கல்லில் அமைந்த 64 தூண்கள். ஒவ்வொரு தூணைத் தட்டினால் ஒவ்வொரு இசை. கி.பி.7ம் நூற்றாண்டில் கூன் பாண்டியன் அமைத்த மண்டபம் இது.
நேரே சென்றால் வேணுவனநாதர் என்னும் மூங்கில் முளையில் தோன்றிய ஈசனைக் காணலாம். மன்னனுக்காக 21 பீடங்களைத் தாண்டியும் உயர்ந்து ஜோதி வடிவில் காட்சி தந்த ஈசன் இவர்தான். இவரே அருள்மிகு நெல்லையப்பர்.
திருநெல்வேலி
வேணுவனநாதர், நெல்லையப்பர் ஆனதும் ஒரு கதை. இந்த ஊரின் பெயர் தோன்றியதும் அதே கதையில்தான்!
ராம பாண்டியனின் பிற்காலத்தில் 12 வருடங்கள் மழையில்லாமல் போய், பெரும்பஞ்சம் இங்கே ஏற்பட்டது.
மக்கள் பசியால் தவித்தார்கள். இறைவனுக்கே நைவேத்தியத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது.
அப்போது, வேதசர்மா என்ற பக்தர் பிட்சையெடுத்தாவது கொஞ்சம் நெல்லைச் சேகரித்து, இறைவனுக்குப் படைத்து வந்தார்.
இறைவன் அவரை மேலும் சோதிக்க எண்ணினான். கைவசம் இருந்த கைப்பிடி நெல்லை, கோவில் சன்னதியிலேயே உலர்த்திவிட்டு வெளியில் சென்றார் வேதசர்மா.
அப்போது திடீரென பெருமழை பெய்தது. நெல், மழைநீரில் மிதந்து போய்விட்டால், இறைவன் பட்டினி கிடப்பாரே என்று ஓடோடி வந்தார் வேதசர்மா.
அங்கே ஆச்சர்யம் காத்திருந்தது. தான் உலர்த்திய நெல்லைச் சுற்றி மழைநீரே ஒரு வேலியாக உயர்ந்து நிற்க, நெல்லுக்கு மட்டும் வெய்யில் அடிப்பதைக் கண்டு நெக்குருகிப் போனார்.
நெல்லைக் காத்ததால் அன்று முதல் வேணுவனநாதருக்கு `நெல்வேலி நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் திருநெல்வேலி ஆயிற்று. பஞ்சமும் பறந்து போயிற்று.
தன்னை வணங்கினால் உணவுப்பஞ்சம் தீரும், பசிப்பிணி போகும் என்பதை உணர்த்தவே இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
நெல்லையப்பருக்கு அருகில் நெல்லை கோவிந்தர் சன்னதி அமைந்திருக்கிறது. வேணுவனநாதர் வெளிப்படுவதற்குமுன் தோன்றிய திருமூலநாதர் சன்னதியும் மிக முக்கியமானது.
மேற்புறப் பிராகாரத்தில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையில் அருள்புரியும் நடேசரையும் கட்டாயம் தரிசிக்கவேண்டும்.
ஏராளமான தெய்வங்கள், ஏராளமான கல்வெட்டுகள், ஏராளமான தலப் பதிகங்கள் என்று இங்கே எல்லாமும் ஏராளம்... தாராளம். நெல்லையப்பரையும், காந்திமதியையும் வணங்கினால், நிச்சயம் பசிப்பிணி போகும். அப்புறம் ஒன்று, இனிமையான நெல்லையப்பரின் தரிசனத்தை முடித்த கையோடு கோயில் வாசலில் மாலையில் கிடைக்கும் இருட்டுக் கடை அல்வாவையும் ஒரு கை பாருங்கள்..
``நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில் எங்கே இருக்கிறது?''
``திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. ஜங்ஷனில் இருந்து பஸ் கட்டணம் 2 ரூபாய். ஆட்டோவில் ரூ.50.''
``கோயில் நேரம்?''
``காலை 6 - 12.30, மாலை 5.30-9''
``தங்க... சாப்பிட...?''
``பசிப்பிணி போக்கும் இறைவன் இருக்கும் ஊரில் இப்படி ஒரு கேள்வியா?''
``கோயில் தொலைபேசி?''
``0462-2339910.''

0 comments: