Monday, July 14, 2008

குறை தீர்க்கும் கோவில் திருவிடந்தை



இந்த ஊரின் பெயர் நித்யகல்யாணபுரி. கடவுளின் பெயர் நித்யகல் யாணப் பெருமாள்.கோயில் விமானமோ கல்யாண விமானம். திருக்குளத்தின் பெயர், கல்யாணதீர்த்தம்.

ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் ஏன் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தலமரமோ, மணவிழாவிற்கு உகந்த புன்னை.

திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் கோயில் எதற்கு உகந்த தலம் என்பதை நான் வேறு தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?நம் ஊர்க் கல்யாணங்களின்போது மாப்பிள்ளை, பெண்ணுக்குக் கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வைப்பார்களே, பார்த்திருக்கிறீர்களா? அதுபோல் இயற்கையாகவே நித்யகல்யாணப் பெருமாளுக்கும், கோமளவல்லித் தாயாருக்கும் திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பது இங்கே பேரதிசயம்.!



அதுமட்டுமா? பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது.``கல்யாணம் ஆகாதவங்க ஆணா இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இங்க வந்து பெருமாளை தரிசனம் செஞ்சாப்போதும். ஒரு மாசத்துலயே கல்யாணம் நிச்சயம் ஆயிடும். வரவங்க ரெண்டு மாலைகளை வாங்கிட்டு வரணும். அர்ச்சனை பண்ணி ஒரு மாலையைப் பெருமாளுக்குச் சாத்திடுவோம். இன்னொண்ணை கழுத்துல போட்டுக்கிட்டு, சம்பந்தப்பட்டவங்க பிராகாரத்தைச் சுத்தி வரணும். அப்புறமா அந்த மாலையை வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப்போய், சாமி படத்துக்கிட்ட வச்சு வணங்கினாப் போதும். கல்யாணம் நிச்சயமாயிடும். அதேமாதிரி கல்யாணம் ஆனவுடனே, கடவுளுக்கு நன்றி சொல்றதுக்காகத் தம்பதியா வந்து மறுபடியும் மாலை சாத்தி வணங்கணும். இது காலம் காலமாக இங்க நடந்து வர்ற அற்புதம்.

எங்களுக்குத் தெரிஞ்சு ஆயிரக்கணக்கான திருமணங்கள் இந்தப் பெருமாளால நடந்திருக்கு'' மெய்சிலிர்த்துச் சொல்கிறார்கள், ஆலய பரம்பரை அர்ச்சர்கர்களான டி.கே.ஸ்ரீனிவாச பட்டாச்சாரியாரும், டி.எஸ்.ஸ்ரீராம் பட்டாச்சாரியாரும்.திருமணம் நடப்பதற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? பெருமாளுக்கு இங்கே தினசரி கல்யாணம் நடப்பது ஏன்? அந்தக் கதையை இப்போது தெரிந்துகொள்ளலாமா?360 பெண்கள்!

சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த காலவ மகரிஷி, தெய்வீக அம்சம் கொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.முனிவருக்கு ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு சொர்க்க லோகம் சென்று விட்டாள் அவரது மனைவி.அத்தனை பெண் குழந்தைகளை வைத்து, காப்பாற்றச் சிரமப்படும் முனிவர், இறுதியில் இந்த திருவிடந்தைக்கு வந்தார். இங்கே அருள்பாலிக்கும் வராகமூர்த்தியை வணங்கினார்.தேவர்களுடன் போரிட்டதால் சாபம் பெற்ற பலி மன்னனுக்குக் காட்சி தந்து ரட்சித்த வராகர், இவர்தான் என்பதால், தன் மகள்களுக்கும் இவரே நல்வாழ்க்கையை அமைத்துத் தருவார் என்று நம்பினார் காலவ மகரிஷி. தன் 360 பெண்களும் பெரிய பிராட்டியாரின் அம்சம் என்பதும் அந்த வராகர்தான் தன் மருமகன் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.தினம் தினம் திருமணம்!

முனிவரின் கவலையைத் தீர்க்க, வராகப் பெருமாள், பிரம்மசாரி உருவெடுத்து பெண் கேட்டு வந்தார்.தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களுக்கு ஒவ்வொருவராகத் திருமணம் செய்து கொண்டார் பெருமாள்.கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒன்றாகச் சேர்த்து அணைத்து ஒரே பெண்ணாக ஆக்கி தன் இடது பக்கத் திருத்தொடையில் வைத்துக்கொண்டு வராகப் பெருமாளாக அனைவருக்கும் காட்சியளித்தார். (இப்போதும் அதே காட்சியை நாம் தரிசிக்கலாம்).

360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்துகொண்டதால், வராகருக்கு, நித்யகல்யாணப் பெருமாள் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமள வள்ளி என்பதால், இங்கே தனிக் கோயிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவல்லி என்றே பெயர். `திரு' (லட்சுமி)வை தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால், இந்த ஊருக்குத் `திருஇடவெந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. (இதுபோல மனைவியை வலது பக்கத்தில் வைத்துக்கொண்டு, வராகர் காட்சி தரும் திருவலவெந்தை என்ற கோயில் மகாபலிபுரத்தில் இருக்கிறது.)கோமளம் என்ற தாயாரின் பெயர் திரிந்தே கோவளம் என்ற பெயரும் ஏற்பட்டது!

தினந்தோறும் திருமணம் செய்துகொண்ட பெருமாளை தரிசனம் செய்வதால், இங்கே வரும் பக்தர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற்றுவிடுகிறது. தொல்பொருள் துறையின் பாதுகாப்பிலும் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலும் இருக்கும் இந்தத் திருவிடந்தை, 108 திருப்பதிகளுள் ஒன்று. திருமங்கையாழ்வார், இந்தப் பெருமாளை பத்துப் பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.அது மட்டுமல்ல, திருப்பதி திருமலைக்கு ஆழ்வார் சென்றபோதுகூட, அவருக்கு இந்த திருவிடந்தை பெருமாளின் நினைவுதான்.திருப்பதி குளக்கரையில் அருள்பாலிக்கும் வராகரைப் பார்த்ததும், `ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான்' என்று இந்தப் பெருமாள் நினைவாகத்தான் பாடினார் திருமங்கையார்.அதனால், திருவிடந்தை பெரு மாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம்.

108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும்தான். தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி சேவை சாதிப்பதால், இங்கே வந்து நித்ய கல்யாணப் பெருமாளை வணங்கினால் உங்கள் ராகு, கேது தோஷங்களும் நீங்கிவிடும்.உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ் டிப்பொட்டு இயற்கையாகவே அமைந் துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.

கோமளவல்லித் தாயார் ஆண்டாள், அரங்கநாயகி - அரங்கநாதர், ஆழ்வார்கள், தும்பிக்கையாழ்வார், சத்தியன், அச்சுதன், அநிருத்தன், வைஷ்ணவி ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள். ஏராளமான கல்வெட்டுகளும் அமைந்துள்ளன.திருமணம் ஆகவேண்டுமா?ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா?திருஷ்டி கழிய வேண்டுமா?கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு வெறும் ஜாலியாக மட்டும் செல்லாமல், திருவிடந்தை சென்று ஆறரை அடி உயரத்தில் பிரமாண்டமாக அருளாட்சி புரியும் நித்யகல்யாணப் பெருமாளை தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையும் கிழக்கு கடற்கரைச் சாலை போல பளபளவென ஒளி பொருந்தியதாக மாறும்..



எங்கே எப்படி?திருவிடந்தை செல்வது எப்படி?``கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்திலிருந்து 16 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கிறது. பிராட்வேயிலிருந்து பிபி?19, தி.நகரிலிருந்து ஜி.?19 பஸ்கள் செல்கின்றன.'



'கோயில் திறந்திருக்கும் நேரம்?``காலை 6-12, மாலை 3-8.



''உணவு வசதி?``கோயிலிலேயே பிரசாத மாக சர்க்கரை பொங்கல், புளியோதரை ஆகியவை 5 ரூபாய்க்கு கிடைக்கின்றன. சற்றுத்தள்ளி மாயாஜால் வாசலில் அறுசுவை உணவகம் அமைந்திருக்கிறது.



''கோயில் தொலைபேசி எண்?``044-27472235.''

0 comments: