Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Thursday, September 4, 2008

கோகுலாஷ்டமி !



``கண்ணனை தத்தித்தவழும் குழந்தையாக்கி தன் சின்னஞ்சிறு பாதங்களை அவன் தரையில் பதித்துத் தளிர் நடைபயிலும் அழகை மனக் கண்ணில் நினைத்துப் பார்க்காதவர்களும் நம்மில் உண்டா? ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் பதங்களில் ``ஆடாது அசங்காது வா - என்பார்.... கண்ணா'' என்ற பாடலில் சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை செவி மடுத்தால் பிறவித் துயர் களைந்திடுமே'' - எத்தனை அழகான பாடல்! இவையெல்லாமே கண்ணன் நடை பயின்றுவரும் அழகைக் காட்டும் சொற்கட்டுக்கள்.
கண்ணன் பிறந்த தினமான கோகுலாஷ்டமி அன்று அவன் நடந்து வருவது போன்ற சின்னச் சின்ன பாதங்களை நாம் கோலமாகப் போடுவதுமனதில் எழுகிறதா!
``எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் செய்வேன்'' என்றார் மகாவிஷ்ணு. துவாபர யுகத்தின் முடிவில் இந்தப்பூவுலகில் அதர்மம் தலை விரித்தாடியது. தேவர்களின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு இந்தப் பூவுலகில் அவதாரம் கொள்ளத் திருவுளம் கொண்டார்.
அதன்படியே ஆவணிமாதம் ரோஹிணி நட்சத்திரம் தேய்பிறை அஷ்டமி திதி கூடிய ஒரு நள்ளிரவில் கண்ணனின் திரு அவதாரம் நடந்தது.
அதுவும் எங்கே?
கண்ணனின் மாமனான கம்ஸனின் சிறையில். வசுதேவருக்கும் - தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கண்ணபிரான் அவதாரம் செய்தார். தனக்கு அழிவு, தேவகியின் எட்டாவது குழந்தையால்தான் என்று அசரீரியின் வாக்கைக் கேட்ட கம்சன் முதல் ஏழு குழந்தைகளையும் கொன்று விடுகிறான்.
ஆனால் எட்டாவதாகப் பிறந்த குழந்தையான கண்ணனோ, தன்னை கோகுலத்தில் கொண்டு சேர்க்கும்படி சொன்னார். காவலர்கள் மாயை வசப்பட்டு உறங்க, சிறைச்சாலைக் கதவுகள் தானாகவே திறந்தன. கண்ணனைக் கூடையில் சுமந்து வசுதேவர் கொட்டும் மழையில் யமுனைஆற்றில் இறங்குகிறார். குழந்தை நனையாமல் இருப்பதற்கு ஆதிசேஷன் குடை பிடிக்கிறார். அந்தக் குழந்தைதான் கோகுல கிருஷ்ணனாக யசோதையின் இளஞ்சிங்கமாக ஆயர்பாடியில் வளர்கிறான்.
இந்தக் கதையைத்தான் ஆண்டாள் நாச்சியார் தம் திருப்பாவையில் ``ஒருத்தி மகனாய் ஒளித்து வளர'' என்று பாடி இருக்கிறாள்.அஷ்டமி திதி ஆகாதென்று ஒதுக்கி வைக்க முடியாதபடி கண்ணபிரான் அவதாரம் செய்தது அஷ்டமி திதியன்றுதான் கோகுலாஷ்டமி என்று அவன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். இதைத்தான் நாம் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கூறுகிறோம்.
கண்ணன் இரவு பன்னிரண்டு மணிக்கு அதாவது நள்ளிரவில் பிறந்ததால் வட இந்தியாவில் அந்த நேரத்தில் பஜனை செய்து பாடல்கள் பாடுவது வழக்கம். பகலில் உபவாசம் இருந்து பட்சணங்கள் தயாரித்து மாலைச் சூரியன் மறையும் நேரத்தில் கண்ணனைப் பூஜிப்பார்கள்.கோகுலாஷ்டமி தினத்தன்று வீட்டை நன்றாகப் பெருக்கி மெழுகி வாசலில் பெரிதாகக் கோலமிட வேண்டும். வாசலிலிருந்து பூஜையறை வரையில் கண்ணன் நம் வீட்டிற்கு வருவதாக அவனுடைய சின்னஞ்சிறு சிற்றடிகளைக் கோலமிடல் வேண்டும். இப்படி சிற்றடிகளை வரைவதற்கு என்ன ஐதீகம்?
இருக்கிறதே! கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனுக்கு `நவநீத சோரன்'' என்றுகூட ஒரு பெயர் உண்டு. நவநீதம் என்றால் வெண்ணெய். இந்த வெண்ணெயைத் திருடித் தின்பவன் கண்ணன். சோரன் என்றால் திருடன். அதனால்தான் கண்ணனை `நவநீத சோரன்'' என்று அழைப்பார்கள்.
கோகுலகிருஷ்ணன் ஆயர்பாடியில் அனைத்து வீடுகளிலும் கைகள் வழிய வழிய வெண்ணெயை எடுத்து வாரி உண்பவன். அப்படி உண்ணும் பொழுது தரையில் விழுந்த வெண்ணெயை அவன் மிதித்து நடந்த பாதச் சுவடுகள்தான் கோகுலாஷ்டமியன்று நாம் வரையும் சிற்றடிகள். இந்தச் சிற்றடிகளை வைத்து தங்கள் வீட்டில் வெண்ணெய் திருடியவன் கண்ணன் தான் என்று ஆயர்பாடிப் பெண்கள் தெரிந்து கொள்வார்கள்.அந்தக் காலத்தில் வீடுகளில் நிறைய மாடுகளை வைத்திருப்பார்கள். பால் கறந்து உறை ஊற்றித் தயிராக்கி வெண்ணெய் எடுப்பது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று அந்த வெண்ணெயைத் தொட்டு பாதச் சிற்றடிகளை வரைவார்களாம். ஆனால் தற்காலத்தில் கோலமிட்டு அதாவது மாக்கோலத்தில் சிற்றடி இட்டு கண்ணனை வரவேற்கிறோம்.
மனத்தில் பக்தியுடன் கண்ணனை அழைத்தால் அவன் வரமாட்டானா என்ன?
அவல் ஒரு சிறந்த உணவு. வைட்டமின் ஏ அடங்கிய உணவு. திருப்புகழைப் பற்றிச் சொல்லும் பொழுது அருணகிரி நாத பெருமான் ``இருப்பு அவல்'' என்பார். அவலுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. அற்புதமான கதையும் உண்டு.
குசேலர் என்பவர் கண்ணனின் பால்ய நண்பர். இருவரும் குருகுலத்தில் ஒன்றாகக் குருவிடம் பாடம் படித்தவர்கள். குசேலர், சுசீலை என்னும் குணவதியை மணம் புரிந்து கொண்டு போய்விட இருவரின் சந்திப்பும் நீண்ட காலம் நிகழவில்லை. இப்படியே காலம் செல்லச் செல்ல குசேலர் 27 குழந்தைகளுக்குத் தந்தையானார். அவரை வறுமையும் பிடித்து ஆட்டியது. குடும்பம் பசியைத் தவிர வேறு எதையும் அறியவில்லை.ஒரு நாள் மனைவி சுசீலை, குசேலரிடம் வறுமை தாங்க முடியாத நிலையில் அருமை நண்பர் கண்ணபிரானிடம் போய் உதவி கேட்கும்படி கூறினாள். குசேலரும் சரியென்று கிளம்பினார். யாரையாவது பார்க்கச் சென்றால் ஏதாவது கையில் எடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா? வீட்டில் எதுவும் இல்லை. இருந்த மூன்று பிடி அவலை எடுத்து குசேலரின் மேல் துண்டு கந்தையின் ஓரத்தில் முடிச்சுப் போட்டு அனுப்பினாள் சுசீலை.
நீண்ட காலமாகச் சந்திக்காத நண்பன், தற்போது உயர்ந்த இடத்தில் இருப்பவன். தன்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பானோ என்ற சந்தேகத்துடன் சென்றார் குசேலர். ஆனால் அங்கு கண்ணனோ நண்பனை அடையாளம் கண்டதுடன் நில்லாமல் அதீத உபசாரம் செய்து அசத்திவிட்டான். கண்ணனும், குசேலனும் உணவு உண்டு ஓய்வாக இருந்த சமயம் குசேலனின் கந்தை முடிச்சில் இருந்ததைப் பார்த்துவிட்டார் கண்ணன்.
``அண்ணி, எனக்குக் கொடுத்துவிட்டதா! என்ன அது?'' என்று முடிச்சைப் பார்த்துக் கேட்டார்.
சங்கடத்துடன் குசேலர் அவலை எடுத்து நீட்டினார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் ரசிக்க, குசேலர் தன் வறுமையைச் சொல்லாமலேயே அங்கே குசேலரின் வீடு செல்வச் செழிப்பாக மாறியது. வறுமையைச் சொல்ல வந்த குசேலரோ சொல்லாமலேயே கூச்சப்பட்டுக் கொண்டு வீடு திரும்பிய பொழுது ஆனந்தத்தில் அதிர்ந்து போனார்.
ஒரு பிடி அவலுக்கே இத்தனை செல்வங்களை கண்ணன் அள்ளிக் கொடுத்தார் என்றால், நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்யங்களுக்கு எப்படி அள்ளிக் கொடுப்பார்?
பட்சணங்கள் செய்ய இயலாதவர்கள் வெண்ணெய், பால், தயிர், அவல், பழங்கள் வைத்து நைவேத்யம் செய்யலாம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உபவாசம் இருப்பார்கள். பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், பாகவதம், புராணங்களைப் படிக்கலாம். கண்ணன் மீது பாடல்களைப் பாடலாம். கிருஷ்ணாஷ்டகம் சொல்லி அர்ச்சிக்கலாம்.
கண்ணன் யாதவ குலத்தில் உதித்தவன் என்பதால் மாடுகளுக்குப் பழங்கள் கொடுப்பது வழக்கம். கண்ணனுடைய புல்லாங்குழல் இசைக்கு பசுக்களே மயங்கி கண்ணன் பின்னால் வந்தன என்று கண்ணனின் கதைகள் நமக்குச் சொல்லுகின்றன.
ஆலயங்களிலும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் பூஜையை முடித்துவிட்டு ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதும், அர்ச்சனை செய்வதும் பக்தர்களின் வழக்கமாகும்.
கோயில்களில் ஸ்ரீஜெயந்தியைக் கொண்டாடும் கச்சேரிகளும், சொற்பொழிவுகளும் வைப்பார்கள்.
கண்ணன் பிறந்த நாளையொட்டி கோயில்களில் பத்து தினங்கள் உற்சவம் நடத்துவார்கள். அதில் சிறந்தது உறியடி உற்சவம். பெரிய குச்சியின் நுனியில் பானை ஒன்றைக் கட்டி வைப்பார்கள். கீழிருந்து எம்பி எம்பி அடிக்க வேண்டும். அந்தப் பானை கீழேயும் மேலேயும் போக்குக் காட்டும். சரியான சமயம் பார்த்து அடிக்க வேண்டும். அப்படி அடித்தவர் வெற்றி பெறுபவர் ஆவார்.
கோகுலாஷ்டமியில் பிறந்த கோபாலன் பாரதியார் கூறியதுபோல் நண்பனாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலேசேவகனாய் வந்து காப்பான்.

``காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்!


விபூதி?
குங்குமம்?
சந்தனம்?
நீங்கள் எத்தனையோ பிள்ளையார் கோயில்களுக்குச் சென்றிருப்பீர்கள். மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றைத்தான், அங்கே வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால், ஆந்திராவின் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் என்ன பிரசாதம் தெரியுமா?
ஒரு ஸ்பூன் தண்ணீர்!
அதுவும் கிணற்று நீர்!
அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
அப்படி என்ன அந்தக் கிணற்றுத் தண்ணீருக்கு விசேஷம்?
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்!இன்றும் அதே கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, நம் ஊர் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் போல, இந்தக் காணிப்பாக்கம் விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது.
நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் `மொழுக்'கென்று இருக்கிறார் பிள்ளையார். ஆனால் அவரது சக்திதான் `கொழுக், மொழுக்'கென்று தேசம் பூராவும் புஷ்டியாகப் பரவி நிற்கிறது!
பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். காரணம், காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்' என்று தெலுங்குப் படம் போல் பஞ்ச் டயலாக்கெல்லாம் சொல்கிறார்கள்.
அது உண்மைதான். யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.
`காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை' என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!
கேணி பக்கத்தில் காட்சி தரும் காணிப்பாக்கம் கணபதியைப் பார்த்தாலே, யாருக்கும் பொய் சொல்லத் தைரியம் வராது. உண்மையைத் தவிர வேறெதுவும் வார்த்தைகள் வெளிவராது!
உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம்.
காரணம், இந்த விநாயகர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான். ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!இதோ, அந்தக் கதை.
3 சகோதரர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரின் பெயர், விஹார புரி.
இங்கே ஏழை விவசாயிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களிடம் `காணி' நிலமே இருந்தது. அது மட்டுமல்ல, மூவருமே ஊனமுற்றவர்கள்.
ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்குக் கண் தெரியாது!
தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள்.
கோடைக் காலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால், அதனை ஆழப்படுத்த முனைந்தார்கள்.
மண்வெட்டியுடன் கிணற்றில் இறங்கினான், வாய் பேச முடியாதவன்.
பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின்மீது மண்வெட்டிபட்டு, `டங்'கென்று ஓசை எழுந்தது. அது மட்டுமல்ல, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட்டது.
அதைக் கண்டதும், இதுவரை வாய் பேசாதிருந்தவன், `ஐயோ ரத்தம்' என்று அலறினான்!அவன் அலறியது, மேலே நின்றிருந்த, காது கேட்காதவனுக்குக் கேட்டது!
எட்டிப் பார்த்த கண் தெரியாதவன், `என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே' என்று வியந்து பார்த்தான்!
அப்புறம் என்ன? மூவரின் குறைகளும் திடீரென தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள் அதிசயித்தனர்.
கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர். பயபக்தியுடன் வணங்கினர். (இன்றைக்கும் மண்வெட்டித் தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.)
காணி நிலத்தில் தோன்றியதால், காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் `காணிப்பாக்கம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். (பாரகம் என்றால் நீர் பரவுதல் என்று தெலுங்கில் அர்த்தம். பாரகம் என்பதே பாக்கம் என்றானது!)
மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
பாகுதா
கோயிலின் அருகில் பாகுதா நதி காணப்படுகிறது.
அந்தக் காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான்.
வெகுண்ட அரசன், விகிதாவின் இரு கைகளையும் வெட்டிவிட்டான்.
அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, காணிப்பாக்கம் விநாயகரை நோக்கி ``பாகு தா (கை தா)'' என்று வேண்டினான். அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு `பாகுதா' என்ற பெயரும் ஏற்பட்டது.
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலைப் பார்த்ததும் நமக்குப் பிள்ளையார்பட்டியின் நினைவு வரும்.
பிள்ளையார்பட்டி போலவே எதிரில் குளம் அமைந்திருக்கிறது. குளத்தின் நடுவில் ஒரு விநாயகர் `ஜம்'மென்று காற்று வாங்கியபடி, அமர்ந்திருக்கிறார்.
அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம். அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை எட்டிப் பார்க்கலாம். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத கருணையும்தான் என்று புரிந்ததால், நம் கண்களில் இருந்தும் கண்ணீர் கசிகிறது. உள்ளம் உருகுகிறது. நெஞ்சம் நெகிழ்கிறது.
ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகியோரும் இங்கே காட்சி தருகிறார்கள்.
அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை.
மற்றது வரதராஜ சுவாமி ஆலயம். ஜனமே ஜய அரசன் கனவில் வந்து, பெருமாளே கட்டச் சொன்ன கோயில் இது.
இது பிள்ளையார் சதுர்த்தி நேரம். காணிப்பாக்கம் செல்லுங்கள். வரசித்தி விநாயகரை வணங்குங்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் அள்ளிக்கொள்ளுங்கள். அப்புறம் ஒன்று, ஊனமுற்றவர்கள் மேல் இந்தப் பிள்ளையாருக்குத் தனிப் பிரியம் என்பதால், நீங்களும் ஊனமுற்றவர்களை ஏளனம் செய்யாமல் முடிந்தவரை உதவுங்கள். அதை அந்தக் காணிப்பாக்கம் விநாயகர், கருணையுடன் கவனித்துக்கொண்டிருப்பார் என்பதை உணருங்கள்.
``காணிப்பாக்கம் கோயிலுக்கு எப்படிச் செல்வது?''
``சென்னையிலிருந்து சித்தூர் 4 மணிநேர பஸ் பயணம். (கட்டணம் ரூ.56) அங்கிருந்து வேறு பஸ்ஸில் அரை மணியில் காணிப்பாக்கம்! (கட்டணம் ரூ.6)''
``தங்க... சாப்பிட...''
``தேவஸ்தானத்திலேயே 100 அறைகள் இருக்கின்றன. மூன்றுவேளை உணவும் கோயில் சார்பாக மலிவு விலையில் வழங்கப்படுகின்றது. மதியஉணவு `ஃபுல் மீல்ஸ்' எவ்வளவு தெரியுமா? பத்து ரூபாய்தான்! தவிர அன்னதானமும் உண்டு.''
``கோயில் தொலைபேசி எண்?''
``08573 281540, 281640''
``என்ன செலவாகும்?''
``சென்னையிலிருந்து ஒருவர் சென்று வர ரூ.300 இருந்தாலே போதும். இது உண்மை. பொய் சொன்னால் பிள்ளையாருக்குப் பிடிக்காது!''

Saturday, August 23, 2008

``நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில்


கல்யாணப் பெண்ணைப் போல சந்தோஷத்துடனும், அழகுடனும், வெட்கத்துடனும், நளினத்துடனும், கருணையுடனும், காதலுடனும், கனிவுடனும் காட்சி தரும் திருநெல்வேலி காந்திமதி அம்மனை முதல் முறை பார்ப்பவர்கள், மெய்சிலிர்த்துப் போவார்கள். அம்மனின் எழிலில், வேண்டுதல் கூட மறந்து போய்விடும். தெய்வத் திருமணத்திற்கு வந்த உணர்வுதான் ஏற்படும்.
மணப்பெண்ணின் அலங்காரத்தைப் பார்க்கலாமா? தலையில் வைர மணிமுடி, இராக்குடி, திருமுகத்தில் வைரப் பொட்டு மூக்குத்தி, புல்லாக்கு, மார்பில் நவரத்ன வடம், திருவடியில் மணிச்சிலம்பு, உயர்த்திய வலக்கரத்தில் பச்சைக்கிளியுடன் கூடிய செண்டு என, தகதக தங்க ஜரிகையில் பளபளக்கும் பட்டுப் புடவை அணிந்து கண்களில் மைதீட்டி நெற்றியில் குங்குமம் தரித்து நம்மைக் கருணையுடன் அம்மன் பார்க்கும் பார்வை இருக்கிறதே... சொன்னால் தவறோ, சரியோ தெரியவில்லை. அழகு கொஞ்சும் காந்திமதியம்மனுக்கே தினமும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
எப்போதும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நெல்லை காந்திமதியை தரிசனம் செய்தாலே, திருமண பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மனே இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார் என்பதால் திருமண வரம் கியாரண்டி!நெல்லையப்பர் கோயிலின் ராஜகோபுரமே வினோதமான தோற்றத்தைக் கொண்டது. மற்ற கோயில்கள் போல ஓங்கி, உயர்ந்து காணப்படாமல், உயரமாகக் கட்டிப் பின் மேலேயிருந்து அழுத்தம் கொடுத்து தட்டி அமுக்கியது போல அடி பரந்து குட்டையான அமைப்பு! திருநெல்வேலி நகரின் மத்தியில் 850 அடி நீளமும் 756அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஆலயம். அனுபவித்து தரிசனம் செய்ய ஒரு நாளும், இறைவனின் அனுக்ரகமும் வேண்டும்.
அந்தக் காலத்தில் அம்மன் கோயிலும் சுவாமி கோயிலும் தனித்தனியாகத்தான் இருந்தன. புராணப்படி முழுவதும் கண்ட ராம பாண்டியனாலும், ஏழாம் நூற்றாண்டில் நின்ற சீர் நெடுமாறனாலும் இவை கட்டப்பட்டன.
கி.பி.1647ல் வடமலையப்ப பிள்ளையன், இரண்டு கோயிலையும் ஒன்றாக இணைக்க, சங்கிலி மண்டபத்தை அமைத்தான் என்கிறது வரலாறு.சரி அதென்ன முழுவதும் கண்ட ராம பாண்டியன்?
இதோ அந்தக் கதை,
ஜோதி மயம்!
அந்தக் காலத்தில் மூங்கில் காடாக இருந்தது இந்தப் பகுதி. அருகில் இருந்த ஒரு தொழுவத்திலிருந்துதான் அரசனுக்கு தினசரி பால் போகும். அந்தக் கடமையைச் சரிவர செய்து கொண்டிருந்தார் ஓர் ஆயர்.
அவர் செல்லும்போது மூங்கில் காட்டில் தினசரி அவரது கால் தடுக்கி குடங்கள் கீழே விழுந்து பால் கொட்டிற்று.
தரையில் முளை விட்டிருந்த மூங்கில்தான் இதற்குக் காரணம் என்று எண்ணிய ஆயர், கோடரியால் மூங்கிலை வெட்ட, ரத்தம் கிளம்பிற்று.பதறிப்போய் மன்னரிடம் சொல்ல, அரசன் ராமபாண்டியனும் விரைந்து வந்து பார்க்க, அங்கே சிறிதாய் ஒரு லிங்கம் இருப்பது தெரிந்தது. ஆயரால் வெட்டுப் பட்ட லிங்கம்!
பரிதவித்த மன்னன் அந்த லிங்கத்திற்கு ஓர் ஆவுடையார் அமைக்க, லிங்கம் அதற்கேற்ப வளர்ந்தது. மீண்டும் ஒரு ஆவுடையார் என்று மன்னனும் 21 பீடங்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைக்க லிங்கமும் அதற்கேற்ப வளர்ந்தது.
சோதித்தது போதும் என்று மன்னன் ராமபாண்டியன் கைதொழ, சிவபெருமான் அவனுக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். உருவத்தைக் குறுக்கி சகஜ அளவுக்கு வந்தார்.
``ஜோதி மயமாய் என்னை நீ முழுவதும் கண்டதால் உன் பெயர் இனி, `முழுவதும் கண்ட ராம பாண்டியன்' என்று அழைக்கப்படும்'' என்று ஆசி வழங்கினார்.
அந்த முழுவதும் கண்ட ராம பாண்டியன் கட்டியதுதான் இந்தக் கோயில். மூங்கில் என்றால் வேணு. எனவே வேணுவனநாதர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. தல விருட்சம் மூங்கில்தான்!
நான்கு வேதங்களும் இங்கே மூங்கிலாக இருப்பதாக ஐதிகம். ``நான் நடனம் புரியும் 21 தலங்களில் மிகவும் சிறந்த திருநெல்வேலியில் என்னுடனேயே நீங்களும் மூங்கிலாக இருங்கள்'' என்று இறைவனே கூறியிருக்கிறார் என்றால், இதன் சிறப்பை சொல்லி மாளாது.
மதுரைக்கும், நெல்லைக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. அங்கே வைகை. இங்கே தாமிரபரணி. அங்கே மீனாட்சி ஆட்சி. இங்கே காந்திமதியின் ஆட்சி. இரு நகரங்களுமே கோயிலைச் சுற்றித் திருவீதிகளாக விளங்குகின்றன. மதுரையில் பொற்றாமரைக் குளம் இருப்பதுபோல இங்கும் பொற்றாமரைத் தீர்த்தம் அமைந்திருக்கிறது!
கிழக்கு வாசலில் நுழைந்து, நந்தியையும், சூரியனையும் வணங்கி, மணிமண்டபம் செல்லும்போது அங்கேயுள்ள இசைத்தூணைக் காண மறவாதீர்கள். ஒரே கல்லில் அமைந்த 64 தூண்கள். ஒவ்வொரு தூணைத் தட்டினால் ஒவ்வொரு இசை. கி.பி.7ம் நூற்றாண்டில் கூன் பாண்டியன் அமைத்த மண்டபம் இது.
நேரே சென்றால் வேணுவனநாதர் என்னும் மூங்கில் முளையில் தோன்றிய ஈசனைக் காணலாம். மன்னனுக்காக 21 பீடங்களைத் தாண்டியும் உயர்ந்து ஜோதி வடிவில் காட்சி தந்த ஈசன் இவர்தான். இவரே அருள்மிகு நெல்லையப்பர்.
திருநெல்வேலி
வேணுவனநாதர், நெல்லையப்பர் ஆனதும் ஒரு கதை. இந்த ஊரின் பெயர் தோன்றியதும் அதே கதையில்தான்!
ராம பாண்டியனின் பிற்காலத்தில் 12 வருடங்கள் மழையில்லாமல் போய், பெரும்பஞ்சம் இங்கே ஏற்பட்டது.
மக்கள் பசியால் தவித்தார்கள். இறைவனுக்கே நைவேத்தியத்திற்குத் திண்டாட்டம் ஏற்பட்டது.
அப்போது, வேதசர்மா என்ற பக்தர் பிட்சையெடுத்தாவது கொஞ்சம் நெல்லைச் சேகரித்து, இறைவனுக்குப் படைத்து வந்தார்.
இறைவன் அவரை மேலும் சோதிக்க எண்ணினான். கைவசம் இருந்த கைப்பிடி நெல்லை, கோவில் சன்னதியிலேயே உலர்த்திவிட்டு வெளியில் சென்றார் வேதசர்மா.
அப்போது திடீரென பெருமழை பெய்தது. நெல், மழைநீரில் மிதந்து போய்விட்டால், இறைவன் பட்டினி கிடப்பாரே என்று ஓடோடி வந்தார் வேதசர்மா.
அங்கே ஆச்சர்யம் காத்திருந்தது. தான் உலர்த்திய நெல்லைச் சுற்றி மழைநீரே ஒரு வேலியாக உயர்ந்து நிற்க, நெல்லுக்கு மட்டும் வெய்யில் அடிப்பதைக் கண்டு நெக்குருகிப் போனார்.
நெல்லைக் காத்ததால் அன்று முதல் வேணுவனநாதருக்கு `நெல்வேலி நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் திருநெல்வேலி ஆயிற்று. பஞ்சமும் பறந்து போயிற்று.
தன்னை வணங்கினால் உணவுப்பஞ்சம் தீரும், பசிப்பிணி போகும் என்பதை உணர்த்தவே இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
நெல்லையப்பருக்கு அருகில் நெல்லை கோவிந்தர் சன்னதி அமைந்திருக்கிறது. வேணுவனநாதர் வெளிப்படுவதற்குமுன் தோன்றிய திருமூலநாதர் சன்னதியும் மிக முக்கியமானது.
மேற்புறப் பிராகாரத்தில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையில் அருள்புரியும் நடேசரையும் கட்டாயம் தரிசிக்கவேண்டும்.
ஏராளமான தெய்வங்கள், ஏராளமான கல்வெட்டுகள், ஏராளமான தலப் பதிகங்கள் என்று இங்கே எல்லாமும் ஏராளம்... தாராளம். நெல்லையப்பரையும், காந்திமதியையும் வணங்கினால், நிச்சயம் பசிப்பிணி போகும். அப்புறம் ஒன்று, இனிமையான நெல்லையப்பரின் தரிசனத்தை முடித்த கையோடு கோயில் வாசலில் மாலையில் கிடைக்கும் இருட்டுக் கடை அல்வாவையும் ஒரு கை பாருங்கள்..
``நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில் எங்கே இருக்கிறது?''
``திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. ஜங்ஷனில் இருந்து பஸ் கட்டணம் 2 ரூபாய். ஆட்டோவில் ரூ.50.''
``கோயில் நேரம்?''
``காலை 6 - 12.30, மாலை 5.30-9''
``தங்க... சாப்பிட...?''
``பசிப்பிணி போக்கும் இறைவன் இருக்கும் ஊரில் இப்படி ஒரு கேள்வியா?''
``கோயில் தொலைபேசி?''
``0462-2339910.''

Saturday, August 16, 2008

தண்டையார்குளம் பகவதி கோயில்


திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்குமிடையில் தண்டையார்குளத்தில் அருள்பாலிக்கும் என்னை வந்து யார் வணங்கினாலும் அவர்களின் குழந்தைகளைத் தாயாக நின்று நான் பார்த்துக் கொள்வேன். கல்வி, செல்வம், புகழ் என்று எல்லாவற்றிலும் உங்கள் வாரிசுகள் சிறக்க நான் வரம் தருவேன்,நோய் நொடியிலிருந்து அந்தக் குழந்தைகளைக் காத்து, பூரண ஆயுளுடன் விளங்கச் செய்வேன்.''

இவ்வாறு வாக்குக் கொடுத்த தண்டையார்குளம் பகவதி அம்மனைப் பார்த்தாலே உங்களுக்கு பரவசம் ஏற்படும்! காரணம், தான் சொன்னதை மெய்ப்பிப்பதுபோல பகவதி, தன் இடுப்பிலேயே ஒரு குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதுதான்.

தண்டையார்குளம் பகவதியின் ஆலயத்தைப் பார்த்ததுமே, நாம் தமிழகத்தில் இருக்கிறோமா அல்லது கேரளத்தில் இருக்கிறோமா என்கிற ஐயம் எழும். ஆம். முழுக்க முழுக்க கேரள பாணியில் அமைந்த திருத்தலம் இது. வழிபாடும் கேரள முறைப்படிதான்.

ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது, பகவதியின் கட்டளை!
எதிரில் நூற்றுக்கணக்கான காற்றாலைக் காற்றாடிகள் சாமரம் வீச, சில்லென்று வீசும் காற்றும், பச்சைப் புல்வெளியும், தண்ணீர் தளும்பும் சிறு தெப்பக்குளமும் கோயிலை நெருங்கும்போதே ஓர் அமைதியையும் ஆனந்தத்தையும், நிம்மதியையும் மனசுக்குள் ஏற்படுத்தி விடுகிறது.

கோயிலுள் காலடி வைக்கும்போதே `அம்மே நாராயணா, தேவி நாராயணா, பத்ரி நாராயணா, லக்ஷ்மி நாராயணா' என்று சித்ராவின் குரல் சி.டி.யில் தேனாய் உருகுகிறது.

உள்ளே காட்சி தரும் பகவதி நம்மை மட்டுமல்ல, நம் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்கிற மனநிறைவும் ஏற்படுகிறது.

கேரள பாணியில் இந்த ஆலயம் அமைந்தது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் 300 வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்கவேண்டும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வோமா?

குமரி, நெல்லைப் பகுதிகளைப் பஞ்சம் பாதித்த காலம் அது.

உணவும், தண்ணீரும் சிறிதளவும் கிடைக்காத சூழல் அது.

வாழும் வகையின்றித் தவித்த மக்கள், குழந்தை, குட்டிகளுடன் கேரளம் நோக்கிப் பிழைப்புக்காக நகர்ந்தார்கள்.

அப்போது, கேரளத்தின் ஆளூர் பகுதியில் ஒரு மந்திரவாதி அறுசுவை உணவுகளை மலையளவு தயார் செய்து, பகவதிக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தான்.

பசி, பட்டினியுடன் தவித்த மக்கள், சாப்பாட்டின் வாசனை கண்டு முட்டி மோதி ஓடினார்கள்.

படையலைப் பார்த்ததும், பசியின் ருசியில் மதிமயங்கி, சாப்பாட்டுக்குள் பாய்ந்தார்கள்.

பகவதியோ, மந்திரவாதியோ அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. பசி! பசி!

அங்கே நடந்த அடிபிடியில், மந்திரவாதி, கூட்டத்தில் நசுங்கியே மாண்டு போனான்.

பசியடங்கியதும்தான் மக்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரிந்தது.

அதற்காக வருந்தினார்கள். பகவதியை விழுந்து வணங்கினார்கள்.

``எல்லாம் நன்மைக்கே. நீங்கள் அனைவரும் உங்கள் ஊருக்கே புறப்பட்டுச் செல்லுங்கள். பஞ்சமெல்லாம் தீர்ந்துவிடும்'' என்று பகவதி அசரீரியாய்ச் சொல்ல, மக்களும் அவ்வாறே புறப்பட்டார்கள்.

தங்கள் ஊர் நோக்கிக் குழந்தை, குட்டிகளுடன் மக்கள் செல்ல, அவர்கள் பின்னால், `ஜல், ஜல்' என தண்டைச் சத்தம் எழுந்தது. மக்கள் பயந்து போக, தேவி பேசினாள். ``திரும்பிப் பார்க்காதீர்கள். உங்களைப் பின்தொடர்ந்து வருவது நான்தான். எந்த இடத்தில் நான் அணிந்திருக்கும் தண்டைச் சத்தம் கேட்கவில்லையோ, அங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள்'' என பகர்ந்தாள்.

நெல்லையும் குமரி மாவட்டமும் கூடும் பணகுடி என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஓர் இடத்தில், தண்டைச் சத்தம் நின்றது. மக்கள் திரும்பிப் பார்க்க, தேவி, சிலையாக மாறியிருந்தாள். அவள் கைகளில் ஒரு குழந்தையும் காணப்பட்டது.

``இங்கே வந்து என்னை வணங்குபவர்களின் குழந்தைகளையெல்லாம் நான் என் குழந்தைபோல் கவனித்துக்கொள்வேன்'' என்று நல்வாக்கும் கூறினாள்.

உடனே மக்கள் அங்கேயே சிறு ஆலயம் கட்டினார்கள். தண்டைச் சத்தம் நின்ற இடமாதலால், இந்த இடத்திற்கு `தண்டையார்குளம்' என்ற பெயர் எழுந்தது.

இந்தப் பகுதியில், குழந்தையுடன் உள்ள தெய்வம் `இசக்கியம்மன்' (இயக்குபவள்) என்ற பெயரில் பொதுவாக வணங்கப்படுவதால், பகவதிக்கும் அதே பெயரைச் சூட்டி வழிபடத் துவங்கினார்கள்.

பின்னாளில் பிரசன்னம் பார்த்தபோதுதான் அவள் தேவி பகவதி என்றும், கேரளாவில் முன்னாளில் வழிபடப்பட்டதால் அதேபோல் கேரள பாணியில் அமைந்த கோயிலிலேயே தான் அருள்பாலிக்க விரும்புவதாகவும் இனிமேல் தன்னை பகவதியாக வழிபடுபவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் எல்லா வளங்களையும் அள்ளித் தருவதாகவும் அருள்வாக்கு புரிந்தாள்.

தேவி பகவதியின் விருப்பப்படியே கேரள பாணியிலேயே இந்தக் கோயில் எழுப்பப்பட்டது.

பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட எழிலான கருவறையில், புன்முறுவலுடன் வீற்றிருக்கிறாள் பகவதி அம்மன். தேவி எழுந்தருளியிருக்கும் பீடம். கொல்லூர் மூகாம்பிகை பீடத்தைப்போல அழகுடன் காணப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போல தகதகக்கிறாள் தேவி.

தேவியைக் கண்ணாரக் கண்டாலே உடல் சிலிர்த்துப் போகிறது. பல நூறு மைல்கள் தள்ளியிருந்த தேவி, இங்கே நமக்காக, நம் சந்ததியினரின் நலனுக்காக நம்மையே தேடி வந்திருக்கிறாள் என்பதை நினைக்கும்போது, நெஞ்சம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன.

தண்டையார்குளம் பகவதியிடம் எதுவும் வேண்டக்கூட வேண்டாம், சும்மா அவள் முகத்தை ஒரு தரம் பார்த்தாலே எல்லா நல்லதையும் அவள் உடனே பண்ணிவிடுவாள் என்கிற உணர்வு ஏற்படுவதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

``தண்டையார்குளம் பகவதி, மிகமிக சக்தி கொண்ட தெய்வம். குழந்தைகள் நலன் மட்டுமல்லாமல், தன்னை வணங்குபவர்களுக்கு, வெற்றியையும், மனநிம்மதியையும் தருபவள். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனோ அல்லது அவரது தந்தையாரோ இங்கே தினசரி வந்து தேவியை தரிசனம் செய்து விடுவார்கள். மேலும் பல வி.ஐ.பி.களும் வந்து தேவி பகவதியை வழிபடுகிறார்கள்'' சொல்லிக்கொண்டே போகிறார் ஆலய அர்ச்சகர் ராகேஷ் ஷிவரூராயர்.

நாகராஜா, நாகராணி, சுடலைமாடன் ஆகியோரும் இங்கே தரிசனம் தருகிறார்கள். நாகப்பிரதிஷ்டை செய்தபிறகு இந்தப் பகுதியில் பாம்புத் தொல்லையே இல்லை என்கிறார் ஒரு பக்தை.

கார்த்திகைத் திருநாளில் கோயில் பிராகாரம் முழுக்க, எண்ணெய் தீபமேற்றி ஒளி வெள்ளத்தில் நடக்கும் வழிபாடு அற்புதமானது.

உங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டுமா?

ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமா?

சகலகலா வல்லவர்களாக மாறவேண்டுமா?

பாசத்துடனும், பண்புடனும் இருக்கவேண்டுமா?

தீர்க்க ஆயுளுடன் வாழ வேண்டுமா?

தண்டையார்குளம் பகவதியை பௌர்ணமியிலோ அமாவாசையிலோ அல்லது ஒரு விடுமுறை நாளிலோ சென்று நீங்கள் வழிபடுவதுதான் ஒரே வழி. உங்கள் குழந்தைகளையும் கூட அழைத்துச் செல்ல மறக்காதீர்கள். தேவி பகவதி கருணையுடன் உங்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

``தண்டையார்குளம் பகவதி கோயில் எங்கே இருக்கிறது?''
``திருநெல்வேலி - நாகர்கோவில் பாதையில் நெல்லை யிலிருந்து55கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள பணகுடியிலிருந்து 3 கி.மீ.''
``கோயில் நேரம்?''
``காலை 5.30 - 10.30, மாலை 4.30 - 8.30 பௌர்ணமி, அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் தரிசனம். அமாவாசை காலை 9 மணிக்கு விசேஷ யாகம்.
``தங்க, சாப்பிட?''
``பௌர்ணமி, தை, ஆடி, அமாவாசைகளில் கோயிலிலேயே அன்னதானம் உண்டு. பத்து கி.மீ. தொலைவில் உள்ள வள்ளியூரில் தங்குமிடங்கள், ஓட்டல்கள் உள்ளன.''
``தொடர்புக்குத் தொலைபேசி?''
``04637 245490''

Thursday, August 14, 2008

`திருமழிசை'


திருமழிசை வைணமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப்படுவதால் அந்த அர்த்தத்தில் `மழிசை' எனப் பெயர் வந்தது. அத்துடன் இந்தத் தலத்தின் திருமகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந்து இருப்பதால் `திரு' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு `திருமழிசை' என்று அழைக்கப்படுகிறது.

மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந்தத் தலத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந்தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ்வார் தோன்றினார். இந்த தலத்தின் ஸ்தலாதிபதியாக, ஜெகன்னாதப் பெருமாளுக்குச் சமமான இவரும் பெரிய கோயிலில் குடிகொண்டு இருக்கிறார்.

இந்தத் தலத்தின் உயர்வையும், மேன்மையையும் நமக்கு விளக்க இதோ ஒரு புராண கால நிகழ்வு!

ஒரு முறை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் முதலிய பிரம்மரிஷிகள் சத்ய லோகத்திற்கு சென்றனர். அங்கு பிரம்மதேவரைச் சந்தித்து ஈரேழு உலகங்களிலும் சிறந்த உலகமான பூவுலகில் தவம் செய்ய எங்களுக்கு ஒரு உயர்வான இடத்தைத் தாங்கள் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

உடனே நான்முகன் தேவ சிற்பியான சதுர்முகனை அழைத்து ஒரு துலாக்கோல் கொண்டு வரும்படி சொன்னார். ஒரு தட்டில் திருமழிசைத் தலத்தையும், இன்னொரு தட்டில் உலகின் மற்ற பகுதிகளையும் வைத்து எடை போடச் சொன்னார். திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து உலகில் தனது சிறப்பான இடத்தை முனிபுங்கவர்களுக்கு உணர்த்தியதாம். உலகில் எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் வாய்ந்தது திருமழிசை என்பதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் அனைவரும் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தனராம்.

ஆலயம்: ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள் கொண்டது.

தலதீர்த்தம்: திவ்யமானதும், பாவம் போக்குவதுமான பிருகு தீர்த்தம்.

தலவிருட்சம்: பாரிஜாத மரம்.

தலமூலவர்: ஜெகன்னாதப் பெருமாள், ருக்குமணி, சத்யபாமா சமேதரராக கிழக்கு முகமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். மார்க்கண்டேய முனிவரும், பிருகு முனிவரும் உடன் அமர்ந்து சேவிக்கிறார்கள்.

அருள்மிகு திருமங்கைவல்லித் தாயார்!

இவரை நம்பிக்கையுடன் வேண்டும் பக்தர்களுக்கு சகலவிதமான ஐஸ்வர்யங்களையும், புத்திர பாக்கியத்தையும், நிறைவான வாழ்க்கையையும் தருகிறார். திருவே உருக்கொண்டிருக்கும் இந்தக் தாயாரை வணங்கினால் சகல சௌபாக்கியங்களையும் பெற முடிகிறதாம்.

பிராகார தேவதை!

கருணையே வடிவாக பிராகார தேவதையாக இந்தத் தலத்தில் ஸ்ரீவைஷ்ணவி திருமாலின் சங்குச் சக்கரங்களைத் தாங்கி நின்று சேவைசாதிக்கிறாள். விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றால் வைஷ்ணவி தேவிக்கு பூமாலை வழிபாடும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலத்தில் விசேடத் திருமஞ்சனப் பிரார்த்தனையும் செய்தாலே போதுமாம். அருகிலேயே ஸ்ரீ அழகிய சிங்கர் சன்னதியில் லட்சுமி தேவியை தன் மடியில் வைத்துக் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.அடுத்தடுத்து ஆண்டாள் சன்னதியும், ஸ்ரீவைஷ்ணவர்களின் ஒப்பற்ற குருவான ஸ்ரீமத் மணவாள சுவாமிகள் சன்னதியும் இருக்கிறது. பெருமாள் கோவிலின் மத்தியில் பிரதானமாகக் காட்சி தரும் இந்த விநாயகரின் வயிற்றின் நடுப்பகுதியில் ராகுவும், கேதுவும் இணைந்துள்ளது.இவரை வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

முக்கிய திருவிழாக்கள்

இங்குப் பிரதி ஆண்டும் ஆனிமாதம் ஸ்ரீஜெகன்னாதப் பெருமாளுக்கு பிரம்மோற்ஸவமும், ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உத்ஸவமும், தைமாதத்தில் மக நட்சத்திரத்தில் ஸ்ரீதிருமழிசை ஆழ்வாரின் திருஅவதார மகோத்ஸவமும், மாசி மாதத்தில் 3 நாட்கள் தெப்போத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருமழிசை ஆழ்வாரின் பிறப்பும், அற்புதங்களும்

முன்னொரு காலத்தில் தொண்டை நாட்டில் மகிமை பொருந்திய இந்தத் திருமழிசைத் திருத்தலத்தில், முனிவருக்கும், இவரது பத்தினி கனகாங்கிக்கும் 12 திங்கள் கருவில் உருவாகி, சித்தாத்ரி ஆண்டு, தைத் திங்கள் தேய்பிறை கிருஷ்ணபட்சம் பொருந்திய பிரதமை திதியின் ஞாயிற்றுக்கிழமை அன்று மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆழி அம்சமாய் உடலில் எந்த உறுப்புகளுமே இல்லாத ஒரு சதைப் பிண்டம் பிறந்தது. மலையத்தனை வருத்தத்தை மனதில் கொண்டவர்களாய் அந்தப் பிண்டத்தை அருகில் இருந்த புதரில் வீசி எறிந்துவிட்டுச் சென்று விட்டார்கள் அந்தத் தம்பதியர்.

திருமாலும், திருமகளும் அங்கு தோன்றி அந்தப் பிண்டத்துக்கு உயிர் கொடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தையாக மாற்றினார்கள். அவர்கள் மறைந்ததைப் பார்த்த குழந்தை அவர்கள் மீண்டும் தன் முன் தோன்ற வேண்டும் என்று பிடிவாதமாய் அழுதது. அங்கு வந்த திருவாளன் என்ற வயதான வேளாளன் அந்தக் குழந்தையைத் மகிழ்வுடன் எடுத்துச் சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான்.

திருமாலின் அருள் பெற்ற அந்தக் குழந்தை, பால் எதுவும் குடிக்காமல் சிறுநீர் கூடக் கழிக்காமல் அழுது கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட, அந்த ஊரில் சான்றோனான ஒரு முதியவர் வந்து பாலைக் கொடுக்க குழந்தை குடித்தது. அதில் இருந்த மீதிப்பாலைக் குடித்த ஆழ்வாரின் வளர்ப்புப் பெற்றோர்கள் வாலிபம் திரும்பி இளையவர்களாக மாறி கணிகண்ணன் என்ற குழந்தையை பெற்றார்கள். இந்தக் கணி கண்ணன்தான் திருமழிசை ஆழ்வாரின் பிரதான சீடர் ஆவார்.

திருமழிசை ஆழ்வார் அஷ்டாங்க யோகம் செய்து இறைவனை அடையும் பொருட்டு சீக்கியம், பௌத்தம் என ஏழுக்கும் அதிகமான மதங்களில் சேர்ந்தார். சைவ மதத்தில் சிவவாக்கியம் என்ற பெயருடன் சிவவாக்கியர் திருஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார்.

பிறகு திருமயிலை வந்து பேயாழ்வாரைச் சந்தித்தார். அவர் நாராயணின் திருமந்திரத்தை இவருக்கு முறைப்படி உபதேசித்து இவரை ஸ்ரீவைஷ்ணவராக்கினார். அதன்பின் திருமழிசைக்கு வந்து அங்கிருந்த கஜேந்திரசரஸ் என்ற குளத்தின் கரையில் அமர்ந்து இறைவனின் அருளால் பல்வகை யோகங்கள் கைவரப் பெற்றார்.

பைநாகப் பாயை சுருட்டிக்
கொண்ட வைகுந்தன்!

இவரும், இவர் சீடர் கணி கண்ணனும் காஞ்சியில் இருந்தனர். அப்பொழுது இவருக்கு பணிவிடைகள் செய்த ஒரு வயதான மாதுவை இளம் மங்கையாக்கினார். அவள் பேரழகில் மயங்கி மணம் புரிந்த அந்த நகரின் மன்னனான பல்லவராயன் தன்னையும் ஆழ்வாரிடம் வாலிபனாக்கும்படி கேட்டார். ஆனால் அவர் அதை மறுத்துவிட கணி கண்ணனாரையும் காஞ்சி நகரை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார். உடனே திருமழிசை ஆழ்வார் அங்குக் கோவில் கொண்டு இருந்த வைகுந்த வாசனைப் பார்த்து

``கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணன் நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன், நீயுமுன்
பைநாகப்பாய் சுருட்டிக் கொள்''

என்று பாட, வைகுந்த வாசனும் தம் பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வார் பின்னாடியே சென்று விடுகிறார். மற்ற தேவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றுவிட காஞ்சி மாநகரமே இருட்டில் மூழ்கி விடுகிறது. தன் தவறு உணர்ந்த மன்னன் அவர்கள் காலில் விழுந்து வேண்ட, ஆழ்வார் தன் பின்னாடி வந்த வைகுந்த வாசனை ``நீயும் உன் பைநாகப் பாய் சுருட்டிக் கொள்'' என்று பாட வைகுந்த வாசனும் திரும்பிச் சென்று ஆலயத்துக்குள் படுத்துக் கொண்டாராம்!

ஒரு தரம் திருமழிசை ஆழ்வார் பிச்சை ஏற்கப் புறப்படுகிறார். கோவிலில் குடிகொண்டிருந்த எம்பெருமான் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் தன் முகத்தைத் திருப்பியிருக்கிறார். இதைப் பார்த்த கோவில் அர்ச்சகர் இதைப் பற்றி அங்கு யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடிகளிடம் சொல்ல, அவரும் இவரைப் பணிந்து வரவேற்று யாகசாலையில் பெரும்பீடத்தில் அமரவைத்தார். இவருக்கு பெரும்புலியூர் அடிகள் சுக்கிரபூசை மரியாதையை செய்ய முற்படுகிறார். அங்கிருந்த வேள்விச் சடங்கர்கள் பக்திசாரரான திருமழிசை ஆழ்வாரை இழிவுபடுத்திப்பேசுகிறார்கள். இதனால் மனம் நொந்த பெரும்புலியூர் அடிகளார் அவர்களுக்குப் புத்தி புகட்டும்படி ஆழ்வாரை வேண்டி நின்றார். ஆழ்வார் உடனே எம்பெருமானை எண்ணி

``சக்கரங்கொள் கையனே சடங்கர் வாயடங்கிட

உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே''

என்று பாட, உடனே திருமாலும் யாவரும் காணும்படி ஆழ்வாருடைய திருமேனியில் திருப்பாற்கடலில் தாம் பள்ளி கொண்டு இருக்கும் காட்சியை யாவரும் காணும்படி செய்தாராம். இந்தக் காட்சியை கண்டு மனம் பதறிய வேள்வி சடங்கர்கள் ஆழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்து தம்மைப் பொறுத்தருள வேண்டி நின்றார்களாம்.

உலகம் உய்ய தன் பாசுரங்கள் மூலம் பல தத்துவ உண்மைகளைக் காட்டி அப்பகுதியில் பல்லாண்டுகள் வாழ்ந்து சமாதியானார் திருமழிசை ஆழ்வார்.

இவரால் பாடல் பெற்ற தலங்கள்

திருவரங்கம், அன்பில், திருப்பேர் நகர், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெஃகா, திருவெள்ளூர், திருவேங்கடம், திருப்பாற்கடல், துவாரகை, பரமதம் முதலியன.

ஆலயம் செல்லும் வழி: சென்னையிலிருந்து பூந்தமல்லிக்கு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிருந்து ஆட்டோ அல்லது பஸ் மூலமாக ஆலயத்துக்கு செல்லலாம்!

வரலக்ஷ்மி விரதம்


செல்வத்திற்கு அதிபதி லக்ஷ்மிதேவி. அந்த லக்ஷ்மிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும். லக்ஷ்மி தேவியான திருமகள் மீது ஒரு அருமையான பாடல். ``அம்பா நீ இரங்காயெனில் புகல் எதிர்'' என்ற பாடல்தான் அது. செல்வம் வேண்டும் என்று கேட்கும் பக்தர்களுக்கு வரத்தை அள்ளித் தருபவள் வரலக்ஷ்மி. அதனால் தான் ``வரலக்ஷ்மி வருவாய் அம்மா'' என்று அழைக்கிறோம்.

லக்ஷ்மி தேவியின் திரு அவதாரம். துவாதசி வெள்ளிக்கிழமை அன்று லக்ஷ்மி தேவியை பூஜை செய்பவர் லக்ஷ்மியின் அருளைப் பெறுவார்கள். ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த விரதம் வருகிறது. செல்வம் இல்லை என்றால் இந்த உலகில் எதுவும் நடக்காது. நம்முடைய பெண் தெய்வங்கள் தான் கல்விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் உரியவர்களாக விளங்குகிறார்கள். கல்விக்கு அதிபதி, நாமகளான சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி அலைமகளான லக்ஷ்மிதேவி. வீரத்திற்கு அதிபதி பார்வதி தேவி. இவளே துர்காதேவியும் ஆவாள்.

அருளும் - பொருளும் நமக்குத் தேவை.
``அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு''

என்கிறார் திருவள்ளுவர். அதனால் பொருளுக்குரிய லக்ஷ்மி தேவியை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த லக்ஷ்மியை அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அஷ்ட லக்ஷ்மியாக _ எட்டு லக்ஷ்மிகளாக நாம் வணங்குகிறோம்.

எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலக்ஷ்மி. என்றாலும் எத்தனையோ லக்ஷ்மிகள் இருக்கிறார்கள். ஆனந்த லக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஜோதிலக்ஷ்மி, அனந்த லக்ஷ்மி என்று பல லக்ஷ்மிகள் இருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலக்ஷ்மி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லக்ஷ்மி பூஜை செய்யும் பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையே போட்டு லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லலாம்.

அன்னபூரணி சிலையை வைத்துப் பூஜை செய்பவர்கள், ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியைப் போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லக்ஷ்மி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்ன லக்ஷ்மி என்றும் கூறுவார்கள்.

அஷ்ட லக்ஷ்மிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும், தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

பதவியைத் தருபவள் கஜலக்ஷ்மி. குழந்தைப் பேற்றைத் தருபவள் சந்தானலக்ஷ்மி. செல்வத்தைத் தருபவள் தான்ய லக்ஷ்மி. வித்தையைத் தருபவள் வித்யா லக்ஷ்மி. வீரத்தைத் தருபவள் வீரலக்ஷ்மி. வெற்றியைத் தருபவள் விஜயலக்ஷ்மி.

லக்ஷ்மி தேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாசம் செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

பலவகைகளிலும் லக்ஷ்மி பூஜையைச் செய்தாலும் வரலக்ஷ்மி பூஜையை வருடத்திற்கு ஏழு முறைதான் செய்ய வேண்டும். இந்த பூஜையைச் செய்ய சில முறைகள் இருக்கின்றன.

வரலக்ஷ்மி பூஜையை வழி வழியாக வீட்டினர் செய்து வந்தால்தான் நீங்களும் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆவணி மாதம் வரும் ``ஆவணி பௌர்ணமி''க்குள் வரக் கூடிய வெள்ளிக் கிழமையன்றுதான் முதன் முதலில் பூஜையை எடுத்துக் கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் பூஜையைச் செய்ய வேண்டும்.

திருமணமான பெண்கள்தான் வரலக்ஷ்மி பூஜையை எடுத்துக் கொள்ள வேண்டும். புகுந்த வீட்டில் வரலக்ஷ்மி பூஜையைச் செய்தால் தான் பூஜையை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டில் இந்தப் பூஜையைச் செய்யும் வழக்கம் இருந்தாலும் புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாமியார் வீட்டில் பூஜையை எடுத்துக் கொள்ளும் போது தங்கள் வீட்டுப் பெண்களுக்கு பிறந்த வீட்டினர் சீர்வரிசைகளைச் செய்ய வேண்டும்.

தாமிரச் செம்போ, வெள்ளிச் செம்போ வாங்கித் தர வேண்டும். வெள்ளியில் லக்ஷ்மிமுகம், குங்குமக் கிண்ணம், சந்தனக் கிண்ணம், தட்டு,பூக்கள், பழங்கள், குங்குமம், மஞ்சள், தேங்காய் என்று வாங்கித் தர வேண்டும்.

வரலக்ஷ்மி விரதம் சில சமயம் ஆடி மாதம் கூடி வருவதுண்டு. இதற்கு சில முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை முதல் இரண்டு தினங்களுக்கு முன்னால் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் சுவரை சுத்தப்படுத்தி வரலக்ஷ்மி அம்மன் முகத்தை வரைய வேண்டும். மண்டபம் அமைத்து மண்டபத்தின் நடுவே பெரிய தாம்பாளத்தில் அரிசியைப் பரப்ப வேண்டும். அதன் மீது வெள்ளி அல்லதுதாமிரக் கலசத்தை (செம்பு) வைத்து அதனுள் சிறிது அரிசி, காசு, மஞ்சள், குங்குமம் என்று போட்டு மாலைகளை கலசத்தின் வாயில் பரத்திஅதன் மீது தேங்காயை வைத்து, வரலக்ஷ்மி முகத்தை அமைக்க வேண்டும். தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமப் பொட்டு வைப்பது முக்கியம். கலசத்துக்கும் நான்கு புறங்களிலும் குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். கலசத்தின் மேல் புது ரவிக்கைத் துணியை மடிப்பாகப் போட வேண்டும். பட்டுத் துணியை பாவாடையைப் போல வைத்தும் சுற்றுவார்கள்.

தேங்காய் மீது புது ரவிக்கைத் துணியை வஸ்திரமாகச் சுற்ற வேண்டும். பிறகு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எந்தப் பூஜைக்கும் முதலில் வினாயகர் பூஜை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக வீட்டின் வாசற்பக்க சுவரில் சின்னதாக கோலம் போட்டு, இப்படி அலங்கரித்த அம்மனை அங்கே வைத்து விட வேண்டும்.

பூஜை செய்பவர்கள் அம்மனை மெல்ல எடுத்துக் கொண்டு ``லக்ஷ்மி ராவே மாயிண்டிக்கு'' (``லக்ஷ்மியே என் வீட்டிற்கு வாம்மா'') என்று பாடி அழைத்து மண்டபத்துக்குள் வைக்க வேண்டும். லக்ஷ்மி தேவியை வாசலிலிருந்து வீட்டுக்குள் அழைப்பதாக ஐதீகம். வீட்டுக்குள் வந்த லக்ஷ்மி தேவியை பூஜை செய்ய வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு வினாயக பூஜையை முதலில் செய்ய வேண்டும். அம்பாள் முன்பு மஞ்சள்நூலில் ஏதாவது ஒரு பூவைக் கட்டி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள் என்று வைக்க வேண்டும். சாமந்தி, இருவாட்சி, மல்லிகை, முல்லை, அல்லி, தாமரை, அரளி, சண்பகம், தாழம்பூ என்று எல்லா வகை பூக்களை வைத்தும் பூஜை செய்யலாம்.

கஷ்டங்கள் வராமல் காப்பது அவள் கடமை அல்லவா! அஷ்டோத்திர மந்திரங்களைச் சொல்லி பூவைப் போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரைப் பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், இட்லி, மகா நைவேத்தியம் (சாதம்) இவைகளை நைவேத்யம் செய்ய வேண்டும். பூக்கட்டி வைத்த மெல்லிய மஞ்சள் சரட்டை எடுத்து தீபாராதனை முடிந்த பின்பு கணவரோ, வீட்டில் உள்ள பெரியவர்களோ கையில் கட்டி விடுவார்கள்.

``லக்ஷ்மி ராவே மாயிண்டிக்கி - ஸ்ரீராஜபுத்ரி'' என்று பாடுவார்கள். ``ஸ்ரீராஜ குலத்து புத்ரியான லக்ஷ்மியே என் வீட்டிற்கு வா'' என்று அவைளப் பாடி மகிழ்விக்க வேண்டும். ``க்ஷுர ஸாகர ஸமுத்ர ராஜ தனயே'' என்றும் லக்ஷ்மிக்குரிய ஸ்லோகங்களைப் பாடலாம். அவள் சமுத்திரத்திலிருந்து பிறந்த ராஜகுமாரி. அவளால்தானே எல்லா செல்வங்களையும் தர முடியும்.

அதனால்தான் ``மலரின் மேஷ திருவே உன்மேல் மையலாகி நின்றேன். இல்லை என்ற சொல்லை இனி இல்லையாக்க வேண்டும்'' என்று பகரதி இவளிடம் கேட்பது நியாயம்தானே?

``பாக்யாத லக்ஷ்மி பாரம்மா-நம்மம்ம நீ சௌ பாக்யாத லக்ஷ்மி லக்ஷ்மி பாரம்மா'' என்ற பாட்டும் வெகு பிரசித்தம்.

பூஜையைப் பார்க்க வந்தவர்களுக்குத் தாம்பூலமும், பிரசாதமும் கொடுக்க வேண்டும்.

வரலக்ஷ்மி விரதம் பிறந்த கதை!

ஒரு சமயம் கைலாயத்தில் பார்வதிதேவி மன வருத்தத்தில் இருந்தாள்.

``பார்வதி ஏன் மன வருத்தத்தில் இருக்கிறாய்?'' என்று ஈசன் விசாரித்தார்.

``கைலாயவாசா, பூலோகத்தில் மக்கள் மன வருத்தத்திலும், சஞ்சலத்திலும் உழல்கிறார்களே. இதைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும்'' என்று பிரார்த்திக்கிறாள்.

அப்பொழுது ஈசன் வரலக்ஷ்மி விரதத்தின் மகிமை பொருந்திய கதையை பார்வதிதேவிக்குச் சொல்லத் தொடங்கினார்.

பெண்களில் குணவதியாகத் திகழ்ந்த சாருமதி என்பவள் தாய், தந்தை, கணவர், மாமனார், மாமியார் என்று எல்லோரிடமும் அன்பு உடையவளாகத் திகழ்ந்தாள். அவள் கனவில் லக்ஷ்மி தேவியே வரலக்ஷ்மியாக வந்தாள்.

``பெண்ணே, நீ செய்த பூஜையால் அக மகிழ்ந்து உன் கனவில் வந்தேன். யார் என்னைத் துதித்து வரலக்ஷ்மி விரதத்தைச் செய்தாலும் நான் அவர்கள் வீட்டில் வசிப்பேன். அனைவரிடமும் இந்தப் பூஜையைப் பற்றி எடுத்து உரைப்பாயாக. உன் இல்லத்திலும் நான் வசிப்பேன்'' என்று கூறினாள்.

ஒரு சமயம் லக்ஷ்மி தேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வருகிறாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருக்கிறது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

வாசலில் நின்ற லக்ஷ்மியைப் பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைக்கிறாள். மனையைப் போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது. அதாவது லக்ஷ்மி தேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள். வரலக்ஷ்மி பூஜை செய்ய முடியாதவர்கள் நெக்குருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லக்ஷ்மி பூஜை, குபேர லக்ஷ்மி பூஜை என்று செய்து லக்ஷ்மியை ``லக்ஷ்மி ராவே மாயிண்டிக்கி-ஸ்ரீராஜ புத்ரி'' என்று அழைக்கலாமே. வருவாள். நிச்சயம் வரம் தருவாள்!

வடதிருமுல்லைவாயில் கோயில்


வசிஷ்ட முனிவர், இறைவனை வேண்டி, நினைத்ததைத் தரும் காமதேனுவைப் பெற்ற தலம் எது?

2 பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற ஆலயம் எங்கே இருக்கிறது?

3 இந்திரனைப் பிரிந்த இந்தி ராணி, கணவனோடு சேர்ந்து வாழ வரம் பெற்ற கோயில் எது?

4 சந்திரனும், சூரியனும் துயர் நீங்க வழிபட்ட மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிப்பது எங்கே?

5 அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களுக்கும் பாவ விமோசனம் அளித்த கொடியிடை நாயகியை தரிசிப்பது எவ்விடத்தில்?

6 குசலவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய ஊர் எங்கே இருக்கிறது?

7 வரம் தரும் பிரம்மாவே வரம் பெற்ற இடம் எது?

8 முருகனும், திருமாலும் இறைவனையும், இறைவியையும் பூஜித்தது எங்கே?

9 `கோபம்' புகழ் துர்வாசர் சாந்தம் அடைந்தது எந்த ஊரில்?

பதில் உங்களுக்கே தெரிந்திருக்கும். வட திருமுல்லைவாயில்!

இதே பெயரில் பாடல் பெற்ற இரண்டு தலங்கள் இருக்கின்றன. சீர்காழிக்கு அருகே 12 கி.மீ. தொலைவில் இருப்பது, தென் திருமுல்லைவாயில்.

சென்னை-திருவள்ளூர் ரயில் பாதையில் அம்பத்தூருக்கும் ஆவ டிக்கும் இடையில் இருக்கிறது நாம் இந்த வாரம் தரிசனம் செய்யும் வட திருமுல்லைவாயில்.

கி.பி. 800-க்கும், 850-க்கும் இடையில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தலமாகையால், ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முன்னரே சிறப்போடு விளங்கிய கோயில் இது. `பாசுபதா, பரஞ்சுடரே' என்று உருகி உருகிப் பாடியிருக்கிறார் சுந்தரர். அருணகிரிநாதர், மாதவச் சிவஞானயோகிகள், ராமலிங்க அடிகளார், இரட்டைப் புலவர்கள் ஆகியோரும் இத் தல இறைவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் காலையில் மேலூர் திருவுடை அம்மனையும், மதியத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனையும், மாலையில் வட திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனையும் வழிபட்டால் காசிராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று குட்டி சைஸில் வெள்ளெருக்கு விநாயகரை வாங்கியிருப்பீர்கள். ஆனால் இங்கே வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கருவறை வாசலில் பிரமாண்டமான இரண்டு வெள்ளெருக்குத் தூண்களே இருக்கின்றன. அதனைக் கைகளால் தொட்டு இறைவனை வணங்கினால் நினைத்தவை எல்லாம் நடக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

இத்தனை பெரிய வெள்ளெருக்குத் தூண் இங்கே வந்தது எப்படி?

இதோ அந்தக் கதை.

முல்லைக்கொடி

அது அந்தக் காலம்.

அப்போது திருமுல்லைவாயில் பெரும் காடாக இருந்தது. அங்கே வாணன், ஓணன் என்ற இரண்டு குறும்பர்கள், அரண் அமைத்துக் கொண்டு, நாட்டு மக்களைத் துன் புறுத்தி வந்தார்கள். இருவரும் பைரவ உபாசகர்கள் என்பதால் அவர்களை யாராலும் எதிர்க்க முடியவில்லை.

கடைசியில் துணிந்து வந்தான் தொண்டைமான் என்னும் மன்னன். அவனும் குறும்பர்களை எதிர்கொள்ள முடியாமல், ஓடோடினான்.

அப்படித் தப்பித்து வரும் வழியில் தொண்டைமானின் பட்டத்து யானையின் கால்கள், முல்லைக் கொடியில் சிக்கிக் கொண்டன.

எரிச்சலுற்ற மன்னன் யானையின் மீதிருந்தபடியே தன் வாளால் முல்லைக் கொடிகளை வெட்டி வீசினான். அப்போது அங்கிருந்து குருதி பீரிட்டது.

பயந்து போன மன்னன் கீழிறங்கிப் பார்த்தான். முல்லைக் கொடிகளுக்கு அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் தலைப் பகுதியில்தான் வாள் பட்டு... ரத்தம்!

மாசிலாமணீஸ்வரர்

துடித்துப் போன மன்னன் தன்னை அதே வாளால் மாய்த்துக் கொள்ள நினைத்த போது அந்த சிவலிங்கத்திலிருந்து ஈசன் வெளிப்பட்டார். ``வெட்டுப் பட்டாலும் மாசிலாமணியாக (குற்றமற்ற லிங்கம்) விளங்குவேன்'' என்று ஆசிவழங்கி, குறும்பர்களை எதிர்க்க, தன் வாகனமான நந்தி பகவானையே அனுப்பி வைத்தார்.

அப்புறம் என்ன?

தொண்டைமான் வெகு சுலபமாக குறும்பர்களை அழித்து அவர்களது கோட்டையைத் தூள் தூளாக்கினான். கோட்டையிலிருந்த குறும்பர்களின் அதிர்ஷ்டத்திற்குக் காரணமான இரண்டு வெள்ளெருக்குத் தூண்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து மாசிலாமணீஸ்வரருக்கு திருக்கோயில் கட்டினான், திருமுல்லைவாயிலில், வெற்றியின் சாட்சியாக அந்த இரண்டு தூண்களையும் கருவறை வாசலில் நிறுவினான்.

குறும்பர்களையோ, குறும்புத் தனங்களையோ மனதில் நினைக்காமல் மாசிலாமணீஸ்வரரை மட்டுமே தியானித்து அந்தத் தூண்களைத் தொட்டு வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும்.

இந்தக் கோயிலில் நந்தி, வழக்கம் போல இறைவனைப் பார்க்காமல் கிழக்கு நோக்கிப் பார்த்துக் கொண் டிருக்கிறது. ஏன்? தொண்டைமானுடன் போருக்குச் சென்றதால் இப்படி ஒருகோலம்!

தொண்டைமானுக்கு இறைவன் அவன் உயிர்நீப்பதற்குள் விரைவாக காட்சி தந்ததால் இந்த ஆலயத்தில் சுவாமியும் அம்மனும் இடம் மாறி இருக்கிறார்கள். இருவருமே கிழக்கு நோக்கி இருப்பது மிகவும் விசேஷமானது.

வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

சந்தனக் காப்பு சாத்தியிருப்பதால் சுவாமிக்கு தினமும் அபிஷேகம் செய்ய இயலாது என்பதால் பாதரசலிங்கமும் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது.

சூரியன், சந்திரன் ஆகிய கோள்கள் எல்லாம் இங்கே வந்து இறைவனை வழிபட்டதால் நவகிரகங்களுக்கென்று தனிச் சன்னதி கிடையாது. காரணம், அவர்கள் அனைவருமே இங்கே இறைவனிடம் ஐக்கியமானதுதான்.

மாசிலாமணீஸ்வரரும் கொடியிடை நாயகியும் லிங்கத்திற்குள் ஐக்கியமான நாள் ஒரு வைகாசி மாதம், பௌர்ணமி, கடக ராசி, விசாக நன்னாள்தான். அதனால் இன்றும் அதே தினத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

கொடியிடைநாயகி பெயருக்கேற்ப கொள்ளை அழகுடன் காணப்படுகிறாள். நிஜமாகவே நேரில் வந்து உயிருடன் நிற்பது போலவே இருக்கிறது. கேட்ட வரத்தை உடனே தரும் தேவி இவள் தான் என்பது, பார்த்தாலே தெரிகிறது. பரவசம் ஏற்படுகிறது. கண் பனிக்கிறது. மெய்சிலிர்க்கிறது.

ஒரு விடுமுறை நாளில் திருமுல்லைவாயில் சென்று பிரமாண்டமான ஆலயத்தையும் திருக்குளத்தையும் வலம் வந்து மாசிலாமணீஸ்வரரையும் கொடியிடைநாயகியையும் வணங்கிப் பாருங்கள். நீங்கள் கேட்ட வரங்கள் எல்லாவற்றையும் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் தருவதை சந்தோஷமாக வந்து என்னிடம் சொல்லுங்கள்..

``வடதிருமுல்லைவாயில் கோயில் எங்கிருக்கிறது?''

``சென்னை அம்பத்தூருக்குப் பக்கத்தில்''

``கோயில் திறந்திருக்கும் நேரம்?''

``6.30 - 12, 4 - 8''

``என்ன சிறப்பு?''

``நினைத்ததெல்லாம் நடக்கும்''

Sunday, August 3, 2008

ஞாயிறு கோயில்


ஞாயிற்றுக் கிழமைகளின் காலை நேரம் பொதுவாக உங்களுக்கு எப்படி?

1 12 மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவீர்கள்.

2 டி.வி.யை ஆன் செய்துவிட்டு, மூன்று காஃபியை முழுங்கி விட்டு ரிமோட்டை சித்திரவதை செய்து கொண்டிருப்பீர்கள்.

3 மார்க்கெட் அல்லது கறிக்கடைக் கூட்டத்தில் எரிச்சலுடன் தள்ளு முள்ளு செய்வீர்கள்.

4 இம்பிரிண்ட் வரை, ஒரு வார்த்தை விடாமல் செய்தித்தாளில் மூழ்கிக் கிடப்பீர்கள்.

5 வீட்டைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று குப்பைகளை அதிகமாக்கி, முதுகு பிடித்துக் கொண்டுவிட்டது என முனகுவீர்கள்.

இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒவ்வொரு ஞாயிறும், சலிக்காமல் செய்து கொண்டிருப்பீர்கள்.

ஒரு வித்தியாசமாக, ஒரே ஒரு ஞாயிறு மட்டும் ஞாயிறு சென்று பாருங்கள்!

புரியவில்லையா? சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஞாயிறு என்ற கிராமத்திற்குச் சென்று, அங்கே அருள் புரியும் ஞாயிறையும் அதாங்க... சூரிய பகவானையும் புஷ்ப ரதேஸ்வரரையும் வணங்கிப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல வித்தியாசம்... சீரிய மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.

ஞாயிறு கோயிலுக்குள் நுழைந்ததுமே உங்கள் மனசுக்குள் பூப்பூக்கும். ஆலயத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது சோலைக்குள் தவறி நுழைந்து விட்டோமா என்ற ஐயம் எழும். ஆம். எங்கு திரும்பினாலும் பசுமை பசுமை. அறுகம்புல் தோட்டம், மலர்ச்செடிகளின் கூட்டம் என்று இயற்கையே இறைவனாகக் காட்சியளிக்கும் உணர்வு எழும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை மிக்க ஞாயிறு ஆலயத்தின் சிறப்பை ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்கச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியான தெய்வமகள் சங்கிலி நாச்சியார் அவதரித்த பூமி, சாகுந்தல காவியம் போற்றும் கண்வ மகரிஷி முக்தி பெற்ற புண்ணிய இடம், ஆதிசங்கரரால் சொர்ணாம்பிகை ஸ்தாபிக்கப்பட்ட கோயில்... என்று, பட்டியல் தொடர்ந்து கொண்டே போகும்.

``எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. என்னோட அப்பா ரொம்ப வயசானவரு. 78 வயசு, அவருக்கு திடீர்னு கண்ணு ரெண்டுலயும் வலி ஆரம்பிச்சு, வீங்கியும் போயிடுச்சு. வீட்ல எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம். டாக்டர்கிட்டப் போனா, ஏதோ ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாரு. எங்கப்பா ஆஸ்பத்திரிக்கே போகாதவரு. ஆப்ரேஷன் பண்ணினா நான் செத்துப் போய்டுவேன்னு அலர்றாரு.

அப்ப அந்த ஆஸ்பத்திரி டாக்டர்தான் எங்கப்பாவுக்கு இந்த ஞாயிறு கோயிலைப் பத்திச் சொல்லி, இங்க இருக்கற சூரியனையும் சிவனையும் கும்பிட்டுட்டு வந்தா ஒரு குறையும் வராது. தாராளமா கண் ஆப்ரேஷன் பண்ணிக்கலாம்னு சொன்னாரு.

நானும், எங்கப்பாவை அழைச்சுக்கிட்டு இங்க வந்தேன். கண்ணு தெரியாத அவர் சார்பா, சாமியை நான்தான் பார்த்துக் கும்பிட்டேன். சொன்னா நம்பமாட்டீங்க, பயந்த சுபாவமுள்ள எங்கப்பா, ஆப்ரேஷனுக்கு இங்கயே சம்மதிச்சார். நல்லபடியா அதுவும் முடிஞ்சு எங்கப்பாவுக்குப் பார்வையும் திரும்பிடிச்சு. இது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனாலும், அந்த நன்றிக்காக மாசாமாசம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது நான் ஞாயிறு வந்துடுவேன்'' மெய்சிலிர்த்துப் போய்ச் சொல்கிறார். அண்ணாநகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வி. தணிகாசலம்.

கண் சம்பந்தப்பட்ட நோய்க்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இருக்கிறது. இந்தக் கோயில் எழுந்ததே ஒரு மன்னனின் கண்கள் குருடானதால்தான்!

இதோ, அந்தக் கதை.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சிவ பக்தனான சோழ மன்னன் ஒருவன் ஆந்திரத்தில் உள்ள நெல்லூர் வரை, படையெடுத்துச் சென்று வெற்றி வாகை சூடிவந்தான்.

இந்த ஊருக்கு அருகில் உள்ள சோழவரத்தில் முகாமிட்டான். அதிகாலையில் சிவ பூஜை செய்வதற்காக செந்தாமரை மலர்களைத் தேடி, இறுதியில் இந்த ஞாயிறு கிராமத்திற்கு வந்தான், மன்னவன்.

குளம் முழுக்கத் தாமரை மலர்கள். அதிலும் நடுவில் ஒரு மலர், ஓங்கி உயர்ந்து மன்னனைப் பார்த்துப் புன்னகைப்பது போல் அசைந்தது. அதனைப் பறிக்க முயற்சித்தான், சோழன்.

அவன் நெருங்க, நெருங்க மலர் விலகிற்று, போக்குக் காட்டிற்று.

பொறுமையிழந்த மன்னவன், அந்த அபூர்வ தாமரை மலரை நோக்கித் தன் கத்தியை எடுத்து வீசினான்.

அந்தக் கத்தி, தாமரை மலர் இத்தனை நாட்களும் பாதுகாத்துக் கொண்டிருந்த, அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டுச் சிதறியது.

அந்த லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டு, குளம் முழுக்க குங்கும நிறமானது. அத்துடன் பேரொளி, பேரொலி எழும்பிற்று. அதைப் பார்த்த மன்னவனின் கண்கள் பறி போயிற்று. மன்னன் மயங்கி விழுந்தான். அவன் வந்த குதிரை வெறிகொண்டு எங்கோ ஓடிற்று.

(மன்னன் வீசிய கத்தியின் முனை சிதறி உடைந்து விழுந்த இடம்தான் `கத்திவாக்கம்'. கைப்பிடி விழுந்த இடம் `கண்டிகை'. அரசன் தன் மார்பு கீழே படும்படி விழுந்த இடம்தான் `மாரம்பேடு.' குதிரை விழுந்த இடம் `குதிரைப் பள்ளம்' என்ற பெயர்களில் அருகில் உள்ள ஊர்களாக இன்றும் விளங்குன்றன.)

அப்புறம் என்ன? சிவபெருமான் பேரொளியுடன் ஞாயிறாக மன்னனுக்குக் காட்சி தந்து மீண்டும் பார்வை தந்தார். அந்த இடத்திலே தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி கட்டளையிட்டார்.

மலர் வழியாக இறைவன், காட்சி தந்ததால் `புஷ்பரதேஸ்வரர்' (பூத்தேர் ஆண்டார்) என்று அந்தச் சிவலிங்கத்திற்குப் பெயரிட்டு குளத்தங்கரையிலேயே அழகுற ஆலயம் அமைத்தான் ராஜா.

இந்தச் சிவலிங்கத்தின் மேல், கத்தி பட்ட வடு இருப்பதை இன்றும் காணலாம்!

மன்னன் கண்பார்வையைத் திரும்பப் பெற்றதால், இங்கே வந்து இறைவனை தரிசனம் செய்தாலே கண் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

பிரிந்து போன கணவன் அல்லது மனைவி ஒன்று சேரவும் இங்கே வழிபாடு நடத்துகிறார்கள். அதற்கும் ஒரு கதை!

தன்னைவிட்டுப் பிரிந்த மனைவி சாயாதேவியுடன் மீண்டும் இணைவதற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார், சூரிய பகவான். அப்போது வானத்திலே ஒரு ஜோதி காட்சியளித்து சூரியனுக்கு ஆசி கூறியபடியே, மெல்ல நகர்ந்தது.

அந்த ஜோதி வானில் ஊர்ந்து வந்து ஞாயிறு சிவலிங்கத்தின் மேலே விழுந்து மறைந்தது. தொடர்ந்து வந்த சூரியன் மிக மகிழ்ந்து புஷ்பரதேஸ்வரரை வழிபட்டு மனைவியை மீண்டும் அடைந்தார்.

அந்த மகிழ்ச்சியில் ஞாயிறு ஆலயத்தில் மூலவருக்கு எதிரிலேயே காட்சியளிக்கிறார், சூரியபகவான். அவர் நீராடி சிவனை வழிபட்டதால் திருக்குளத்திற்கு சூரிய தீர்த்தம் என்று பெயர்.

சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு சூரிய ஒளி சிவபெருமான் மற்றும் அம்மன் பாதங்களில் விழுவது கண்கொள்ளாக் காட்சி.

சனி தோஷம் நீங்க திருநள்ளாறு செல்வது போல சூரிய தசை, புத்தி நடக்கிறவர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது.

பல்லவர் காலத்து கமலவிநாயகர், முருகப்பெருமான், காலபைரவர், நடராஜர், சிவகாமி அம்மன், சங்கிலி நாச்சியார் ஆகியோரும் இங்கே காட்சி தருகிறார்கள்.

பஞ்ச பாஸ்கர ஸ்தலம் எனப்படும் 5 சூரியத் தலங்களுள் ஒன்று இந்த ஞாயிறு. (மற்றவை திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம், தலைஞாயிறு.)

மீண்டும் ஆரம்பத்திற்கே வருகிறேன்.

வழக்கமான எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் போல் இல்லாமல் உங்கள் வாழ்வில் இனிமைகள் பூத்துக்குலுங்க, நல்லன எல்லாம் நடக்க, உங்கள் கண் ஒளி பலப்பட நீங்கள் ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது ஞாயிறு கோயிலுக்குச் சென்று வாருங்கள். அங்கே சூரியபகவானும் அவருக்கே ஒளி தந்த புஷ்பரதேஸ்வரரும் உங்கள் வருகைக்காக புன்னகையுடன் காத்திருக்கிறார்கள்..


ஞாயிறு கோயில் எங்கே இருக்கிறது?

``சென்னையிலிருந்து 30 கி.மீ. செங்குன்றம், சோழவரம், அருமந்தை வழியாகச் செல்லலாம். ரோடு ரொம்ப மோசம்! (நெடுஞ்சாலைத் துறை கவனிக்க!) ரெட்ஹில்ஸிலிருந்து 57சி, டி57, ஏ58 போன்ற பஸ்கள் செல்கின்றன. 13 கி.மீ. தூரம்.''

கோயில் எப்போது திறந்திருக்கும்?

``தினசரி காலை 7-11, 4-7, ஞாயிறு மட்டும் காலை 6-1, 4-7''

உணவு, தங்குமிடம் வசதி?

``எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் சென்னையிலேயே முடித்துக் கொள்ளுங்கள்!''

சீரான வாழ்வு தரும் ஸ்ரீனிவாசன்!


பொதுவாக ஆலயங்களில் அரங்கன் கிழக்கு முகமாக சேவை சாதிப்பதுதான் வழக்கம். ஆனால் சென்னை தண்டையார்பேட்டையிலோ, ஸ்ரீநிவாஸ வரதராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வடதிசையை நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

நூறாண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயம், வடக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் எழிலாகத் திகழ்கின்றது. கோபுர துவார தேவதைகளாக தும்பிக்கை ஆழ்வாரும், நாகராஜரும் அருள்கின்றனர்.

பலிபீடம், துவஜஸ்தம்பம் கடந்தால் கருடாழ்வார் சன்னதி. அஞ்சலி ஹஸ்தராக மூலவரை நோக்கி பெரிய திருவடி சேவை சாதிக்கின்றார். மகாமண்டபம் கடந்து கருவறைக்குள் செல்லுமுன், வெளியே துவாரபாலகர்களாக நின்ற கோலத்தில் ஜெய, விஜயனைக் காணலாம்.

கருவறையில், மூலவர் ஸ்ரீநிவாஸப் பெருமாள், சங்கு சக்கரத்துடன், அபய, கடிஹஸ்தம் காட்டி, நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக சேவை சாதிக்கின்றார். அருகில் உற்சவர் வரதராஜப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியுள்ளார். அந்தராள மண்டபத்தில் நம்மாழ்வாரும், ராமானுஜரும் சிலாரூபமாக சேவை சாதிக்கிறார்கள்.

கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இவ்வாலயத்தைச் சுற்றிலும் பல மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் காவல் தெய்வமாக ஸ்ரீநிவாஸ வரதராஜப்பெருமாள் விளங்குகிறார். ஒரு வாரம், இருவாரம் என கடலில் மீன் பிடிக்கச் செல்வதற்கு முன்பாக இப்பகுதி மீனவர்கள், தங்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைக்க வேண்டுமென்றும், கடலில் எந்தவித ஆபத்தும் நேராமல் தாங்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டுமென்றும் இவரை வேண்டிக்கொண்டு செல்வது அக்காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே வருகிறது.

திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்த உணர்வு, இங்குள்ள பெருமாளை தரிசித்தாலே கிட்டுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இதை ஏழுமலையான் கோயில் என்றே பலர் அழைக்கின்றனர். இவரை தரிசித்தால் மாங்கல்யப்பேறு, மழலைப்பேறு உள்பட பல மகத்தான பேறுகள் கிட்டுகிறதாம்.

பிராகார வலம் வரும்போது இடப்பக்கத்தில் மேற்குப் பார்த்த சன்னதியில் பக்த ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார். சிறிய மூர்த்தம். மூர்த்தி சிறிதானாலும் அவரது கீர்த்தி பெரியது. பெரும் வரப்பிரசாதியான இவரை, கல்யாணமாகாதவர்கள் நாற்பத்தொரு நாட்கள் தொடர்ந்து பிரதட்சணம் செய்து தரிசித்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், அனுமனுக்கு வெண்ணெய்க்காப்பு, வடைமாலை சாத்தி தங்கள் நன்றியை காணிக்கையாக்குகின்றனர். மார்கழி மூலநட்சத்திரத்தில் இவருக்கு விசேஷ அலங்காரமும், திருமஞ்சனமும் நடக்கிறதாம்.

மூலவர் சன்னதிக்கு வலப்பக்கத்தில், தனி சன்னதியில் பெருந்தேவித்தாயார் அருள்கிறாள். அருகில் அவளது உற்சவத் திருமேனியும் காணப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று விசேஷ அலங்காரமும், திருமஞ்சனமும் காண்கிறாள். நவராத்திரியின் கடைசி நாளன்று சரஸ்வதி திருக்கோலத்தில் இவளுக்கு ஊஞ்சல் சேவையும் உண்டு.

மூலவர் சன்னதிக்குப் பின்னால், இக்கோயிலின் தலமரமான அரசமரம் உள்ளது. அதன் அடியில் நாகர்கள் அருள்கின்றனர். அரசமரத்தின் கிளைகள் மூலவர் சன்னதிக்கு மேல் பரவியுள்ளதை நோக்கும் பொழுது, பெருமாளுக்கு ஆதிசேஷன் குடைபிடித்தாற்போன்ற காட்சி தெரிகின்றது.

மூலவருக்கு இடப்பக்கத்தில் ஆண்டாள் தனி சன்னதியில் அருள்கிறாள். அருகில் உற்சவத்திருமேனியும் உள்ளது. ஆடிப் பூரத்தன்று ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், விசேஷ அலங்காரமும் செய்விக்கப்படுகிறது. போகியன்று பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில், ஒவ்வொரு நாளும் அவள் சன்னதியில் திருப்பாவை பாராயணம் பக்தர்களால் செய்யப்படுகிறது.

ஆண்டாளை அடுத்து காயத்ரி தேவி சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். வடநாட்டு பாணியில் சன்னதி விமானம் அமைந்துள்ளது. பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் தனி மண்டபத்தில் விஷ்ணு பாதம் அமைந்துள்ளது. பெருமாளை முழுமையாக சேவித்த பலன், விஷ்ணு பாதத்தைத் தொட்டு சேவித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை.

அடுத்து வேணுகோபால சுவாமி சன்னதி.சங்கு சக்கரத்துடன் புல்லாங்குழல் இசைக்கும் திருக்கோலம். கிருஷ்ண ஜெயந்தியன்று வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில், தரிசிப்பவர்களின் மனதைக் குளிர்விப்பாராம் இவர். அவரை தொடர்ந்து சீதை, லட்சுமணர், அனுமனுடன் கோதண்டராமர் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். ஸ்ரீராமநவமி இங்கு விசேஷம்.

வைகானஸ ஆகமப்படி தினமும் மூன்று கால பூஜை இக்கோயிலில் நடைபெறுகிறது. தரிசனத்திற்காக காலை 6 முதல் 11 மணி வரையும், மாலை 5.30 முதல் 8.30 வரையும் கோயில் திறந்திருக்கும். புரட்டாசி மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. வைகாசியில் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று விடியற்காலை கருடசேவையுடன் கோபுரதரிசனம் நடைபெறும்.

ஆண்டாள் திருக்கல்யாண மண்டபமும், மடைப்பள்ளியும், சிறிய நந்தவனமும் கோயிலில் அமைந்துள்ளன. கஜ, கருட, சேஷ, ஹம்ச, அனுமந்த, பல்லக்கு வாகனங்கள் உள்ளன. வாகன மண்டபத்திற்கான திருப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் பெருமாள் சன்னதி விமானத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

பக்தர்களின் குறைகளை பரிவுடன் தீர்க்கும் இந்தப் பெருமாள் ஆலயத்திற்கு நீங்களும் ஒரு முறை சென்று, அவனது பரிபூரண அருளைப் பெற்று வாருங்களேன்!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், அகஸ்தியா பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. ராயபுரம் வழியாகச் சென்றால், பெருமாள் கோயில் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொள்ளலாம். அருகில் கும்மாளம்மன் கோயிலும் உள்ளது.

திருக்கழுக்குன்றம்


என் கல்யாணத்துக்காக வீட்டுல எத்தனையோ பொண்ணு பாத்தாங்க. எதுவுமே அமையல. வயசு வேற ஏறிக்கிட்டே போச்சு. எனக்கு ஒரே கவலையா ஆயிடுச்சு. எல்லாமே தட்டித்தட்டிப் போவுதேன்னு வீட்டுலயும் எல்லாரும் ஃபீல் பண்ணினாங்க.

அப்பதான் ஒரு பெரியவர், ``நல்ல மனைவி அமையணும்னா அதுக்கு ஒரே வழி, திருக்கழுக்குன்றம் போய் சங்கு தீர்த்தத்துல குளிச்சுட்டு மலைமேல இருக்கற வேதகிரீஸ்வரரையும், தாழக்கோயில்ல இருக்கற அம்மனையும் ஒரே ஒரு தடவை பயபக்தியோட கும்புடு''ன்னு சொன்னாரு.

நம்பிக்கையில்லாமதான் நான் திருக்கழுக்குன்றம் போனேன். சொன்னா நம்பமாட்டீங்க, சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்த அன்னிக்கே, எனக்கு ஒரு வரன் அமைஞ்சு,அந்த திருக்கழுக்குன்றத்திலேயே மறுமாசம் கல்யாணமும் நடந்து, இன்னிக்கு அன்பான, நல்ல மனைவியா நிர்மலா எனக்குக் கிடைச்சிருக்கா'' பரவசத்துடன் சொல்கிறார், மங்களம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்.

திருக்கழுக்குன்றம் கோயிலுக்குப் போய் சிவனை... குறிப்பாக அம்மனை தரிசனம் செய்தாலே நல்ல மனைவி வாய்ப்பாள் என்பது புரிந்துவிடும்.

ஆம். தாழக்கோயிலில் அழகு மிளிர அருள் பாலிக்கும் அம்மனின் பெயர் என்ன தெரியுமா?

பெண்ணின் நல்லாள்!

இப்படிப் பெயர் வைத்தவர் யார் தெரியுமா?

திருஞானசம்பந்தர்!

அந்தப் பெண்ணின் நல்லாளை வணங்கினால் நல்ல பெண் கிடைப்பாள் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்?

அதுமட்டுமல்ல, முன்னொரு காலத்தில் ஓர் அழகிய பெண்ணின் திருமண நிச்சயதார்த்தமே இந்தத் திருக்கழுக்குன்ற மலை உச்சியில் நிகழ்ந்திருக்கிறது.

இமயமலையில் இருந்து 7 முனிவர்கள் வந்து இங்கே அருள்புரியும் வேதகிரீஸ்வரரிடம் திருமண சம்பந்தம் பேசினார்கள்.

இமயமலை மன்னரின் மகளுக்கு,வேதகிரீஸ்வரரை மாப்பிள்ளை கேட்டார்கள்.

இறைவனும் புன்னகையுடன் சம்மதிக்க, சுபயோக சுபதினத்தில் பிரம்மா, விஷ்ணு,இந்திரன் ஆகியோர் புடைசூழ இந்த மலையிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது.

மன்னனின் மகள்தான் திரிபுரசுந்தரி! அவளைத்தான் `பெண்ணின் நல்லாள்' என்கிறது ஞானக்குழந்தை.

264 ஏக்கர் நிலத்தில், 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மலைக்கோயில்.

நான்கு வேதங்களும் சேர்ந்தே இந்த மலை உருவானதால், இறைவனுக்கு வேதகிரீஸ்வரர் என்று பெயர்.

அரிய மூலிகைகள் இருப்பதால் சஞ்சீவிமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. அதனால் இறைவனுக்கு மலை மருந்தீசர் என்ற பெயரும் உண்டு.

நெடிதுயர்ந்த மலை, செங்குத்தான படிகள். காலையில் 8 மணிக்கே மலையேற ஆரம்பிப்பது நல்லது. அல்லது மாலை. இல்லாவிட்டால் கால்கள் சுட்டுப் பொசுக்கிவிடும். ஜாக்கிரதை! செங்குத்தான படிகள் என்பதால் மூச்சிரைக்கிறது, செய்த தவறுகளும், செய்யாத உடற்பயிற்சி-களும்கண்முன் எழும்!

மனம் ஒரு குரங்கு என்பார்கள். இங்கே நிஜ குரங்குகளும் உண்டு. பை ஜாக்கிரதை!

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் குகையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த மலைக்கோயிலின் உட்புறச் சுவர்களில் பிரம்மா,யோக தட்சணாமூர்த்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சியளிக்கிறார்கள்.

மலை உச்சியில் மூலவர் வேதகிரீஸ்வரர், கிழக்கு நோக்கி வாழைக் குருத்து போன்ற வடிவில் அமைந்திருக்கிறார். ஆனால் கவசமிட்ட பெரியசிவ லிங்கத்தைத்தான் நாம் காணமுடியும்.

ஒரு வியாழ வட்டத்திற்கு ஒரு முறை இந்திரன் இவரை பூஜை செய்வது இங்கே அதிசயமான ஒன்று.

இந்திரன் பூஜை என்றால் நம்மைப்போல் அபிஷேகம், மந்திரம், மலர் மாலை சமாசாரமெல்லாம் கிடையாது.

இடியால் பூஜை!

ஆம். பயங்கரமாய் வானில் மழை, மின்னலுடன் இடி இடித்து, கோபுரத்தின் உச்சியில் அது விழுந்து, மூலவரை வலம் வந்து, பூமிக்குள் இறங்கிவிடும்.

இதனால் கோயிலுக்கோ,கோபுரத்திற்கோ இதுவரை எந்த பாதிப்பும் வந்ததில்லை என்பது வியப்பான விஷயம்!

மலையையும், கோயிலையும் சுற்றி காலை 11 மணிக்கு 2 கழுகுகள் மேலே வட்டமிட்டுப் பறந்து கோயில் பிரசாதத்தை வந்து உண்ணும் காட்சிபல நூற்றாண்டுகளாக இங்கே நடந்து வந்த அதிசயம். அதனால்தான் இந்த ஊருக்கே திருக்கழு(கு)குன்றம் என்று பெயர்.

அந்தக் கழுகுகளுக்கும் ஒரு கதை உண்டு.

பிரம்மபுத்திரர்கள் 8 பேர் செய்த சிறுபிழையினால் அவர்கள் யுகத்திற்கு இருவராகக் கழுகுகளாகப் பிறந்து இங்கே இறைவனை வணங்கி முக்திபெறுமாறு அருளினார் சிவபெருமான்.

இப்போது சில காலமாய் கழுகுகள் இங்கே வருவதில்லை. முக்தியடைந்துவிட்ட தாகக் கருதலாம். அல்லது சுற்றுப்புறச்சூழல் குறித்து நமக்கு எச்சரிக்கை மணியாகவும் வைத்துக்கொள்ளலாம்!

இன்னொரு அதிசயம் இந்தக் கோயில் திருக்குளத்திற்கும் உண்டு. கடலில் மட்டுமே உற்பத்தியாகும் சங்கு, மார்க்கண்டேய முனிவர் இங்கே தவம் செய்ததால் இந்தத் திருக்குளத்தில் 12 வருடங்களுக்கு ஒருமுறை தோன்றுகிறது. (அடுத்தது 2011).அவற்றையெல்லாம் சேகரித்து ஆலயத்தில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

சங்கு பிறக்கும் சமயம் இந்தக் குளத்தில் நீராடினால் முக்தி நிச்சயம் என்கிறது புராணம். குளத்து நீரில் தாமிரசத்து உள்ளதால் நோய்களும் தீருகின்றன. மகாமகம், கும்பமேளாவிற்கு ஒப்பானது இந்த தீர்த்தம்.

மலைஉச்சி மன்னவனை தரிசித்த வுடன் கீழிறங்கி ஊரின் மத்தியிலே அருளாட்சி புரியும் திரிபுரசுந்தரி என்னும் பெண்ணின் நல்லாள் கோயிலுக்குச் செல்லலாம்.

சிவபெருமான் இங்கேயும் பக்தவச்சலராக அருள்புரிந்தாலும், அம்மனுக்குத்தான் இங்கே பக்தர்களின் முதல் மரியாதை. தேவியின் பாதங்களுக்கு மட்டுமே இங்கே அபிஷேகம் உண்டு. ஏன்? அம்மன் விக்ரஹம் அபூர்வ மூலிகைகள் கலந்து உருவானதால், தினசரி அபிஷேகம் செய்வதில்லை. அம்மனைக் கண்குளிரக் கண்டாலே தீராத நோய்களும் தீர்ந்துவிடும்.

நல்ல மனைவி மட்டுமல்ல,இந்த தேவியை வணங்கினால் நல்ல குழந்தையும் பிறக்கும்.அவ்வாறு பிறந்தவர்தான் மாபெரும் தமிழறிஞரானமறைமலையடிகள்!

உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்கவேண்டுமா?

புத்திசாலி குழந்தை பிறக்க வேண்டுமா?

நோய்கள் எல்லாம் தீரவேண்டுமா?

மறுபிறவி வேண்டாமா?

உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

திருக்கழுக்குன்றத்துக்கு பஸ் பிடியுங்கள்!ற


வெய்யில் நேரத்தில் மலையேறும்போது கால்கள் சுட்டுப் பொசுக்குகிறது. காலணிகளைக் கீழேயே விடச் சொல்லாமல், மேலே மலைக்கோயில் வாசலில் விடுமாறு ஏற்பாடு செய்தால் பக்தர்களின் கால்களுக்காக கைகள் நன்றி சொல்லும்!

எங்கே? எப்படி?

எங்கே இருக்கிறது?

செங்கல்பட்டு&மாமல்லபுரம் நெடுஞ்சாலையில் 14 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. சென்னை கோயம்-பேட்டிலிருந்து `108&கல்பாக்கம்' பஸ் விரைவாகச் செல்கிறது. கட்டணம் ரூ.20.

கோயில் எப்போது திறந்திருக்கும்?

அம்மன் கோயில் : காலை 6.00 முதல் பிற்பகல் 1 வரை. மாலை 4.00 முதல் இரவு 9.00 மணி வரை.

மலைக்கோயில் : காலை 9 முதல் பிற்பகல் 1 வரை, மாலை 4 மணிமுதல், இரவு 9 வரை.

உணவு, தங்குமிடம் வசதி எப்படி?

செங்கல்பட்டு அல்லது மகாபலிபுரம்தான் வசதி.

சிறப்பு என்ன?

நால்வராலும் பாடப்பெற்ற தலம். திருமண வாய்ப்பு, மக்கட்பேறு ஏற்படும். நோய்கள் விலகும். முக்தி நிச்சயம்.

ஆலயத்தின் தொலைபேசி எண்?

044 27447139

Saturday, August 2, 2008

பொன்விளைந்த களத்தூர்


ஜகத்குரு ஆதிசங்கரர் பசியாற,தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தந்த ஏழை மூதாட்டிக்காகக் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி, தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிவித்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்தப் புனிதச் சம்பவம் நிகழ்ந்தது கேரளத்தில்.

ஆனால் நம் தமிழகத்திலேயே செங்கற்பட்டுக்குப் பக்கத்தில் பகவானே, தங்கமழையை... அல்ல தங்கத்தையே பூமியில் விளையச் செய்த அற்புதம் நிகழ்ந்த ஊர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

அதுதான் பொன்விளைந்த களத்தூர்!

அழகிய சின்ன கிராமம். வரிசையாக மூன்று சின்னச் சின்ன கோயில்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெருமாள். பார்க்கப் பார்க்க பரவசம் ஏற்படுவதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். நான்கு கிலோமீட்டர் தொலைவில் இன்னொரு பெருமாள் கோவிலும் உண்டு.

களத்தில் அதாவது வயலில் பொன் விளைந்ததால் இந்த ஊர் பொன் விளைந்த களத்தூர். அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து சென்று விழுந்ததால் அந்த ஊரின் பெயர் பொன்பதர்க் கூ(ட்)டம்!

ஆக நான்கு பெருமாள் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் வறுமை அகன்று செல்வம் சேரும். வணங்குபவர்களின் இல்லங்களில் பொன் முதலான ஐஸ்வர்யங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முதலில் இந்த ஊரில் பொன் விளைந்த கதையைத் தெரிந்துகொள்வோமா?

700 வருடங்களுக்கு முன்னால்...

வைணவ ஆச்சார்யாரான தூப்புல் நிகமாந்த மகாதேசிகன், ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் இந்தக் களத்தூரில் ஒருநாள் தங்கினார்.

அவர், தன்னுடன் எப்போதும் ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் கொண்டு வருவார். அதற்கு இருவேளையும் பூஜை செய்வார்.

அன்றைய தினம், மாலை பூஜையின்போது நிவேதனத்திற்குப் பிரசாதம் எதுவும் கிடைக்காததால் துளசி தீர்த்தத்தையே ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்து, அதையே தானும் பருகி உறங்கப் போனார்.

அந்த ஊரில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். சிறந்த பக்திமான்.

அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் நெல்லை விளைவித்து அந்த வருமானத்தில் அரையும் குறையுமாக அவன் வாழ்ந்து வந்தான்.

மறுநாள், அவன் களத்தில் நெல் அறுக்கவேண்டிய நாள். யாராவது திருடர்கள் கதிரை அறுத்துவிடுவார்களோ அல்லது காட்டு மிருகங்களால் பயிருக்கு ஏதாவது சேதம் வந்துவிடுமோ என்ற கவலை அவனுக்கு. அதனால் அன்றிரவு தன் நிலத்தைப் பார்வையிடக் கிளம்பினான்.

அவன் நினைத்தது நடந்தது. பளபளவென ஒரு பெரிய வெள்ளைக் குதிரை, அந்தக் குடியானவனின் நிலத்தில் திருப்தியாக மேய்ந்து கொண்டிருந்தது.

கோபம் கொண்ட அவன், குதிரையைத் துரத்த, அது நாலுகால் பாய்ச்சலில் விரைய, இவன் இரண்டு கால் பாய்ச்சலில் எகிற... கடைசியில் அந்த அபூர்வ வெள்ளைக்குதிரை தூப்புல் நிகமாந்த மகாதேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது.

சப்தம் கேட்டு எழுந்த தேசிகனிடம் அவன் விஷயத்தைச் சொல்ல, மகாதேசிகனுக்கு உடல் சிலிர்த்தது. மேய்ந்தது சாதாரண குதிரையல்ல துளசிதீர்த்தம் போதாத, குதிரைமுகக் கடவுளான ஹயக்ரீவனின் லீலை அது என்று புரிந்தது.

மெய்சிலிர்த்துப் போன மகாதேசிகன் ``பகவானின் காட்சி கண்ட புண்ணியப் பிறவியப்பா நீ'' என்று அவனிடம் சொல்லி, அவனையும் அழைத்துக்கொண்டு களத்துக்கு விரைந்தார்.

அங்கே அந்த அற்புதம் நிகழ்ந்திருந்தது. வெள்ளைக்குதிரை நெல்லை மேய்ந்த இடங்களில் எல்லாம் காணாமல் போன நெல் மணிகளுக்கு பதிலாகப் பொன்மணிகள் நிலத்திலே விளைந்திருந்தன. பொன் விளைந்த களத்தூர்!

அத்தனை மகத்துவம் மிக்க இந்த ஊரில் உள்ள மூன்று வைணவ ஆலயங்களில் முதலாவதாக உள்ள லட்சுமிநரசிம்மர் ஆலயத்திற்குள் நுழைவோமா?

அழகிய இந்த ஆலயத்தில்தான் நெல்லைப் பொன்னாக்கிய ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்.

மூலவர் லட்சுமி நரசிம்மர். உடனே சிங்கமுகத்துடன் பெருமாள் காட்சி தருவார் என்று நினைக்காதீர்கள். `சிங்க முகத்துடன் சேவை சாதித்தால் என்னைப் போன்ற குழந்தைகள் பயப்படுவார்களே' என்று பிரகலாதன் கேட்டதற்கிணங்க, சாந்த சொரூபியாய், அழகு ரூபத்துடன் நரசிம்மர் காட்சியளித்தாரே, நினைவிருக்கிறதா? அப்படித்தான் அகோபிலவல்லி நாயகியுடன் காட்சி தருகிறார் நரசிம்மர்.

இவருக்கும் ஒரு கதை உண்டு.

108 திருப்பதிகளில் ஒன்றான திருக்கடல் மல்லையில் இருந்தவர் இந்தப் பெருமாள்! 1000 ஆண்டுகளுக்கு முன்னால், அன்னியர்களால் கடல்மல்லை (மாமல்லபுரம்) கோயிலுக்கு ஆபத்து வந்தபோது, கவலை கொண்ட பக்தர்களிடம் நரசிம்மரே அசரீரியாகப் பேசினார்.

``கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. என்னை இங்கிருந்து எடுத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் செல்லுங்கள். கருடனும் என்னுடன் பறந்து வருவான்.

அந்தக் கருடன் எந்த ஊரில், எந்த இடத்தில் அமர்ந்து கொள்கிறானோ அந்த இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்யுங்கள்'' என்று கூறினார்.

அவ்வாறு கருடன் வந்து அமர்ந்த இடம்தான் இந்த ஆலயம். அதாவது பகவான் லட்சுமி நரசிம்மரே தானாக வந்து விரும்பி அமர்ந்து கொண்ட இடம் என்பதால், இதன் சிறப்பைச் சொல்லியா ஆகவேண்டும்?

``ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி, வறுமை நீங்கிச் செல்லும் இந்த மகிமைமிக்க ஆலயத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அடித்த பெரும் காற்றில் ஆலயக் கொடிமரம் விழுந்து உடைந்துவிட்டது. அதை பக்தர்கள் யாராவது புதுப்பித்துத் தந்தால் பெரும் புண்ணியமாக இருக்கும்'' என்கிறார் சன்னதித் தெரு வாசியான குப்புசாமி அய்யங்கார்.

ஒரு பிரதோஷ நேரத்தில்தான் நரசிம்மர் ஹிரண்யனை வதம் செய்கிறார் என்பதால் அந்த நேரத்தில் நரசிம்மரை சாந்தப்படுத்த, ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் நரசிம்மருக்கு இங்கே திருமஞ்சனம் உண்டு.

அகோபிலவல்லித் தாயார், ஆண்டாள், கோதண்டராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
அடுத்து அமைந்திருப்பது கோதண்டராமர் (பட்டாபிராமர்) திருக்கோயில்.

இங்கே மூலவர் பட்டாபிராமர்,பட்டாபிஷேகக் கோலத்தில் சீதாப்பிராட்டியை இடது மடியிலும், லட்சுமணனை வலது புறமாகவும் வைத்துக்கொண்டு சேவை சாதிக்கிறார். கருவறையிலேயே ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீனிவாசப் பெருமாளும், திருமகள், நிலமகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

மூன்றாவதாக அமைந்திருப்பது தர்ப்பசயன சேதுராமர் திருக்கோயில்.

ராமபிரானை இந்த ஆலயத்தில் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் (பட்டாபிஷேகக் கோலம்) படுத்த நிலையிலும் (தர்ப்ப சயனம்) ஆக மூன்று கோலத்திலும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்.

இந்த மூன்று கோயில்களைப் பார்த்தால் மட்டும் போதாது இங்கிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னின் பதர்கள் விழுந்த பொன்பதர்க் கூடத்திற்கும் சென்று வரவேண்டும். அங்கேதான் ராமபிரான் நான்கு கரங்களுடன் தான் ஓர் அவதார புருஷன் என்பதை நிரூபிக்கிறார்.

எந்த சக்தியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சாதாரண மனிதனாக, மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக பகவான் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ஆனாலும் தான் யார் என்பதை கௌசல்யாதேவி, திரிசடை, ஆஞ்சநேயர், ராவணன், மண்டோதரி மற்றும் தேவராஜ மகரிஷி ஆகியோருக்கு மட்டும் நான்கு கரங்களுடன் காட்சி தந்து `நானே மகாவிஷ்ணு' என்பதை அடையாளம் காட்டினார்.

அப்படி ஓர் அற்புத தோற்றத்தில் ராமர் இங்கே காட்சியளிக்கிறார்.

நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு, சக்கரம் அபய, வரத முத்திரை கொண்டு `பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறேன்.கேட்கும் வரங்களையெல்லாம் தருகிறேன்' என்பதுபோல சேவை சாதிக்கும் காட்சி என்ன அழகு! என்ன கம்பீரம்! என்ன இனிமை!

நீங்கள் பொன்விளைந்த களத்தூர் சென்று லட்சுமி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், சேதுராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கையும் ஒரே நாளில் தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வறுமைக்கு மட்டுமல்ல, மறுமைக்கும் அது உதவும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்..

எங்கே? எப்படி?

பொன்விளைந்த களத்தூருக்கு எப்படி செல்வது?

``செங்கல்பட்டு புது பஸ் ஸ்டாண்டிலிருந்து 10 கி.மீ. தூரம். 129சி, டி12, டி4, எம்.பி.டி., ஸ்ரீகுமரன், தனபால் ஆகிய பஸ்கள் அரைமணிக்கு ஒன்றாகச் செல்கின்றன. ஷேர் ஆட்டோவும் உண்டு. 10 ரூபாய்.''

கோயில் திறந்திருக்கும் நேரம்?

நரசிம்மர் கோயில் : 9-11, 5-7. கோதண்டராமர் கோயில் : 9-10, 6-7

தர்ப்பசயனராமர் கோயில் : 8-9, 5-7. சதுர்புஜராமர் கோயில் : 7-8, 5-6.

தங்க, சாப்பிட?

``செங்கல்பட்டுதான்.''

தொடர்புக்குத் தொலைபேசி எண்?
``044-27441142''

வைகுண்டவாசப் பெருமாள் கோயில்


கர்ப்பவதி கோலத்தில் மேடிட்ட வயிற்றுடன் சீதா தேவியை எங்காவது நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட அபூர்வ சீதையின் முன் நின்று, கண் மூடிப் பிரார்த்தனை செய்தாலே குழந்தை வரம் கிட்டும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

சீதைக்குப் பிரசவம் நிகழ்ந்த தலம் இதுதான் என்பதால், நம்பிக்கை மேலும் பலப்படும். கருப்படும். உருப்படும்.

சீதா-ராமனின் குழந்தைகளான லவனும் குசனும் வழிபட்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரரை சென்ற வாரம் தரிசித்தோம் அல்லவா? அந்தக் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த வைகுண்ட வாசன் திருக்கோயில்.

சிவன் கோயில் வடக்குப் பார்த்தபடி இருக்கிறது என்றால், இந்தப் பெருமாள் கோயில் கிழக்குப் பார்த்தபடி 115 அடி நீளத்துடனும் 188 அடி அகலத்துடனும் அழகுற அமைந்திருக்கிறது. உள்ளே நுழைந்ததும் காணப்படும் தசாவதாரக் காட்சி பரவசப்படுத்துகிறது. எதிரில் லவ குசர்கள் நீராடிய திருக்குளம். குளக்கரை வாசலில் ஆஞ்சநேயர் ஆலயமும் அமைந்துள்ளது.

பெருமாள் கோயில்களில் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏதாதசியன்று மட்டும் சொர்க்கவாசல் புறப்பாடு நடக்குமே! அந்த வைகுண்ட வாசன்தான் இந்த ஆலயத்தில் வருடம் பூராவும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

வைகுண்டவாசன் என்றாலே ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இங்கே ஷ்ரீதேவி, பூமாதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிவது, மிகுந்த சிறப்பானதாகும்.

ஏன் இப்படி?

வால்மீகி முனிவர் வைகுண்டவாசனைத் தியானித்த போது, பெருமாள் உடனடியாக வந்து அருள்பாலித்தார். அதாவது அமரக் கூட நேரமாகுமே என்று விரைந்து வந்து நின்ற கோல தரிசனம். அத்தனை மகிமை வாய்ந்த வைகுண்ட வாசப் பெருமாளை வணங்கினால், நினைத்ததெல்லாம் நடக்கும்.

108 லட்சுமி ஹார மாலையும், 108 சாளக்கிராம மாலையும் அணிந்து கம்பீரமாகத் தாயார்களுடன் காட்சி தரும் பகவானைப் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது!

கர்ப்பவதியாக மட்டுமல்ல, கோடாலிக் கொண்டையுடனும் சீதை இங்கே காட்சி தருகிறாள்!

சக்ரவர்த்தித் திருமகனான ராமபிரானைப் பட்டாபிஷேகக் கோலத்துடன் பலகோயில்களில் பார்த்திருப்பீர்கள். இங்கே கிரீடமோ, ஆபரணங்களோ இல்லாமல் மரவுரி தரித்த கோலத்தில் ராமரைக் காணலாம்.

காரணம் என்ன? மகன்களுடன் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்த சீதை, ராணி அலங்காரமெல்லாம் இல்லாமல் கோடாலிக் கொண்டை முடிச்சுடன் சராசரி பெண்ணாகக் காட்சி தருவதால், ராமரும் மனம் நெகிழ்ந்து, எளிய கோலத்தில் காட்சி தருகிறார்.

அதுமட்டுமா? எல்லாக் கோயில்களிலும் காணப்படுவது போல ராமரின் பக்கத்தில் லட்சுமணனோ, ஆஞ்சநேயரோ கிடையாது.

ஏன்? நெடுங்காலம் பிரிந்திருந்து ஒன்று சேர்வதால் சீதையும் ராமரும் ஏகாந்தமாக இருக்கட்டும் என்று லட்சுமணனும், அனுமனும் நகர்ந்து விட்டார்கள்?!

கர்ப்பிணி சீதாப்பிராட்டிக்குப் பக்கத்தில், ஒரே கல்லில் உருவான, பவ்யமே உருவாக லவனும் குசனும் வால்மீகி முனிவரின் பக்கத்தில் நிற்கும் காட்சியும் பரவசம் தரத்தக்கது.

பிராகாரத்தில் இரண்டு வில்வ மரங்களுக்கு இடையில் ஒரு வேப்பமரம் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கிறது. வேப்பமரம், பார்வதி. வில்வமரங்கள் சிவனும் விஷ்ணுவும், அதாவது விஷ்ணு தன் தங்கையை சிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையே இந்த மரங்கள் மெய்ப்பிப்பதாக நம்பிக்கை. திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றிற்கும் இங்கே பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

கனகவல்லித்தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்கள்.

அர்த்த மண்டப நுழைவாயிலின் அருகே சுரங்கப்பாதை ஒன்று அமைந்துள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலுள்ள உற்சவர்களைப் பாதுகாப்பதற்காக, வனப் பகுதியாக இருந்த இங்கே சுரங்கப்பாதை மூலம் கொண்டு வந்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

கோயில் பூஜைகள், ஆகமத்தை வழிமுறைப்படுத்திய விகனஸ ஆசார்யாரும் இங்கே அருள்பாலிக்கிறார், அவருக்கான உற்சவ உபயத்தை பட்டாசார்யார்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.

சிவாலயமும், பெருமாள்கோயிலும் அருகருகே அமைந்து சைவ-வைணவ ஒற்றுமையைப் பறைசாற்றுகின்றன. சிவன் கோயிலின் தலமரமான குறும்பலா மரம், பெருமாள் கோயிலில் காணப்படுவதும் ஒற்றுமைக்கு ஓர் உதாரணம்.

குழந்தை வரம் வேண்டுமா?

சுகப்பிரசவம் ஆக வேண்டுமா?

வீர தீரமான குழந்தைகள் உங்களுக்குப் பிறக்க வேண்டுமா?

உடனே கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். லவன், குசன் மாதிரி இரட்டைக் குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புண்டு. ஜாக்கிரதை!

``வைகுண்டவாசப் பெருமாள் கோயில் எங்கிருக்கிறது?''

``கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பத்து நிமிடத் தொலைவு, குறுங்காலீஸ்வரர் கோயில் அருகில்.''

``கோயில் எப்போது திறந்திருக்கும்?''

``காலை 7-10.30, மாலை 5-8.30''

``சிறப்புகள்?''

``மக்கட் பேறு மற்றும் வீடுபேறு.''

திருவண்ணாமலை


திருவாரூரில் பிறந்தால் முக்தி. தில்லையை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்திதான்'' என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

யார், யாரிடம் இதனைச் சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நந்திபகவான், மார்க்கண்டேய முனிவருக்குச் சொன்ன சிவ ரகசியம் இது.

அத்தனை மகிமைமிக்க திருவண்ணாமலையை, கிரிவலம் வந்தால் விதவிதமான பலன் உண்டு.

ஆமாம்.

ஞாயிற்றுக்கிழமை, மலையை வலம் வந்தால் சிவலோகத்தின் தலைமைப் பதவி கிடைக்கும். திங்கட்கிழமை, கிரிவலம் வந்தால் உலகை ஆளும் வாய்ப்பு பெறுவீர்கள். செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன் சுமையும், வறுமையும் ஒழியும். புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சி கிட்டும். வியாழன் என்றால் ஆசானாவீர்கள். வெள்ளிக்கிழமை, கேட்ட வரம் கிடைக்கும். சனிக்கிழமை, திருவண்ணாமலையை வலம் வந்தால் நவகிரக தோஷங்கள் நீங்கி, நலம் கிட்டும்!

அவசர அவசரமாய்ப் பார்க்கவேண்டிய கோயில் அல்ல இது. ஆற அமர, பொறுமையாக, பெருமையாக ஒருநாள் முழுக்க அனுபவித்து, அனுபவித்து மகிழவேண்டிய மகிமைமிக்க தென்கயிலாயம் இஃது.

ஒரே ஒருமுறை திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனம் செய்தால் போதும், அது நம் 21 தலைமுறைக்கும் புண்ணியம் சேர்க்கும் என்று கூறுகிறது, தலபுராணப் பாடல்.

2668 அடி உயரமுள்ள மலையே இங்கே சிவபெருமானாகக் கருதப்படுவதால், மலையை வலம் வந்தாலே கயிலாயத்திற்குச் சென்று வந்த பலன் உண்டு. பார்வதி தேவியே இந்த மலையை வலம் வந்தபிறகுதான் சாபம் நீங்கி இறைவனைக் கைப்பிடித்தாள் என்றால் இதன் சிறப்பைச் சொல்லத்தான் வேண்டுமா?

கிரிவலம் வரும்போது, எட்டு லிங்கங்களைக் கட்டாயம் தரிசிக்கவேண்டும்.

கிழக்கே இந்திர லிங்கம், தென்கிழக்கே அக்னி லிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதி லிங்கம், மேற்கே வருண லிங்கம், வடமேற்கே வாயு லிங்கம், கிழக்கே குபேர லிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் என்று, பார்க்கப் பார்க்கப் பரவசம்தான்.

மலையின் தெற்கு திசையில் சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமம், தட்சணாமூர்த்தி கோயில், ரமணாஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் போன்றவை அமைந்துள்ளன.

எண்ணற்ற சித்தர்களும், ஞானிகளும், தபோதனர்களும், முனிவர்களும் சிவ ஜோதியில் ஐக்கியமானது இந்த மலையில்தான் என்பதால், இந்த மலையைச் சுற்றி வந்து எட்டு லிங்கங்களையும் வணங்கினால், மனசுக்குள் எல்லாமும் சேர்ந்து ஒரு மகிழ்வையும், ஒரு நெகிழ்வையும் கொடுக்கிறது பாருங்கள், அதை வார்த்தைகளால் எல்லாம் விளக்கிவிட முடியாது!

இந்த மலை கிருதாயுதத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியதாக புராணம் சொல்கிறது.

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஒருமுறை எழுந்தது.

தீர்ப்பு சொல்ல வந்த சிவபெருமான், தன் அடியையோ, முடியையோ யார் முதலில் காணுகிறாரோ அவரே பெரியவர் என்று கூறி ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாக ஓங்கி உயர்ந்து நின்றார்.

திருமால், வராக அவதாரம் எடுத்து அடியைக் காண விரைந்துசென்று, தோல்வியுடன் திரும்பினார்.

பிரம்மா, அன்னமாய் மாறி முடி காணச் சென்றார். அவருக்கும் தோல்விதான். என்றாலும் பாதியில், கீழே விழுந்து கொண்டிருந்த தாழம்பூவின் உதவியுடன், சிவனின் முடியைக் கண்டதாகவும், அங்கிருந்த தாழம்பூவே சாட்சி என்றும் பொய்யுரைத்தார்.

அப்புறம் என்ன? தாழம்பூ, சிவ பூஜைக்கு லாயக்கற்றுப் போனது. பொய் சொன்ன பிரம்மாவுக்கும் பூலோகத்தில் கோயில்கள் குறைந்து போனது.

இருவருக்கும் யார் பெரியவர் என்பது புரிந்தது. அந்தப் பெரியவர்தான் அண்ணலாக, அண்ணாமலையாக இங்கே காட்சி தருகிறார்.

2668 அடி உயர மலைக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கிறதோ, 24 ஏக்கர் பரப்பில் ஆறு பிராகாரங்களுடனும் ஒன்பது ராஜகோபுரங்களுடனும் மலையடிவாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள மாபெரும் கோயிலுக்கும் அத்தனை மகத்துவம் உண்டு.

கோபுர தரிசனம் கோடி பாவ நிவாரணம் என்பார்கள். திருவண்ணாமலை ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது! தென் இந்தியாவின் இரண்டாவது பெரிய கோபுரம்!

அருணகிரிநாதர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள கோபுரத்தின் மீதேறி விழுந்தபோது, முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றினாரே, அந்த வல்லாள மகாராஜா கோபுரம் அமைந்திருப்பதும் இங்கேதான்.

அதே அருணகிரிநாதர் கிளியாக மாறி, பாரிஜாத மலருடன் திரும்பி வந்தபோது, தன் பூத உடல் இல்லாததைக் கண்டு, கிளி உருவிலேயே `கந்தர் அனுபூதி' பாடிய கதை உங்களுக்குத் தெரியுமா? அப்படி அவர் பாடிய கிளிக் கோபுரம் அமைந்திருப்பதும் இங்கேதான். அண்ணாந்து பார்த்தாலே அண்ணாமலையில் ஆயிரம் கதைகள்!

கயமுகாசுரனைக் கொன்று, அவன் குருதியைத் தன் உடலில் பூசிக்கொண்ட செந்தூர விநாயகர், அமுதப்பாலை ஊட்டும் தாயாக, அருளை வழங்கும் அன்னையாகக் காட்சி தரும் அபீத குசலாம்பாள் என்னும் உண்ணாமுலையம்மை. முருகன் காட்சி தந்த கம்பத்திளையனார் சன்னதி, ரமணர் தவமிருந்த பாதாளலிங்கேஸ்வரர் சன்னதி, தலபுராணத்தைச் சொல்லும் லிங்கோத்பவர் சன்னதி என்று, பார்த்துப் பார்த்துப் பரவசப்பட இங்கே ஏராளமான கடவுள் தரிசனம்.

எல்லாவற்றிலும் மேலாக, கருவறையில் லிங்க உருவில் காட்சி தரும் அண்ணாமலையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்படுகிறது. விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி தந்தவர்; நினைத்தாலே முக்தி தருபவர்; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் போன்றோரால் பாடப்பட்டவர்; சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், ஹொய்சாள மன்னர்கள், விஜயநகரப் பேரரசர்கள், தஞ்சை நாயக்க மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் போன்றோரால் திருப்பணி செய்யப்பட்டவர்; ஞானிகளாலும் முனிவர்களாலும் தேடித் தேடி வழிபடப்பட்டவர் - எல்லாம் இவர்தான் என்று நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.

அருள் மழை பொழியும் அண்ணாமலையை நினைத்தாலே மறுபிறவி கிடையாது என்பது உண்மைதான். ஆனால் அண்ணாமலையாரைத் தரிசனம் செய்யும்போது, மறுபிறவி வேண்டும் என்றுதான் எனக்குக் கேட்கத் தோன்றியது. அப்போதுதானே அற்புதமான அவரை மீண்டும், மீண்டும் தரிசனம் செய்ய முடியும்?.

படங்கள் : சித்ராமணி

``திருவண்ணாமலைக்கு
எப்படிச் செல்வது?''

``சென்னையிலிருந்து 56 ரூபாய் பஸ் கட்டணம். 4 மணி நேரப் பயணம்.''

``தங்க, சாப்பிட?''

``ராமகிருஷ்ணா, ஆகாஷ், கோயில் தங்கும் விடுதியும் உண்டு.''

``கிரிவலம்?''

``நடக்க முடியாதவர்கள் சாதாரண நாட்களில் ஆட்டோவில் செல்ல 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒல்லியானவர்கள், இடுக்குப் பிள்ளையாரின் பாத தரிசனம் செய்ய மறக்காதீர்கள்.''

``ஆலய தொலைபேசி எண்?''

``04175252438.''

Wednesday, July 23, 2008

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் ஆலயம்

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

வித்தியாசமான, திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைப் பார்த்தாலே, அதன் தொன்மை, உள்ளத்துக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இதயத்துக்கு இன்பத்தைக் கொடுக்கும். இறைவன் பெயரே இருதயாலீஸ்வரர் என்றால் கேட்கவா வேண்டும்?

எல்லாக் கோயிலிலும் மூலவர் சன்னதியின் மேலே அண்ணாந்து பார்த்தால் கூம்பு வடிவமாய் கோபுரத்தின் உச்சி தெரியும். ஆனால் இந்தக் கோயிலில் மட்டும் மேலே இருதய வடிவத்தில் சுவர் தெரியும். நான்கு பிரிவுகளுடன் இருதயக் கமலம் காட்சி தரும். இருதய நோயாளிகள் இந்தக் கோயிலுக்கு வந்து இருதயாலீஸ்வரரை வழிபட்டால் போதும். இதய நோயெல்லாம் பறந்துவிடும் என்கிறார்கள் பயன்பெற்றவர்கள்.

லிங்க வடிவிலே காட்சி தருகிறார் இருதயாலீஸ்வரர். இன்னொரு சிறப்பு என்னவென்றால் கருவறையில் ஈசன் எங்குமே தனித்திருப்பார். ஆனால் இங்கு மட்டும் பூசலார் நாயனார் என்ற சிவபக்தனுக்கும் கருவறையிலேயே இடம் தந்திருக்கிறார் சிவபெருமான்.

சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுரவடிவத்தில் இங்கே காட்சி தருவது அதிசயம்தான்.

சன்னதியின் கீழே மரகதாம்பாள் சன்னதி. அழகு கொஞ்சுகிறது. நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் தெற்கு நோக்கிய திருமுகம்.

மூலவர் சன்னதியின் பின்பக்கம் சென்று பார்த்தால் யானையின் பின்புறம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருப்பது தெரியும். அங்கே சங்கு சக்கரம் தாங்கி விஷ்ணு பகவான் தரிசனம் தருகிறார். வேறெங்கும் இப்படி ஒரு அற்புதம் இருப்பதாகத் தெரியவில்லை.

பொல்லாப்பிள்ளையார், தட்சணாமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசர் என்ற சன்னதிகளில் பார்க்கப் பார்க்க பரவசம்.

இறைவனுக்கு இருதயாலீஸ்வரர் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? இதோ இதயக் கோயிலைத் தரிசிக்க கதைக்குள் கண் பதிப்போமா?

(1)

கி.பி. ஏழாம் நூற்றாண்டு.

திருநின்றவூர்.

`ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய' உச்சரித்துக் கொண்டேயிருந்தார் அவர். ஒருநாள் இரண்டு நாள் அல்ல; வருடக்கணக்காக. அவர் ஒரு சிவ பக்தர் என்று சொல்வதை விட சிவப்பித்தர் என்று சொல்வதுதான் பொருத்தம். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன என்று அவருக்கே தெரியாது. சதா, சிவநாமம் சொல்லி, சதா சிவம் புகழ் பாடிக் கொண்டேயிருப்பதுதான் அவர் வேலை. தினமும் காலையில் எழுந்து குளித்தவுடன், உடம்பு முழுவதும் திருநீற்றை எப்போதும் பூசிக் கொள்வார். அக்கோலத்தைக் கண்ட மக்கள் அதனால் அவரைப் `பூசலார்' என்றே அழைக்கத் துவங்கினர்.

அவர் வசதியானவரா என்றால்-இல்லை. ஏழையிலும் பரம ஏழை. சிவனைத் தியானிப்பது. கிடைத்ததை இறைவன் பிரசாதமாக உண்பது-அதுதான் அவரது வேலை.

பூசலாருக்கு ஒரே ஒரு ஆசை உண்டு. பேராசை.

(2)

அரண்மனை மாதிரி ஒரு பங்களாவைக் கட்டிக்கொண்டு, ஆடம்பரமாய் வாழ வேண்டும் என்றெல்லாம் அவருக்கு ஆசை கிடையாது. எல்லாம் வல்ல சிவபெருமானுக்கு இந்த ஊரில் ஒரு பிரமாதமான கோயில் கட்ட வேண்டும் என்பதுதான் பூசலாரின் அவா.

அவரே அடுத்தவேளை உணவுக்கு, கையேந்த வேண்டிய நிலை. அவரால் எப்படி கோயில் கட்ட முடியும்?

இறையடியார்களால் முடியாதது ஏதும் உண்டா?

இரவு பகலாய்ப் பூசலாருக்குக் கோயில் நினைவுதான். கோடீஸ்வரன் நினைத்தால் கூட முடியாத திருப்பணியை ஓர் ஆண்டியால் செய்ய இயலுமா?

பொருள்தேடி பலரிடம் அலைந்தார் பூசலார்.

அலைந்தலைந்து அவரது கால்கள் தேய்ந்ததே தவிர, பலனில்லை.

ஆனால் திருக்கோயில் கட்டும் ஆசை மட்டும் அவருக்குக் குறையவேயில்லை.

பணம் கிடைக்காவிட்டால் என்ன? ஆலயம் கட்ட அருமையான எண்ணம் உதித்தது பூலாருக்கு.

அதுதான் இதயக் கோயில்.

கற்கள் கொண்டு கட்டமுடியாத கோயிலை, பணம் வசூலித்து எழுப்ப முடியாத ஆலயத்தை மனசுக்குள்ளேயே கட்ட முடிவெடுத்தார் பூசலார்.
பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. மனம் இருக்கிறதே.

கோயில் கட்ட வசதியான இடம் என்னுடைய மனசுதான். இதற்குப் பட்டா வேண்டாம். விலை வேண்டாம். நல்லதொரு நாளில் புனித நீராடி உடல் முழுக்க வழக்கம்போல் திருநீறு பூசி, ஓர் இலுப்பை மரத்தடியில் அமர்ந்தார் பூசலார். ஈசனுக்கு மனத்தால் பூசை பண்ணியபடியே கண்மூடி தியானத்தினுள் நுழைந்தார்.

அவ்வளவுதான் இதோ கோயில். மனக்கோயில், இதயக்கோயில் எழும்ப ஆரம்பித்துவிட்டது.

இதயம் மிகப் பெரியது.

பக்தியால் அஸ்திவாரம் தோண்டியாயிற்று.

சிற்பிகள், தச்சர்கள் எல்லாம் வந்தாயிற்று. ஆகம விதிகளின்படி, கடைக்கால் எடுத்து, கட்டுமானப் பணிகள் தொடர்ந்தாயிற்று.

இதயத்துக்குள் கோயில்கட்டிக் கொண்டே போனார் பூசலார்.

கோயில் எழும்பிற்று.

எல்லாம் தயார்.

கும்பாபிஷேகம் ஒன்றுதான் பாக்கி.

அந்த இதயக் கோயிலுக்கு கும்பாபிஷேக தினத்தையும், நேரத்தையும் நிர்ணயித்தார் பூசலார்.

அதேநேரம் காஞ்சிபுரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது?

(3)

காஞ்சிபுரம், பல்லவர்களின் தலைநகர்.

மன்னன் காடவர்கோன் ராஜ சிம்ம பல்லவன் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான். காரணம் காஞ்சியில் அவன் எழுப்பியுள்ள கைலாசநாதர் ஆலயம். தனது படைபலம், செல்வத்தைக் கொண்டு, தேர்ந்த சிற்பிகள் மூலம் கோயிலை அத்தனை சிறப்பாகக் கட்டியிருந்தான்.

அந்தணர்களை அழைத்து கும்பாபிஷேக தினத்தையும் நிர்ணயித்தான். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

விடிந்தால் கும்பாபிஷேகம். மனசு நிரம்பிப் படுக்கையில் சயனித்திருந்தான் பல்லவ மன்னன். யாராலும் கட்ட முடியாத சிறப்புமிக்க ஆலயத்தைக் கட்டிய பெருமித உணர்வுடன் உறங்கினான் மன்னன்.

அப்போது ஒரு கனவு கண்டான். கனவிலே சிவபெருமான் எழுந்தருளினார்.

(4)

சிவ பெருமான் பேசினார்.

``பல்லவ மன்னா, நாளை நீ கும்பாபிஷேகம் செய்யப்போகும் கோயிலுக்கு நான் வரப் போவதில்லை. திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோயிலில் நாளை கும்பாபிஷேகம். நான் அங்கே செல்கிறேன். எனவே, நீ கும்பாபிஷேக தினத்தை வேறு ஒரு நாள் மாற்றிக் கொள்.'' அசரீரி அதிர்ந்தது.

திடுக்கிட்டுக் கண்விழித்தான் பல்லவன்.

அருகிலிருந்த மனைவியை எழுப்பினான். மந்திரியை அழைத்தான். உடனே காஞ்சிக் கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தச் சொன்னான்.

``உடனே நாம் திருநின்றவூர் செல்ல வேண்டும். பூசலார் கட்டிய கோயிலை நான் பார்க்கவேண்டும். நான் கட்டியதைவிடச் சிறந்த கோயிலாகத்தான் அது இருக்கவேண்டும்.''

இரவோடு இரவாக திருநின்றவூருக்கு மனைவி மக்களோடு பயணப்பட்டான்.

அதிகாலையில் ஊரை அடைந்த போது...

கோயில் எங்கே? கும்பாபிஷேகம் எங்கே?

விசேஷம் எதுவும் நடப்பதாய்த் தெரியவில்லையே!

(5)

மந்திரி, திருநின்றவூரில் ஓர் உழவனைப் பார்த்து, பூசலார் கட்டிய கோயில் பற்றி விசாரித்தார்.

கடகடவெனச் சிரித்தான் உழவன். ``என்னது, கோயிலா, இங்கேயா? பூசலார் ஓர் ஏழை பிராமணர். இலுப்பை மரத்தடியில் பித்துப்பிடித்த மாதிரி கிடக்கிறார். என்பதுதான் எங்களுக்குத் தெரியும்.''

கடவுள் பொய் சொல்வாரா?

அரசன் உடனே பூசலார் இருக்குமிடத்திற்குச் சென்றான். அங்கே...

(6)

இலுப்பை மரத்தடியில் சிவப்பழம் மாதிரி தவத்திலிருந்த பூசலார் ரொம்ப நேரம் கழித்துக் கண் திறந்தார்.

பணக்கோயில் எழுப்பிய வேந்தனும், மனக்கோயில் எழுப்பிய வேதியரும் ஒருவரை ஒருவர் கண்டனர்.

``கும்பாபிஷேகம் பார்க்க வந்தேன்.'' என்றான் மன்னன்.

பூசலார் புன்னகைத்தார். ``இதோ... என் இதயத்தைப் பாருங்கள்'' என்றார்.

பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்ம பல்லவன் பார்க்கப் பார்க்க புல்லரித்துப் போனான்.

இதயக்கோயில்!

வேள்வியும் வேதமும் ஒரு புறம், தெள்ளு தமிழ்த் தேவாரம் மறுபுறம், நாதஸ்வர ஓசை ஒரு புறம்...

பூசலாரின் இதயக்கோயிலில் ஈசனை, இருதயாலீஸ்வரரைக் கண்டு தரிசித்தான் மன்னன்.

மணிமுடி மண்ணில் பட விழுந்து பணிந்தான் மன்னன். `இறைவா, இறைவா' என்று அலறினான்.

பூசலார் நாயனாரின் பூரண ஆசியைப் பெற்றான். இருதயமே ஆலயமாக அமைந்ததைக் கண்டதால் ஈசனுக்கு, இருதயாலீஸ்வரர் என்ற பெயரைச் சூட்டினான். பூசலார் நாயனாரின் ஆரம்ப கால விருப்பப்படி, அங்கே மிகப் பெரிய கோயில் ஒன்றையும் கட்டினான். அங்கேயே சில காலம் இருந்து அகமகிழ்ந்தான். பின்னர்தான் காஞ்சிக்குச் சென்று கும்பாபிஷேகம் செய்தான்.

இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றாலே, நோயெல்லாம் தீரும்! =

திருநின்ற ஊர்

கடவுள் வந்து நின்ற ஊர் என்பதால் இந்தப் பெயர்.

இருதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம்.

பல்லவர் காலத்துப் பழம் பெரும் கோயில்.

சென்னை- அரக்கோணம் ரயில் பாதையில் சென்னையிலிருந்து 33 கி.மீ. தொலைவு, ரயில் நிலையத்திலிருந்து

ஒன்றரை கி.மீ. தூரத்தில் கோயில்,

நடந்தோ ரிக்ஷாவிலோ செல்லலாம்.

சகோதரர்கள் வாழ்வு உயர ஒரு விரதம்


ஆடி மாதம் எத்தனை எத்தனையோ பண்டிகைகள். அதில் ஒன்றுதான் நாக சதுர்த்தி விரதம்.. அதாவது கருட பஞ்சமி விரதம். ஆடி மாதம், வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தியையும், ஐந்தாம் நாளாகிய பஞ்சமி திதியில் நாக கருட பஞ்சமியையும் கொண்டாடுவார்கள்.

நம் இந்து சமயத்தில் மலைகளையும், மரங்களையும், பூமியையும், விலங்குகளையும் கடவுளாகக் கொண்டாடுகிறோம். பயம் தரும் பாம்பையும் நாம் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். அப்படி பாம்பை பூஜை செய்யும் தினம்தான் நாகசதுர்த்தியும் நாகபஞ்சமியும் ஆகும்.

இந்த நாக சதுர்த்திக்கு செவி வழிச்
செய்தி ஒன்று இருக்கிறது.

ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் வயலில் வேலை செய்யும் விவசாயிகள். ஒருநாள் பாம்பு கடித்து அவர்கள் உழவு செய்யும் சமயம் இறந்து விட்டார்கள். அந்தப் பெண் துக்கப்பட்டாள். இறந்து போன தன் அண்ணன்களை உயிர்ப்பிக்க நாகராஜாவானி ஆதிசேடனை பூஜை செய்தாள். அண்ணன்மார்கள் பிழைத்து எழுந்தார்கள்.

இதிலிருந்து கொண்டாடப்படுவது தான் நாகசதுர்த்தி_நாக பஞ்சமி விரதங்கள். சகோதரர்கள் நல்வாழ்விற்காக சகோதரிகள் கொண்டாடுகின்ற விரதம் இது.

இந்த விரதத்தைப் பற்றி புராணத்தில் என்ன
சொல்லப்பட்டிருக்கிறது என்று
பார்க்கலாம்.

சுனந்து முனிவர் சதானிக மன்னரிடம் பஞ்சமி விரத உபவாசம் பற்றிக் கூறுகிறார்.

இந்தப் பஞ்சமி விரதம் நாகங்களுக்கு மிகவும் இஷ்டமான விரதம். என்ன கேட்டாலும் கொடுக்கக் கூடிய விரதம். இந்த விரதம் இருந்தால் குழந்தை இல்லாதவர் கூட குழந்தை பெறும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அதிலும் நல்ல குழந்தைகளைப் பெறும் பாக்கியமும் கிடைக்கும். இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த விரத மகிமையில் நம் முன்னோர்களின் வரலாறும் பிணைந்திருக்கிறது.

இந்த நாக பஞ்சமி விரதம் நாகலோகத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாகங்கள் வசிக்கும் புற்றுக்களுக்கு பூஜை செய்பவர்களுக்கும், பிரதிஷ்டை செய்த நாக சிலைகளுக்கு ஸ்நானம், பானம், அபிஷேகம், நைவேத்யம் செய்கிறவர்களுக்கும் அவர்களின் குலத்தையே நாக தேவதைகள் காப்பாற்றுகின்றன.

வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், திருதிராஷ்ட்ரன், கார்க்கோடகன், அனந்தன், தனஞ்சயன் போன்ற பெரிய நாகங்கள். நம்மைக் காக்கின்றன. செல்வங்களை வாரி வழங்குகின்றன.

ஒரு சமயம் தாயின் சாபத்தால் நாக லோகத்தில் ஜலவறட்சி ஏற்பட்டது. அதனால் நாகங்கள் தாகத்தால் தவித்தன. அதனால் தான்-நாகர்களுக்கு ஸ்நானம் செய்வித்து பசும் பால் ஊற்றினால் சர்ப்பங்களுக்கு தாக வறட்சி தீர்ந்து மனமும் குளிர்கிறது என்று அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அத்துடன் சர்ப்பதோஷம், பாம்பு பயம் எல்லாம் நிவர்த்தியாகிறது.

மன்னர் சதானிகர் குறுக்கிட்டுக் கேட்டார். ``மகரிஷியே, தாய் சாபமிடும் அளவுக்கு என்ன நேர்ந்தது?''

மகரிஷி சொல்லலானார்.

தக்ஷப் பிரஜாபதிக்குப் பல பெண்கள். அவர்களில் விந்தை, கர்த்ரு என்ற இரண்டு பெண்கள் காஸ்யப முனிவரை மணந்தார்கள். அவரைத் திருமணம் செய்து கொண்ட திதி, அதிதி போன்ற சகோதரிகள் எல்லோருக்கும் குழந்தைகள் பிறந்திருந்தன. தங்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லையே என்று ஏங்கினர்.

இறைவன்அருளால் விந்தைக்கு அருணன், கருடன் என்ற இருவரும் பிறந்தார்கள். கர்த்ருவுக்கு ஆதிசேடன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன் போன்ற ஆயிரம் நாகங்கள் பிறந்தன. ஆனால் சுபாவத்தில் கர்த்ரு கெட்ட எண்ணம் கொண்டவள். விந்தை சுபாவத்தில் மிகமிக நல்லவள்.

ஒருநாள் கர்த்ருவும்,விந்தையும் நந்தவனத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது வானத்தில் தேவேந்திரனின் உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை சென்று கொண்டிருந்தது. அமுதம் பெறப் பாற்கடலைக் கடைந்த பொழுது சந்திரன், ஐராவதம், லக்ஷ்மி தேவி, பாரிஜாத மலர், தன்வந்தரி பகவான் என்று வெளி வந்த பொழுது இக்குதிரையும் வெளியே வந்தது.

``கர்த்ரு, மேலே போகும் குதிரையைப் பார்த்தாயா! பாற்கடலில் தோன்றியதால் தானே என்னவோ முழு வெண்மையாக இருக்கிறது'' என்றாள்.

விந்தை கூறியதை கர்த்ரு ஏற்கத் தயாராக இல்லை. மறுத்தாள்.

``ரொம்ப அழகுதான் நீ பார்த்த லட்சணம். அதன் வாலில் கருப்பு இருக்கிறதே. நீ அதைச் சரியாகப் பார்க்கவில்லை. உனக்கு கண் சரியாகத்தெரியவில்லை என்று தெரிகிறது'' என்று கர்த்ரு மறுத்துக் கூறினாள்.

சற்று நேரம் விந்தையும், கர்த்ருவும் தாங்கள் சொன்னதே சரியென்று வாதிட்டனர். கடைசியில் கத்ரு பந்தயம் கட்டினாள்.

``இதோ பார் விந்தை, நாளை இதே வழியாக இந்த உச்சைஸ்ரவஸ் போகும் பொழுது பார். அந்தக் குதிரை முழுதும் வெளுப்பாக இருந்தால் நான் உனக்கு அடிமையாக இருப்பேன். அதே சமயம் வாலில் கருப்பு இருந்தால் நீ எனக்கு அடிமையாக வேண்டும். சம்மதமா விருதை'' என்று கத்ரு கேட்டாள்.

விந்தையும் ``சம்மதம்'' என்றாள்.

விந்தையிடம் தான் தோற்கக் கூடாது என்று எண்ணிய கத்ரு சதி திட்டத்தைத் தீட்டினாள். தன் புதல்வர்கள் நாகர்களை அழைத்தாள். தன் சதித் திட்டத்தைக் கூறினாள்.

``என்னருமைப் புதல்வர்களே நீங்கள் உங்கள் தாயாருக்கு என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் அல்லவா!''

``என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தாயே''

``குழந்தைகளே, உங்களில் ஒருவன் அந்த உச்சைஸ்ரவஸ் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ள வேண்டும். நாங்கள் பார்க்கும் பொழுது வால் கருப்பாகத் தெரியும். நான் விந்தையிடம் கூறியது சரியாகி விடும். பிறகென்ன? விந்தை எனக்கு அடிமையாகி விடுவான்.''

இதைக் கேட்ட புதல்வர்கள் துடித்துப் போய் விட்டார்கள். ``தாயே, தாங்கள் கூறிய அசாத்தியமான காரியத்தை நாங்கள் செய்ய முடியாது'' என்று மறுத்துக் கூறினார்கள்.

கர்த்ரு அதீத கோபம் அடைந்தாள். தன் அருமைப் புதல்வர்கள் என்றும் பாராமல் சாபமிட்டாள்.

``நீங்கள் என் பிள்ளைகளே இல்லை. அதனால் பாண்டவ வம்சத்தில் பிறக்கப் போகும் ஜெனமே ஜெய மகாராஜா சர்ப்ப யாகம் செய்யும் பொழுது நீங்கள் எல்லோரும் அதில் பலியாகக் கடவது'' என்றாள்.

நாக கணங்கள் நடுங்கினார்கள். பாற்கடலைக் கடையும் பொழுது வாசுகி உதவியதால் வாசுகியை அழைத்துக் கொண்டு பிரம்மாவிடம் சென்று முறையிட்டார்கள்.

``கவலைப்பட வேண்டாம். ஒரு யோசனை சொல்லுகிறேன். உங்கள் இனத்தைப் படைத்தவன் நானே. யாயவர் வம்சத்தில் ஜரத்காரு என்ற தபஸ்வி தோன்றுவார். அவருக்கு உங்கள் சகோதரியை மணம் செய்து கொடுங்கள். அவர்களுக்குப் பிறக்கும் `ஆஸ்திகர் என்ற புதல்வன் ஜெனமேஜெயன் செய்யும் சர்ப்ப யாகத்தைத் தடுப்பான்.''

இதைக் கேட்ட நாகர்கள் நிம்மதியாக நாகலோகம் திரும்பினார்கள்.

பிரம்மா கூறியபடியே நடந்தது. ஆஸ்தீக முனிவர் நாகங்களை இந்த வேள்வித் தீயிலிருந்து காப்பாற்றியது இந்தப் பஞ்சமி திதியன்றுதான். அதனால்தான் நாகங்களுக்குப் பஞ்சமி திதி உகந்த நாள்.

சர்ப்ப தோஷம் இருப்பதினாலேயே ஒரு மனிதன் சர்ப்பத்தால் அடிபடுகிறான். இந்தப் பஞ்சமி திதிபூஜையை 12 மாதம் செய்து அதன் பின் சதுர்த்தியன்று ஒருவேளை சாப்பிட்டுப் பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும். நாகங்களை தங்கத்தினாலோ, மரத்தினாலோ, மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை போன்ற மலர்களால் அர்ச்சித்து தூப தீப, நைவேத்தியங்கள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஐந்து பிராமணர்களுக்கு போஜனம் செய்ய வேண்டும். 12 நாகங்களுக்கும் 12 மாதங்கள் பூஜை செய்ய வேண்டும்.

இம்மாதிரி ஒரு வருஷம் வரையில் பூஜை செய்து விரத பாரணை செய்ய வேண்டும். முடிந்தால் பிராமணர்களுக்குத் தங்கத்தால் ஆன நாகர்களைத் தானம் செய்யவும். ஜனமே ஜெயன் மன்னனும்அவருடைய பிதா பரிக்ஷித்தும் இந்த விரதத்தைச் செய்தார்கள். ஏராளமான தங்க நாகர்களை தானம் செய்தார்கள்.இதனால் இவர்களுடைய பித்ருக் கடன்கள் நிவர்த்தியாயிற்று. இந்த நாக பஞ்சமி விரதத்தை நியமத்துடன் செய்து, நாக பஞ்சமி கதையைக் கேட்கிறார்களோ அவர்கள் சர்ப்ப தோஷங்களிலிருந்து விடுபடுகிறார்கள். குலம் விருத்தி அடையும்.''

அதன் பின்பு சுனந்தர் மன்னர் சதானந்த மன்னருக்கு நாகங்களின் வர்ணங்கள், ஜாதிகள், விஷ வகைகள் எல்லாவற்றையும் விவரித்தார்.

நாக பிரதிஷ்டை எப்படிச் செய்வது?

ஒரு கருங்கல்லில் ஒரு படம் பாம்பு முகம், அல்லது இருபடம் உள்ளனவாக பாம்புகள் வரைந்து அச்சிலையை ஜலவாசஞ் செய்து - அன்றிரவு தம்பதிகள் உபவாசம் இருந்து மறுநாள் நாகசிலைக்கு பூஜை முதலியன செய்து அரச மரத்தடியில் பிரதிஷ்டை பண்ண வேண்டும்.பிராமண போஜனமும், பக்தர்கள் போஜனமும் செய்ய வேண்டும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். சுமங்கலிகள் செய்ய வேண்டிய பூஜை இது. சர்வ மங்களம் உண்டாகட்டும்.