Sunday, August 3, 2008

சீரான வாழ்வு தரும் ஸ்ரீனிவாசன்!


பொதுவாக ஆலயங்களில் அரங்கன் கிழக்கு முகமாக சேவை சாதிப்பதுதான் வழக்கம். ஆனால் சென்னை தண்டையார்பேட்டையிலோ, ஸ்ரீநிவாஸ வரதராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வடதிசையை நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

நூறாண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயம், வடக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் எழிலாகத் திகழ்கின்றது. கோபுர துவார தேவதைகளாக தும்பிக்கை ஆழ்வாரும், நாகராஜரும் அருள்கின்றனர்.

பலிபீடம், துவஜஸ்தம்பம் கடந்தால் கருடாழ்வார் சன்னதி. அஞ்சலி ஹஸ்தராக மூலவரை நோக்கி பெரிய திருவடி சேவை சாதிக்கின்றார். மகாமண்டபம் கடந்து கருவறைக்குள் செல்லுமுன், வெளியே துவாரபாலகர்களாக நின்ற கோலத்தில் ஜெய, விஜயனைக் காணலாம்.

கருவறையில், மூலவர் ஸ்ரீநிவாஸப் பெருமாள், சங்கு சக்கரத்துடன், அபய, கடிஹஸ்தம் காட்டி, நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக சேவை சாதிக்கின்றார். அருகில் உற்சவர் வரதராஜப் பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியுள்ளார். அந்தராள மண்டபத்தில் நம்மாழ்வாரும், ராமானுஜரும் சிலாரூபமாக சேவை சாதிக்கிறார்கள்.

கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இவ்வாலயத்தைச் சுற்றிலும் பல மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் காவல் தெய்வமாக ஸ்ரீநிவாஸ வரதராஜப்பெருமாள் விளங்குகிறார். ஒரு வாரம், இருவாரம் என கடலில் மீன் பிடிக்கச் செல்வதற்கு முன்பாக இப்பகுதி மீனவர்கள், தங்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைக்க வேண்டுமென்றும், கடலில் எந்தவித ஆபத்தும் நேராமல் தாங்கள் பத்திரமாக கரை திரும்ப வேண்டுமென்றும் இவரை வேண்டிக்கொண்டு செல்வது அக்காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே வருகிறது.

திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்த உணர்வு, இங்குள்ள பெருமாளை தரிசித்தாலே கிட்டுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இதை ஏழுமலையான் கோயில் என்றே பலர் அழைக்கின்றனர். இவரை தரிசித்தால் மாங்கல்யப்பேறு, மழலைப்பேறு உள்பட பல மகத்தான பேறுகள் கிட்டுகிறதாம்.

பிராகார வலம் வரும்போது இடப்பக்கத்தில் மேற்குப் பார்த்த சன்னதியில் பக்த ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார். சிறிய மூர்த்தம். மூர்த்தி சிறிதானாலும் அவரது கீர்த்தி பெரியது. பெரும் வரப்பிரசாதியான இவரை, கல்யாணமாகாதவர்கள் நாற்பத்தொரு நாட்கள் தொடர்ந்து பிரதட்சணம் செய்து தரிசித்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், அனுமனுக்கு வெண்ணெய்க்காப்பு, வடைமாலை சாத்தி தங்கள் நன்றியை காணிக்கையாக்குகின்றனர். மார்கழி மூலநட்சத்திரத்தில் இவருக்கு விசேஷ அலங்காரமும், திருமஞ்சனமும் நடக்கிறதாம்.

மூலவர் சன்னதிக்கு வலப்பக்கத்தில், தனி சன்னதியில் பெருந்தேவித்தாயார் அருள்கிறாள். அருகில் அவளது உற்சவத் திருமேனியும் காணப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று விசேஷ அலங்காரமும், திருமஞ்சனமும் காண்கிறாள். நவராத்திரியின் கடைசி நாளன்று சரஸ்வதி திருக்கோலத்தில் இவளுக்கு ஊஞ்சல் சேவையும் உண்டு.

மூலவர் சன்னதிக்குப் பின்னால், இக்கோயிலின் தலமரமான அரசமரம் உள்ளது. அதன் அடியில் நாகர்கள் அருள்கின்றனர். அரசமரத்தின் கிளைகள் மூலவர் சன்னதிக்கு மேல் பரவியுள்ளதை நோக்கும் பொழுது, பெருமாளுக்கு ஆதிசேஷன் குடைபிடித்தாற்போன்ற காட்சி தெரிகின்றது.

மூலவருக்கு இடப்பக்கத்தில் ஆண்டாள் தனி சன்னதியில் அருள்கிறாள். அருகில் உற்சவத்திருமேனியும் உள்ளது. ஆடிப் பூரத்தன்று ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், விசேஷ அலங்காரமும் செய்விக்கப்படுகிறது. போகியன்று பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில், ஒவ்வொரு நாளும் அவள் சன்னதியில் திருப்பாவை பாராயணம் பக்தர்களால் செய்யப்படுகிறது.

ஆண்டாளை அடுத்து காயத்ரி தேவி சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். வடநாட்டு பாணியில் சன்னதி விமானம் அமைந்துள்ளது. பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் தனி மண்டபத்தில் விஷ்ணு பாதம் அமைந்துள்ளது. பெருமாளை முழுமையாக சேவித்த பலன், விஷ்ணு பாதத்தைத் தொட்டு சேவித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை.

அடுத்து வேணுகோபால சுவாமி சன்னதி.சங்கு சக்கரத்துடன் புல்லாங்குழல் இசைக்கும் திருக்கோலம். கிருஷ்ண ஜெயந்தியன்று வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில், தரிசிப்பவர்களின் மனதைக் குளிர்விப்பாராம் இவர். அவரை தொடர்ந்து சீதை, லட்சுமணர், அனுமனுடன் கோதண்டராமர் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார். ஸ்ரீராமநவமி இங்கு விசேஷம்.

வைகானஸ ஆகமப்படி தினமும் மூன்று கால பூஜை இக்கோயிலில் நடைபெறுகிறது. தரிசனத்திற்காக காலை 6 முதல் 11 மணி வரையும், மாலை 5.30 முதல் 8.30 வரையும் கோயில் திறந்திருக்கும். புரட்டாசி மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. வைகாசியில் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று விடியற்காலை கருடசேவையுடன் கோபுரதரிசனம் நடைபெறும்.

ஆண்டாள் திருக்கல்யாண மண்டபமும், மடைப்பள்ளியும், சிறிய நந்தவனமும் கோயிலில் அமைந்துள்ளன. கஜ, கருட, சேஷ, ஹம்ச, அனுமந்த, பல்லக்கு வாகனங்கள் உள்ளன. வாகன மண்டபத்திற்கான திருப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் பெருமாள் சன்னதி விமானத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

பக்தர்களின் குறைகளை பரிவுடன் தீர்க்கும் இந்தப் பெருமாள் ஆலயத்திற்கு நீங்களும் ஒரு முறை சென்று, அவனது பரிபூரண அருளைப் பெற்று வாருங்களேன்!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், அகஸ்தியா பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. ராயபுரம் வழியாகச் சென்றால், பெருமாள் கோயில் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொள்ளலாம். அருகில் கும்மாளம்மன் கோயிலும் உள்ளது.

0 comments: