
ஞாயிற்றுக் கிழமைகளின் காலை நேரம் பொதுவாக உங்களுக்கு எப்படி?
1 12 மணிவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவீர்கள்.
2 டி.வி.யை ஆன் செய்துவிட்டு, மூன்று காஃபியை முழுங்கி விட்டு ரிமோட்டை சித்திரவதை செய்து கொண்டிருப்பீர்கள்.
3 மார்க்கெட் அல்லது கறிக்கடைக் கூட்டத்தில் எரிச்சலுடன் தள்ளு முள்ளு செய்வீர்கள்.
4 இம்பிரிண்ட் வரை, ஒரு வார்த்தை விடாமல் செய்தித்தாளில் மூழ்கிக் கிடப்பீர்கள்.
5 வீட்டைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று குப்பைகளை அதிகமாக்கி, முதுகு பிடித்துக் கொண்டுவிட்டது என முனகுவீர்கள்.
இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒவ்வொரு ஞாயிறும், சலிக்காமல் செய்து கொண்டிருப்பீர்கள்.
ஒரு வித்தியாசமாக, ஒரே ஒரு ஞாயிறு மட்டும் ஞாயிறு சென்று பாருங்கள்!
புரியவில்லையா? சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஞாயிறு என்ற கிராமத்திற்குச் சென்று, அங்கே அருள் புரியும் ஞாயிறையும் அதாங்க... சூரிய பகவானையும் புஷ்ப ரதேஸ்வரரையும் வணங்கிப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல வித்தியாசம்... சீரிய மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்.
ஞாயிறு கோயிலுக்குள் நுழைந்ததுமே உங்கள் மனசுக்குள் பூப்பூக்கும். ஆலயத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது சோலைக்குள் தவறி நுழைந்து விட்டோமா என்ற ஐயம் எழும். ஆம். எங்கு திரும்பினாலும் பசுமை பசுமை. அறுகம்புல் தோட்டம், மலர்ச்செடிகளின் கூட்டம் என்று இயற்கையே இறைவனாகக் காட்சியளிக்கும் உணர்வு எழும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை மிக்க ஞாயிறு ஆலயத்தின் சிறப்பை ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்கச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியான தெய்வமகள் சங்கிலி நாச்சியார் அவதரித்த பூமி, சாகுந்தல காவியம் போற்றும் கண்வ மகரிஷி முக்தி பெற்ற புண்ணிய இடம், ஆதிசங்கரரால் சொர்ணாம்பிகை ஸ்தாபிக்கப்பட்ட கோயில்... என்று, பட்டியல் தொடர்ந்து கொண்டே போகும்.
``எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. என்னோட அப்பா ரொம்ப வயசானவரு. 78 வயசு, அவருக்கு திடீர்னு கண்ணு ரெண்டுலயும் வலி ஆரம்பிச்சு, வீங்கியும் போயிடுச்சு. வீட்ல எல்லாரும் ரொம்ப பயந்துட்டோம். டாக்டர்கிட்டப் போனா, ஏதோ ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாரு. எங்கப்பா ஆஸ்பத்திரிக்கே போகாதவரு. ஆப்ரேஷன் பண்ணினா நான் செத்துப் போய்டுவேன்னு அலர்றாரு.
அப்ப அந்த ஆஸ்பத்திரி டாக்டர்தான் எங்கப்பாவுக்கு இந்த ஞாயிறு கோயிலைப் பத்திச் சொல்லி, இங்க இருக்கற சூரியனையும் சிவனையும் கும்பிட்டுட்டு வந்தா ஒரு குறையும் வராது. தாராளமா கண் ஆப்ரேஷன் பண்ணிக்கலாம்னு சொன்னாரு.
நானும், எங்கப்பாவை அழைச்சுக்கிட்டு இங்க வந்தேன். கண்ணு தெரியாத அவர் சார்பா, சாமியை நான்தான் பார்த்துக் கும்பிட்டேன். சொன்னா நம்பமாட்டீங்க, பயந்த சுபாவமுள்ள எங்கப்பா, ஆப்ரேஷனுக்கு இங்கயே சம்மதிச்சார். நல்லபடியா அதுவும் முடிஞ்சு எங்கப்பாவுக்குப் பார்வையும் திரும்பிடிச்சு. இது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனாலும், அந்த நன்றிக்காக மாசாமாசம் ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது நான் ஞாயிறு வந்துடுவேன்'' மெய்சிலிர்த்துப் போய்ச் சொல்கிறார். அண்ணாநகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வி. தணிகாசலம்.
கண் சம்பந்தப்பட்ட நோய்க்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இருக்கிறது. இந்தக் கோயில் எழுந்ததே ஒரு மன்னனின் கண்கள் குருடானதால்தான்!
இதோ, அந்தக் கதை.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சிவ பக்தனான சோழ மன்னன் ஒருவன் ஆந்திரத்தில் உள்ள நெல்லூர் வரை, படையெடுத்துச் சென்று வெற்றி வாகை சூடிவந்தான்.
இந்த ஊருக்கு அருகில் உள்ள சோழவரத்தில் முகாமிட்டான். அதிகாலையில் சிவ பூஜை செய்வதற்காக செந்தாமரை மலர்களைத் தேடி, இறுதியில் இந்த ஞாயிறு கிராமத்திற்கு வந்தான், மன்னவன்.
குளம் முழுக்கத் தாமரை மலர்கள். அதிலும் நடுவில் ஒரு மலர், ஓங்கி உயர்ந்து மன்னனைப் பார்த்துப் புன்னகைப்பது போல் அசைந்தது. அதனைப் பறிக்க முயற்சித்தான், சோழன்.
அவன் நெருங்க, நெருங்க மலர் விலகிற்று, போக்குக் காட்டிற்று.
பொறுமையிழந்த மன்னவன், அந்த அபூர்வ தாமரை மலரை நோக்கித் தன் கத்தியை எடுத்து வீசினான்.
அந்தக் கத்தி, தாமரை மலர் இத்தனை நாட்களும் பாதுகாத்துக் கொண்டிருந்த, அதன் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டுச் சிதறியது.
அந்த லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்டு, குளம் முழுக்க குங்கும நிறமானது. அத்துடன் பேரொளி, பேரொலி எழும்பிற்று. அதைப் பார்த்த மன்னவனின் கண்கள் பறி போயிற்று. மன்னன் மயங்கி விழுந்தான். அவன் வந்த குதிரை வெறிகொண்டு எங்கோ ஓடிற்று.
(மன்னன் வீசிய கத்தியின் முனை சிதறி உடைந்து விழுந்த இடம்தான் `கத்திவாக்கம்'. கைப்பிடி விழுந்த இடம் `கண்டிகை'. அரசன் தன் மார்பு கீழே படும்படி விழுந்த இடம்தான் `மாரம்பேடு.' குதிரை விழுந்த இடம் `குதிரைப் பள்ளம்' என்ற பெயர்களில் அருகில் உள்ள ஊர்களாக இன்றும் விளங்குன்றன.)
அப்புறம் என்ன? சிவபெருமான் பேரொளியுடன் ஞாயிறாக மன்னனுக்குக் காட்சி தந்து மீண்டும் பார்வை தந்தார். அந்த இடத்திலே தனக்கு ஒரு கோயில் எழுப்பும்படி கட்டளையிட்டார்.
மலர் வழியாக இறைவன், காட்சி தந்ததால் `புஷ்பரதேஸ்வரர்' (பூத்தேர் ஆண்டார்) என்று அந்தச் சிவலிங்கத்திற்குப் பெயரிட்டு குளத்தங்கரையிலேயே அழகுற ஆலயம் அமைத்தான் ராஜா.
இந்தச் சிவலிங்கத்தின் மேல், கத்தி பட்ட வடு இருப்பதை இன்றும் காணலாம்!
மன்னன் கண்பார்வையைத் திரும்பப் பெற்றதால், இங்கே வந்து இறைவனை தரிசனம் செய்தாலே கண் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
பிரிந்து போன கணவன் அல்லது மனைவி ஒன்று சேரவும் இங்கே வழிபாடு நடத்துகிறார்கள். அதற்கும் ஒரு கதை!
தன்னைவிட்டுப் பிரிந்த மனைவி சாயாதேவியுடன் மீண்டும் இணைவதற்காக திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார், சூரிய பகவான். அப்போது வானத்திலே ஒரு ஜோதி காட்சியளித்து சூரியனுக்கு ஆசி கூறியபடியே, மெல்ல நகர்ந்தது.
அந்த ஜோதி வானில் ஊர்ந்து வந்து ஞாயிறு சிவலிங்கத்தின் மேலே விழுந்து மறைந்தது. தொடர்ந்து வந்த சூரியன் மிக மகிழ்ந்து புஷ்பரதேஸ்வரரை வழிபட்டு மனைவியை மீண்டும் அடைந்தார்.
அந்த மகிழ்ச்சியில் ஞாயிறு ஆலயத்தில் மூலவருக்கு எதிரிலேயே காட்சியளிக்கிறார், சூரியபகவான். அவர் நீராடி சிவனை வழிபட்டதால் திருக்குளத்திற்கு சூரிய தீர்த்தம் என்று பெயர்.
சித்திரை மாதம் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு சூரிய ஒளி சிவபெருமான் மற்றும் அம்மன் பாதங்களில் விழுவது கண்கொள்ளாக் காட்சி.
சனி தோஷம் நீங்க திருநள்ளாறு செல்வது போல சூரிய தசை, புத்தி நடக்கிறவர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது.
பல்லவர் காலத்து கமலவிநாயகர், முருகப்பெருமான், காலபைரவர், நடராஜர், சிவகாமி அம்மன், சங்கிலி நாச்சியார் ஆகியோரும் இங்கே காட்சி தருகிறார்கள்.
பஞ்ச பாஸ்கர ஸ்தலம் எனப்படும் 5 சூரியத் தலங்களுள் ஒன்று இந்த ஞாயிறு. (மற்றவை திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம், தலைஞாயிறு.)
மீண்டும் ஆரம்பத்திற்கே வருகிறேன்.
வழக்கமான எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் போல் இல்லாமல் உங்கள் வாழ்வில் இனிமைகள் பூத்துக்குலுங்க, நல்லன எல்லாம் நடக்க, உங்கள் கண் ஒளி பலப்பட நீங்கள் ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமையாவது ஞாயிறு கோயிலுக்குச் சென்று வாருங்கள். அங்கே சூரியபகவானும் அவருக்கே ஒளி தந்த புஷ்பரதேஸ்வரரும் உங்கள் வருகைக்காக புன்னகையுடன் காத்திருக்கிறார்கள்..
ஞாயிறு கோயில் எங்கே இருக்கிறது?
``சென்னையிலிருந்து 30 கி.மீ. செங்குன்றம், சோழவரம், அருமந்தை வழியாகச் செல்லலாம். ரோடு ரொம்ப மோசம்! (நெடுஞ்சாலைத் துறை கவனிக்க!) ரெட்ஹில்ஸிலிருந்து 57சி, டி57, ஏ58 போன்ற பஸ்கள் செல்கின்றன. 13 கி.மீ. தூரம்.''
கோயில் எப்போது திறந்திருக்கும்?
``தினசரி காலை 7-11, 4-7, ஞாயிறு மட்டும் காலை 6-1, 4-7''
உணவு, தங்குமிடம் வசதி?
``எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் சென்னையிலேயே முடித்துக் கொள்ளுங்கள்!''
2 comments:
THANK YOU
புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில்
http://pungampadi.blogspot.com/2019/05/
Post a Comment