Sunday, August 3, 2008

தண்டச் செலவு!

படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார் கைலாசம். யாரோ உலுக்கி புரட்டிவிட்டதைப்போன்ற ஒரு உணர்வு. விளக்கைப் போட்டார். மணியைப் பார்த்தார். இன்னும் விடிந்திருக்கவில்லை.

முதல்நாள் இரவு சாப்பிட்ட விஸ்கியின் தள்ளாட்டம் இன்னுமா இருக்கும்? இல்லை, இதயத்தில் ஏதாவது கோளாறோ?

விடிந்தும் விடியாததுமாக மருத்துவரிடம் விரைந்தார். தன் பயத்தையும் நடந்ததையும் கூறினார். டாக்டரும் ஈ.சி.ஜி.யில் ஆரம்பித்து ஸ்கேனிங்வரை சென்று சோதித்துப் பார்த்து `ஒன்றும் ஆபத்து இல்லை' என்றார்.

எல்லாவற்றிற்கும் இரண்டாயிரம் ரூபாய் ஃபீஸ் அழுதுவிட்டு வெளியே வந்தார்.

அன்று மாலை தினசரியைப் பிரித்தவருக்கு அந்தச் செய்தி கண்ணில் பட்டது.

`மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம். சென்னையிலும் அதன் பாதிப்பு. விடியற்காலை நாலு மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது!' என்றிருந்தது.

இதைத் தெரிந்துகொள்ளாமல் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டோமே என்று வருந்தினார் கைலாசம்.

0 comments: