Sunday, August 3, 2008

எந்தப் பள்ளிக்கூடம்

எங்கள் மூன்று வயதுக் குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதில் என் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை. எங்கள் காலனியிலே உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டுமென்று நான் விரும்பினேன். ஆனால், என் மனைவியோ பெரிய செல்வந்தர்கள் வீட்டுக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதம்.

அன்று மாலை என் மனைவியின் தோழியான பவானியும், அவளின் மூன்று வயது மகனும் எங்கள் வீட்டிற்கு வந்தனர். பவானியின் அப்பா பெரிய பணக்காரர். சிறிது நேரம் பொதுவாகப் பேசிய பின் பவானி எங்களிடம், `இந்த காலனியில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் மகனைச் சேர்க்க வந்திருப்பதாகக்' கூறியதும் என் மனைவி திடுக்கிட்டாள்.

`என்னடி... உன் பையனை இந்தப் பள்ளிக்கூடத்திலா! வேற பெரிய பள்ளிக்கூடமா சேர்க்கலாமே?' என்று கேட்டாள்.

அதற்கு பவானி `சின்ன வயசுல பசங்களுக்குக் கஷ்டம் தெரியணும். அதுக்கு இப்படிப்பட்ட ஸ்கூல்தான் சரி. ஏ.சி.வகுப்பறை, சொகுசு சூழ்நிலையில் கல்வி இருந்துட்டா, கஷ்டம் தெரியாது. பிற்காலத்திலே ஒரு சின்ன சறுக்கலைக் கூடத் தாங்க முடியாம தவிச்சுடுவாங்க.' என்றாள்.

பவானி விடைபெற்றுச் சென்றவுடன், ``சாரிங்க, நம்ம குழந்தையைக் காலனி ஸ்கூலுலேயே சேர்த்துடலாம்'' என்றாள் என் மனைவி.

0 comments: