தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
வித்தியாசமான, திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில் கோபுரத்தைப் பார்த்தாலே, அதன் தொன்மை, உள்ளத்துக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இதயத்துக்கு இன்பத்தைக் கொடுக்கும். இறைவன் பெயரே இருதயாலீஸ்வரர் என்றால் கேட்கவா வேண்டும்?
எல்லாக் கோயிலிலும் மூலவர் சன்னதியின் மேலே அண்ணாந்து பார்த்தால் கூம்பு வடிவமாய் கோபுரத்தின் உச்சி தெரியும். ஆனால் இந்தக் கோயிலில் மட்டும் மேலே இருதய வடிவத்தில் சுவர் தெரியும். நான்கு பிரிவுகளுடன் இருதயக் கமலம் காட்சி தரும். இருதய நோயாளிகள் இந்தக் கோயிலுக்கு வந்து இருதயாலீஸ்வரரை வழிபட்டால் போதும். இதய நோயெல்லாம் பறந்துவிடும் என்கிறார்கள் பயன்பெற்றவர்கள்.
லிங்க வடிவிலே காட்சி தருகிறார் இருதயாலீஸ்வரர். இன்னொரு சிறப்பு என்னவென்றால் கருவறையில் ஈசன் எங்குமே தனித்திருப்பார். ஆனால் இங்கு மட்டும் பூசலார் நாயனார் என்ற சிவபக்தனுக்கும் கருவறையிலேயே இடம் தந்திருக்கிறார் சிவபெருமான்.
சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுரவடிவத்தில் இங்கே காட்சி தருவது அதிசயம்தான்.
சன்னதியின் கீழே மரகதாம்பாள் சன்னதி. அழகு கொஞ்சுகிறது. நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் தெற்கு நோக்கிய திருமுகம்.
மூலவர் சன்னதியின் பின்பக்கம் சென்று பார்த்தால் யானையின் பின்புறம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருப்பது தெரியும். அங்கே சங்கு சக்கரம் தாங்கி விஷ்ணு பகவான் தரிசனம் தருகிறார். வேறெங்கும் இப்படி ஒரு அற்புதம் இருப்பதாகத் தெரியவில்லை.
பொல்லாப்பிள்ளையார், தட்சணாமூர்த்தி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசர் என்ற சன்னதிகளில் பார்க்கப் பார்க்க பரவசம்.
இறைவனுக்கு இருதயாலீஸ்வரர் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? இதோ இதயக் கோயிலைத் தரிசிக்க கதைக்குள் கண் பதிப்போமா?
(1)
கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
திருநின்றவூர்.
`ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய' உச்சரித்துக் கொண்டேயிருந்தார் அவர். ஒருநாள் இரண்டு நாள் அல்ல; வருடக்கணக்காக. அவர் ஒரு சிவ பக்தர் என்று சொல்வதை விட சிவப்பித்தர் என்று சொல்வதுதான் பொருத்தம். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன என்று அவருக்கே தெரியாது. சதா, சிவநாமம் சொல்லி, சதா சிவம் புகழ் பாடிக் கொண்டேயிருப்பதுதான் அவர் வேலை. தினமும் காலையில் எழுந்து குளித்தவுடன், உடம்பு முழுவதும் திருநீற்றை எப்போதும் பூசிக் கொள்வார். அக்கோலத்தைக் கண்ட மக்கள் அதனால் அவரைப் `பூசலார்' என்றே அழைக்கத் துவங்கினர்.
அவர் வசதியானவரா என்றால்-இல்லை. ஏழையிலும் பரம ஏழை. சிவனைத் தியானிப்பது. கிடைத்ததை இறைவன் பிரசாதமாக உண்பது-அதுதான் அவரது வேலை.
பூசலாருக்கு ஒரே ஒரு ஆசை உண்டு. பேராசை.
(2)
அரண்மனை மாதிரி ஒரு பங்களாவைக் கட்டிக்கொண்டு, ஆடம்பரமாய் வாழ வேண்டும் என்றெல்லாம் அவருக்கு ஆசை கிடையாது. எல்லாம் வல்ல சிவபெருமானுக்கு இந்த ஊரில் ஒரு பிரமாதமான கோயில் கட்ட வேண்டும் என்பதுதான் பூசலாரின் அவா.
அவரே அடுத்தவேளை உணவுக்கு, கையேந்த வேண்டிய நிலை. அவரால் எப்படி கோயில் கட்ட முடியும்?
இறையடியார்களால் முடியாதது ஏதும் உண்டா?
இரவு பகலாய்ப் பூசலாருக்குக் கோயில் நினைவுதான். கோடீஸ்வரன் நினைத்தால் கூட முடியாத திருப்பணியை ஓர் ஆண்டியால் செய்ய இயலுமா?
பொருள்தேடி பலரிடம் அலைந்தார் பூசலார்.
அலைந்தலைந்து அவரது கால்கள் தேய்ந்ததே தவிர, பலனில்லை.
ஆனால் திருக்கோயில் கட்டும் ஆசை மட்டும் அவருக்குக் குறையவேயில்லை.
பணம் கிடைக்காவிட்டால் என்ன? ஆலயம் கட்ட அருமையான எண்ணம் உதித்தது பூலாருக்கு.
அதுதான் இதயக் கோயில்.
கற்கள் கொண்டு கட்டமுடியாத கோயிலை, பணம் வசூலித்து எழுப்ப முடியாத ஆலயத்தை மனசுக்குள்ளேயே கட்ட முடிவெடுத்தார் பூசலார்.
பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. மனம் இருக்கிறதே.
கோயில் கட்ட வசதியான இடம் என்னுடைய மனசுதான். இதற்குப் பட்டா வேண்டாம். விலை வேண்டாம். நல்லதொரு நாளில் புனித நீராடி உடல் முழுக்க வழக்கம்போல் திருநீறு பூசி, ஓர் இலுப்பை மரத்தடியில் அமர்ந்தார் பூசலார். ஈசனுக்கு மனத்தால் பூசை பண்ணியபடியே கண்மூடி தியானத்தினுள் நுழைந்தார்.
அவ்வளவுதான் இதோ கோயில். மனக்கோயில், இதயக்கோயில் எழும்ப ஆரம்பித்துவிட்டது.
இதயம் மிகப் பெரியது.
பக்தியால் அஸ்திவாரம் தோண்டியாயிற்று.
சிற்பிகள், தச்சர்கள் எல்லாம் வந்தாயிற்று. ஆகம விதிகளின்படி, கடைக்கால் எடுத்து, கட்டுமானப் பணிகள் தொடர்ந்தாயிற்று.
இதயத்துக்குள் கோயில்கட்டிக் கொண்டே போனார் பூசலார்.
கோயில் எழும்பிற்று.
எல்லாம் தயார்.
கும்பாபிஷேகம் ஒன்றுதான் பாக்கி.
அந்த இதயக் கோயிலுக்கு கும்பாபிஷேக தினத்தையும், நேரத்தையும் நிர்ணயித்தார் பூசலார்.
அதேநேரம் காஞ்சிபுரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது?
(3)
காஞ்சிபுரம், பல்லவர்களின் தலைநகர்.
மன்னன் காடவர்கோன் ராஜ சிம்ம பல்லவன் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான். காரணம் காஞ்சியில் அவன் எழுப்பியுள்ள கைலாசநாதர் ஆலயம். தனது படைபலம், செல்வத்தைக் கொண்டு, தேர்ந்த சிற்பிகள் மூலம் கோயிலை அத்தனை சிறப்பாகக் கட்டியிருந்தான்.
அந்தணர்களை அழைத்து கும்பாபிஷேக தினத்தையும் நிர்ணயித்தான். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
விடிந்தால் கும்பாபிஷேகம். மனசு நிரம்பிப் படுக்கையில் சயனித்திருந்தான் பல்லவ மன்னன். யாராலும் கட்ட முடியாத சிறப்புமிக்க ஆலயத்தைக் கட்டிய பெருமித உணர்வுடன் உறங்கினான் மன்னன்.
அப்போது ஒரு கனவு கண்டான். கனவிலே சிவபெருமான் எழுந்தருளினார்.
(4)
சிவ பெருமான் பேசினார்.
``பல்லவ மன்னா, நாளை நீ கும்பாபிஷேகம் செய்யப்போகும் கோயிலுக்கு நான் வரப் போவதில்லை. திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோயிலில் நாளை கும்பாபிஷேகம். நான் அங்கே செல்கிறேன். எனவே, நீ கும்பாபிஷேக தினத்தை வேறு ஒரு நாள் மாற்றிக் கொள்.'' அசரீரி அதிர்ந்தது.
திடுக்கிட்டுக் கண்விழித்தான் பல்லவன்.
அருகிலிருந்த மனைவியை எழுப்பினான். மந்திரியை அழைத்தான். உடனே காஞ்சிக் கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தச் சொன்னான்.
``உடனே நாம் திருநின்றவூர் செல்ல வேண்டும். பூசலார் கட்டிய கோயிலை நான் பார்க்கவேண்டும். நான் கட்டியதைவிடச் சிறந்த கோயிலாகத்தான் அது இருக்கவேண்டும்.''
இரவோடு இரவாக திருநின்றவூருக்கு மனைவி மக்களோடு பயணப்பட்டான்.
அதிகாலையில் ஊரை அடைந்த போது...
கோயில் எங்கே? கும்பாபிஷேகம் எங்கே?
விசேஷம் எதுவும் நடப்பதாய்த் தெரியவில்லையே!
(5)
மந்திரி, திருநின்றவூரில் ஓர் உழவனைப் பார்த்து, பூசலார் கட்டிய கோயில் பற்றி விசாரித்தார்.
கடகடவெனச் சிரித்தான் உழவன். ``என்னது, கோயிலா, இங்கேயா? பூசலார் ஓர் ஏழை பிராமணர். இலுப்பை மரத்தடியில் பித்துப்பிடித்த மாதிரி கிடக்கிறார். என்பதுதான் எங்களுக்குத் தெரியும்.''
கடவுள் பொய் சொல்வாரா?
அரசன் உடனே பூசலார் இருக்குமிடத்திற்குச் சென்றான். அங்கே...
(6)
இலுப்பை மரத்தடியில் சிவப்பழம் மாதிரி தவத்திலிருந்த பூசலார் ரொம்ப நேரம் கழித்துக் கண் திறந்தார்.
பணக்கோயில் எழுப்பிய வேந்தனும், மனக்கோயில் எழுப்பிய வேதியரும் ஒருவரை ஒருவர் கண்டனர்.
``கும்பாபிஷேகம் பார்க்க வந்தேன்.'' என்றான் மன்னன்.
பூசலார் புன்னகைத்தார். ``இதோ... என் இதயத்தைப் பாருங்கள்'' என்றார்.
பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்ம பல்லவன் பார்க்கப் பார்க்க புல்லரித்துப் போனான்.
இதயக்கோயில்!
வேள்வியும் வேதமும் ஒரு புறம், தெள்ளு தமிழ்த் தேவாரம் மறுபுறம், நாதஸ்வர ஓசை ஒரு புறம்...
பூசலாரின் இதயக்கோயிலில் ஈசனை, இருதயாலீஸ்வரரைக் கண்டு தரிசித்தான் மன்னன்.
மணிமுடி மண்ணில் பட விழுந்து பணிந்தான் மன்னன். `இறைவா, இறைவா' என்று அலறினான்.
பூசலார் நாயனாரின் பூரண ஆசியைப் பெற்றான். இருதயமே ஆலயமாக அமைந்ததைக் கண்டதால் ஈசனுக்கு, இருதயாலீஸ்வரர் என்ற பெயரைச் சூட்டினான். பூசலார் நாயனாரின் ஆரம்ப கால விருப்பப்படி, அங்கே மிகப் பெரிய கோயில் ஒன்றையும் கட்டினான். அங்கேயே சில காலம் இருந்து அகமகிழ்ந்தான். பின்னர்தான் காஞ்சிக்குச் சென்று கும்பாபிஷேகம் செய்தான்.
இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றாலே, நோயெல்லாம் தீரும்! =
திருநின்ற ஊர்
கடவுள் வந்து நின்ற ஊர் என்பதால் இந்தப் பெயர்.
இருதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஆலயம்.
பல்லவர் காலத்துப் பழம் பெரும் கோயில்.
சென்னை- அரக்கோணம் ரயில் பாதையில் சென்னையிலிருந்து 33 கி.மீ. தொலைவு, ரயில் நிலையத்திலிருந்து
ஒன்றரை கி.மீ. தூரத்தில் கோயில்,
நடந்தோ ரிக்ஷாவிலோ செல்லலாம்.
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment