Wednesday, July 23, 2008

பரிசு!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கிய அடுத்த நொடியில் விநோதமான குரல் எழுப்பினான் கைலாசம். அவனது நண்பன் ரகுராமிற்கு `பக்' என்றாகிவிட்டது. மீண்டும் வாந்தி எடுத்து ஏடாகூடமாகிவிடப் போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டது. தயாராக வைத்திருந்த பிளாஸ்டிக் பையை அவன் வாயருகே கொண்டு போவதற்குள்.... குபுக்...!

பயந்தது போலவே கைலாசம் வாந்தி எடுத்துவிட்டான். ஆனால், நல்ல வேளையாக, தண்டவாளப் பாதையில் விழுந்ததால்... களேபரம் ஏற்படாமல் போனது.

கைலாசத்தின் முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தான் ``ஏதாச்சும் டீ, காபி சொல்லட்டுமா?'' என்று பரிவோடு கேட்டான் ரகுராம்.

``வேண்டாம்டா... முடியல... வாயெல்லாம் கசக்குது... எதயும் சாப்பிடணும்னே தோணல'' என்றான் கைலாசம்.

வேதனையாக இருந்தது ரகுவிற்கு. கைலாசத்தைக் கைத்தாங்கலாக அழைத்தவாறு ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தான். ஆட்டோக்களும், கார்களும், பேருந்துகளுமாக ஒரே இரைச்சல். நிலையத்தில் ரேடியோ மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பாளர், பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயிலின் காலதாமதம் பற்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். ஓபன் டிக்கெட் வாங்குவதற்கு மிக நீ...ண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். நிறையப் பேர் மாநகரப் பேருந்தைப் பிடிக்க, முண்டியடித்து ஓடினர். காக்கி உடையில் `காவல்துறை உங்களின் நண்பன்' (ஹஹ்... ஹஹ்...ஹஹ்ஹா....!) என்றவாறு லத்தியை சுழற்றியபடியே போர்ட்டர்களிடம் `கதைத்துக்' கொண்டிருந்தனர்.

இந்தப் பரபரப்பு நிகழ்வுகள் எதிலும் ஈடுபாடு கொள்ளும் மனநிலையில் தற்போது ரகு இல்லை. கைலாசத்தைப் பக்குவமாகத் தாங்கியபடி சுரங்க நடைபாதைக்குள் நுழைந்தான்.

படிக்கட்டிற்குள் வரிசையாக பிச்சைக்காரர்கள். நெருப்பால் வெந்துபோன முகத்துடன், புண் ஏற்பட்டு புரையோடிய கால்களுடன், ஒரு அடி உயரமே உடைய, கூன் விழுந்த மனிதர்கள், பார்வையற்றவர்கள் என்று பல்வேறு தரப்பட்ட மனிதர்கள்.

அரசு பொது மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்பே, மனசைத் தொல்லைப்படுத்தும் காட்சிகள்.

சுரங்கப்பாதைக்குள் அங்கங்கே எச்சில்கள், அழுக்குத் தண்ணீர், மனநிலை பாதிக்கப்பட்டுள்ள யாரோ ஒருவர் விட்டுச் சென்றுள்ள கந்தல் துணி... இதற்கிடையே மோசமான நாற்றம் வேறு.

எப்படியோ சுரங்கப் பாதையைக் கடந்து மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவரை நெருங்கினால், குப்பைக் கூளங்களுக்கிடையே, ஒருவர் இட்லி விற்றுக் கொண்டிருந்தார். அவர் அருகே பிளாஸ்டிக் தட்டில், இட்லி மீது சட்னி, சாம்பார் ஊற வைத்து, பிசைந்து அடித்துக் கொண்டிருந்தார். அவரும் மருத்துவமனையில் ஏதோ ஒரு நோயாளிக்குக் துணையாக வந்திருக்க வேண்டும் என்று ரகுவிற்குத் தோன்றியது.

பெரிய இரும்புக்கதவிற்குள் நுழைந்தான். எங்கு பார்த்தாலும் மனிதர்கள்... மனிதர்கள். லோக்கல் கால் பூத்களில் கண்ணீரும், கம்பலையுமாக பெண்மணி ஒருவர் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார். ``அவர் காலை எடுத்தே ஆகணும்னு டாக்டர் சொல்லிட்டார்'' என்ற கதறல்.

மனசிற்குள் கிரைண்டர் ஓடிய படபடப்பு ஏற்பட்டது ரகுவிற்கு.

ஆனால் இந்தக் காட்சிகளை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் கைலாசம் இல்லை. அவனுக்குள் மரணவலி. மாதம் ஒன்றாக விடாத காய்ச்சல். முதலில் சில நாட்கள் பாட்டி வைத்தியம் நடைபெற்றது. ஆனால் அதற்கெல்லாம் இந்தக் காய்ச்சல் `குட்பை' சொல்லியாகிவிட்டது.
அப்புறம்தான் கிராமத்திலேயே எம்.பி.பி.எஸ். பட்டம் பெறாத, அனுபவமிக்க டாக்டரிடம் சிகிச்சை தொடங்கியது. தினமும் ரெண்டு ஊசிகள் இரண்டு கைகளிலும் தாளாத வலி வந்ததுதான் மிச்சம். உள்ளுக்குள் நோயின் தன்மை குறைந்த மாதிரியே தெரியவில்லை.

இதனிடையே ஒருநாள் எடுத்த வாந்தியில் கொஞ்சம் இரத்தமும் வெளிப்பட்டதால் பயந்துபோனான் கைலாசம்.

அதன் பிறகுதான் ரகுராமிடம் நிலவரத்தைச் சொன்னான். இதைக் கேட்ட ரகு கலவரம் ஆனான்.

பக்கத்து ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றான் ரகு.

இரண்டு அல்லது மூன்று தினங்களிலேயே அந்த மருத்துவமனையும் கைவிட்டது. ``பேசாம சென்னை ஜி.எச்.சிற்குச் செல்லுங்க'' என்று அறிவுரை வழங்கினார் அந்த டாக்டர்.

ரகுவின் துணையுடன் புறப்பட்டான் கைலாசம்.

செருப்பில் சொதசொதப்பு தெரியவே, குனிந்து பார்த்தான் ரகு.. யாரோ எடுத்திருந்த வாந்தியில் மிதித்திருப்பது தெரிந்தது. அருவருப்பாக இருந்தது. பக்கத்தில் தண்ணீர் பாக்கெட் வாங்கி கால்களைக் கழுவிக் கொண்டான்.

மறுபடியும் தளர்ச்சியுடன் இருந்த கைலாசத்தை அரவணைத்தபடி ஓ.பி.வார்டை நோக்கி நடந்தான்.

அங்கேயும் `ஜே....ஜே....'வென்று ஜனக்கூட்டம். ஸ்ட்ரெச்சரில் யாரையோ தள்ளிக்கொண்டு போனார்கள். பின்னால் ஒரு பெண்மணி, புடவைத் தலைப்பால் வாயை மூடியவாறு வேகமாக சென்று கொண்டிருந்தார். ஸ்ட்ரெச்சரைத் தள்ளிச் சென்ற ஊழியர், மற்றொருவருடன் தீவிரமாகப் பேச ஆரம்பித்தார், தள்ளுவதை நிறுத்தியபடியே. வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டிருப்பவர் யார், அவருக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவலில் ஒரு சிலர் ஸ்ட்ரெச்சர் அருகே சென்று உற்றுப் பார்த்தனர். (அடுத்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தான் எத்தனை ஆர்வம்!)

கவுண்டரில் இருந்தவர் கேட்ட விவரங்களை எல்லாம் சொல்லி சீட்டு வாங்கிக் கொண்டான் ரகு. பார்க்க வேண்டிய டாக்டர் அறை முன்பு இருந்த அழுக்கான பெஞ்சில் கைலாசத்தை அமர வைத்தான்.

கைலாசம் ரொம்பவும் களைப்பாக இருப்பது போல் தெரிந்தது. ``குடிக்க ஏதாச்சும் வாங்கிட்டு வரட்டுமா?''

``வேணாம்'' என்று சைகை மூலம் காண்பித்த கைலாசம், பக்கத்தில் அமருமாறு சைகையிலேயே அன்புக்கட்டளை பிறப்பித்தான்.

`கொஞ்சம் உட்கார்ந்தால் தேவலை' என்று தோன்றியது ரகுவிற்கும். உட்கார்ந்தான்.

``என்ன இது சொதசொதப்பு?''

படக்கென்று எழுந்து, தான் உட்கார்ந்த இடத்தைப் பார்த்தான். இரத்தம்!

யாரோ அடிபட்டவர் உட்கார்ந்திருப்பார் போலும்! அவனது பேண்ட்டின் பின்புறத்தை, மிகுந்த சிரமப்பட்டுத் திரும்பிப் பார்த்தான். சிவப்புக் கறை!

அருவறுப்பில் நெளிந்தவன், அங்கே தென்பட்ட மருத்துவமனை ஊழியர் ஒருவரை அழைத்துக் காண்பித்தான்.

அவரும், ``ஆமா, ரத்தம்...!'' என்றவாறே, ஒரு பார்வையாளரைப் போல் பார்த்துவிட்டு நகர்ந்தார்.

``ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்று பார்த்தால், பேசாமல் இருக்காரே!' என்று எரிச்சல் எரிச்சலாக வந்தது ரகுவிற்கு.

இதனிடையே, அந்தப் பக்கமாக வந்த நர்ஸ் ஒருவரை அழைத்து இதனைக் காண்பித்தான். அதற்கு அவர், ``ஆஸ்பத்திரின்னா இப்படித்தான் இருக்கும்'' என்று கோபமாகப் பேசிவிட்டு நகர்ந்தார்.

வேதனையாக இருந்தது.

மெல்ல டாக்டரின் அறைக்குள் தலையை நுழைத்துப் பார்த்தான். அவர், மற்றொரு லேடி டாக்டருடன் `தசாவதாரம் சினிமா' குறித்து உற்சாகத்துடன் கலந்துரையாடல் நடத்திக் கொண்டிருந்தார்.

அவரது கவனத்தைத் திருப்புவதற்காகவே லேசாக செருமினான். திரும்பிப் பார்த்த டாக்டரும், ``என்ன?'' என்றார்.

அவரது கேள்விக்குப் பதில்கூடத் தராமல், வேகமாகச் சென்று கைலாசத்தை அழைத்தபடி உள்ளே சென்றான்.

கைலாசத்தின் தோற்றத்தைப் பார்த்து கொஞ்சம்கூட பதைபதைப்பு இல்லாதவராக, ``என்ன செய்யுது?'' என்று கேட்டார் டாக்டர்.

கைலாசம் விலாவாரியாக அனைத்தும் சொன்னான். அவன் சொல்ல விட்டுப்போன விஷயங்களை ரகு எடுத்துக் கொடுத்தான்.

உடனே, துண்டுச் சீட்டில் எதையோ எழுதிக் கொடுத்துவிட்டு, மறுபடியும் லேடி டாக்டரிடம் அந்த ஆண் டாக்டர் தசாவதாரத்தைத் தொடர ஆரம்பித்தார்.

``என்ன டாக்டர் இது?'' என்று அவரின் உற்சாகத்தைக் கெடுக்கும் விதமாகக் கேள்வி கேட்டான்.

``பிளட் டெஸ்ட் எடுத்து ரிசல்ட் வாங்கிட்டு வாப்பா'' என்று எரிச்சலுடன் கூறினார் டாக்டர்.

அதற்கு மேல் டாக்டரை இடையூறு செய்ய விரும்பாமல் வெளியே வந்தான். யாரிடமோ விசாரித்து இரத்தப் பரிசோதனைக் கூடத்தை அடைந்தான். உள்ளே சிலர் கும்பலாக நின்றிருந்ததால், வெளியே காத்து நின்றான். கைலாசத்தை அங்கிருந்த உடைந்த ஸ்டூலில் உட்கார வைத்து விட்டு, சுவற்றில் ஓய்வாக சாய்ந்து நின்றான்.

அப்போது கையில் ஏதோ பிசுபிசுப்பு. பார்த்தான். எச்சில்.

அந்த சளியைத் துடைத்தெறிய தண்ணீரைத் தேடினான். நோ. கீழே கிடந்த பேப்பர் ஒன்றால் முடிந்தளவிற்குச் சுத்தம் செய்து கொண்டான்.
சற்று நேரத்தில் பரிசோதனை ரிசல்ட்டைப் பெற்றுக் கொண்டு டாக்டரைத் தேடிச் சென்றான். அறை காலியாகக் கிடந்தது.

நர்ஸ் ஒருவரிடம் சென்று விசாரித்தான். ``அவர் டூட்டி முடிஞ்சு போயிட்டார். கொஞ்ச நேரத்தில் வேறொரு டாக்டர் வருவார். வெயிட் பண்ணுங்க'' என்றார்.

காத்திருந்தான் நண்பன் கைலாசத்துடன்.

அந்த ஏரியா முழுவதும் `ஒன் பாத்ரூம்' .... வீசிக்கொண்டே இருந்தது. `என்ன கர்மம்டா சாமி!'

அடுத்த டூட்டி டாக்டர் வந்தார்.

என்ன, ஏது என்றுகூடக் கேட்கவில்லை. ரிப்போர்ட்டைப் பார்த்து விட்டு, மாத்திரை மருந்து எழுதிக் கொடுத்தார்.

``ஒடம்புக்கு என்னதான் டாக்டர்?'' என்று அதற்கு மேலும், காந்தீயத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் கோபமாகக் கேட்டான் ரகு.

இவனது கோபக் குரல் அவரை சற்று துணுக்குற வைத்திருக்க வேண்டும். ரகுவை ஒரு மாதிரியாகப் பார்த்த டாக்டர், ``இந்த டேபிளட்டை ரெண்டு நாள் சாப்பிட்டுவிட்டு, நண்பனை அழைச்சிட்டு வா. அப்புறம் தேவைப்பட்டா ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம்'' என்றார்.

``திரும்பவும் இந்த ஆஸ்பத்திரிக்கா?!''

மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு நண்பன் கைலாசத்துடன் கிராமத்திற்கு வந்தான்.

மறுநாள் காலை.

ரகுவால் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. உடம்பெல்லாம் ரணமாக வலித்தது.

``ஏண்டா, பத்து மணி வரைக்கும் எழுந்திருக்காமல் என்னதான் செய்யறே?'' என்று அவனை எழுப்ப முயன்ற அவன் அம்மா, ``என்னடா இது! ஒடம்பு அனலா கொதிக்குதே!'' என்று பதறினாள்.

காய்ச்சல்!

நேற்று நண்பனை அழைத்து சென்ற ஜி.எச்.சில் கிடைத்த பரிசு!

0 comments: