Saturday, August 16, 2008

தண்டையார்குளம் பகவதி கோயில்


திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்குமிடையில் தண்டையார்குளத்தில் அருள்பாலிக்கும் என்னை வந்து யார் வணங்கினாலும் அவர்களின் குழந்தைகளைத் தாயாக நின்று நான் பார்த்துக் கொள்வேன். கல்வி, செல்வம், புகழ் என்று எல்லாவற்றிலும் உங்கள் வாரிசுகள் சிறக்க நான் வரம் தருவேன்,நோய் நொடியிலிருந்து அந்தக் குழந்தைகளைக் காத்து, பூரண ஆயுளுடன் விளங்கச் செய்வேன்.''

இவ்வாறு வாக்குக் கொடுத்த தண்டையார்குளம் பகவதி அம்மனைப் பார்த்தாலே உங்களுக்கு பரவசம் ஏற்படும்! காரணம், தான் சொன்னதை மெய்ப்பிப்பதுபோல பகவதி, தன் இடுப்பிலேயே ஒரு குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதுதான்.

தண்டையார்குளம் பகவதியின் ஆலயத்தைப் பார்த்ததுமே, நாம் தமிழகத்தில் இருக்கிறோமா அல்லது கேரளத்தில் இருக்கிறோமா என்கிற ஐயம் எழும். ஆம். முழுக்க முழுக்க கேரள பாணியில் அமைந்த திருத்தலம் இது. வழிபாடும் கேரள முறைப்படிதான்.

ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது, பகவதியின் கட்டளை!
எதிரில் நூற்றுக்கணக்கான காற்றாலைக் காற்றாடிகள் சாமரம் வீச, சில்லென்று வீசும் காற்றும், பச்சைப் புல்வெளியும், தண்ணீர் தளும்பும் சிறு தெப்பக்குளமும் கோயிலை நெருங்கும்போதே ஓர் அமைதியையும் ஆனந்தத்தையும், நிம்மதியையும் மனசுக்குள் ஏற்படுத்தி விடுகிறது.

கோயிலுள் காலடி வைக்கும்போதே `அம்மே நாராயணா, தேவி நாராயணா, பத்ரி நாராயணா, லக்ஷ்மி நாராயணா' என்று சித்ராவின் குரல் சி.டி.யில் தேனாய் உருகுகிறது.

உள்ளே காட்சி தரும் பகவதி நம்மை மட்டுமல்ல, நம் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்வாள் என்கிற மனநிறைவும் ஏற்படுகிறது.

கேரள பாணியில் இந்த ஆலயம் அமைந்தது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள, நாம் 300 வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்கவேண்டும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வோமா?

குமரி, நெல்லைப் பகுதிகளைப் பஞ்சம் பாதித்த காலம் அது.

உணவும், தண்ணீரும் சிறிதளவும் கிடைக்காத சூழல் அது.

வாழும் வகையின்றித் தவித்த மக்கள், குழந்தை, குட்டிகளுடன் கேரளம் நோக்கிப் பிழைப்புக்காக நகர்ந்தார்கள்.

அப்போது, கேரளத்தின் ஆளூர் பகுதியில் ஒரு மந்திரவாதி அறுசுவை உணவுகளை மலையளவு தயார் செய்து, பகவதிக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தான்.

பசி, பட்டினியுடன் தவித்த மக்கள், சாப்பாட்டின் வாசனை கண்டு முட்டி மோதி ஓடினார்கள்.

படையலைப் பார்த்ததும், பசியின் ருசியில் மதிமயங்கி, சாப்பாட்டுக்குள் பாய்ந்தார்கள்.

பகவதியோ, மந்திரவாதியோ அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. பசி! பசி!

அங்கே நடந்த அடிபிடியில், மந்திரவாதி, கூட்டத்தில் நசுங்கியே மாண்டு போனான்.

பசியடங்கியதும்தான் மக்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரிந்தது.

அதற்காக வருந்தினார்கள். பகவதியை விழுந்து வணங்கினார்கள்.

``எல்லாம் நன்மைக்கே. நீங்கள் அனைவரும் உங்கள் ஊருக்கே புறப்பட்டுச் செல்லுங்கள். பஞ்சமெல்லாம் தீர்ந்துவிடும்'' என்று பகவதி அசரீரியாய்ச் சொல்ல, மக்களும் அவ்வாறே புறப்பட்டார்கள்.

தங்கள் ஊர் நோக்கிக் குழந்தை, குட்டிகளுடன் மக்கள் செல்ல, அவர்கள் பின்னால், `ஜல், ஜல்' என தண்டைச் சத்தம் எழுந்தது. மக்கள் பயந்து போக, தேவி பேசினாள். ``திரும்பிப் பார்க்காதீர்கள். உங்களைப் பின்தொடர்ந்து வருவது நான்தான். எந்த இடத்தில் நான் அணிந்திருக்கும் தண்டைச் சத்தம் கேட்கவில்லையோ, அங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள்'' என பகர்ந்தாள்.

நெல்லையும் குமரி மாவட்டமும் கூடும் பணகுடி என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஓர் இடத்தில், தண்டைச் சத்தம் நின்றது. மக்கள் திரும்பிப் பார்க்க, தேவி, சிலையாக மாறியிருந்தாள். அவள் கைகளில் ஒரு குழந்தையும் காணப்பட்டது.

``இங்கே வந்து என்னை வணங்குபவர்களின் குழந்தைகளையெல்லாம் நான் என் குழந்தைபோல் கவனித்துக்கொள்வேன்'' என்று நல்வாக்கும் கூறினாள்.

உடனே மக்கள் அங்கேயே சிறு ஆலயம் கட்டினார்கள். தண்டைச் சத்தம் நின்ற இடமாதலால், இந்த இடத்திற்கு `தண்டையார்குளம்' என்ற பெயர் எழுந்தது.

இந்தப் பகுதியில், குழந்தையுடன் உள்ள தெய்வம் `இசக்கியம்மன்' (இயக்குபவள்) என்ற பெயரில் பொதுவாக வணங்கப்படுவதால், பகவதிக்கும் அதே பெயரைச் சூட்டி வழிபடத் துவங்கினார்கள்.

பின்னாளில் பிரசன்னம் பார்த்தபோதுதான் அவள் தேவி பகவதி என்றும், கேரளாவில் முன்னாளில் வழிபடப்பட்டதால் அதேபோல் கேரள பாணியில் அமைந்த கோயிலிலேயே தான் அருள்பாலிக்க விரும்புவதாகவும் இனிமேல் தன்னை பகவதியாக வழிபடுபவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் எல்லா வளங்களையும் அள்ளித் தருவதாகவும் அருள்வாக்கு புரிந்தாள்.

தேவி பகவதியின் விருப்பப்படியே கேரள பாணியிலேயே இந்தக் கோயில் எழுப்பப்பட்டது.

பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட எழிலான கருவறையில், புன்முறுவலுடன் வீற்றிருக்கிறாள் பகவதி அம்மன். தேவி எழுந்தருளியிருக்கும் பீடம். கொல்லூர் மூகாம்பிகை பீடத்தைப்போல அழகுடன் காணப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போல தகதகக்கிறாள் தேவி.

தேவியைக் கண்ணாரக் கண்டாலே உடல் சிலிர்த்துப் போகிறது. பல நூறு மைல்கள் தள்ளியிருந்த தேவி, இங்கே நமக்காக, நம் சந்ததியினரின் நலனுக்காக நம்மையே தேடி வந்திருக்கிறாள் என்பதை நினைக்கும்போது, நெஞ்சம் நெகிழ்கிறது. கண்கள் பனிக்கின்றன.

தண்டையார்குளம் பகவதியிடம் எதுவும் வேண்டக்கூட வேண்டாம், சும்மா அவள் முகத்தை ஒரு தரம் பார்த்தாலே எல்லா நல்லதையும் அவள் உடனே பண்ணிவிடுவாள் என்கிற உணர்வு ஏற்படுவதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

``தண்டையார்குளம் பகவதி, மிகமிக சக்தி கொண்ட தெய்வம். குழந்தைகள் நலன் மட்டுமல்லாமல், தன்னை வணங்குபவர்களுக்கு, வெற்றியையும், மனநிம்மதியையும் தருபவள். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனோ அல்லது அவரது தந்தையாரோ இங்கே தினசரி வந்து தேவியை தரிசனம் செய்து விடுவார்கள். மேலும் பல வி.ஐ.பி.களும் வந்து தேவி பகவதியை வழிபடுகிறார்கள்'' சொல்லிக்கொண்டே போகிறார் ஆலய அர்ச்சகர் ராகேஷ் ஷிவரூராயர்.

நாகராஜா, நாகராணி, சுடலைமாடன் ஆகியோரும் இங்கே தரிசனம் தருகிறார்கள். நாகப்பிரதிஷ்டை செய்தபிறகு இந்தப் பகுதியில் பாம்புத் தொல்லையே இல்லை என்கிறார் ஒரு பக்தை.

கார்த்திகைத் திருநாளில் கோயில் பிராகாரம் முழுக்க, எண்ணெய் தீபமேற்றி ஒளி வெள்ளத்தில் நடக்கும் வழிபாடு அற்புதமானது.

உங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டுமா?

ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமா?

சகலகலா வல்லவர்களாக மாறவேண்டுமா?

பாசத்துடனும், பண்புடனும் இருக்கவேண்டுமா?

தீர்க்க ஆயுளுடன் வாழ வேண்டுமா?

தண்டையார்குளம் பகவதியை பௌர்ணமியிலோ அமாவாசையிலோ அல்லது ஒரு விடுமுறை நாளிலோ சென்று நீங்கள் வழிபடுவதுதான் ஒரே வழி. உங்கள் குழந்தைகளையும் கூட அழைத்துச் செல்ல மறக்காதீர்கள். தேவி பகவதி கருணையுடன் உங்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

``தண்டையார்குளம் பகவதி கோயில் எங்கே இருக்கிறது?''
``திருநெல்வேலி - நாகர்கோவில் பாதையில் நெல்லை யிலிருந்து55கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள பணகுடியிலிருந்து 3 கி.மீ.''
``கோயில் நேரம்?''
``காலை 5.30 - 10.30, மாலை 4.30 - 8.30 பௌர்ணமி, அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் தரிசனம். அமாவாசை காலை 9 மணிக்கு விசேஷ யாகம்.
``தங்க, சாப்பிட?''
``பௌர்ணமி, தை, ஆடி, அமாவாசைகளில் கோயிலிலேயே அன்னதானம் உண்டு. பத்து கி.மீ. தொலைவில் உள்ள வள்ளியூரில் தங்குமிடங்கள், ஓட்டல்கள் உள்ளன.''
``தொடர்புக்குத் தொலைபேசி?''
``04637 245490''

0 comments: