Saturday, July 19, 2008

குறுங்காலீஸ்வரர் ஆலயம்




ஒரு வி.வி.ஐ.பி.யின் குடும்பமே காணாமல் போனது. கர்ப்பவதியான அதுவும் இரட்டை கர்ப்பம் தாங்கிய மனைவியையே அவர் பிரிய வேண்டியிருந்தது. பிறந்த குழந்தைகளின் முகத்தைக் கூட அந்தத் தந்தை பார்க்க முடியவில்லை. மனைவி, மக்களைத் தேடி அந்த வி.வி.ஐ.பி. தேடாத இடமில்லை. கலங்காத நேரமில்லை.

கடைசியில் அவரது பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்த இடம்தான் இந்தக் கோயம்பேடு!

அந்த வெரி வெரி இம்பார்ட்டெண்ட் பர்ஸன் ... அல்ல, பரமாத்மா, ராமபிரான்!

``கோயம்பேடு என்ற ஊரும் இல்லை.
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை.
வடக்குப் பார்த்த சுவாமியும் இல்லை.
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை''

என்பது பழமொழி. ஏதோ ஆத்திகத்திற்கு ஆப்போஸிட் வாக்கியம் போல் தோன்றுகிறதா? அதெல்லாம் இல்லை. கோயம்பேடு என்ற பெயரில் ஊரும் குறுங்காலீஸ்வரர் என்ற பெயரில் வடக்கு நோக்கியபடி பார்க்கும் மடக்கு போன்ற லிங்கமும் வேறு எங்குமே கிடையாது என்பது அதற்கு அர்த்தம்.

கோயம்பேடு என்றாலே பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் ஆகிய இரண்டும்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான, பழமையும் மகிமையும் மிக்க இரண்டு ஆலயங்கள் இங்கே இருப்பது பலருக்குத் தெரியாது.

அவற்றுள் ஒன்றுதான் நாம் இந்த வாரம் பார்க்கும் அருள்மிகு குறுங்காலீஸ்வரர் கோயில். 226 அடி நீளமும் 137அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான இந்த ஆலயத்தில் இதன் சிறப்புகளைப் பறைசாற்றும் 14 தமிழ்க் கல்வெட்டுகளும் உண்டு. மூன்றாம் குலோத்துங்க சோழன், விஜயநகர அரசரான வீர புக்கர் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட இந்தக் கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட பெருமையும் மிக்கது.

ஏதோ ஒரு காரணத்தால் சித்தம் கலங்கிய நிலையில் இருந்த நந்தி பகவான், சித்தம் தெளிந்த திருத்தலமும் இதுதான். அதனால் நந்தி மூக்கணாங்கயிறுடன் இந்த ஆலயத்தில் திகழ்கிறார். அதுமட்டுமல்ல, பிரதோஷ விழா முதன்முதலில் அரங்கேறிய திருத்தலமும் இதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சுவாமி, ஆவுடையாருக்கு மேலாக 4 அங்குல உயரத்தில் அகல் விளக்கினைக் கவிழ்த்து வைத்தது போல் சாய்வான நிலையில் வடக்குத் திசை நோக்கி அமைந்துள்ள பாண லிங்க தரிசனத்தை வேறெங்குமே நீங்கள் காணமுடியாது. அதன் காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக, ராமனுக்கும், இந்தக் கோயிலுக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொண்டு விடலாமா?

திருவான்மியூர்

உலகத்திலுள்ளோர் பழிச் சொல்லுக்குப் பயந்து தன் ஆசை மனைவியைத் தம்பி மூலம் கானகத்தில் விட்டுவிட்டு வரச் சொன்ன ராமனின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்தக் காடுதான், தற்போதைய கோயம்பேடு! அந்தப் பகுதியில்தான் வால்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. (வால்மீகி வசித்த ஊருக்கு திருவால்மீகியூர் என்று பெயர். திருவான்மியூர்!)

ஜனகனின் மகள் அடைக்கலம் புகுந்த இடம்தான் வால்மீகி முனிவரின் ஆசிரமம்.

ஆசிரமத்தில்தான் சீதாதேவி இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமானாள். லவன், குசன்! இவர்கள் இங்கே இருப்பது ராமருக்குத் தெரியாது.

கோயம்பேடு

அஸ்வமேத யாகம் செய்வதற்காக ராமரின் குதிரை திக் விஜயம் புறப்பட்டது.

அந்த ராஜகுதிரை, வால்மீகி முனிவர் வசித்த இந்தப் பகுதிக்கும் வந்தது.

சிறுவர்களான லவனும், குசனும் குதிரையைக் கண்டார்கள். அத்துமீறி ஆசிரமப் பகுதியில் நுழைந்து விட்டதே என்று கட்டிப் போட்டு விட்டார்கள்!

(கோ என்றால் அரசன். அயம் என்றால் குதிரை. பேடு என்றால் கட்டுதல். ராஜாராமனின் குதிரையைக் கட்டிப் போட்ட இடமாதலால் கோயம்பேடு என்ற பெயர் உருவாயிற்று.)

லட்சுமணன் வெகுண்டான். ஏனென்றால் யாகக் குதிரையை கட்டிப் போடக் கூடாது. அப்படிக் கட்டினால் யுத்தத்திற்கு அழைப்பதாக அர்த்தம்.
அப்புறம் என்ன?

சிறுவர்களுடன் லட்சுமணன் போர்.

முடிவு? தோற்றான் ராமனின் தம்பி.

விஷயம் கேள்விப்பட்டு, ராமர் விரைந்து வந்தார்.

அமைந்தகரை

ஓரிடத்தில் அமர்ந்து ஆசிரமத்தை நோட்டமிட்டார் ராமர். அவர் அமர்ந்த பகுதிதான் இன்றைய அமைந்தகரை!

போர்! போர்!

தகப்பனுக்கும் மகன்களுக்கும் சண்டை!

சப்தத்தால் தவம் கலைந்து எழுந்த வால்மீகி, நிலைமையை உணர்ந்தார். ஓடோடி வந்து ராமனிடம், ``ஐயனே, போரை நிறுத்துங்கள்! இவர்கள் உன் பிள்ளைகள்'' என்று உண்மையை உரைத்தார்.

குறுங்காலீஸ்வரர்

அப்புறம் என்ன? பிரிந்த குடும்பம் ஒன்றிணைந்தது. சீதை அகமகிழ்ந்தாள். அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லவும், என்ன இருந்தாலும் லவனும், குசனும் தந்தையை எதிர்த்துப் போரிட்டது பாவம் அல்லவா? அந்தப் பாவத்தைப் போக்கவும் வால்மீகி முனிவரின் ஆலோசனைப்படி சிவபூஜை செய்ய முனைந்தனர் லவனும் குசனும்.

அவர்கள் சிறுவர்களாயிற்றே...! அதனால் சிவபெருமானும் அவர்கள் பூஜிக்க வசதியாக தன் உருவத்தைக் குறுக்கிக் கொண்டார். அதனால் குறுங்காலீஸ்வரர் ஆனார்.

பூஜிப்பவர்கள் யார்? ராமனின் பிள்ளைகளாயிற்றே! அதனால், திசை கூடப் பார்க்காமல் அவசர அவசரமாக சிவன் வடக்குத் திசையில் அமர்ந்து அவர்களுக்கு அருள் பாலித்தார். குசனும், லவனும் பூஜித்ததால் குசலவபுரீஸ்வரர் என்ற பெயரையும் பெற்றார்.

ஆரம்பத்தில் சிறு கோயிலாக இருந்த இதனை கி.பி. 985 முதல் 1014 வரை ஆண்ட ஜெயங்கொண்ட சோழன் பெரும் கற்கோயிலாக மாற்றியமைத்தான் என்று வரலாறு சொல்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் பாதுகாப்பில் வரும் இந்த ஆலயத்தின் நிர்வாக அதிகாரியாக ஆர்.ஜகந்நாதன் பணியாற்றி வருகிறார்.
கோயிலுக்கு முன்னே அமைந்துள்ள 16 கால்மண்டபத் தூணில் அமைந்த சரபேஸ்வரருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இடது திருவடியை முன்னால் வைத்துக் காட்சி தரும் தர்மசம்வர்த்தினி என்னும் அறம் வளர்த்த நாயகி, விஷ்ணு துர்க்கை, ஆதி விநாயகர், அருணகிரிநாதரால் பாடப்பெற்ற முருகப் பெருமான் போன்றோரும் இங்கே அருளாட்சி புரிகிறார்கள்.

கோயம்பேடு பஸ் நிலையம் தினமும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்த்தும், பிரித்தும் வைக்கின்றது. அந்தக் கோயம்பேட்டிலேயே ராமபிரானின் குடும்பத்தைச் சேர்த்து வைத்த ஓர் ஆலயமும் அமைந்திருப்பது எத்தனை பொருத்தம்!

பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டுமா?

உடனே கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம் சென்று வணங்குங்கள்.

கவனம். உங்களைப் பிரிந்தவர்கள் உங்களைத் தேடி வந்திருக்கவும் கூடும்!.

"குறுங்காலீஸ்வரர் ஆலயம் எங்கே இருக்கிறது?"

"கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து
பத்து நிமிட நடை"

"கோயில் திறந்திருக்கும் நேரம்"

"7-12, 4-9"

"பஸ் வசதி?"

"என்ன கிண்டலா?"

"உணவு வசதி?"

"பக்கத்திலேயே சங்கீதா, ரோகிணி ஓட்டல்கள் இருக்கின்றன"

"ஆலயத் தொலைபேசி எண்?"

"04424796237"

0 comments: