Friday, July 11, 2008

அம்மை நோய் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி?

சின்னம்மை வருவதற்கு மூன்று, நான்கு நாட்கள் முன்பே காய்ச்சல், ஜலதோஷம், இருமல், உடல்வலி, தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஆரம்பிக்கும்.

பிறகு தோலில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படும். பிறகு முகம், கழுத்து, முதுகு, மார்பு என்று உடல் முழுவதும் கொப்புளங்கள் வரும்.

சின்னம்மைக்கு என்றே தனியாக மாத்திரைகள், சிரப், ஆயின்மென்ட்டுகள் இருக்கின்றன. டாக்டரிடம் முதலிலேயே காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால் நோயின் வீரியத்திலிருந்தும், பக்க விளைவுகளிலிருந்தும் தப்பலாம்.

ட்ரீட்மென்ட் சரியாக எடுத்துக் கொள்ளாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சின்னம்மை ஒரு முறை ஏற்பட்டால், அது ஆயுளுக்கும் திரும்ப வராது.
மணல்வாரி அம்மை வந்தாலும் சளி, இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் இருக்கும். தாடையின் உள்பகுதிகளில் சிவப்பு கலந்த வெண் புள்ளிகள் தோன்றுவதுதான் இந்த நோயின் அறிகுறி.

இந்த அம்மைக்கும் சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளாவிட்டால் வயிற்றுப்போக்கு, காதில் சீழ் வடிவது, நிமோனியா போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

காதின் கீழ்ப்புறம், தாடையின் கீழ்ப்புறம் காணப்படும் உமிழ்நீர் சுரப்பிகளைத் தாக்கக்கூடியது, `பொன்னுக்கு வீங்கி' அம்மை. தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், வாயைத் திறக்கும்போது வலி, காதின் கீழ் வலியுடன் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். மருந்து மாத்திரைகள் மூலமே வலியையும், வீக்கத்தையும் குறைக்கலாம்.

அம்மையின்போது என்ன சாப்பிடலாம்?

உணவில் காரம், புளிப்பைத் தவிர்ப்பது நல்லது. பழரசம், கஞ்சி, மோர், பழங்கள், இளநீர், குளுக்கோஸ் போன்றவை உடம்புக்கு மிகவும் நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நபர் சுத்தமும், சுற்றுப்புற சுத்தமும், சரியான நேரத்தில் டாக்டரின் ஆலோசனையும் உங்களை இந்த நோயிலிருந்து காப்பாற்றும்.

0 comments: