முத்தாளம்மன் பொட்டல் புழுதிக்காடாய் பொறி கிளம்பிக் கொண்டிருந்தது! புகை புகையாய் எழும்புவது போல புழுதி கொப்புளித்துக் கொண்டிருந்தது! ஒரே கூச்சல். கும்மாளம்! ஒரு பக்கம் `ஒத்தையா ரெட்டையா?' விளையாட்டு. சற்று மேற்கே, கள்ளன்போலீஸ். ஒரு கூட்டம் `கல்லா மண்ணா?' என்று இங்குமங்குமாய் ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தன. சில நோஞ்சான்கள் முத்தாளம்மன் கோவில் படியில் `கண்ணாமூச்சு ரே.. ரே.. காதடச்சா ரே.. ரே..' என்று ராகமிழுத்துக் கொண்டிருந்தன. சட்டென்று பொழுது மடிந்துவிட்டது! முழுசாக இல்லை. செங்கமங்கலாக இருந்தது. இன்னும் சற்று நேரம்தான். கால் மணியோ... அரை மணியோ தெரு விளக்கு தொப தொப வென்று ஒரு முறை கொப்புளித்து விட்டு வெளிச்சத்தை உமிழ்ந்துவிடும்!
தெரு முழுக்க நீச்சத் தண்ணி மாதிரி, வெளிச்சம் தேங்கிக் கிடக்கும். அப்போதும் சிறுசுகள் ஓட்டமும் நடையுமாகவே இருக்கும். வயசாளிகளின் நடமாட்டம் தான் சற்று தொந்தரவாக இருக்கும். `கண்ணு மண்ணுத் தெரியாம இப்படி ஓடி வர்றீகளே! பக்கிகளா? என்று பெருசுகள் முனங்கும். எங்கே சிறுசுகள் விழுந்துவிடப் போகிறதோ என்ற கவலை இல்லை இது! எங்கே தன் மீது மோதிவிடப் போகிறதோ என்ற பயம்! இது போதாது என்று `எடுப்புச் சோறு' எடுக்கச் சட்டியுடன் வரும் வண்ணாத்திகள் வேறு; ராப்பிச்சைகள், அவர்களைத் துரத்தும் தெரு நாய்கள்! வேடிக்கைக்கு ஒன்றும் குறைவிருக்காது!
நொண்டிச் செட்டியார் வேடிக்கை பார்க்க உட்கார்ந்துவிட்டார். அவருக்குப் பேர்தான் அப்படி, கால் நொண்டியோ, கை நொண்டியோ இல்லை. இன்றைக்கும் அவர் நடைக்கு ஈடுகொடுக்க முடியாது. தாட்டியமான ஆள்! அவர் சம்சாரம் தவறியதிலிருந்து தான் அவர் மனம் நொண்டிவிட்டது. அவர் மனதைப் படித்து விட்டு ஒன்றும் அப்படி ஓர் பெயரை அவருக்கு வைக்கவில்லை. அதையெல்லாம் படிக்கக்கூடிய ஆத்மாக்கள் அந்த ஊரில் உண்டா என்ன! எப்பவோ `அறுப்புச்' சமயம் அவர் காலில் கூவாமுள் ஒன்று ஏறிவிட்டது. கள்ளிப்பாலை எடுத்துக் காலில் அடித்து விட்டு, நொண்டிக் கொண்டிருந்தார். அவ்வளவுதான்! அப்போது தைத்ததுதான் அந்தப் பெயர். முள்ளை அடுத்த நாளே புடுங்கி எறிந்து விட்டார். அந்தப் பட்டப் பெயரைத்தான் இன்னும் அவரால் புடுங்கி எறிய முடியவில்லை. சனியன் அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போவுதுனு அவரும் விட்டு விட்டார்!
பொழுது சாய்ந்தால் தான் அவர் மனசுக்குத் தோதாக இருக்கும். தகிக்கும் பகல் பொழுதில் இருந்து விடுதலை! மனசுக்கு எதையாவது வேடிக்கை காட்டிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் சுணங்கிவிடும். இப்படி எதையாவது தேக்கிக் கொண்டிருந்தால்தான் தெளிவாக இருக்கிறது. வேறு என்ன செய்வது?
காலையில் கோழி கூப்பிடும்போது, மருமகள்காரி எழுந்து விடுகிறாள். அவள் ஜோலி தொந்தரவை கவனிக்க எந்திரிக்கிறாள் என்றால் அது ஒரு மாதிரி; அவள் அப்படி அல்ல, அவள் செய்கை வேறுமாதிரி உள்ளது. சாணி தெளிக்கிறேன். அடுப்பு மொழுகுகிறேன் என்று ஒரேயடியாகச் சள்ளை பண்ணிவிடுவாள். பாத்திரங்கள் உருளும். நடக்கும் ஓசையும், பேச்சுச் சப்தமும் கூடிவிடும். நிம்மதியாகத் தூங்க முடியாது. ராவெல்லாம் தூக்கமில்லாது, மனசைப் போட்டுக் குடைந்து கொண்டிருந்துவிட்டு விடியக் காலையில்தான் கண் அயரும். அதை எப்படித்தான் இவள் கண்டு கொள்வாளோ!
இதுக்குப் பயந்தே வெள்ளனமாவே எழுந்து, ஓடைப்பக்கம் கிளம்பி விடுவார். வெளிக்குப் போயிட்டு கால் கழுவத் தண்ணி தேடி அலைந்தே காலைப் பொழுது மடிந்துவிடும். ஓடையில் இப்போது தண்ணீர் கிடையாது. ஓடையில் மட்டுமல்ல வாய்க்காலும் காய்ந்து தான் கிடக்கிறது! ஆற்றில்தான் தண்ணீர் ஓடுகிறது. அதுவும் கோவணம் ஒதுங்கினாற் போல் ஒரு கோடியில் ஓடை மாதிரிப் போகிறது. எவனாவது தோட்டத்தில் மோட்டார் ஓட்டினால் தான் உண்டு. இல்லாவிட்டால் சிரமம்தான். அதுக்கும் இவளிடம் பேச்சு வாங்கணும்.
``காலங்காத்தாலே அப்படி எங்கேதான் போகுமோ?''
``....''
``நா ஒருத்தி ஆத்தமாட்டாப்புலெ கத்திகிட்டிருக்கேன். எனக்கென்னடான்னு ஒக்காந்திருந்தா?''
எதுக்கு அந்த சனியன் கிட்ட வாயைக் கொடுக்கணும்னு இருப்பார்.
``காதெழவும் பழுதாப் போச்சு போல...''
``காதெல்லாம் நல்லாத்தேன் இருக்கு.''
``அப்புறம்?''
``அப்புறமென்னா அப்புறம்?''
``ஓங்கூட மல்லுக் கட்ட எனக்கு உசிரில்ல ஆத்தா.''
``ஆமனக்கு. அதானாக்கும் எனக்கு வேலை?'' வேலை வெட்டியில்லாம ஆட்டிக்கிட்டு இருக்கேன்.''
``நா பாட்டுக்கு சூசுவாண்டு இருக்கிறவன எதுக்குமுளா தொரட்டுப் பண்றவ...''
``இனிமேற் கொண்டு எதுவும் கேக்கலெ. நா எதுக்குக் கேக்கணும்? பாவம் வயசாளியாச் சேன்று பார்த்தேன். வெள்ளனமா போன மனுசன் ஆளைக் காணோமே, எங்குட்டும் விழுந்து கெடக்கோனு கேட்டேன். அதுவும் கேக்கப்படாதுன்னா? கேக்கலெ! காலையிலெ மந்தைக்கு மாட்ட வேற ஓட்டிட்டுப் போறான். எல்லாம் திமுதிமுன்று தெருவ அடச்சுப் போவுதுக. ஒதுங்க முடியுதா, வெலக முடியுதா? இல்ல அவந்தேன் வயசாளி போறாப்புலென்னு, ஒதுக்குவானா? எதுக்கு அம்புட்டுத் தூரம் போவணும்? பேசாம பொறவாக்குலெ கொள்ளைப் பக்கம் ஒக்காந்து எந்திரிக்கப்படாதா? கை காலு விழுந்து போச்சு! அப்புறம் எதுக்கு அம்புட்டுத் தூரம் போவணும்? நல்லது சொன்னாலும் பொல்லாப்பு. எதுவும் பேசப்படாதுன்னு தேன் இறுக்கிகிட்டு கெடக்குது. அப்புறமும் இந்த மனசு கேப்பனாங்குது. இப்படி என்னத்தயாவது சொல்லிபிட்டு, அப்புறம் பொல்லாப்பாகிப் போயிடுது.''
அதன் பின்பு அவருக்குத் திண்ணை தான்! நிம்மதியாகாவா ஒக்கார முடியும்? நிம்மதியாக வேண்டாம்; சிரமமில்லாமலாவது உட்கார்ந்தால் போதும். அதுக்கெல்லாம் நமக்குக் கொடுப்பினை ஏது என்று நினைத்துக் கொண்டார். எல்லாம் அவளோடு சரி; அவள் காலத்துக்குப் பிற்பாடு நாய்பட்டபாடுதான். திண்ணையை ஒட்டித்தான் அடுப்பு! ஈரமான பருத்திமாரையோ `சுள்ளி' விறகையோதான் போட்டு எரிப்பாள்! அந்தப் புகையின் நடுவுலெ மூச்சுத் திணறிக் கொண்டு உக்கார வேண்டியது. போதாது என்று திண்ணையோரம் கோழிக்குத் தீவனத்தை விசிறி எறிஞ்சுட்டுப் போய்டுவாள். அதுக `க்வக்' `க்வக்' கென்று கொத்திக் கொண்டும், இறகுகளை படீர் படீரென்று உடலில் உதறி அடித்துக் கொண்டும் அலைபடும். அதுகளை விரட்டிக் கொண்டும் வேர்த்து ஊத்தும் உடலுக்கு விசிறிக் கொண்டும் பொழுது மடியும்!
அதுகளுக்கு ஜோலி தொந்தரவு! அதுக்குச் செட்டியார் என்ன செய்ய முடியும்? ``வீட்டுப் பொம்பளைய'' விட்டா எதுக உசுராப் பேசப் போவுதுக. எல்லாம் `மெப்பனை'தான்! `ஏலெ நமக்கு வாச்சது அம்புட்டுத்தேன் டா'னு போக வேண்டியதுதான். ஊர் உலகத்துலெ எல்லாமா இப்படி இருக்குக! `வீட்டு ஆம்பிளை' கொஞ்சம் வெடிப்பில்லாத `பய'. அவே. கொஞ்சம் தாட்டியமா இருந்துட்டானா போதும். அது கழுத `ஏ இதெல்லாம் சீரகம் மணக்குதுண்டு திரிதே. அத என்ன செய்யமுடியும்? போறான் போன்டு' துண்டை உதறித் தோள்லெ போட்டுட்டுப் போவ வேண்டியதுதேன். அந்தத் தனிமையை, தாகத்தை இப்படி வந்து ஒக்காந்து போக்கிக் கொள்ள வேண்டியதுதான்.
எப்பவாவது வீதியோரம் கிடக்கும் உரலில் குத்தியெடுத்துப்போக சோளம், கம்பு, சாமை, வரகு என்று எதையாவது தூக்கிக்கொண்டு உலக்கையுடன் எவளாவது வருவாள்! அவளோடு எதையாவது பேசி, ஏசி பொழுதைப் பொன்னாக்கிக் கொள்ள வேண்டியதுதான்.
`என்ன ஒக்காந்துட்டீக?'
``ஒக்காராம என்ன செய்யச் சொல்றீயாம்?''
`சாப்பிட்டாச்சா?'
``ம்''
`கொடுத்துவெச்ச மனுசன்'.
``ஆமா! கொடுத்து வெச்சுப்புட்டு, வாங்க மாட்டாப்பிலெ இருக்கன். போடி இவளே!''
`என்ன சாப்பாடாம்?'
``தெரிஞ்சு என்ன செய்யப் போறவ?''
`சும்மா, சொல்லுங்க. ஒங்க வூட்டுக்குச் சாப்பிட வந்திட மாட்டேன்.'
``வாயேன்.''
`ஏன் வந்தா எங்கக்கா சோறு போடாதாக்கும்!'
``போடுவா.. போடுவா!''
`ஏன் ஒரு வடியாச் சொல்றீக. போடாதா?'
``போடுவாங்குறேன்லெ''
`நீங்களே சாப்பிட்டாப்புலெ தெரியலெ!'
``இந்த தொறட்டு தான வேணாங்குறது!''
`பேச்சு தேன் தாட்டியமா இருக்கு!'
``கிட்டக்க வா, நா தாட்டியமா இல்லையாண்டு பாப்போம்...''
`இந்தா, மூஞ்சியப்பாரு...' என்று முகத்தைச் சுளித்துக் கொள்வாள். அதுவும் ஒரு பாவனைதான்.
``பின்னப் பேசுறவ?'
அதோடு பேச்சு நின்றுவிடும்! இதுவும்கூட மருமகள் காரிக்குத் தெரியாமல்தான். கண்டும் காணாமல் தான். அவள் காதில் விழுந்துவிட்டால், ஆடிவிடுவாள். `கண்டவ கூட எல்லாம் என்ன `வளமை' வேண்டிக் கெடக்காம்? `வயசான காலத்துல வாய வெச்சுகிட்டு சும்மா இருக்கப்படாது..' இந்தப்பாட்டு இரவு வரை நீளும். இதற்குப் பயந்துகிட்டுத்தான் அவர் அவளைக் கண்டால் வாயை மூடிக்கொள்வார்.
நொண்டிச் செட்டியாரின் மனத் தவிப்பு சாயங்காலம் ஆனதும் தணிந்துவிடும். அப்பொழுது முத்தாளம்மன் பொட்டலுக்கு வந்துவிடுவார். அங்கு வேடிக்கைக்கு ஒன்றும் குறைவிருக்காது. அவரையொத்த விவசாயிகளும் வயசாளிகளும் கூட அங்குதான் வந்துவிடுவார்கள். குட்டிச் சுவர் மீதோ, வண்டி மேக்கால் மீதோ உட்கார்ந்து கொள்வார்கள். நொண்டிச் செட்டியாருக்குத் தோதான இடம் உண்டு. அங்கு வந்து உட்கார்ந்து கொள்வார். அதுதான் அவருக்குப் புகலிடம்! அங்கு வந்து உட்கார்ந்து கொண்டால் ஊரே தெரியும். ஊரே தெரியும் என்றால் கண்ணால் அல்ல; வாய்வார்த்தையாக; அந்த ஆறுதலுக்காகவே அவர் அங்கு வருவார்.
`ஏலெ செவலெ, ஒங்காத்தாவுக்கு மேலுக்கு சேட்டமுல்லையாடா?'
`ம்கும்'
`என்னவாமுடா?'
`குதுகுதுண்டு வருதுனு, நொடக்கிடுச்சு..'
`எப்பருந்துடா?'
`ராவுலெ இருந்து'
`கஞ்சிக்கு?'
`நேத்து மிச்சமிருந்துச்சு'
`ஒங்கய்யாவ எங்கடா?'
`தெரியலெ!'
`தெரியலெயா? எங்கடா போயிருக்கான்?'
`தெரியலெ'
ரெண்டு நாளா ஆளக் காணாமுண்டுலெடா சொல்றாக...'
அவன் விழித்தான்.
போடா கோட்டிப் பயலெ. இது தெரியலெங்குறவன்..'
`எனக்கென்ன தெரியும்...'
`பார்றா!'
செவலைக்கு மனம் விளையாட்டில்! சைக்கிள் டயரை உருட்டி விளையாடுவதில் மும்முரமாகி விட்டான். இடுப்பு டவுசர் கழண்டு கொண்டே வந்தது. ஒருகையில் அதைக் கூட்டிப்பிடித்துக் கொண்டு ஓடுவதில் உசுராக இருந்தான். நொண்டிச் செட்டியார், அவன் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஊர் உலகத்தில் இல்லாதது இல்லை. உள்ளதுதான்! அது உள்ளக்கிடங்கிலே கிடந்தால் ஒருவருக்கும் உபத்திரமில்லை. அது உறுமி மேளமாகிவிடக் கூடாதே என்ற பயம். அதுவும் அந்த வயசுப் பயம். அந்த நிமிசம் அது அற்புதம்! எல்லா விபரங்களுடன் மனம் வெம்பி வெதும்பி, விருப்பங் கொண்டு பார்த்தது. இப்போது காலம் தந்த கசப்பில், அது மென்று துப்பிய சக்கையாகக் கிடைக்கையில், மந்த கதிதான். அதெல்லாம் அநாவசியம் என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனாலும் அந்த ஞாபகத்தை அதக்கிக் கொண்டேகிடப்பது, ஒரு மாதிரி சுரணையாகத்தான் இருக்கிறது!
நொண்டிச் செட்டியார் யோசித்துப் பார்த்தார். எதுவும் சம்பந்தமில்லாதது போலவும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போலவும், ஆனால் ஒரு சரடு தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அவளை அந்தக் கோமதியைத் தான் நொண்டிச் செட்டியாருக்கு கேட்டது. அப்போது கோமதி ரொம்ப அழகாக இருப்பாள். வட்ட முகமும் வகிடு எடுத்துச் சீவிப் பின்னிய தலையும், எப்போதும் துவைத்து உடுத்துவாள். அந்த ஊரில் அப்போது பொழுது விடிய சேலை மாற்றிச் சிங்காரித்துக் கொள்கிற பெண் அவள்தான்.
நொண்டிச் செட்டியாருக்கும் நோக்கம்தான்! தனக்குக் கிடைக்க மாட்டாளா என்று ஏக்கம்தான்! கோமதி வீட்டிலும் ஏறி வந்தார்கள். செட்டியாரின் ஐயா தான் முகத்தை முறுக்கிக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் இருக்கே. பொழுதன்னைக்கும் கண்ணாடியப் பாத்துக்கிட்டு திரியுறவ குடும்பத்துக்கு ஆவமாட்டா?' `எனக்கு ஆவலாக இருக்கே' வார்த்தை திரண்டது. உயிர் பெறவில்லை. அது உயிர் பெற்றிருந்தால் அப்புறம் அவர் உசுரோடு நடமாட முடியாது. கொலை வெறிதான். அவர் சுபாவம் அப்படி. அதட்டலும் உருட்டலுமாகத்தான் இருந்தார். ஆனால் ஆத்தா மட்டும் ஐயாவிடம் இஷ்டமாகவே இருந்தாள். அவர் எத்தனை அடித்தாலும் மிதித்தாலும் அவர் மீது அவள் பிரியம் குறையவில்லை. வாழ்வு தரும் மாய விநோதங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொண்டார்!
கோமதியைப் பார்த்த நாளில் இருந்து, அதுவும் அவளை இவருக்குப் பேசியதில் இருந்து அவள் மீது மோகம் கூடிற்று. அவளை அடைய வேண்டும் என்ற ஆவல் விஷக் காய்ச்சல் போல் உடம்பில் ஏறிவிட்டது. இரண்டு மூன்று மாசங்கள் இதே காய்ச்சலாகவே திரிந்தார். அவள் தீவிரத்தையும் உடல் சுணக்கத்தையும் பார்த்து ஆத்தாவே ஐயாவிடம் பேசினாள் மனம் கோணாத ஒரு தருணத்தில், அந்தப் பேச்சை அவிழ்த்தாள். அவரும் அதற்கு அசைந்து கொடுப்பது போலத்தான் அப்போது நடந்து கொண்டார்.
ஆள் அனுப்பி கோமதியின் பிறந்த ஜாதகக் குறிப்பையும், ருது ஜாதகக் குறிப்பையும் வாங்கிவரச் சொன்னார். அப்பார்பட்டி ஜோசியரிடம் எடுத்துப் போனவர், திரும்பி வரும்போது இருண்ட முகமாகவே வந்தார்.
`` `கயிறுப் பொருத்தம் இல்லை' என்று கையை விரித்துக் காட்டி விட்டார். கட்டிய தாலி கறுப்பதற்குள் காலன் வந்து அவளை கூப்பிட்டுப் போய்விடுவான்'' என்று பெரும் கல்லைத் தூக்கிப் படீரென்று போட்டார்! அதோடு அந்தப் பேச்சு அடைபட்டது!
அதெல்லாம் ஐயாவின் சாதுரியம் என்று பின்னாளில் தெரியவந்தது. இப்போது தெரிந்து என்ன ஆவப்போகிறது. மனசில் கூடிய ஆசையை மட்டும் ஒருவராலும் கசக்கித்தூர எறிய முடியவில்லை. பிற்பாடு செட்டியாருக்குக் கல்யாணம் ஆனது. குடும்பம் குட்டி என்று சக்கரம் சுழன்றது. வயசாகி வீட்டுக்கார அம்மா போய்ச் சேர்ந்து விட்டாள். இப்போது இவர்தான் இருக்கிறார். இருக்கிறார் என்றால் ஒரு மாதிரிதான். அந்த வயோதிக உபாதைகளையும் உபத்திரங்களையும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இரவில் ஊர்க் கிணற்றில் தண்ணீர் எடுத்துவிட்டுத் திரும்புவார்கள் பெண்கள் - வயசுப் பெண்கள், இப்போது மாதிரி அப்போது நடமாட முடியாது. இபோது மட்டும் என்ன வாழுதாம் என்பவர்களுக்குப் பதில் சொல்லமுடியாது. அந்த நாளில் அப்படி ஒரு வழக்கம். இது மாதிரி செங்க மங்கலானதும் தான் குடங்களையோ, சர்வச் சட்டிகளையோ தூக்கிக் கொண்டு, குமரிகள் விடுதலை பெறுவார்கள். நடுவயதுப் பெண்கள் `கடகாவை' கொண்டு போய் கிணற்று மேட்டில் வைத்துக்கொண்டு வளமை பேசிக்கொண்டு நிற்பார்கள். இந்தக் குமரிகள் தெருவில் நிலம் அதிர `தங்கு' `தங்கு' கென்று நடந்து போவார்கள். அவர்களின் நடை ஓசையும் உடல் வாசமும் கிறக்கம் கொள்ளச் செய்யும்! எதிர்படும் இளந்தாரிகளைக் கண்டதும் அவர்களின் குழைவு, பேச வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாய்திறந்து சொல்ல வேண்டும் என்ற அவசியமுமில்லை. மிகச் சுருங்கிய அந்த நேரத்தில் அதுவும் அந்தக் குறுக்குப்பாதையில்... பலவீனங்கள் கொண்டவனுக்கு ராத்தூக்கம் கெட்டுவிடும்! நொண்டிச் செட்டியாருக்கும் கெட்டிருக்கிறது!
அதே, இருள்தான் இப்போதும்! ஒவ்வொருவராய்க் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தத் தாகம் வேறு, முன்னைவிட இப்போது தொந்தரவாகத் தெரிகிறது. கண்களில் ஒளி இழந்து, எல்லா முகங்களும் மங்கிக்கொண்டு போவது மட்டும் தெரிந்தது. தெரு விளக்கு வெளிச்சம் காணாது. தடவித் தடவி, இல்லை தடுமாறி வீடு போய்ச் சேர வேண்டும். அவர் மனக் கவலைகளும் தத்தளிப்புகளும் கூடும் நேரம் இது. வீட்டுத் திண்ணையில் போய் விழ வேண்டியதுதான். உலையில் கொட்டினாற்போல் கொதிப்பேறிக் கிடக்க வேண்டியதுதான்! அந்த வலி அவர் மீது கவிழத் தொடங்கியது!
வாய் திறந்தால் சற்று மட்டுப்படும். ஆனாலும் வெட்கம். அந்தத் துக்கத்தை வெளியே சொன்னால் ஆவப்போது என்ன? அசிங்கம்தான் மிஞ்சும். மானம் போய்விடும். மகன் காதுக்கு எட்டினால்? அவ்வளவுதான். கெட்ட வார்த்தையில் நாறடித்து விடுவான்.. அவனே அப்படி என்றால் அவளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
அவன் கையாலாகாத்தனத்தால்தான், அவன் பொண்டாட்டி கெட்டிக்காரியாகத் தெரிகிறாள். அவளை நினைத்தாலே மனம் துன்பத்தில் விழுந்தாற்போல் ஆகிவிடுகிறது. நோயைவிட - கொடிய நோயை விட புறக்கணிப்பு அல்லல்பட விட்டுவிடுகிறது. அதுவும் காலம் போன கடைசியில்! பயணம் எப்பவென்று தெரியாமல், எப்போதும் வரலாம் என்ற மன நெருக்கடியில் சாவகசமாக ஒக்கார்ந்து, எழுந்து, நடமாடிக் கொண்டிருக்கவா முடிகிறது?
எப்படி இந்தப் பிராணனைச் சமாதானம் செய்வதாம்? சுந்தரம் பிள்ளை சாகுறவரை பொஸ்தகமும் கையுமாகத்தான் இருந்தார். அவரைப் பாடையில் ஏற்றிய பின்பும், கையில் ஆகாத புத்தகம் ஒன்றை வைத்துக் கட்டித்தான் அனுப்பினார்கள். அப்படி ஏதாவது பொஸ்தகம் படிக்கலாம் என்றால் கண்கள் எழுத்தை நோக்கி ஓடுகிறது. அர்த்தம் மூளையில் ஏறுவதில்லை. நல்ல நாளிலே நாலு எழுத்தைப் படித்திருந்தால் தானே? வடிவமும் அர்த்தமும் பதியாது. படிப்பு இல்லை! எல்லாத் திசைகளிலும் இருந்தும் கஷ்டங்கள் சூழ்வதாகவே தெரிகிறது. எல்லாம் கசந்துவிட்டது. வாய் கசப்போ, பண்டம் கசப்போ மொத்தத்தில் சுவை இல்லை. வெறும் வாயை மென்றுகொண்டு, காறி காறித் துப்பிக் கொண்டு திரிய வேண்டியதுதான். எல்லா கிழங்களும் இதைத்தானே செய்கின்றன!
என்றுமில்லாமல் எதற்கு இப்போது கோமதி நினைப்பு? அவள் இருக்கும் வரை அவள் நினைப்பு எழவில்லை. அவளைப் பார்த்த போதும் ஒன்றாக ஜோடியாக வயக்காட்டுப் பக்கமிருந்து திரும்பும்போதும் அந்த விபரத்தோடு பார்க்கவில்லை. எந்தப் பாதிப்புமில்லாமல்தான் பார்த்தார். பேசினார். இன்னைக்கு அப்படியில்லை. அவ புருசன் அவளோடு சடச்சுக்கிட்டு போயிட்டானாம். அதுவும் ஓடிப் போயிட்டான்னு சொல்றாங்க.
காலம் போன கடைசியில்தான் அவளுக்கு பிள்ளை பொறந்தது. எத்தனையோ வருசம் பிள்ளையில்லாமல் `ஊர்' வாயில் விழுந்து கிடக்கிறாள். ஊர் மென்று தின்று துப்பியது கோமதியை இல்லை, அவ வீட்டுக்காரனை. பாவம் அவன் வயசாளி. இவருக்கும் வயசுதான் என்றாலும் அது முகத்திலோ உடம்பிலோ ஏறவில்லை. கணக்களவில் நின்று கொண்டது, ஊர் பேச இது போதாதா? இப்பவும் அப்படி ஒரு பேச்சுத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது! அவ புருசன் எதுக்கு ஓடிப்போனான்? அது ஒன்றுதான் திரும்பத் திரும்பத் தீர்மானமில்லாதது போலவே தெரிந்தது.
எழுந்து கொண்டார். வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். எத்தனை காலம் இந்தத் தெருவில் நடந்திருப்பார்! இந்த உலகை அறிந்து எத்தனை காலமோ அத்தனை காலம் அவருக்கு இந்தத் தெருவும் தெரியும். எதுக்கு அப்படிச் சொல்ல வேண்டும்? இந்த தெருதான் அவர் உலகம். அது இன்று மங்கிவிட்டது. விதி வந்தால்தான் ஆச்சு! அதுவரை? இப்படி வாசலைக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!
அந்த இருளில் ஒரு சைக்கிள் அவர் முன் வந்து நின்றது. வந்த வேகத்தில் டயர் இழுபட பிரேக் போட்டுநின்றது. ஒரு கணம் தள்ளாடி நிலை கொண்டது. ஒற்றைக் காலின் பெருவிரல் மட்டும் தரையைத் தொட்டுக் கொண்டு, ஒருவாறு ஒருக்களித்துக் கொண்டு நின்றான் அந்த சைக்கிள் ஆசாமி. அது அவர் மகன்தான்! அப்படி அவன் வந்து நின்ற வேகத்தில் கோபம் தெரிந்தது. அதை அவர் அறிவார். ஆனாலும் அறியாதது போல எங்கோ பார்த்தார்.
`என்ன இவ்வளவு நேரம்? எங்க போயிட்டு வாறே?'
`நா, எங்கடா போவப் போறேன்.'
`இப்ப நேரம் என்ன ஆச்சு?'
`போவட்டும் போடா.'
`வௌக்கு வெக்கிறதுக்கு, முன்னாடி வந்திடுனு, எத்தனை வாட்டி சொல்றது?'
`சரி. போ. வர்றேன்லெ.'
`எங்குட்டாவது, விழுந்து தொலைச்சீனா?'
`அப்படிப் போனா போறது, போ'
`போயிட்டா குத்தமில்லை. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா! எவன் பாப்பான்?'
`தெருவுலெ நின்னுகிட்டு... வூட்டுக்குப் போடா.. வர்றேன்லெ'
`அவ, நல்ல தண்ணிக்குப் போவணும்னா, வௌக்கு வெச்ச நேரம் வூட்ட பூட்டிட்டா போறது? அங்குன வீட்டுலெ செத்த ஒக்காரலாமுலெ. வூடு தங்குறதில்ல?'
``பகல் மூச்சும் அங்குனதான்டா காவல் கெடக்கேன்!''
``வீட்டுக்கு வா பேசிக்கிறேன்'' என்று விருட்டென்று, சைக்கிளை மிதித்து இருளில் கரைந்தான். அவருக்குக் கலக்கம். இது இன்றோடு முடியாது! உள்ளூர பயம். மனக் கலவரம். நிம்மதி இல்லாது உடல் நடுங்கிற்று! என்னை உனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. என் தளர்ச்சி, தொய்வு, உனக்கு அலுப்பைத் தந்துவிட்டது. இந்த மனுஷப் பிறவி முற்றிவிட்டால், முறிஞ்சு போயிட வேண்டியதுதான். இப்படிச் சீண்டிச் சீண்டி மனசை ஏன் சீரழிக்கிறதுக. முடிஞ்ச மட்டும் வாயைக் கட்டிக் காக்கத்தான் பார்க்கிறது, காது நிறைந்து ததும்பிக் கொண்டேதான் இருக்கிறது. என்ன என்ன வார்த்தைகள், வாசகங்கள், தொடர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தம்! எத்தனை குரல்கள், சப்தங்கள். மனசாட்சியின் குரலைத்தான் கேட்க முடியவில்லை! ஒருமுறை தலை உயர்த்தித் தெருவைப் பார்த்துவிட்டு, ஒழுகிய கண்ணீரை கன்னத்தைச் சேர்த்து இழுகிக் கொண்டு நடந்தார்
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment