Tuesday, July 8, 2008

நோய் தீர்க்கும் ரதசப்தமி விரதம்

தை மாதத்தை மகர ராசிக்கான மாதம் என்பார்கள். இந்த மகர ராசியில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகும். அன்றுதான் சூரியன் உத்திராயணத்தில் பிரவேசிக்கும் தினமாகக் கருதப்படுகிறது. ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.


ரதசப்தமியில் உத்திராயணம் பிறந்த பிறகே, பீஷ்மர் தன் உயிரை விட்டதாக மகாபாரதம் கூறுகிறது. உலக நலனுக்காக பீஷ்மர் பிரம்மச்சர்ய விரதம் ஏற்றவர். அவருக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லை. அதனால் ரதசப்தமிக்கு மறுநாள் மக்கள் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். அந்த நாளை பீஷ்மாஷ்டமி என்றும் கூறுவார்கள்.

ரதசப்தமி விரதம் இருக்கும் நாம் சூரியனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?

ராவணனை வெற்றி பெற ஆகஸ்திய மகரிஷி ராமருக்கு ``ஆதித்ய ஹ்ருதயம்'' என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதை தினமும் பாராயணம் செய்பவர்கள் சகல வெற்றியையும் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

சூரியனுக்குக் குதிரைகள் ஏழு. ``இரவிகள் பல்லும் தத்தம் ஈரனு தேரில் அவ்வேழ் புரவிகள் பல்லும் குத்தி'' என்கிறது தக்கயாக பரணி.

இரவிகள் என்றால் சூரியர்கள் என்று பன்மையில் பொருள். இது பன்னிரு சூரியரையும் குறிக்கும். அவர்கள் தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் என்னும் பெயர்களில் உள்ளவர்கள். ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு ஆதித்யர் அதிபதி.

சூரியனுடைய கதிர்கள் ஆயிரம் என்பார்கள். அவற்றில் 400 கதிர்கள் மழை பொழியும். 300 கதிர்கள் மழை வளத்தை உண்டாக்கும். 300 பனி பெய்யும். இந்த பன்னிரு சூரியர்கள் சித்திரை முதல் பங்குனி வரையில் முறையே 7000, 8000, 9000, 9000, 9000, 11000, 1000, 8000, 7000, 1100, 5000, 1000 கதிர்களுடன் விளங்குவர் என்கிறது அபிதான சிந்தாமணி.

``சூரியர்கள் பன்னிருவர் பன்னிரண்டாயிரம் சுடரொடும் சூழ் வருவரே'' என்கிறது தக்கயாக பரணி. இவர்கள் விஷ்ணுவின் சக்திகள் என்பதால் சூரியனை சூரிய நாராயணன் என்றும் அழைக்கிறோம்.

இந்த ரதசப்தமி நன்னாளில் இந்த சூரியனுக்கு ஒரு விசேஷ ஒளி பிறப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இத்தகைய சூரியனை ரதசப்தமி அன்று தொழ வாசலில் மட்டுமின்றி பூஜை செய்யும் இடத்திலும் ரதக் கோலத்தைப் போட்டு விளக்கேற்றி வைத்து பூஜிக்க வேண்டும். இதனால் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் நிறையும்.
சூரியனுக்குப் பிடித்தது எருக்கன் இலையாகும்.

ரத சப்தமி தினத்தன்று அதிகாலையில் நீராடும்பொழுது இரண்டு அல்லது ஏழு எருக்கன் இலைகளை அடுக்கித் தரையில் வைத்துக் கொண்டு அதன் மீது சிறிது அட்சதை (அரிசி)யை வைத்துக் கொண்டு கிழக்கு திசை பார்த்து நின்று தலையில் நீர் ஊற்றி நீராட வேண்டும். அட்சதையுடன் சிறிது விபூதியை வைத்துக் கொண்டும் நீராடலாம்.

உலோகக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வது போல சூரியனின் ஏழு வகையான கிரணங்களும் எருக்கன் இலைகளில் ஊடுருவிச் செல்லும். அதனால் இந்த இலைகளை தலையில் வைத்து நீராடுவது உடல் நலத்திற்கு நலத்தை விளைவிக்கும்.

இப்படி நீராடும் பொழுது,
``ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோக ப்ரதீபிகே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வாம்'' என்ற ஸ்லோகத்தைக் கூறி நீராட வேண்டும்.

பீஷ்மாஷ்டமியின் பெருமை

குரு போரில் பீஷ்மர் உடம்பு பூராவும் அம்புகளால் காயப்பட்டு அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். பாண்டவர்களும், கௌரவர்களில் சிலரும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள். அவர்களோடு இருந்த கிருஷ்ண பரமாத்மா மகா விஷ்ணுவாக பீஷ்மருக்குக் காட்சி கொடுத்தார். அப்பொழுது சொல்லப்பட்டதுதான் விஷ்ணு ஸஹஸ்ர நாமம். நினைத்த பொழுது மரணத்தைத் தழுவலாம் என்ற வரத்தைப் பெற்றவர் பீஷ்மர். ரதசப்தமி வரை காத்திருந்து ரதசப்தமிக்கு மறுநாள் அஷ்டமியன்று பிராணத்தியாகம் செய்தார். அதனால் அத்தினம் பீஷ்மாஷ்டமி என்று சொல்லப்படுகின்றது.

இந்த பீஷ்மாஷ்டமியில் தர்ப்பணம் செய்தால் சந்ததி செழிக்கும். கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ரதசப்தமி மகிமை

ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவன் யுவனவன். இந்த மன்னனுக்கு சந்ததி இல்லை. அதனால் வருத்தப்பட்டு மகரிஷிகள் சொல்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான்.

அவர்கள் நீரை மந்திரித்து ஒரு கலசத்தில் பத்திரப்படுத்தி மன்னனின் மனைவி குடிக்க வேண்டும் என்றார்கள். அந்தக் கலச நீர் யாகவேதியின் நடுவே இருந்தது. அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் அந்த இரவில் மன்னனுக்கு தாகம் எடுத்தது. யாகவேதியின் நடுவே வைத்திருப்பது மகரிஷிகளால் மந்திரித்து வைக்கப்பட்ட நீர் என்று தெரியாமல் மன்னன் அதையெடுத்துக் குடித்து விட்டான்.

மன்னன் வயிற்றில் கரு வளர்ந்தது. அந்தக் குழந்தை தன் கட்டை விரலால் மன்னனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது. அதனால் மன்னன் மாண்டு விட்டான். அழுத குழந்தைக்குப் பாலூட்ட இந்திரன் தன் பவித்திர விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து பெருகிய அமிர்தத்தைப் பருகி குழந்தை வளர்ந்தது.

இந்தக் குழந்தை `மாந்தாதா' என்ற பெயரில் உலகை ஆட்சி புரிந்தது என்பது ஒரு வரலாறு.

மாந்தாதா பற்றி இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது.
யசோவர்மா என்னும் காம்போஜ தேசத்து மன்னனுக்கு வயதான காலத்தில் ஒரு பிள்ளை பிறந்தது. அது வியாதியினால் அடிக்கடி அவஸ்தை பட்டது. என்ன பரிகாரம் செய்வது என்று அந்தணர்கள், வேத மறிந்த மகரிஷிகளிடம் கவலையுடன் கேட்டான் மன்னன். அவர்கள் அனைவரும் மன்னனை ரதசப்தமி விரதம் இருக்கும்படி கூறினார்கள்.

அந்த விரதத்தை மன்னன் விடாமல் கடைப் பிடித்து வந்ததினால் மன்னனின் மகன் நோய் நீங்கப் பெற்று மாந்தாதா என்ற பெயருடன் பிரசித்திப் பெற்று உலகை ஆண்டதாகக் கூறுவார்கள்.

ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் சூரிய பகவானை பூஜிக்க வேண்டும்.
சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரமே உள்ளது. அந்தச் சக்கரத்தில் `மகாக்ஷம்' என்னும் அச்சு உள்ளது. இந்தச் சக்கரமே `ஸம்வத்ஸரம்' எனப்படும் காலச் சக்கர சொரூபமாக உள்ளது.

ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்த்ரம், இத்வஸ்த்ரம் ஆகிய ஐந்து வருஷங்கள் இந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்.

ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள். சூரியனின் தேருக்கு காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, திருஷ்ருப், அனுஷ்ருப், பங்க்தி என்று ஏழு குதிரைகள். இவற்றை சப்த சந்தஸ்ஸிகள் என்பார்கள்.

சூரியனே தேவயான மார்க்கம். இதுவே அர்ச்சிராதி மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரிய கதியைக் கொண்டே முகூர்த்த காலம் கணிக்கப்படுகிறது.
தக்ஷிணாயண காலத்தில் சூரியன் பன்னிரண்டு முகூர்த்த கால அளவில் மிகப் பெரிய பூமியைக் கடக்கிறான். சூரியன் இரவு காலத்தை பதினெட்டு முகூர்த்த காலத்தில் கடக்கிறான். இதனால்தான் தக்ஷிணாயண பகற்பொழுது குறைந்தும், இரவு பொழுது அதிகமாக நீண்டும் தோன்றுகிறது.

சூரியன் கடக்கும் மார்க்கம் ஒரே அளவு உள்ளதுதான் என்றாலும் உத்திராயண, தஷிணாயண காலங்களில் ராசி மண்டலங்களை சூரியன் கடக்கும் வகையினால் இரவு, பகல்களின் மாறுபாட்டை நாம் உணர்கிறோம். இப்படி உத்திராயண காலத்தில் வட திசையை நோக்கி சூரியத் தேர் திரும்புவதைத்தான் நாம் ரதசப்தமி விரத தினமாகக் கொண்டாடுகிறோம்.

ரதசப்தமி அன்று சர்க்கரைப் பொங்கல், வடை, இனிப்பு என்று வைத்து சூரியனுக்கு நைவேத்யம் செய்யலாம். விரதம் இருப்பவர்கள் இந்த இனிப்பை மட்டும் உண்டு விரதம் இருக்கலாம்

0 comments: