Tuesday, July 15, 2008

வாயும் உணவுக்குகுழாயும் !

மனிதன் உயிர் வாழத் தேவையான அத்தனையும், `இயற்கை' என்ற பெயரில் படைக்கப்பட்டு உள்ளன. வாயு மண்டலத்தில் இருக்கும், `நல்ல' ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு `கெட்ட' கரியமில வாயுவை வெளித் தள்ளி நம்மை உயிருடன் வைத்திருக்கிறது சுவாச மண்டலம். உணவுப் பொருள்களில் உள்ள `நல்ல' சத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு கழிவுகளை வெளித் தள்ளுவது ஜீரண மண்டலம்.

ஜீரண மண்டலத்தின் முதல் உறுப்பினர் வாய்தான்.

அம்மா தோசை வார்த்துக் கொண்டிருக்கிறார். அதன் வாசத்தையும் தேங்காய், புதினா மற்றும் மிளகாய்ச் சட்னி வகைகளைப் பார்த்ததும், நம்முடைய மூக்கும் கண்களும் மூளைக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன.

அதே நேரத்தில் வாயில் உமிழ்நீரும், வயிற்றில் அமில நீரும், செரிப்பதற்குத் தேவையான மற்ற என்ஸைம்களும் சுரக்கத் தொடங்குகின்றன. இவற்றில், வாயில் உமிழ்நீர் சுரப்பதுதான் முதல் ரியாக்ஷன். உணவு செரிப்பதன் முதல் கட்டம் அங்கேயே தொடங்கி விடுகிறது.

வாய்க்குள் போகும் உணவுப் பொருள்கள், தாடையாலும் பற்களாலும், நாக்காலும் நொறுக்கப்படுகின்றன.

வாயில் அரைக்கப்படும் உணவுடன், உமிழ்நீரில் இருக்கும் `அமைலேஸ்' என்ற என்ஸைம் கலக்கிறது. தேவையான அளவுக்கு உணவு அரைக்கப்பட்டவுடன், அது தொண்டைப் பகுதிக்குள் தள்ளப்படுகிறது. அப்போது, மூச்சுக் குழாயை `எபிகிளாடிஸ்' என்ற வால்வு மூடிக்கொள்ள, தொண்டையில் இருந்து உணவுக்குழாய் வழியாக, பாதி அரைக்கப்பட்ட உணவு இரைப்பைக்குள் செல்கிறது.

இரைப்பைக்குள் உணவு வருவதற்கு முன்பே, `வேகஸ்' என்ற நரம்பு மூலமாக, `இன்னும் சற்று நேரத்தில் இரைப்பைக்குள் உணவு வந்து சேரப்போகிறது' என்கிற தகவல் இரைப்பைக்குக் கிடைத்து விடுகிறது.

இந்தத் தகவல் கிடைத்த அடுத்து மைக்ரோசெகண்டில், இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரந்து உணவை வரவேற்கக் காத்திருக்கும்.

உணவை அரைப்பது, உமிழ்நீரைச் சுரப்பது ஆகியவை தான் வாயின் முக்கியமான பங்களிப்புகள்.

வாய் தனது வேலையைச் செய்ய முடியாதபடி சில பிரச்னைகள் வந்து தாக்கக்கூடும். அவற்றுள் முதன்மையானது வாய்ப்புண் (Mouth Ulcer). அனைவருக்கும் மிகச் சாதாரணமாக வரக்கூடிய பிரச்னை இது.

வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. பல் கூர்மையாக இருந்து, அது நாக்கிலோ, கன்னத்தின் உள் பக்கமோ குத்தி புண்கள் ஏற்படலாம். புகைபிடிக்கும் பழக்கத்தாலோ, புகையிலை கலந்த வேறு பொருள்களை உபயோகிப்பதாலோ வாயில் புண்கள் ஏற்படலாம். இதற்கு, `ஸ்மோக்கர்ஸ் அல்சர்' என்று பெயர். மன அழுத்தம், அதிக டென்ஷன் காரணமாக, வாயில் இருக்கும் `மியூகோஸா' என்ற மேல்புறத் தோலில் சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு, அதனால் புண்கள் உருவாகலாம்.

சாதாரண காரணங்களால் ஏற்படும் வாய்ப்புண்களை எப்படித் தவிர்க்கலாம்?

1. புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே விட்டு விடுங்கள்.

2. பற்கள் கூர்மையாக இருந்தால், பல் மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்ளுங்கள்.

3. மன அழுத்தம், தேவை இல்லாத டென்ஷனைக் குறைக்க மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த வாய்ப்புண்ணுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம்.

அதற்கு அவசியம் இருக்கிறது. ஏன் என்றால், நாள்பட்ட வாய்ப்புண்கள் புற்று நோயாக மாறக் கூடிய அபாயம் உண்டு.

புற்றுநோய் குறித்து, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட எச்சரிக்கையில், ஆறாத வாய்ப்புண் பற்றி மிகப் பிரதானமாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே, வாய்ப்புண் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உணவு செரிமானத்தில் அடுத்ததாகப் பங்கேற்பது உணவுக்குழாய்.

அடக்கமாக இருந்து தன் பணிகளைச் செய்யும் உறுப்பு இது. ஜீரணமண்டலத்தின் ஒட்டுமொத்த உறுப்புகளிலும் அதிகம் கவனிக்கப்படாத உறுப்பு, இந்த உணவுக்குழாய் தான்.

சூடாக, குளிர்ச்சியாக, காரமாக, இனிப்பாக என பல விதத்தில் நாம் சாப்பிடுகிறோம். சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இதனால், உணவுக்குழாய்க்குப் பாதிப்பு ஏற்படுமா என்று யாரும் பார்ப்பதில்லை.

எதையாவது விழுங்க முடியாத சமயத்தில்தான், ஆஹா, `உணவுக்குழாய்' என்று ஒன்று இருக்கிறதே. அங்குதான் பிரச்னை என்று, அப்போதுதான் அதுபற்றிய நினைப்பே நமக்கு வருகிறது.

சரி, உணவுக்குழாயின் அடிப்படைப் பணிகள்தான் என்ன?

வயிற்றுக்கு உணவு (திடப்பொருளோ, திரவப் பொருளோ) மற்றும் உமிழ்நீரைக் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் இதன் அடிப்படைப் பணி.

உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்கு உணவு வந்த பிறகு தான் மற்ற அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றன.

சரி, உணவுக்குழாய் எப்படிப்பட்டது?

உணவுக்குழாய் என்பது ஒரு விதமான ப்ளாஸ்டிக் குழாய் மாதிரி இருக்கும் என்றும், வாயில் போடும் உணவு இந்தக் குழாய் வழியே புவியீர்ப்பு சக்தியால் இரைப்பைக்குள் `தொப்' என்று விழுந்து விடும் என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது தவறான கருத்து.

உணவுக்குழாய் என்பது ஒரு மண்புழுவைப்போல் நெகிழும் தன்மை கொண்டது. இது, உணவை கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் கொண்டு போய்ச் சேர்க்கிறது. வாயில் இருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் உணவுப்பொருள்கள் செல்லும் பணி இயற்கையாக நடைபெறுவதால் நமக்கு அது தெரிவதில்லை.

அளவில் பெரிதான உணவுப்பொருளை விழுங்கும் போதோ, சரியாக மெல்லாமல் விழுங்கும் போதோ, உணவுப் பொருளை வேகவேகமாக விழுங்கும்போதோ தான், உணவுக்குழாய் பற்றிய நினைப்பு நமக்கு வருகிறது.

உணவுக்குழாயின் அடிப்பகுதி, `லைன் ஆஃப் கன்ட் ரோல்' போல் செயல்படுகிறது.

வாயில் சுரக்கும் உமிழ்நீரை (எச்சில்), அல்கலைன் அல்லது காரம் என்று சொல்லலாம். இரைப்பைக்குள் உருவாவது அமிலம் (ஹைட்ரோகுளோரிக் அமிலம்). இந்த அமிலமும் காரமும் உணவுக் குழாயின் கடைசிப் பகுதியில் சண்டையிடுகின்றன.

அதேநேரத்தில், இந்தக் காரத்துக்கும் அமிலத்துக்கும் நடைபெறும் சண்டை விரைவில் தீராது. இந்தச் சண்டையில் அமிலம் ஜெயித்தால், உணவுக்குழாயில், குறிப்பாக `லைன் ஆஃப் கன்ட்ரோலில்' புண் ஏற்படும். அந்தப் புண்கள், அங்கிருக்கும் செல்களால் தானாக `சரி' செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட திசுக்கள் புத்துயிர் பெறும் வகையில் இயற்கை படைத்திருக்கிறது.

ஒருவேளை அந்தப் புண்கள், ஆறாமல் இருந்துவிட்டால் என்ன ஆகும்? இங்கு பயப்படாதீர்கள் என்று சொல்ல மாட்டேன். பயந்துதான் ஆக வேண்டும். அதாவது, ஆறாத புண்களால், புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

`உலகில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில், உணவுக்குழாய் புற்று நோயும் ஒன்று' என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தவகைப் புற்றுநோய்கள், பொதுவாக ஆண்களுக்குத்தான் அதிகமாக வருகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவுக் குழாயின் தசைகள் இறுகித் தளர்ந்து வேலை செய்பவை. இந்தத் தசைகளில் ஏற்படும் `தசை அசைவு'ப் பிரச்னைகளால் நிறைய கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்தத் `தசை அசைவுப்' பிரச்னைகள், `மோட்டிலிட்டி டிஸ்ஆர்டர்' (Motility Disorder) என்று அழைக்கப்படுகின்றன.

இந்தப் பிரச்னை இருப்பவர்களை நுட்பமாகச் சோதித்துப் பார்த்தால், அவர்கள் கடந்த இரண்டு நாள்களாகச் சாப்பிட்ட சாப்பாட்டின் ஒரு பகுதி, உணவுக் குழாயின் கடைசிப்பகுதியில் அப்படியே தேங்கி இருப்பது தெரியும்.

மேலும் ஆராய்ந்தால், அவர்களது உணவுக்குழாயின் அடிப்பகுதி இறுகிப் போய், இரைப்பைக்குள் உணவு செல்ல முடியாமல் `சிக்கி' இருப்பது தெரியும்.

`எவ்வளவுதான் குறைவாய் சாப்பிட்டாலும், நெஞ்சிலேயே நிக்குது' என்று சிலர் சொல்வார்கள். அதற்கு இதுதான் காரணம்.

இப்படிப்பட்ட பிரச்னை இருப்பவர்கள், உடனடியாக வயிறு சம்பந்தமான மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

நெஞ்சு எரிச்சல் என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இப்பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு என்றாலும், மிக முக்கியமான காரணம், `ஒரு வழிப்பாதை'யாகக் கடமை ஆற்ற வேண்டிய உணவுக்குழாயின் `வால்வு' கடமையைத் தவறி, அமிலத்தை மேலே செல்ல அனுமதிப்பதுதான்.

மேலே வரும் அமிலம், நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது தொடரத் தொடர, உணவுக் குழாயின் உள்பக்கச் சுவரில் புண்கள் ஏற்படுகின்றன.

இந்தப் புண்கள், சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சலை உணர்த்தும், வயிறை காயப்போட்டாலும் நெஞ்சு எரிச்சலைத் தெரிவிக்கும். அதனால்தான், சாப்பிட்டவுடன் சிறிது நேரத்துக்குக் குனிந்து நிமிர்ந்து எந்த வேலையையும் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள்.

குனிந்து வேலை செய்யும் போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகமாகி உணவைச் செரிப்பதற்காக உருவான அமிலம், மேலே வந்து நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தலாம். வாயில் புண்களும் உருவாகலாம். உள்நாக்கின் மேல் பகுதியிலும் பிரச்னை ஏற்படலாம். இதனால், பெண்களின் அழகான குரல் மாறிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், எச்சரிக்கை தேவை.

அது மட்டுமல்ல. மேலே வந்த அமிலம், நுரையீரல் பகுதியில் நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம். மூச்சுக் குழாயை இறுக்கி, `ஆஸ்துமா'வுக்கு ஈடாக மூச்சுவிடுவதில் சிரமத்தையும் ஏற்படுத்தலாம்.

நன்றாகக் கவனிக்கவும். `ஆஸ்துமா' கிடையாது. ஆனால், அதே போன்ற அவஸ்தை, தவிர, குழந்தைகளுக்கு நுரையீரலில் `சீழ்கட்டி' உண்டாகலாம்.

உங்களில் யாருக்காவது இதுபோன்ற பிரச்னை இருந்தால், கவலைப்பட வேண்டாம். உடனே, மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், பிரச்னை தீர்ந்து விடும்.

இந்த நேரத்தில், உங்கள் மனத்தில் ஒரு சந்தேகம் எழலாம்.

உணவைச் செரிப்பதற்காக இரைப்பையில் உருவாகும் அமிலம், மேலே வந்தால் பிரச்னை என்கிறீர்கள். ஆனால், அது இரைப்பையில் இருக்கும் போது எந்தப் பிரச்னையும் இருக்காதா? அங்கு குடலை அரித்து புண்களை ஏற்படுத்தாதா? என்று பல கேள்விகள் கேட்கத் தோன்றும்.

`இரைப்பையின் உள்புறச் செல்கள், அமிலத்தின் அரிப்புத் தன்மையைத் தாங்கும் ஒருவித விசேஷ செல்களால் ஆனவை. ஆனால், உணவுக்குழாய் செல்களுக்கு அத்தகைய சிறப்புத்தன்மை கிடையாது. அதனால்தான் பிரச்னை. அமிலத்தால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும் உணவுக்குழாய், இரைப்பைச் சுவர் செல்களைப் போல் தன்னுடைய செல்களையும் மாற்றிக்கொள்ள முயற்சிக்கும். அதற்கு, `மெட்டாப்ளாஸியா' (Metaplasia) என்று பெயர்.

உணவுக்குழாயின் இந்த `சுயமுயற்சி' தான் புற்றுநோயாக மாறுகிறது. இந்தப் புற்று நோயின் பெயர்' அடினோகார்ஸிநோமா' (Adenocarcinoma)..

உணவுக்குழாயில் புற்றுநோய் இருக்கிறது என்பதை, அதன் இறுதிக்கட்டத்தில்தான் கண்டறிய முடிகிறது.

நெஞ்சு எரிச்சல்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒருவேளை, அது சாதாரணமாக எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாமல் இருந்துவிடலாம். இல்லை, அதுவே பின்னால் பெரிய பிரச்னையாகவும் மாறிவிடலாம். அதனால், நோய் முற்றும்வரை காத்திருக்காமல் எந்தப் பிரச்னைக்கும் மருத்துவரை உடனடியாகப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்வதுதான் நல்லது.

அமிலம் மேலே வரும் பிரச்னையைத் தவிர்ப்பது எப்படி?

1. சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.

2. இறுக்கமான உடை அணிந்திருந்தால், சாப்பிட்டவுடன் சிறிது தளர்த்திக் கொள்ளுங்கள். இதனால், வயிற்றுப்பகுதியில் அழுத்தம் குறையும்.

3. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சியோ, குனிந்து நிமிர்ந்து வேலையோ செய்யாதீர்கள்.

4. சாப்பிடும்போது அதிகத் தண்ணீர் குடிக்காதீர்கள். அதிகமான தண்ணீர் அமிலத்தை மேலே கொண்டு வந்து விடும்.

5. நெஞ்சு எரிச்சலைப் போக்க, சிலர் ஆன்டாஸிட் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவார்கள். இவை, அமிலத்தின் தீவிரத்தை ஓரளவுக்குக் குறைக்கும்.

ஒரு சிலர் சோடா குடிப்பார்கள். சோடாவில் இருக்கும் சோடா பை கார்பனேட், ஓரளவுக்கு நெஞ்சு எரிச்சலைப் போக்கும். ஆனால், சோடாவில் இருக்கும் கார்பன்_டை_ஆக்ஸைடு வாயு ஏப்பமாக வெளியே வரும். அதனால், சோடா குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

சரி, நெஞ்சு எரிச்சல் அதிகமாக இருக்கிறது. சோடாவும் குடிக்கக் கூடாது என்றால் என்ன செய்வது?

அப்படிப்பட்டவர்கள், படுத்துக் கொண்டு கழுத்துப் பகுதிக்குக் கீழே தலையணையைக் கொஞ்சம் உயரமாக வைத்துக் கொண்டால், இப்பிரச்னையில் இருந்து தாற்காலிகமாகத் தப்பிக்கலாம்.

0 comments: