ப்ரைன் (Brain) என்கிற ஆங்கில வார்த்தை, ப்ரான் (Bran) என்கிற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவாகி இருக்கிறது. இதன் அர்த்தம் சதைப்பிண்டம்.
ஞாபகத்திறன். மனிதமூளையில் இருக்கும் முக்கியமான அதிசயம் இது. ஐந்து வயதில் நீச்சல் கற்கப் போன கிணற்றில் பாம்பைப் பார்த்து பயந்து ஓடி வந்தது இன்றைக்கும் நினைவிருக்கிறது. ஆனால் இரண்டு நாள்களுக்கு முன்னர் என்ன சாப்பிட்டோம் என்பதைச் சட்டென்று நினைவில் கொண்டு வரமுடியவில்லை.
சிலவற்றைப் பற்றி மட்டும் ஏன் நாம் நினைவு வைத்துக்கொள்கிறோம்? சிலவற்றை ஏன் மறந்து விடுகிறோம்? இக்கேள்விகளுக்கான விடைகள் கிடைத்து விட்டால் நம் ஞாபகத்திறன் எப்படி வேலை செய்கிறது என்பதற்கான மர்மமும் விடுபட்டுவிடும். ஞாபகத்திறன் குறித்து, நமக்குப் பல விஷயங்கள் ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருக்கின்றன.
தாற்காலிக நினைவு, நீண்ட கால நினைவு என மூளை இரண்டு விதமான பகுதிகளை ஆபரேட் செய்கிறது. புலன்களில் இருந்து வரும் தகவல்கள் அனைத்தையும் மூளை நீண்டகால நினைவுத் திறனில் போட்டுக் கொள்வதில்லை. குறிப்பிட்ட ஒரு தகவல் வந்ததும் இதை ஐந்து நொடிகள் நினைவில் வைத்திருந்தால் போதுமா, அல்லது ஆயுள் முழுக்க நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா என்பது ஆராயப்படுகிறது. அதற்கேற்றபடி சம்பந்தப்பட்ட பகுதிக்குத் தகவல் அனுப்பப்படுகிறது.
தாற்காலிக நினைவு செயல்படும் விதத்துக்கு நமக்கு நன்கு பரிச்சயமான ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். பள்ளியிலுள்ள எல்லா வகுப்புகளிலும் கரும்பலகை இருக்கும். முதல் வகுப்புக்காக கணக்கு ஆசிரியர் வருவார். அல்ஜீப்ராவோ, டிரிக்னாமெட்ரியோ ஏதோ ஒரு பாடத்தை பலகையில் எழுதி விளக்கிவிட்டுப் போய்விடுவார்.
அடுத்ததாக தமிழ் ஆசிரியர் வருவார். கணக்கு ஆசிரியர் எழுதியதை அழித்துவிட்டு, அவர் தமிழ் இலக்கணம் தொடர்பாக எதையாவது எழுதிவிட்டுப் போவார். அடுத்ததாக அறிவியல் ஆசிரியர். இப்படி வருகிற ஒவ்வொருவரும் கரும்பலகையில் உள்ளதை அழித்துவிட்டு, புதிதாக ஒன்றை எழுதிப் போடுவார்கள். நமது தாற்காலிக நினைவிலும் இப்படித்தான் நடக்கிறது.
`கடைக்குப் போய் இந்தந்த சாமான்களையெல்லாம் வாங்கி வா' என்று அம்மா சொல்கிற ஒரு சின்ன பட்டியலை ஆயுள் முழுக்க நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடைக்குப் போகும் வரை நினைவில் இருந்தால் போதும். எனவே, அந்தத் தகவல் தாற்காலிக நினைவுப் பகுதிக்குப் போய் விடுகிறது.
`அரிசிக்கடைக்காரர் வந்து பணம் கேட்பாரு. அவருக்கு ஆயிரம் ரூபா குடு' என்று அப்பா சொல்லிவிட்டுப் போனால் மளிகைக்கடை லிஸ்ட் மறந்து போய் ஆயிரம் ரூபாய் என்கிற தொகை நமது தாற்காலிக நினைவில் குடியேறிவிடுகிறது. இப்படிப் புதிய தகவல்கள் வந்து சேர, சேர, கரும்பலகை அழிக்கப்படுகிற மாதிரி தாற்காலிக நினைவில் உள்ள பழைய தகவல்கள் அழிந்து போகின்றன.
இப்படி மறந்து போவதும் ஒரு வகையில் நல்லதுதான். இல்லையெனில் ஏகப்பட்ட தகவல்கள் நினைவுத் திறனில் சேர்ந்து டிராஃபிக் ஜாம் ஆகி, யார் எதைச் சொன்னார்கள் என்பது குழம்பி, `ஒரு பென்சில் கொடுங்க' என பேக்கரியில் போய் நீங்கள் கேட்கக்கூடும். `அளவில்லாத தகவல்களைச் சேமிக்கும் திறன் மூளைக்கு இல்லையா?' என நீங்கள் கேக்கலாம். `மூளைக்கு அந்தத் திறன் உண்டு தான். அதே சமயம், மூளை வேண்டாத பொருள்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் குப்பைக்கூடை இல்லையே. அதனால்தான், ஒரு தகவலை வாழ்நாள் முழுக்க ஞாபகத்தில் வைத்திருக்கத் தேவையில்லை எனில் அதை எதற்கு வீணாகச் சுமப்பானேன்; அதற்காக எதற்கு ஒரு சர்க்யூட்டை வீணடிப்பானேன் என தாற்காலிக நினைவுக்கு அனுப்பி `கிளியர்' செய்து விடுகிறது மூளை.
சில தகவல்களை மட்டும்தான் `இது வாழ்நாள் முழுவதும் தேவை' என முடிவு செய்து நீண்ட கால நினைவில் போட்டுக்கொள்கிறது. (எந்த அடிப்படையில் இதை முடிவு செய்கிறது என்பதுதான் கேள்விக்குறி). இப்படித் தாற்காலிக நினைவில் இருந்து நீண்டகால நினைவுக்குத் தகவல்களை மாற்றும் வேலையில் ஹிப்போகாம்பஸ் என்கிற பகுதி துடிப்பாகப் பங்கேற்கிறது. வேண்டியபோது தகவல்களை அங்கிருந்து மீட்டுத் தருவதும் இப்பகுதிதான்.
ஹிப்போகாம்பஸை தாஜா செய்து சில தகவல்களை மட்டும் தாற்காலிகமாக நீண்ட நாள் நினைவில் வைத்து இருக்க முடியும். தேர்வின்போது மனப்பாடம் செய்து, பாடப்பகுதிகளை மனதுக்குள் போட்டு வைத்துக் கொள்வது இப்படித்தான்.
நமது நீண்ட கால ஞாபகத்திறன் மூன்று வகைகளில் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளார்கள். `தூண்டுதல் அதற்கேற்ற செயல்' என்பது முதல் வகை. சுடச்சுட அம்மா ரவை கேசரி செய்வதன் வாசனை மூக்கைத் துளைத்தால் போதும். உடனே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
வாசனை என்பது தூண்டுதல், எச்சில் ஊறியது ரியாக்ஷன். இப்படியொரு தூண்டுதலுக்கு இப்படி ரியாக்ஷன் என டெம்போரல், ஆக்சிபிடல், பேரிடல் ஆகிய லோப்களில் உள்ள ஏதோ ஒரு சர்க்யூட்டில் பதிவாகியிருக்கிறது. குறிப்பிட்ட தூண்டுதல் வந்ததும் அந்த சர்க்யூட்களில் மின் துடிப்புகள் பாய்ந்து நினைவில் உள்ள ரியாக்ஷனை வெளிப்படுத்தச் செய்கிறது.
இரண்டாவது வகை ஞாபகத்தை நிகழ் ஞாபகம் என்கிறார்கள். கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு இது. பேச்சுப்போட்டியில் முதல் பரிசு வாங்கியது, கிரிக்கெட் ஆடும்போது பந்து பட்டு கண் வீங்கிப்போனது, வண்டி ஓட்டி விழுந்து வாரியது, மார்க் குறைந்ததற்காக அப்பாவிடம் திட்டு வாங்கியது போன்ற சம்பவங்களையெல்லாம் நாம் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம். இதுதான் நிகழ் ஞாபகம்.
மூன்றாவதாக இருக்கும் ஞாபக வகை, உருவங்கள் தொடர்பானது.
இவை மட்டும் இன்றி ஸ்பேசியல் மெமரி, எபிசோடிக் மெமரி என்றும் பல வகைகள் சொல்கிறார்கள். ஸ்பேஷியல் மெமரி என்பது காலத்தின் அடிப்படையில் தகவல்களைச் சேகரித்து வைத்துக் கொள்வது. எபிசோடிக் மெமரி என்பது ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளுதல்.
உதாரணமாக, சின்னவயதில் பேச்சுப் போட்டியில் நீங்கள் பரிசு வாங்கியிருக்கிறீர்கள். வளர்ந்த பிறகு, `பேச்சுப் போட்டி' என்கிற வார்த்தையை எங்கு கேட்டாலும் உடனே உங்களுக்கு, நீங்கள் பேசி பரிசு வாங்கியது, நடுவர் உங்களைப் பாராட்டியது, அனைவரும் உங்களுக்குக் கை கொடுத்தது என அந்தச் சம்பவம் தொடர்பான அனைத்தும் ஒரு தொகுப்பாக உங்களின் நினைவுக்கு வரும். இப்படி ஒரே சம்பவம் தொடர்பான தகவல்களைத் தனித்தனியாக இல்லாமல் ஒரு தொகுப்பாகவே பதிவு செய்து கொள்கிறது ஹிப்போகாம்பஸ்.
ஒரு விதத்தில் நமது நினைவுத்திறன் இயங்குவது சூப்பர் மார்க்கெட்டின் இயல்பை ஒத்திருக்கிறது. சூப்பர்மார்க்கெட்டில் அரிசி, பருப்பு போன்ற தானியங்கள்; காய்கறிகள், பழங்கள், ஊறுகாய்கள், அப்பளங்கள், இனிப்புகள், பிஸ்கெட்கள் எனப் பல பகுதிகளாகப் பிரித்து அடுக்கி வைத்திருப்பார்கள். மூளையும் இப்படித்தான், தனக்கு வரும் தகவல்களை எண்ணற்ற வகைகளில் பிரித்து நீண்டகால நினைவுத்திறனில் போட்டு வைத்திருக்கிறது. எந்தெந்த வகைகளில் பிரித்து வைத்திருக்கிறது என்பது மூளைக்கே வெளிச்சம்.
நினைவுத் திறன் என்பதே மூளையின் மிகப்பெரிய அதிசயம் என்றால் அதிலுள்ள தகவல்களைத் தேடிப்பிடித்து தொடர்புபடுத்திப் பார்ப்பது மூளையின் மற்றொரு அதிசயம்.
உதாரணமாக, உங்களின் நண்பர் கிரிக்கெட்டில் ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் அடித்துவிட்டார் எனில், உடனே உங்களுக்கு யுவராஜ்சிங் நினைவில் வருவார். 20/20 கிரிக்கெட்டில் யுவராஜ் இதே போல் அடித்தாரே என நினைப்பீர்கள். அடுத்ததாக தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ் நினைவுக்கு வருவார். ஒரு நாள் மேட்சில் அவரும் அப்படி அடித்தாரே என்று அந்தத் தகவலையும் தொடர்புபடுத்திப் பார்ப்பீர்கள். இப்படி, அந்தத் தகவலோடு தொடர்புபடுத்தக்கூடிய அனைத்து விஷயங்களும் மின்னல் வேகத்தில் உங்களுக்குள் பளிச்சிடும்.
நினைவுத்திறனிலுள்ள இந்த இயல்பு கற்றலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அசோசியேஷன் ஆஃப் லெர்னிங் (association of learning) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது கற்ற விஷயங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்ப்பது. அப்படித் தொடர்புபடுத்திப் பார்ப்பதன் மூலம் இன்னும் ஏராளமான விஷயங்களை மூளையால் பதித்து வைத்துக் கொள்ள முடிகிறது.
இவையெல்லாம் ஹிப்போகாம்பஸின் கைவண்ணம்தான். ஞாபகத்திறன் பற்றிப் பேசுகையில் அமிக்டலா என்கிற உறுப்பு பற்றியும் சொல்ல வேண்டும். உணர்வு பூர்வமான நினைவுகளைப் பதிய வைத்துக் கொள்வது இந்தப் பகுதிதான். குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையைப் பார்த்து பயந்து ஓடுகிறோம் என்றால், நாம் பயந்ததற்கும் ஓடியதற்கும் அமிக்டாலாதான் காரணம்.
உதாரணமாக, உங்கள் வீட்டுக்குச் செல்வதற்காக குறிப்பிட்ட ஒரு தெரு வழியே நடந்து போகிறீர்கள். அப்போது உங்களை ஒரு நாய் வெறியோடு துரத்துகிறது. தலை தெறிக்க ஓடி எப்படியோ நாய்க்கடியில் இருந்து தப்பிவிடுகிறீர்கள். மறுமுறை அந்தத் தெரு பக்கமே நீங்கள் போக மாட்டீர்கள். ஏனெனில் அங்கே போனால் ஆபத்து என ஏற்கெனவே ஏற்பட்ட அனுபவத்தை நினைவுபடுத்தி அமிக்டலா உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடிப்பதுதான்.
அப்படியே போனாலும் உங்கள் இதயம் படபடவென அடித்துக்கொள்ளும்; வியர்த்துக்கொட்டும்; உங்களது கால்களுக்கு அதிக ரத்தமும், குளுக்கோஸும் பாயும் (ஓடுவதற்கு வசதியாகத்தான்). உடலில் உங்களையும் அறியாமல் இத்தகைய ரியாக்ஷன்கள் ஏற்பட அமிக்டலாதான் காரணம். இருட்டைப் பார்த்து நாம் பயப்படுவது கூட அமிக்டலா உருவாக்குகிற அலைகளால்தான்.
ஹிப்போகாம்பஸுக்கும் அமிக்டலாவுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த உதாரணத்தின் மூலமே நாம் புரிந்துகொள்ளலாம். நாய் உங்களைத் துரத்திய சமயத்தில் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், எங்கே போனீர்கள், அந்தத் தெருவின் அமைவிடம் போன்றவற்றையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது ஹிப்போகாம்பஸ். அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போதே உங்களின் ரோமங்கள் சிலிர்ப்பது, இதயம் வேகமாகத் துடிப்பது ஆகியவை எல்லாம் அமிக்டலாவின் வேலைகள்.
ஞாபகத்திறன் பற்றி இவ்வளவு விவரங்களைக் கண்டு பிடித்துவிட்டாலும், மீட்கப்படாத ரகசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மூளைக்கும், அறிவியலுக்குமான கண்ணாமூச்சி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Tuesday, July 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment