Saturday, July 12, 2008

மறுபரிசிலனை !

மெயின் ரோட்டிலிருந்து விலகி, நாலாவது தெருவில் புகுந்து சுதா வருவது ஜன்னல் வழியே தெரிந்தது ஜெயாவுக்கு.

``ஏங்க, சுதா பொண்ணு நம்ம வீட்டுக்கு வர்ற மாதிரி தெரியுது.''

``அப்படியா, எல்லாம் முடிஞ்சிருச்சுல்ல... இனி எதுக்கு வருது.''

``வரட்டும் வரட்டும். வந்தா சந்தோஷமா வாம்மான்னு கூப்பிட்டுப் பேசுங்க. நீங்க பாட்டுக்கு பழசையெல்லாம் கிளறிட்டிருக்ககாதீங்க.''

``சரி சரி... பாவம் இந்தப் பொண்ணு என்ன செய்யும். இது தான் ரொம்பவும் முயற்சியெடுத்து செய்துச்சு. கடைசியில...''

``இப்ப என்ன, அது அது முடியுற இடத்துல முடியும்.''
``ஆமாமா இந்த சுதா பொண்ணுக்குதான் ரொம்ப தர்ம சங்கடமாயிருந்திருக்கும்.''

``நான் அதுக்குப் பிறகு கடைக்குப் போகும்போது பார்த்துச் சொன்னேன். உங்க அண்ணனுக்குப் பிடிக்கலேன்னா நீ என்ன செய்வே. இதெல்லாம் பார்த்தா முடியுமா. நாங்க கமலிக்கு வேற இடம் பார்த்துட்டிருக்கோம். நீ எப்பவும்போல வாம்மானேன்.''

``அதான் வருது போல...''
சுதா வாசலுக்கு வருவதற்குள் ஜெயா ஓடிச் சென்று ``வாம்மா சுதா'' என்று வரவேற்றாள்.

``வாம்மா உள்ளே..''
முதன் முதலாக நுழைந்த உற்சாகமும் சந்தோஷமும் இப்போது இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாகத்தானிருந்தாள் சுதா.

``இரும்மா. நிமிஷமா டீ போட்டுடுறேன்.''
``சும்மா இருங்க ஆன்ட்டி. உங்க வீட்டுல ஏற்கெனவே நிறைய டீ சாப்பிட்டுட்டேன்.''
``நீ எப்பவும் எங்க வீட்டுப் பொண்ணுதான்.''
``அப்படியிருக்கணும்னுதான் நானும் விரும்புறேன்.''
என்ன சொல்ல வருகிறாள் இந்தப்பெண். கணவனும், மனைவியும் விழிகளில் கேள்வி தொனிக்க ஏறிட்டார்கள்.
``போனவாரம் சங்கரன்கோவிலுக்குப் போயிருந்தேன்.''
``உங்கம்மா வீட்டுக்கா?''
``ஆமா.. ஆன்ட்டி.''
``ம்.. என்றாள் விருப்பு வெறுப்பின்றி.'' எல்லோரும் சௌக்கியமாயிருக்காங்களா?''
``நல்லாயிருக்காங்க. கமலியைப் பத்தி விசாரிச்சாங்க.''
``அப்படியா?''
இனி விசாரிச்க என்ன செய்யப் போறாங்க என்ற வார்த்தையையும், அது தொனிக்கும் முகபாவத்தையும் கஷ்டப்பட்டு மறைக்க வேண்டியிருந்தது ஜெயாவுக்கு.
``உங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் நம்ம வீட்டுல சம்பந்தம் செய்ய ரொம்ப விருப்பம்தான்..''
``இப்பவும் விருப்பம்தான் ஆன்ட்டி. கமலிக்கு பேங்க்ல வேலை கிடைச்ச விபரத்தைச் சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நல்ல பொண்ணு... அது மனசுக்கும் குணத்துக்கும் எல்லாம் நல்லபடியா நடக்கும்னாரு எங்கப்பா.''
``ம்...ம்... உங்க தங்கச்சிங்க என்ன சொன்னாங்க''
``அவங்களுக்கும்கூட சந்தோஷம்தான் ஆன்ட்டி.''
``ம்.''
``கமலிக்கு பேங்கல வேல கிடைச்சு ரெண்டு மாசமிருக்குமா.''
``இருக்கும் சுதா. நல்லா படிச்சிருக்கிறதால நாங்க அதிகமா செலவழிக்கலே... மதுரையில போய் பரீட்சை எழுதிட்டு வந்தா, அதுல பாஸாகி இன்டர்வியூ வந்துச்சு. அதிலயும் செலக்ட் ஆகிட்டா. டெபாசிட் கேட்டாங்க. அப்புறம் அவங்க அப்பாவுக்குத் தெரிஞ்ச முதலாளி சிபாரிசு இருந்ததால டெபாசிட் கட்ட வேண்டியதில்லாமப் போச்சு.''
``ரொம்ப சந்தோஷமாயிருக்கு ஆன்ட்டி. எங்கப்பாவுக்கும் இந்த இடம் முடியாமபோயிடுச்சேன்னு எங்கண்ணன் மேல கோபமாவும் இருந்தாரு. இப்போ திரும்பவும் எடுத்துச் சொல்லியிருக்காரு. குடும்பத்துக்கு குணம்தான் முக்கியம். நிறமில்லே. அதுவும் போக கமலியோட நிறம்கூட கறுப்பில்லை மாநிறம்தான். மற்றபடி அழகான பொண்ணுதான்னு எடுத்துச் சொன்னாரு. இப்போ பேங்க்ல வேலை கிடைச்சிருக்கு. உனக்காக வேணும்னா இன்னொரு தடவை அங்கபோய் பேசுறேன்னு அண்ணன்கிட்டே சொன்னாரு. அவனுக்கும் முதல்ல மறுத்தது உள்ளுக்குள்ள உறுத்திட்டேயிருந்துக்கும்போல. உடனே சரிப்பா உங்க இஷ்டம்னுட்டான்.''
``அப்படியா?''
``அதான் உங்ககிட்டே விஷயத்தைச் சொல்லி உங்க விருப்பத்தை தெரிஞ்சுக்கிட்டு போன் பண்ணச் சொன்னார்.''

``நல்லது சுதா... இருந்தாலும் நாங்க கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு, எப்படியும் ரெண்டு நாள்ல சொல்லிடுறேன்''

``சரி ஆன்ட்டி.'' புறப்பட்டாள் சுதா.
சுதா சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு மெள்ளச் சிரித்தபடி சொன்னாள் ஜெயா. ``இதை நான் எதிர்பார்க்கவேயில்லேங்க. ஒரு பக்கம் நினைச்சா சந்தோஷமாயிருக்கு ஆனா ஜாதகம் சரியில்லேன்னு சொன்ன பிறகு எப்படி...''
``இதை நான் எதிர்பார்த்தேன் ஜெயா. ஜாதகம் பொருத்தமில்லேன்னு சொன்னதெல்லாம் ஒரு சமாதானத்துக்குத்தான். பையன் கறுப்பாயிருந்தாலும் தனக்கு வர்ற பொண்டாட்டி சிவப்பாயிருக்கணும்னு விரும்புனதுதான் உண்மையான காரணம்.''

``ஆமாமா.. அவங்கப்பா ஜாதகத்தை சாக்கு சொன்னாலும் எங்கண்ணன் சிவத்த பொண்ணா எதிர்பார்க்கிறான்னு சுதா சொல்லிட்டா... இருந்தாலும் அது அந்தப் பையனோட சொந்த விருப்பம் நாம என்ன சொல்ல முடியும். ஆனாலும் இப்ப என்ன காரணம் சொல்வாங்க..''

``ஜாதகம் மீன்ஸ் சாதகம் தானே. நம்ம கமலிக்கு வேலை கிடைச்சிருக்குன்னு கேள்விப்பட்ட பிறகு ஜாதகத்தைக் கொஞ்சம் சாதகமா மாத்தியிருப்பாங்க.''

``எது எப்படியோ இந்தப் பையன்தான்னு பிராப்தம் இருக்கு போல...''
``அதை எப்படி தீர்மானிச்ச மாதிரி சொல்றே?''

``கமலிக்குக் கூட இந்த இடம் தட்டிப் போனதிலே உள்ளுர வருத்தம்தான். வெளியில்தான் சாதாரணமாயிருக்க முயற்சி பண்றா. இந்தப் பொண்ணு சுதா வந்து போனதைச் சொன்னா சந்தோஷப்படுவா.'' ``அந்தப் பையனுக்கு முதல்ல இஷ்டமில்லாமயிருந்துச்சு. அவரை எப்படி கன்வின்ஸ் பண்ணியிருப்பாங்க?''
``படிச்ச பையன்தானே நாலு விஷயத்தையும் யோசிச்சு பார்த்திருப்பாரு. இது ஒண்ணும் தப்புன்னு தோணலே.''
``அவங்க ஃபேமிலி நம்மள மாதிரி ஆடம்பரமில்லாம நமக்கேத்த மாதிரியிருந்துச்சுன்னு நிம்மதியாவும், திருப்தியாவும் இருந்துச்சு.''

``நானும் அப்படித்தான் நினைச்சேன். நம்ம வீட்டையும், நம்ம பொண்ணையும் பார்த்தவுடனே அந்தம்மாவுக்கும் அவருக்கும் பிடிச்சுப் போச்சு நகை நட்டெல்லாம் ரொம்ப எதிர் பார்க்கமாட்டோம்ன்னு வெளிப்படையாவே சொல்லிட்டாங்க.''

``அதனாலேயே இந்த இடம் தட்டிப் போனதிலே எனக்கு முதல்ல நிம்மதியாத்தான் இருந்துச்சு.''
``ஏதாவது ஏட்டிக்குப் போட்டியா பேசாதீங்க.''
``இல்லே ஜெயா, நாமளே கஷ்டப்பட்ட குடும்பம். நம்ம பொண்ணு போன இடத்துலயாவது சந்தோஷமா வசதியாயிருக்க வேணாமா.''

``அங்க என்ன குறையைக் கண்டுட்டீங்க. பையன் நல்லா தொழில் தெரிஞ்சவர்தான். சம்பாத்தியகாரருதான்.''

``ஆனா அவுக வீட்டுல கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.''

``அதுக்கு பார்த்தா ஆகுமாங்க... ஆளும் பேருமா சம்பாதிச்சுதான் கட்டிக்குடுக்கணும். மனசுக்குப் பிடிச்ச மாப்பிள்ளையா அமைச்சுட்டா எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கலாம்ங்க. அவுக அப்பாவும் அம்மாவும் பார்த்துட்டுப்போன மறுநாளே அந்தப் பொண்ணுங்க நம்ம கமலிகூட போன்ல பேசுன மாயமா இருந்துச்சுங்க கவனிச்சீங்களா?''

``கவனிச்சேன்... கவனிச்சேன். அப்பவே எனக்கு சங்கடமாத்தான் இருந்துச்சு. இந்தப் பொண்ணு மனசுல இப்படி ஆசையை வளர்த்திட்டிருகாங்களேன்னு... ஏதாவது நெகடிவ்வா ஆயிடுச்சுன்னா என்ன பண்றது. எப்படித் தாங்கிப்பாள்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.. அதே மாதிரி ஆயிடுச்சு.''

``அதான் இப்போ நல்லபடியா கூடி வருதுல்ல. எதுக்கு அனாவசியமா குழம்புறீங்க?''
``இருந்தாலும் கமலியை ஒரு வார்த்தை கேட்காம இந்த விஷயத்துல நாம முடிவெடுக்க வேணாம்னு தோணுது.''
``அவ ஒண்ணும் மறுப்பு சொல்லமாட்டா. பேசாம இன்னொரு நல்ல நாள் பார்த்து மறுபடி பேச வரச் சொல்லிடலாம்.''

``அதெப்படி உறுதியாச் சொல்றே?''
``முதல்ல மாப்பிள்ளை போட்டோவைப் பார்த்துட்டு எனக்குக்கூட அதிருப்தியாதான் இருந்துச்சு. என்ன இப்படி ஒல்லியா இருக்குற மாதிரியிருக்காரு! லட்சணமாக்கூட இல்லியேன்னு சொன்னப்போ உங்க மக என்ன சொன்னாள்னு ஞாபகமிருக்கா.''

``என்ன சொன்னா?''
``அந்தப் போட்டோ ஆறு மாசத்துக்கு முன்னே எடுத்ததாம். இப்ப நல்லாயிருக்கலாமில்லேன்னு சொன்னது நினைவில்லையாக்கும்.''
``அது சரி..''
அவ மனசுக்குள்ளயும் அவுக வீட்டுக்கு வாக்கப்பட்டுப்போற ஆசையிருக்கு. அதனால ஒண்ணும் சொல்லமாட்டா. நீங்க அவங்களுக்கு நல்லவிதமா சொல்லிடுங்க.''

``சரி...சரி..''
மறுநாள் மாலை கமலி வேலை முடிந்து வருவதற்கும் சுதா தன் மகனுடன் பஸ் ஸ்டாப்பில் நிற்பதற்கும் சரியாக இருந்தது. ஸ்கூட்டியை இவர்கள் பக்கம் திருப்பினாள் கமலி.

``வா கமலி... இப்போதான் வேலை முடிஞ்சு வர்றியா?''
``ஆமா சுதா.

கமலி... உங்கம்மா விபரத்தைச் சொன்னாங்களா''
``ம்...''

``அப்போ... எங்கப்பாவுக்குப் போன் பண்ணிச் சொல்லிடவா?''
``வேணாம் சுதா.''

``ஏன்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமா...''
``இல்லே வேற இடம்தான் நல்லதுன்னு தோணுது.''

``ஏன் என்னாச்சு கமலி... எங்க அண்ணனை உனக்குப் பிடிக்கலையா?''
``பிடிச்சிருந்தது முதல்ல...''

``பின்னே இப்ப ஏன் மறுத்துப் பேசுறே?''
``உங்கண்ணன்தான் காரணம்''

``அதான் இப்போ சம்மதிச்சுட்டான்ல''

``இருக்கலாம் சுதா. முதல்ல என்னைப் பார்த்தப்போ அவருக்குப் பிடிக்கலே. இன்னும் நல்ல நிறமா அழகா எதிர்பார்த்திருக்காரு. அது அவரு சொந்த விஷயம். மத்தவங்களுக்காக நம்ம கருத்தை ஏன் விட்டுக் கொடுக்கணும். சொல்லப்போனா அந்தப் பிடிவாதம்கூட எனக்கு அவர்மேல மதிப்பை உயர்த்ததான் செய்தது. இப்ப ஏன் இறங்கி வரணும்?''

``எங்கப்பா அவனை சத்தம் போட்டிருக்காரு கமலி. ஒரு பொண்ணு மனசை நோகடிச்சிட்டியேடான்னு...''

``இருக்கலாம் சுதா. ஆனாலும் இனி நான் அவரைப் பார்க்கிற போதெல்லாம் அவருக்குப் பிடிக்காத பொருளா முன்ன போய் நிக்குற மாதிரிதான் தோணும். அவரும் வேண்டா வெறுப்பா என் கூட பேசுற மாதிரிதான் இருக்கும். அதனாலதான் சொல்றேன். இந்தக் கல்யாணம் வேணாம் சுதா. எனக்கு யார் மேலயும் கோபமில்லே. உங்கப்பா அம்மா எல்லோரையும் கேட்டதாச் சொல்லு. அதோ நீங்க போற பஸ் வருது. நான் வர்றேன் சுதா..'' கமலி ஸ்கூட்டியைத் திருப்பி வீட்டை நோக்கி விரைந்தாள்.

வீட்டில் அம்மாவும் அப்பாவும் இவளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். காபியை நீட்டியபடி அம்மா கேட்டாள்.

``கமலி, அந்தப் பொண்ணு சுதா வந்து கேட்டா என்ன சொல்லட்டும்?''
``கல்யாண விஷயமா சுதா இனி இங்க வரமாட்டாங்கம்மா'' என்றாள் கமலி .

0 comments: