Wednesday, July 16, 2008

குண்டு கத்தரிக்காய், தக்காளி

அக்கா... குண்டு குண்டாய் ஊட்டி தக்காளியைப் பாருங்க! பெரிசு பெரிசாய் கத்தரிக்காயைப் பாருங்க! முழிமுழியாய் ஆஸ்திரேலிய கிரேப்சை வாங்கிட்டுப் போங்க!''

என்று மார்க்கெட்டில் நுழைந்தாலே இளைஞர்கள் கூவ ஆரம்பித்துவிடுவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும். எல்லாவற்றிலும் இரண்டு கிலோ வாங்கலாம் என்று... விலைதான் சற்று இடிக்கும்!

``ஆனால், இந்த குண்டான விஷயத்தில்தான் மனித ஆரோக்கியத்தின் வெடிகுண்டே இருக்கிறது'' என்கிறார் டாக்டர் நாகராஜன். மூளை நரம்புநோய் நிபுணர்.

``குண்டுத் தக்காளி, குண்டு உருளைக் கிழங்கு, குண்டுக் கத்தரிக்காய் ஆகியவை தற்பொழுது விஞ்ஞான வளர்ச்சியான `ஜெனிடிக் இன்ஜினீயரிங்கின்' மூலம் கிடைக்கிறது. எல்லாருக்கும் புரியும்படி ஜெனிடிக் இன்ஜினீயரிங்கைப் பற்றி விளக்கினால், மெகா சைஸ் வாழைப்பழங்கள். ஒரு நாளைக்கு 50 லிட்டர் பால் கரக்கும் பசுக்கள். இன்னும் சொல்லப்போனால், நாய் மாதிரி பசுக்களையும், பசு மாதிரி நாய்களையும் உருவாக்குவதே ஜெனிடிக் இன்ஜினீயரிங் ஆகும்'' என்கிறார் டாக்டர். இது எப்படி சாத்தியமாகும்?

``ரொம்ப சிம்பிள். மரபு அணுக்களாகிய `ஜீன்ஸை' அவைகள் தாவரமாகவோ, விலங்குகளாகவோ, பூச்சிகளாகவோ, மனிதனாகவோ இருக்கலாம். அவற்றின் இருப்பிடமாகிய `குரோமோசோம்' என்ற வீட்டி லிருந்து அதை எடுத்துவிட்டு புதிய ஜீன்களை அந்த இடத்தில் வைத்து விடுவதுதான். இது ஒரு உயிர் இடமாற்றம். இந்த `ஜீன்ஸ்' இடமாற்றத்திற்குக் கருவியாக பயன்படுவது வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள்தான். நுண்ணுயிரிகள், இந்த மாற்று ஜீன்களை தங்கள் தலைமேல் சுமந்துகொண்டு எவராலும் அணுகமுடியாத கருவறைக்குச் சென்று குரோமோசோம் என்கிற வீட்டில் உள்ள வேண்டாத உதவாக்கரை ஜீன்களைத் தூக்கி எறிந்துவிட்டு புது ஜீன்களை வைத்துவிட்டுக் கிளம்பிவிடும். அத்துடன் மேட்டர் ஓவர்'' என்று சுலபமாகச் சொன்னவர் தொடர்ந்தார்.

``இனிமேல் வளரப்போகும் கரு புதிதாகக் குடிவந்திருக்கும் ஜீனின் வளர்ச்சியைப் பொறுத்தது. அவை `பன்றி' ஜீனாக இருந்தால் பன்றி ஜீனைப் போல் தக்காளி வரும். மாட்டின் ஜீனாக இருந்தால் மாட்டு ஜீனைப் போல் தக்காளி வரும். இதனால் வெஜிடேரியனுக்கு ஜாலியா, சோகமா தெரியவில்லை. அதாவது நமக்கு மாடு மற்றும் பன்றி இறைச்சியை தக்காளி மூலம் சாப்பிடும் `பாக்கியம்' கிடைக்கும். இது சாதாரண `குண்டு'தான். அடுத்து வரும் விஷயம் ஜெலட்டின் குண்டு.

இந்த இயற்கைக்கு மாறுபட்ட தாவரங்களின் ஜீன்களில் உள்ள `நியூக்லிக் அமிலங்கள்' மிகவும் ஆபத்தானவை. இந்த அமிலங்கள் பெரும்பாலும் `கேன்சர்' திசுக்களில் உள்ள அமிலங்கள். குறிப்பாக இவைகள் ரத்த அணுக்களின் கேன்சர் எனலாம்.

வெடிகுண்டுகள் இத்துடன் நிற்கவில்லை.இந்த ஜெனிடிக் இன்ஜினீயரிங் சம்பந்தமாக உள்ள பயோ கழிவுகள் சுற்றுப்புறச் சூழ்நிலையுடன் கலப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று எவராலும் தற்சமயம் அனுமானிக்க முடியவில்லை. இந்த பயோவேஸ்டுகள் கண்டிப்பாக சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த பயோ வேஸ்டுகள் தானாக அழியும் வாய்ப்பு மிகவும் குறைவு. இவை பூமியையும் கெடுக்கிறது.

பல நுண்ணுயிரிகள் நமக்கு விவசாயத்திற்கும் மற்றும் வாழ்வாதாரங் களுக்கும் மிகவும் அவசியம். அவை நமக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் பல நல்ல வேதிப்பொருள்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. அதை இந்த பயோவேஸ்ட்டுகள் அழித்துவிடும் அபாயம் உள்ளதாம்!

ஒரு காலத்தில் இந்த பயோ வேஸ்டுகளால் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடலாம்'' என்று நாகராஜன் கூறுவது பயமுறுத்தினாலும் அதுவே யதார்த்தம் என்று புரிகிறது.

வெளிநாடுகளில் பல ஆராய்ச்சிக் கூடங்களில் இந்த ஜெனிடிக் இன்ஜினீயரிங் மூலம் விளையும் தாவரங்களைத் தடுக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறதாம்.

ஜெனிடிக் இன்ஜினீயரிங்கின் ஆபத்து பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே வெளிநாட்டிலிருந்து பெரிய பெரிய பழங்கள், காய்கறிகள் அழகழகான பாக்கெட்டுகளில் நம்மூர் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டன. அதேபோல் இம்முறையில் உருவான விதைகள்! இங்குள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் `இந்தோனேசியா ஆப்பிள், சீனா கிரேப்ஸ்' என்று போர்டு போட்டு நம்மூர் ஆட்களின் பர்ஸை பதம் பார்க்கிறார்கள்.

ஆக, அடுத்தமுறை இப்படிப்பட்ட அசாதாரணமான சைஸ் ஆப்பிள், ஆரஞ்சுகளை மார்க்கெட்டில் பார்க்கும்போது, வேகமாக நகர்ந்துவிடுவதுதான் உங்கள் குடலுக்கு நல்லது. றீ

எப்படி கண்டுபிடிப்பது?

இது ஜெனிடிக் முறையில் தயாரிக்கப்பட்டது என்று எப்படி கண்டுபிடிப்பது?

``சற்று கஷ்டம்தான். இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சியை முறையாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் நடைமுறையில் நான் சொல்லும் ஐடியா... சைஸ் மிகவும் அசாதாரணமாக இருக்கும். இன்னொன்று, பல நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல் அப்படியே `கல்' மாதிரி இருக்கும். எங்கள் வீட்டில் சோதனைக்காக கொஞ்சம் ஆப்பிள்களை வாங்கினேன். பதினைந்து நாட்களுக்குமேல் அப்படியே உள்ளது. சாதாரணமாக ஃபிரிட்ஜில் வைக்காவிட்டால் ஒரு வாரத்திற்குள் காய்கறிகளோ பழங்களோ வாடிவிடும் அல்லது அழுகிவிடும்!'' என்றார் டாக்டர் நாகராஜன்!

0 comments: