Friday, July 11, 2008

பயம்

முரளி இன்று இருபதாவது முறையாகப் பெண் பார்க்கப் போகிறான். ஒவ்வொரு முறையும் பெண் பார்த்தபிறகு எல்லாப் பெண்களையும் குட்டை, நெட்டை என்று ஏதாவது சாக்கு சொல்லித் தட்டிக்கழித்து விடுவாள் அவனது தாய் ராஜம். ஒரு சில பெண்களைப் பிடித்திருந்தும் அம்மாவின் பேச்சைத் தட்டமுடியாமல் பேசாமல் இருந்துவிடுவான் முரளி.

ஆனால் இன்று பார்த்த ரமாவை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. திருமணம் செய்துகொண்டால் அவளைத்தான் செய்துகொள்வது என்று உறுதிகொண்டான். பெண் தரப்பிலிருந்தும் சம்மதம் வந்துவிட்டது. முரளிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை வானத்தில் பறந்தான். ஆனால் வழக்கம்போல். `தொட்டாங்கு' சொல்லிவிட்டாள் ராஜம்.

``அந்தப் பெண்ணைப் பார்த்தால் ரொம்ப ராங்கிக்காரி போல இருக்கிறது. நமக்கு இந்த வரன் ஒத்து வராது. நான் உனக்கு வேறு வரன் பார்க்கிறேன்'' என்றாள்.

அவளுக்குப் பிள்ளை திருமணம் செய்துகொண்டால் தன்னை விட்டுவிட்டுத் தனிக்குடித்தனம் சென்றுவிடுவான் என்று பயம். ``அம்மா நான் உன்னை விட்டுத் தனிக்குடித்தனம் போகமாட்டேன்'' என்று முரளி பலமுறை சத்தியம் செய்தும், அவளது பயம் போகவில்லை. அவளது அர்த்தமற்ற பயத்திற்காக எத்தனை நாள் திருமணத்தைத் தள்ளிப்போடுவது? வயதோ 35ஐ நெருங்கிவிட்டது.

அன்று சுவாமிஜி ஒருவர் முரளி வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வந்திருந்தார். முரளி ஒரு முடிக்கு வந்தான். மாலை வீட்டிற்குச் சென்றவுடன், ``அம்மா இன்று எனது அலுவலகத்திற்கு துறவி ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டதும் எனக்கும் ஒரு யோசனை வந்தது. நானும் துறவறம் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனக்கும் துறவறத்தில் ஆசை வந்துவிட்டது'' என்றான்.

அதைக்கேட்ட ராஜம் பதட்டத்துடன் எதுவும் பேசாமல், எங்கேயோ கிளம்பிச் சென்றாள். அவள் அவ்வளவு அவசரமாகச் செல்வது மைலாப்பூர் ரமா வீட்டிற்குத்தான் என்று முரளிக்குத் தெரியும். தான் போட்ட திட்டத்தில் அம்மா ஏமாந்துவிட்டதை நினைத்து அவன் மனம் வருந்தினாலும் அவளது மனம் மாறியதைக் கண்டு மகிழ்ந்தான்.

0 comments: