Saturday, July 5, 2008

காந்தீயம்!

கண்டுகொள்ளப்படாத காந்தீயம்!


சென்னை: மகாத்மா காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்று கதர் துணிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது. இதனால் அரசே கதர் விற்பனையிலும் இறங்கியது. ஆனால் இன்றைக்கு அத்துறையின் நிலை என்ன...இதோ ஒரு அலசல்...தமிழக அரசுத்துறையில் ஒன்றான கதர் துறையின் கதர் கிராமத் தொழில் வாரியம் மக்களால் கவனிக்கப்படாத வாரியமாகத்தான் செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு கதர் வாரியமானது 1960-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கிராமப்புறங்களில் கதர் மற்றும் கிராமத் தொழில்களுக்கு நிதி உதவி செய்து, உற்பத்தி, விற்பனை, வேலை வாய்ப்பு அளித்தல் ஆகிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டதாகும்.கதர் துணி இரகங்கள், தேன், சோப்பு, தோல் பொருள்கள், கொலு பொம்மைகள் ஆகியவற்றுடன் சிறந்த கைவினை கலைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் தரமான பொருள்கள் இந்த வாரியத்தின் அங்காடிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.தமிழகம் முழுவதும் 149 அங்காடிகள் உள்ளன. ஆனால் விற்பனையைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவு லாபம் கிடைப்பதில்லை. 2007-2008-ம் ஆண்டில் ரூ.48 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால் ரூ.37.15 கோடிக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கான விற்பனை இலக்கு ரூ.57 கோடி நிர்ணயிக்கப்பட்டு இலக்கை அடைய புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து சென்னை குறளகத்தில் செயல்படும் கதர்துறை அலுவலகத்தின் உயர் அதிகாரி கூறும் போது, இந்த ஆண்டு கதர் பொருள்களைப் பொருத்தவரை உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். கதர் கிராமப் பொருள்களைப் பொருத்தவரை முதலில் விற்பனையை அதிகரித்து அந்த லாபத்தின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.ஆனால் பொது மக்கள் கதர் வாரியத்தை சரி வர கண்டு கொள்வதில்லை. மக்கள் மத்தியில் கதர் ஆடைகள் மற்றும் அந்த வாரியத்தின் பொருள்கள் விலை கூடுதலாக உள்ளது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.ஆனால் கதர் ஆடைகள் மற்ற ஆடைகளைக் காட்டிலும் விலை சிறிதளவு கூடுதலாக இருந்தாலும் அங்கு தயாரிக்கப்படும் பருத்தி, பாலிஸ்டர், பட்டு ஆடைகள் எந்த காலத்துக்கும் அணியக்கூடிய வகையில் நல்ல தரத்துடன் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவ காலத்திற்கும் தனித்தனியாய் ஆடைகள் வாங்க வேண்டிய ஆவசியம் இல்லை. கணிசமான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.இதுதவிர அங்கு விற்கப்படும் சோப்பு, தேன், தோல் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தனியார் கடைகளைவிட குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கிடைக்கின்றன.ஆனால் பொது மக்கள் நவராத்திரி கொலு சமயத்தில் மட்டும் கதர் அங்காடிகளுக்கு படையெடுக்கின்றனர். கொலு பொம்மைகளை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். அல்லது சில மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தேன் மட்டும் வாங்கிச் செல்கின்றனர்.மற்ற பொருள்களை கண்டு கொள்வதேயில்லை. ஒரு சில பெரிய தனியார் நிறுவனங்களும் அரசுத்துறைகளும் கதர் வாரியத்தின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருந்தாலும் பொது மக்களிடம் சரிவர சென்றடையவில்லை.தேவையான விளம்பரம் செய்யாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்றும் விளம்பரம் செய்யப் போதிய நிதியும் இல்லை என்கிறார் அலுவலகத்தில் விற்பனைத்துறையில் பணிபுரியும் ஊழியர்.மகாத்மாவாகவே இருந்தாலும், கவர்ச்சி விளம்பரம் இருந்தால்தான் போணியாகும் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது இன்றைய மார்க்கெட் பொருளாதாரம்!

0 comments: