Tuesday, July 15, 2008

ஒ.வி.சித்தியும் ,ஆல்டர்னேட் மருத்துவமும்

ஜலதோஷம் வந்துவிட்டால், `ஒரு வாரம்தானே! அது பாட்டுக்கு மூக்கோடு இருந்துவிட்டுப் போகிறது. அதற்காக டாக்டரிடம் எல்லாம் போய்க் கொண்டிருக்க முடியுமா?' என்று அலட்சியமாக அதற்கு நோய்கள் பட்டியலில் கடைசி இடத்தை ஒதுக்குவார்கள் சிலர்.

இன்னும் சிலர் `நரசிம்மராவ் ஃபார்முலா'வில் நம்பிக்கை உள்ளவர்கள். `எந்தப் பிரச்னை ஆனால் என்ன? அதன் போக்கில் விட்டுவிட்டால், அது தானாகவே ஸால்வ் ஆயிடும். நாம் ஒன்றுமே பண்ணவேண்டாம்' என்று விட்டுவிடுகிற வகை. ``ரெண்டு நாளா தோள் பட்டையில ஒரே வலியாக இருந்தது. நான் பாட்டுக்கு வலிச்சுட்டுப் போகட்டும்னு இருந்துட்டேன். இப்போ கம்ப்ளீட்டா வலியே போயிட்டுது. யு ஸீ, நம்ம பாடியிலயே இருக்கிற மெக்கானிசம் அதை அட்ஜஸ்ட் பண்ணிடும். இதுக்கெல்லாம் அலட்டிக்கொள்ளவே படாது!'' என்பது இவர்கள் பாயிண்ட்.

இதற்கு நேர் எதிர் ராஜாமணி.

வாரம் ஒரு தடவையாவது ஏதாவது ஒரு டாக்டரை தரிசனம் பண்ணாவிட்டால், அவனுக்குப் பிறவி எடுத்ததன் பயனே முழுமை ஆகாது. அதுவும் ஒரே டாக்டரை அல்ல. இந்த வாரம் டாக்டர் கண்ணன் என்றால், அடுத்த வாரம் டாக்டர் வெங்கடராமன். இரண்டு நாள் இருமல் இருந்து மருந்து சாப்பிட்டும் இருமல் நிற்கவில்லையானால், வேறொரு டாக்டரிடம் போய் இருமிக்கொண்டு நிற்பான். காலையில் பார்த்த டாக்டரை மாலையில் பார்க்கமாட்டான் ராஜாமணி. `அவர் ரொம்ப டயர்டா இருப்பார், மத்தியானம் வீட்டுக்குப்போகிறபோது. சாயந்தரம் மறுபடி கிளினிக்குக்கு வந்தால், ரொம்ப ரொம்ப டயர்டா இருப்பார். அவரால் என்ன டயக்னோஸ் பண்ணமுடியும்?' என்பான். இரண்டு பேஷன்ட்டிடம் ஒரே சமயத்தில் பேசுகிற டாக்டர் என்றால் ராஜாமணிக்கு இன்னும் அலர்ஜி. `அந்த நோயாளிக்குக் கொடுக்கவேண்டிய மருந்தை நமக்குக் கொடுத்துவிட்டால்...?'

ராஜாமணியைப் பார்த்துக் கொஞ்சநாள் ஆச்சே என்று மாலையில் அவன் வீடு தேடிப் போனேன்.

``கமலா!'' என்று இரைந்தான். நான் போய் சோபாவில் உட்கார்ந்ததும், ``இவனுக்கு ஒரு காபி கொண்டு வா. எனக்கும் அரை கப். ஆனால் சர்க்கரை போடாமல்!'' என்று சொல்லிவிட்டு, உதட்டை பர்ஸ் மாதிரி அமுக்கி ஓர் அசட்டுப் புன்னகை செய்தான். டயாபடீஸ்காரர்கள் காபிக்குச் சொன்னால், அப்படித்தான் செய்வார்கள் என்று எங்கேயோ யாரையோ ராஜாமணி பார்த்திருக்க வேண்டும்.

``ஏன் உனக்கு மட்டும் சர்க்கரை போடாமல்?''

``என் உடம்புலயே நிறைய சர்க்கரை இருக்காம்... டாக்டர் சொல்லிட்டார். அதுனால இனிமே நோ ஷுகர். முன்னாலேயே தெரிஞ்சிருந்தா ரேஷன் கார்டுலகூட ஷுகர் வேண்டாம்னு எழுதிக் கொடுத்திருப்பேன். ஸோ, நோ ஸ்வீட், நோ மைசூர்பா, நோ அக்கார வடிசல்...''

``நீயா? நோ அக்கார வடிசலா! இம்பாசிபிள். அரை லிட்டர் அக்கார வடிசலை அரை மணியில் உள்ளே தள்ளுகிறவன் நீ. அரைக் கிலோ மைசூர்பாவை அரை நாளில் தீர்க்கிறவன் நீ.''

``நீ பார்க்கத்தானே போகிறே!'' என்றான் ராஜாமணி, எனக்கு சவால் விடுகிற மாதிரி.

மறுநாள் மார்க்கெட்டில் கையும், பையுமாக நின்றுகொண்டிருந்த ராஜாமணி, ``இன்னிக்கு ஆபீஸ் விட்டதும் நேரா வீட்டுக்கு வா. எங்கியும் போயிடாதே!'' என்றான் கையைப் பிடித்துக்கொண்டு.

``ஏன், பாகற்காய் ஜூஸ் போட்டு வைத்திருக்கிறாயா என்ன? சரி, இன்றைக்கு எந்த டாக்டரிடம் போனாய்? இன்றைக்குப் புதுசா என்ன டிசீஸ் உன்கிட்டே டாக்டர் கண்டுபிடிச்சார்?'' என்று கேட்டேன் கிண்டலாக.

``எந்த டாக்டர்கிட்டே போகணும்? ஊரில் இருந்து காலைலதான் என் ஒண்ணுவிட்ட சித்தி வந்தா...''

``ஒண்ணுவிட்ட சித்தியா? எப்படிடா ராஜாமணி, அப்படி எல்லாம் உறவு இருக்க முடியும்? உளறாதே!''

``ஒண்ணுவிட்ட மாமா இருக்கலாம்னா, ஒண்ணுவிட்ட சித்தி இருக்கப்படாதோ? அதாவது எங்க அப்பாவோட கஸினோட ஒய்ஃப்!''

``சரி, ஒண்ணுவிட்ட சித்தி வந்திருக்கா. அவ என்ன டாக்டரா?''

``டாக்டரா! டாக்டருக்கெல்லாம் டாக்டர். பாட்டி வைத்தியத்தில் கொள்ளுப்பாட்டி. சர்வரோக நிவாரணின்னு சொல்லுவோமே, அதோட அத்தாரிட்டி. இப்போ எல்லாம் ஆல்டர்னேட் மெடிசின் என்கிறோமே அதிலே ஸ்பெஷலிஸ்ட்! தலைவலின்னு கார்த்தால சொன்னேன். அவ்வளவுதான். கடுகோ, சீரகமோ தாளிச்சு வைச்சிருந்தாள் கமலா. அதை எடுத்து ஓர் அரை அரைச்சுத் தலைலே அப்பினாள். சரியா ஐம்பதே நிமிஷம். ஐயோடான்னு தலைவலி ஓடியே போயிடுத்து!''

``அரைமணியில போகிற தலைவலி ஐம்பது நிமிஷத்துல போயிருக்கு. அம்பது பைசா மாத்திரையில போற தலைவலி, அஞ்சு ரூபா மளிகை சாமான்ல போயிருக்கு உனக்கு!''

``அப்படியா சொல்றே?''

``அப்படித்தான் சொல்றேன். முதல்ல உன் ஒண்ணுவிட்ட சித்தி உன்னிடம் பாட்டி வைத்தியம் சொன்னால், இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடு. இல்லேன்னா உன்னோட மளிகை பில் எக்கச்சக்கமா எகிறிடும்!'' என்று எச்சரித்தேன்.

``அட கடவுளே! ஒண்ணுவிட்ட சித்தி இன்னும் ஒரு மாசம் இங்கே இருப்பாள் போலிருக்கு. இந்த ஒரு மாசத்துல எனக்கோ, கமலாவுக்கோ உடம்புக்கு ஒண்ணும் வந்து தொலைக்காமல் இருக்கணும்!'' என்றான் ராஜாமணி.

தற்செயலாக ராஜாமணியின் கையில் இருந்த இரண்டு பெரிய பைகளையும் பார்த்தேன். ஒரு வாரத்தக்கு மூன்று வேளை ரசவாங்கி வைக்கிற அளவுக்குக் கத்தரிக்காய்!

``என்னடா இது! ஹோல்சேல்ல கத்தரிக்காய் வாங்கி, ரீடெய்ல்ல வியாபாரம் பண்ண எப்ப ஆரம்பிச்சே நீ?''

``அதை ஏன் கேட்கிறே? கத்தரிக்காய் ஆன்டி_செப்டிக்காம். சாப்பாட்டுல நிறைய சேர்த்துக்கணுமாம். இன்ஃபெக்ஷனே வராதாம். ஒ.வி. சித்தி சொன்னாள்.''

``இதுலே எத்தனை முத்தலோ சொத்தையோ! `எத்தனை தரம் சொன்னாலும் இந்த அழுகல் கத்தரிக்காய் வாங்கி வர எப்படி மனம் துணிந்தீர் என் ஸ்வாமி? சொத்தையோ சொள்ளையோ அத்தனையும் அள்ளி வருகிறார். சொத்தையே அதுக்கு எழுதிக்கொடுக்கிறார்'னு கமலா பரதநாட்டியத்திலே ஒரு பதமே ஆடி விடுவாளே? கலாகே்ஷத்திராவிலே கத்துண்டவள் ஆச்சே! இது எத்தனை நாளைக்கு? ஒரு வாரத்துக்கா?''

``நோ, நோ, இன்னிக்கும் நாளைக்கும். புதன்கிழமையும் வியாழக்கிழமையும் வெண்டைக்காய். ப்ரெயின் நல்லா வேலை பண்ணணும்னா வெண்டைக்காய் நிறையச் சாப்பிடணுமாம். ஞாபகசக்தி வரணும்னா வெண்டைக்காய் நிறைய சேர்த்துக்கணுமாம். ஒ.வி. சித்தி சொன்னாள்!''

``ராஜாமணி, முன்னால மளிகைக் கடை பில்தான் ஏறிட்டு இருந்தது உனக்கு. இப்போ கறிகாய்க் கடை பில்லும் ஏறப் போறது, ஜாக்கிரதை! முதலில் உன்னோட ஒ.வி. சித்தியை பாக் பண்ணி பாகிஸ்தானுக்கு அனுப்பப் பார். அங்கே போனா சீக்கிரத்திலே திருப்பி அனுப்பமாட்டாள்!'' என்றேன், அவன் மாட்டிக்கொண்டு படுகிற அவஸ்தையைப் பார்க்க முடியாமல்.

``நீ எதுக்கும் சாயந்தரம் வீட்டுக்கு வா. நான் மட்டும் தனியா சொன்னா சித்தி கேட்கமாட்டா!'' என்றான் ராஜாமணி.

மறுநாள் மாலை ராஜாமணியைப் பார்க்கப் போனபோது, ஒரு கையால் வயிற்றைப் பிடித்தபடி, எட்டுக்கால் பூச்சியாட்டம் கட்டிலில் படுத்திருந்தான்.

மூன்று வேளையும் கத்தரிக்காய் கூட்டும், கத்தரிக்காய் ரசவாங்கியும், கத்தரிக்காய் கொத்ஸும், கத்தரிக்காய் துவையலும், கத்தரிக்காய் எண்ணெய் வதக்கலும் சாப்பிட்டால் ராஜாமணி என்ன, ராட்ஸசமணிகூட வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்க வேண்டியதுதான்!

``என்னோட ஃபைலிங் கேபினட்டைத் திற!'' என்றான்.

``ஃபைலிங் காபினட்டா!''

``ஆமாம். புதுசா காத்ரெஜ்ல இருந்து வாங்கினேன். பழையபடி என்னோட டாக்டர்கள் கிட்டயே ஒரு ரவுண்டு கன்சல்ட்டேஷன் பண்ணிடலாம்னு தோணித்து. பேப்பர்ஸ் நிறையச் சேர்ந்துபோச்சு. ஒண்ணுல டயக்னாஸ்டிக் ரிசல்ட்ஸ், லெட்டர்ஸ் எல்லாம் தனியா ஃபைல் பண்ணி வச்சிருக்கேன். இன்னொண்ணுல தலைவலிக்காக டாக்டர் பன்னீர்செல்வம் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன்ஸ், எக்ஸ்ரே, ஸ்கேன், ரிப்போர்ட்ஸ். மூணாவது ஃபைல்ல டாக்டர் கண்ணனோட பிரிஸ்கிரிப்ஷன்ஸ். எல்லாம் டயபடிக் ட்ரீட்மெண்ட்டுக்கு. அடுத்தது டாக்டர் முரளியோட, வயிற்றுவலி சம்பந்தமா கன்சல்ட் பண்ணின பேப்பர்ஸ், அல்ட்ரா ஸோனோ கிராம், எண்டோஸ் கோபி ரிசல்ட்ஸ். அஞ்சாவது மஞ்சள் ஃபைல்ல, கார்டியாலஜிஸ்ட் காமேசுவரன் எடுத்த ஈஸிஜி, ஆஞ்சியோகிராம் எல்லாம் இருக்கு. ஆ... ஆ... அந்தப் பச்சை ஃபைல்ல டாக்டர் வெங்கட்ராமன் ஜலதோஷம் வந்து மூக்கு ஒழுகினா என்ன பண்ணணும்னு கொடுத்த மருந்துகளோட லிஸ்ட். அடுத்தது ஜெனரல் ஹெல்த் செக்கப் பண்ணிட்டதுக்கு...''

எனக்குத் தலை தட்டாமாலையாகச் சுற்றியது.

``ராஜாமணி, நீ ஒரு நடமாடும் ஆஸ்பத்திரி! நீ ஒரு மொபைல் லாபரடரிடா! ஜெரோம் கே.ஜெரோம் இருந்திருந்தா, உன்னை வச்சு, சிரிக்கச் சிரிக்க ஒரு நாவலே எழுதியிருப்பார்!''

``ஆமா, உனக்குச் சிரிப்பா இருக்கு. எனக்குப் பிராணன் போகிறது! இங்கே பக்கத்துல வா... என் வயித்தைத் தொட்டுப் பாரு!''

``கடப்பா கல்லாட்டம் இருக்குடா ராஜாமணி. தோசையோ, சப்பாத்தியோ ஈஸியா போட்டு எடுத்துடலாம். கிரானைட் கல்லாட்டமும் இருக்கு. வீரமணிகிட்ட சொல்லி எக்ஸ்போர்ட் பண்ணினா, உன்னோட மெடிகல் எக்ஸ்பென்ஸ் அவ்வளவும் கவர் ஆயிடும்! அவ்வளவு ஸ்ட்ராங்கா, அவ்வளவு பளபளப்பா இருக்கு. ஆமா, எங்கே போயிருக்கா உன்னோட ஒண்ணுவிட்ட சித்தி? அவளையே கேட்கிறதுதானே?''

``அவளா! ஹ... ஹ... நான் பிள்ளைத் தாய்ச்சி மாதிரி பிஹேவ் பண்றேனாம். `பிரசவம் பார்த்துட்டுப் போகட்டுமாடா ராஜாமணி!'ன்னு கிண்டல் பண்றா!''

ராஜாமணியின் ஃபைலிங் காபினட்டில் இருந்த மொத்த ஃபைல்களையும் எடுத்து வெளியில் போட்டேன்.

``டே... டே... டே... என்னடா பண்ணப் போறே, பாவி! என்னோட உசிரே அந்தப் பதினாலு ஃபைல்லதாண்டா இருக்கு!''

``இன்னும் பத்து ஃபைல்கூட சேர்த்து, கின்னஸ் ரிக்கார்டுக்கு அப்ளை பண்ணு. ஒரு சிங்கிள் பேஷன்ட்டுக்கு டூ டஸன் ஃபைல்ஸ் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது ராஜாமணி. வாசல்ல எல்லாத்தையும் கொண்டு போய் வை. முனீம்மாகிட்டே சொல்லி, கொஞ்சம் கிருஷ்ணாயில் கொண்டு வரச் சொல்லு. இது மேல ஊத்து. இஸ்திரிக்கார பாண்டு கிட்டே தீப்பெட்டி வாங்கி ஒரு கொளுத்து கொளுத்து! உன் ஒண்ணு விட்ட சித்தியை உடனே காசிக்கோ, பத்ரிநாத்துக்கோ யாத்ரா ஸ்பெஷல்ல அனுப்பி வை!''

``டே... டேய்... நடக்கிற விஷயமாய்ப் பேசுடா!''

``நடக்கிறதைத்தான் சொல்றேன். உன்னோட பிளட்ஷுகர் ரிப்போர்ட் பார்த்தேன். சாரி, உன்னோடது இல்லே அது. உனக்கு ஷுகரும் இல்லே. சால்ட்டும் இல்லே. ரிப்போர்ட்டே மாறிப்போயிருக்கு!''

``பின்னே யாரோடது அது?''

``யாரோ டி.ஆர்.ராஜாமணின்னு போட்டிருக்கு. நீ கே.எஸ்.ராஜாமணிதானே?''

``ஆமா.''

``உனக்கு 45 வயசுதானே?''

``ஆமா. 45தான்!''

``இதுல 54ன்னு போட்டிருக்கு. உன்னோட டாக்டர் வெங்கட்ராமன் தானே?''

``ஆமா.''

``இதுல ரங்கனாதன்னு போட்டிருக்கு. போதுமா? நீ இதை எல்லாம் நம்பி அழகா ஃபைல் ஃபைலா பண்ணி வச்சுட்டு, ஆகா, நமக்கு டயாபடீஸ் வந்திருக்கு, இஸ்கீமியா வந்திருக்கு, லெப்டோ_பெரோசிஸ் வந்திருக்குன்னு டெஸ்ட் டெஸ்டா எடுத்து, கலர் கலர் ஃபைல்ல போட்டு வச்சிருக்கே. வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் ஏதோ எம்.எஃப். ஹுசேன் பெயிண்டிங் வாங்கின மாதிரி எடுத்து எடுத்துக் காட்டிண்டு உட்கார்ந்திருக்கே!''

``அப்போ எனக்கு ஷுகர் இல்லேங்கறியா நீ? ஆர் யூ ஷ்யூர்?''

``ஹன்ட்ரட் பர்சென்ட்! முன்னால இந்த டி.ஆர்.ராஜாமணிங்கிறவர்கிட்டே அவரோட ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை சேர்க்கிற வழியைப் பார்ப்போம். அவர் பாட்டுக்கு உன்னோட ரிப்போர்ட்டை வச்சிட்டு மைசூர்பா, ஜிலேபின்னு உள்ளே தள்ளப் போறார். பாதாம்கீர் _ பாதாம் ஹல்வான்னு `சந்திரலேகா' குதிரை மாதிரி கேட்டுக் கேட்டு வெட்டப் போறார். அப்புறம் காலையே வெட்டற அளவுக்கு ஆயிடப் போறது அவருக்கு. முன்னால் அந்த ஹாஸ்பிடல் லாபுக்குப் போய் அதைக் கொடுத்துட்டு வந்துடுவோம். அப்புறம் உன் ரிப்போர்ட்டைப் பத்தி விசாரிப்போம். கிளம்பு!'' என்று ராஜாமணியை உசுப்பிவிட்டேன்.

வயிற்றைப் பிடித்துக்கொண்டே எழுந்தான் ராஜாமணி.

``நீ ஒண்ணும் வயிற்றைப் பிடித்துக்கொள்ளவேண்டாம். அது ஒண்ணும் லபக்னு கழண்டு விழுந்துடாது. தைரியமா கையை எடுத்துட்டு நடந்து வா. வயிறு அப்படியே அதன் இடத்துலயே இருக்கும்!'' என்றேன். ``கமலா... கமலா...!'' என்று இரைந்தான் ராஜாமணி.

``உங்க ஒண்ணுவிட்ட சித்தி ஊருக்குப் போறேன்னா. அவளோட ஒண்ணுவிட்ட தம்பியோட ரெண்டுவிட்ட அத்தான் பையனுக்கு உடம்பு சரியில்லையாம். இவள் போய்த்தான் வைத்தியம் பண்ணணுமாம். புறப்பட்டுட்டிருக்கா...''

``பாவம் அந்தப் பையன்! சரி... அந்த ரெண்டு பை நிறைய வெண்டைக்காய் வாங்கி வச்சிருந்தேனே, கமலா? அதையும் அவளையே எடுத்துட்டுப் போகச் சொல்லு. ரெண்டுவிட்ட அத்தான் பையன் அதையெல்லாம் சாப்பிட்டு விட்டு ஒண்ணுவிட்ட சித்தியை ரெண்டு விடு விடட்டும்!''

``வெண்டைக்காயா! அதை எல்லாம் உங்க மெடிக்கல் ஷாப் வைச்சிருக்கிற ஃப்ரெண்டு, அழ. அழ. வழ. வழ. கொழ. கொழ. வள்ளியப்பன் அப்பவே வாங்கிண்டு போய்ட்டாரே! காரைக்குடிக்கு அனுப்பணுமாம். என்னவோ வெண்டைக்காய் ஊறுகாய் போடப் போறாராம்!''

ஒண்ணுவிட்ட சித்தி அவசர அவசரமாக ஓடிவந்தாள். ``டே ராஜாமணி, நான் வேணா உன் வயித்துக்குச் சுக்கும், இஞ்சியும் போட்டு மிளகாய் வற்றல் கஷாயம் பண்ணி வைக்கட்டுமா?'' என்று முன்னால் வந்தாள். ``ரெண்டே நிமிஷத்துலே போயிடும்!''

``எது, என் பிராணனா?'' என்று ராஜாமணி என் காதோடு சொன்னது ஒ.வி. சித்திக்குக் கேட்டதோ, என்னவோ.

ஆனால் அவசர அவசரமாக ஒண்ணுவிட்ட சித்தி மாடிக்கு ஓடிப்போய், கொடியில் உலர்த்தியிருந்த மடிப்புடைவையை எடுத்து மடித்து வைத்துக்கொண்டு புறப்படத் தயாராகக் கீழே விரைந்து வந்தாள். சரியான கோபம் போல.

வந்தவள் படிக்கட்டில் கால் தவறி விழுந்ததில், முதுகு எலும்புகளில் கணிசமான சிலவும், இடுப்பு எலும்பும் கூட்டணி சேர்ந்துகொண்டு மளுக் என்று ஒடிய, ஏதோ ராமர் சிவதனுசு ஒடித்த மாதிரி மடேரென்று கீழே விழுந்தாள். ஒ.வி.சித்தி.

கமலாவும் ராஜாமணியும் அலறிப்புடைத்துக்கொண்டு அவளைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தினார்கள். ``எக்ஸ்ரே எடுக்கணும் சித்தி. அப்படியே ஆடாது அசங்காது இரு!'' என்றான் ராஜாமணி, ஊத்துக்காடு பாட்டு நினைவுக்கு வந்து.

``எனக்கு ஒண்ணும் ஆகலே. கடலை மாவையும், கருமிளகையும் அரை அரைக்கிலோ அரைச்சு முதுகிலே வைச்சுக் கட்டிட்டா ஆறே மாசத்துல தானா சரியாப் போயிடும்!'' என்றாள் ஒண்ணுவிட்ட சித்தி. ``ஐயோ, ஆறு மாசமா!'' என்று கமலாவும், ராஜாமணியும் அலற, நான் மெதுவாக நடையைக் கட்டினேன்.

ரெண்டுவிட்ட அத்தான் பையன் தப்பித்தானே என்ற சந்தோஷம் எனக்கு. <

0 comments: