Tuesday, July 15, 2008

புகைப்பழக்கம் !

உங்களுக்குத் தெரியுமா?

தினசரி 1 பில்லியன் சிகரெட்டுகளை இந்தியர்கள் ஊதித் தள்ளுகிறார்கள்.

இந்தியாவில் தயாராகும் சிகரெட்டுகளில் டார் அளவும், நிகோடின் அளவும் மேலைநாடுகளில் தயாராகும் சிகரெட்டுகளில் இருப்பதைவிட அதிகம் இருக்கின்றன.

புகைக்கப்படும் ஒவ்வொரு சிகரெட்டும் குடிப்பவரின் ஆயுளில் 7 நிமிடங்களைக் குறைக்கவல்லது.

புகையிலையில் 4000 இரசாயனப் பொருட்கள் உள்ளன.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 9,00000 பேர் புகையிலையால் இறக்கின்றனர்.

புகையிலைப்பொருட்கள் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 24000 கோடி ரூபாய்களுக்கு விற்பனையானாலும், புகையிலையினால் ஏற்படும் உடல்நலப்பாதிப்புகளுக்கு இலவச சிகிச்சைக்காக 27000 கோடி ரூபாய்களை இந்திய அரசாங்கம் செலவழிக்கிறது.

புகைப்பழக்கத்தைப் பொறுத்தவரை மருத்துவ ஆராய்ச்சியில் 1988_ம் வருடம் ஒரு முக்கிய காலகட்டம். 2500 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் `முடிந்த முடிவு' புகைப்பழக்கம் ஏதோ ஒரு சாதாரணப் பழக்கம் மட்டுமல்ல, ஹிராயின், கோகெயின் போன்று சிகரெட்டில் உள்ள நிகொடின் என்ற பொருளும் போதைக்கான சகல இலக்கணங்களையும் கொண்டிருக்கிறது என்று சர்ஜன்ஸ் ரிபோர்ட்டில்' வெளியானது.

பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்துக்கு முன்பே புகைப்பழக்கம் இருந்திருப்பதாக கி.பி.600_ல் கண்டெடுக்கப்பட்ட `மாயான் கல்லில்' உள்ள எழுத்துக்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் புகைப் பிடிக்கும் வழக்கம் ஆரம்பமானது பற்றி கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் 1492_வது வருடத்திய டைரிக் குறிப்புகள் விளக்குகின்றன.

முதலாம் ஜார்ஜ் மன்னர் 1604_ல் புகைப்பழக்கத்தின் தீமைகளை நன்கு உணர்ந்திருந்தார். புகைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வரிவிதித்தார். சிலவருடங்களில் கட்டுப்படுத்துவதற்காக மேலும் வரியை உயர்த்தினார். அதற்கப்புறம்தான் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதைப் போல், அனைத்து அரசாங்கங்களும் தடைசெய்வதற்குப் பதிலாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையில் புகையிலைக்கான வரிவிதிப்பில் சிக்கிக்கொண்டன.

புகையிலையைப் பொடியாக நாசித்துவாரங்களிலும், ஈறுகளுக்கும், கன்னத்து சதைகளின் உட்பகுதிக்கும் இடையேயும் பயன்படுத்துகிறார்கள். புகை புகையாக ஊதித்தள்ளுகிறார்கள். புகையை உள்ளிழுத்தவுடன் 25 சதவிகிதம், நுரையீரல்களின் கடைசித் திசுக்களுக்குப் பரவுகிறது. மூளையை பதினைந்தே வினாடிகளில் சென்றடைகிறது. புகையிலைப் பழக்கத்தால் ஒருவர் கார்பன்மோனோ ஆக்ஸைட், நைட்ரோஸமைன், அரோமாடிக் அமைன், பென்ஸ்பைரீன் போன்ற புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களை இலவசமாகப் பெறுகின்றார்.

எல்லா கலாச்சாரங்களிலும் வளர் இளம்பருவத்தில் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. நண்பர்களின் சூழல், புகைப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தால், இவர்களும் பொறியில் எளிதாக சிக்கிக் கொள்கிறார்கள். புகைப்பிடித்தால்தான் தன்னை தன் நண்பர்கள் மதிப்பர் என்ற நிலையில் சிலர் ஆரம்பிக்கின்றனர். சிகரெட் குடிப்பதால் ஒரு முரட்டுத்தனமான ஆண் இமேஜ் கிடைப்பதாக சிலர் தவறாக இந்தப் பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர். பெற்றோர்களும் மற்ற அண்ணன் தம்பிகளும் புகைப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தால், அந்த இளைஞனும் புகைப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

விளம்பரங்கள் ரகசியத் தூண்டில்கள். கடந்த காலங்களில் தயாரிப்பாளர்கள் புகையிலைப் பொருட்களை கவர்ச்சிகரமான விளம்பரங்களால் முன்னிறுத்தினர். மலையிலிருந்து குதிப்பது, கடலில் டைவ் அடித்து ஆழ்கடலுக்குச் செல்வது, மிகவேகமாக காரை ஓட்டுவது போன்ற சாகசங்களைப் புரிந்தபின் அந்த விளம்பர மாடல்கள் ஸ்டைலாக `தம்' அடிக்கிறார்கள். சாகசம் புரியும் ஆண்களின் சகவாசம் எப்பொழுதும் சிகரெட்டாக இருக்கிறது. படம் பார்க்கும் நம் இளைஞனையும் பற்றிக் கொள்கிறது. சாகசம் பண்ணமுடியாமல் போனாலும், அந்த விளம்பர மாடல்களைப் போல் சிகரெட்டைக் குடிப்பதன் மூலம் அந்த ஆண்களுக்குப் பக்கத்தில் தான் இருப்பது போன்ற பொய்யான உணர்வு கிட்டுகிறது. மேலும் மேலும் புகைக்கத் தொடங்குகிறான்.

சில விளம்பரங்களில், வெற்றிகரமான ஆண்கள் புகைப்பிடிப்பதாகக் காண்பிக்கப்படுகிறது. கடுமையாக உழைக்கும்போது, குறிக்கோளை அடைய முயற்சி செய்யும்போது, வெற்றி கிட்டியபின் என்று பல்வேறு நிலைகளில் புகைப்பிடிப்பதாக காண்பிக்கப்படுகிறது. மிகமிக சாமர்த்தியமான இந்த விளம்பரத்தில் நம் இளைஞன் சிக்கிக் கொள்கிறான்..

திரைப்படங்களில் நம் இளைஞனுக்குப் பிடித்த ஹீரோ சோகமாகும்போது, சந்தோஷமாக இருக்கும்போது, கதாநாயகியுடன் பாடும்போது, காரோட்டும்போது புகைப்பிடிக்கிறார். நம் இளைஞன் தன்னுடைய ஆதர்ச புருஷருடன்' ஐக்கியமாகிறான். சில காட்சிகளில் ஹீரோ பயங்கரப் பிரச்னையை எதிர்கொள்வார். (நமக்கே அவரைப் பார்த்து பரிதாபமாக இருக்கும். என்ன செய்யப்போகிறாரோ என்று மனசு அடித்துக்கொள்ளும்) அப்போது பாக்கெட்டிலிருந்து எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து புகையை வெளியேவிட்டு யோசிப்பார். சிலவினாடிகளில் அவருக்கு ஒரு ஞானோதயம் ஏற்படும். உடனடியாக அனைத்துப் பிரச்னைகளையும் வெற்றிகொண்டு விடுவார். இந்தக் காட்சி அமைப்பில் நம் இளைஞர் விழுந்து விடுவார்.

புகைப்பழக்கம் எந்த வயதிலும் பற்றிக்கொள்ளலாம். எப்போது ஆரம்பித்தாலும் அடிமையாவதற்கு வாய்ப்பிருக்கிறது. பொதுவாக வளர் இளம்பருவத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பழக்கம் சில மாதங்களில் அந்த ஆணை அடிமையாக்குகிறது. பின்வருபவைகள் புகைப்பழக்கம் ஆரம்பித்ததற்கான காரணங்கள் என்று பல ஆண்கள் கூறுகின்றனர்.

``சுறுசுறுப்பை உண்டாக்குகிறது''

``சந்தோஷத்தைக் கொடுக்கிறது''

``என்னால் நன்றாக வேலைசெய்ய முடிகிறது''

``பயம், பதட்டம், கோபம், விரக்தி, வெறுப்பு இவைகளிலிருந்து விடுபட முடிகிறது''

``அது இல்லையென்றால் எதையோ இழந்தது போலிருக்கிறது.''

``நிறுத்திவிட்டால் நடுக்கம், எரிச்சல், கோபம், தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படுகிறது.''

மேற்கூறியக் காரணங்களில் இம்மியளவும் உண்மையில்லை.

நிகோட்டினில் இருக்கும் டோபமைன், அசிட்டைல்கோலின் போன்ற நரம்பு மண்டல இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இரசாயனப் பொருட்களினால் ஏற்படும் மாறுதல்கள்தான் புகைப்பழக்கத்தை எளிதில் விடமுடியாததற்கான முக்கிய காரணம்.

ஒரு பழக்கத்துக்கு எப்படி மனிதர்கள் அடிமையாகிறார்கள் என்பதை இவான் பெட்ரோவிட்ச் பாவ்லவ் எனும் புகழ்பெற்ற நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் பரிசோதனை மூலமாக தெரிந்துகொள்ளலாம். ஒரு நாய்க்கு முன் உணவு வைக்கப்பட்டது. உணவைப் பார்த்தவுடன் நாயின் வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தோடியது. பின் உணவு வைக்கப்பட்டு கூடவே மணியோசை ஒலிக்கப்பட்டது. அப்போதும் வாயிலிருந்து உமிழ்நீர் வெளிப்பட்டது. கடைசியாக அந்த நாயின்முன் வெறும் மணியோசை மட்டும் ஒலித்தது. உணவில்லாத அந்த நேரத்திலும் உமிழ்நீர் வெளிப்பட்டது. இதிலிருந்து, தூண்டுதல் தரும் ஒன்றோடொன்று தொடர்புடைய பொருட்கள் சேர்ந்து ஏற்படுத்தும் விளைவுகள் முன்னனுபவத்தையொட்டி அதில் ஒன்றுமட்டும் இருந்தால்கூட ஏற்படும் என்று விளக்கப்பட்டது. ஆண்களும் வேலைசெய்யும்போது, படிக்கும்போது, வெளியில் செல்லும்போது புகைக்கிறார்கள். இந்தப் பரிசோதனையின்படி, வேலையைப் பற்றி, படிப்பதைப்பற்றி, வெளியில் செல்வதைப் பற்றி சிந்திக்கும்போதே, அவர்களுக்குப் புகைப்பழக்கத்தைப் பற்றி ஞாபகம் ஏற்படுகிற கண்டிஷனுக்கு உள்ளாகிறார்கள்.

மனப்பிரச்னைக்குள்ளானோர் மத்தியிலும், மனநோய்க்குள்ளானோர் மத்தியிலும் புகைபிடிக்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது. மனவருத்தத்துக்குள்ளானோர் இந்தப் பழக்கத்தை விட்டொழிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். புகைப்பழக்கம் இரத்தத்தில் உள்ள உடல், மனநோய்களுக்கான மருந்துகளின் அளவை மாற்றிவிடுகிறது. குடிப்பழக்கம் உள்ளோரில் 90 சதவிகிதம்பேர் புகைபிடிக்கின்றனர். அருந்தும் காபியின் அளவும் அதிகரிக்கிறது. புகைப்பழக்கத்தால் நாள்பட்ட நுரையீரல் நோய்களும், நுரையீரல் புற்றுநோய்களும் ஏற்படுகின்றன.

பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி நிகோட்டின் சூயிங்கம் சிலபேருக்கு பலனளிப்பதாக உள்ளது. தோலுக்கடியில் நிகோட்டினைப் பட்டுவாடா செய்யும் சிகிச்சையும் பலனளிக்கிறது. போகிற போக்கில் `புகையை விடுங்கள்' என்கிற அறிவுரைகூட 5 சதவிகிதத்தினரை ஒருவருடம் புகையை மறக்கச் செய்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உடல் சம்பந்தமான அனைத்துப் பிரச்னைகளிலும் புகையிலை முக்கியபங்கு வகிக்கிறது. மற்ற விஷயங்களுக்குப் பயப்படுகிறோமோ இல்லையோ புகைப்பழக்கத்துக்கு கொஞ்சம் பயப்படுவது நல்லது.

0 comments: