காலிங் பெல் ஓசை கேட்க, கதவைத் திறந்தார் பாஸ்கரன். ``வாங்க சார்.இன்னிக்கு முதியோர் இல்லம் வந்து நன்கொடை தந்துடறேன்னு சொன்னேன்.ஆனா அர்ஜண்ட் வேலை இருக்கறதுனால நாளைக்கு வரலாம்னு இருந்தேன். உங்களுக்கு ஏன் சார் சிரமம் பாவம்'' சொன்ன படியே சுந்தரலிங்கத்தை உட்கார வைத்தார்.
பணத் தொகையை சுந்தரலிங்கத்திடம் கொடுத்தபடி முதியோர் இல்லத்தைப் பற்றிப் பேசலானார். அதன் பணிகள் பற்றி, செயல்பாடுகள் பற்றி.
``அப்பா'' என்றபடி வந்து பாஸ்கரனின் மகனும், மகளும் வந்து அவர் மடியில் உட்கார்ந்தனர்,
``என்னைத் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு நான் எத்தனை தடவை சொல்றது. சனியங்களா'' பாஸ்கரன் பிளிற, ஓடியே விட்டனர் இருவரும்.
``பாஸ்கரன் சார், நீங்க முதியோர் இல்லம் கிளம்பத் தயார் ஆகிக் கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கறேன்'' சொன்னார் சுந்தரலிங்கம்.
``அதான் உங்ககிட்ட இங்கேயே டொனேஷனைக் கொடுத்துட்டேனே. நான் ஆஃபீஸ் கிளம்பத் தயார் ஆகிட்டு இருக்கேன்.''
``இல்ல சார், நீங்க முதியோர் இல்லம் செல்லத்தான் தயார் ஆகிக்கிட்டு இருக்கீங்க'' சொன்ன சுந்தரலிங்கத்தை குழம்பிய முகத்தோடு பார்த்தார் பாஸ்கரன். ``நீங்க என்ன சொல்றீங்க?''
``குழந்தைங்ககிட்ட இந்த மாதிரி நடந்துகிட்டா பிற்காலத்துல முதியோர் இல்லம்தான் போகணும் கட்டாயம்'' சொல்லியபடி எழுந்தார் அவர்..
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment