தன் வீட்டுத் தோட்ட வேலைகளிலிருந்த கேசவனிடம், பத்து வயது மகன் பாபு வந்தான். ``விளையாடிட்டிருந்தப்ப பக்கத்து வீட்டு சைலேஷ் கிண்டல் பண்ணிட்டே இருந்தாம்ப்பா, நல்லாத் திட்டிட்டு வந்திட்டேன்.''
``அப்படியா?'' என்றவர், சில ஆணிகளையும் சுத்தியலையும் கொடுத்து, ``நீ ஒவ்வொரு தடவை யாரையாவது திட்டறப்பவும் நம்ம தோட்டத்து மரத்திலே ஒவ்வொரு ஆணி அடிக்கணும்'' என்றார்.
முதல் வாரம் ஆறு ஆணிகள் அடிக்கப்பட்டிருக்க, அடுத்த வாரம் நான்காகக் குறைந்து அப்படியே சில வாரங்களில் ஆணி அடிப்பது நின்று போயிருந்தது.
``நான் இப்பல்லாம் ஃப்ரெண்ட்ஸைத் திட்டறதோ அடிக்கறதோ இல்லைப்பா'' என்ற பாபுவை அன்பாகத் தட்டிக் கொடுத்தார் கேசவன். ``அது மட்டும் போதாது பாபு, அவங்ககிட்டே தனித்தனியா நீ `ஸாரி' சொல்லி மன்னிப்புக் கேட்கணும். ஒவ்வொரு தடவை மன்னிப்புக் கேட்டவுடனேயும் ஒரு ஆணியைச் சுத்தியலாலே பிடுங்கிடு.''
ஒரே மாதத்தில் எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட்டிருக்க, கேசவனுக்கு மகிழ்ச்சி.
மகனை அழைத்த கேசவன் ``இந்த மரத்தைப் பாரு, பாபு. ஆணியை நீ பிடுங்கிட்டாலும், அந்த வடு இன்னும் அப்படியே இருக்கு பார்த்தியா? இனிமே எத்தனை வருஷம் ஆனாலும் இந்த வடு மாறாது. ஒரு தடவை புண்படுத்திட்டு, அதுக்கப்புறம் ஆயிரம்தான் ஸாரி சொன்னாலும், மனசிலே உண்டான வடு மறையவே மறையாது. புரியுதா?''
தெளிவாகப் புரிந்தது பாபுவுக்கு. .
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment