Saturday, July 12, 2008

எனக்கு வேணாம் சார் !

``தீபா... தீபா சீக்கிரம் கிளம்பும்மா. சினிமாவுக்கு நேரமாயிடுச்சி. இன்னும் பத்து நிமிஷத்தில நாம புறப்பட்டாத்தான் சரியா இருக்கும்'' புதுமாப்பிள்ளை ராஜேஷ் மனைவியை அவசரப்படுத்தினான்.

``இதோ வந்துட்டேங்க'' தீபா புடவையைச் சரி செய்தபடி அறையிலிருந்து வெளியே வந்தாள். ``தீபா நேத்து ஒரு பச்சைக்கல் நெக்லஸ் போட்டிருந்தியே, அது உனக்கு அழகாயிருக்கு... அதைப் போட்டுக்கிட்டு வாயேன்''

``சினிமாவுக்குப் போகும்போது நகையெல்லாம் எதுக்குங்க? அதுவும் அந்த நெக்லஸ் எங்க அண்ணியோடது.''

``அதெப்படி? கல்யாணத்துல உனக்குப் போட்டது உனக்குதான். திருப்பிக் குடுக்கக் கூடாது.''

ராஜேஷ் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள் தீபா. ``ஏங்க, மத்தவங்க பொருள்மேல உங்களுக்கு ஆசை? உங்களுக்குப் பேசியபடி எங்கப்பா முப்பது பவுனும் வண்டியும் வாங்கிக் குடுத்திட்டாரில்ல, அதோட விடுங்க.!'' முகத்திலடித்தாற்போல தீபா சொல்லவும் வாயை மூடிக் கொண்டான் ராஜேஷ்.

``சரி, சரி, வா வண்டியிலேறு நேரமாச்சி''

தீபா பின்பக்கம் ஏறியதும் புத்தம் புது ஹீரோஹோண்டா வண்டி சீறிப்பாய்ந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திப் பூ, வாங்கி தீபாவிடம் கொடுத்தான்.

மறுபடி வண்டியை ஸ்டார்ட் செய்ய உதைத்ததும் செருப்பு அறுந்து போனது.

``நல்ல சமயத்தில செருப்பு வேற அறுந்திடுச்சி, சே...'' புலம்பினான் ராஜேஷ்.

``என்னங்க அதோ ஒரு சின்னப்பையன் செருப்பு தைக்கிறான் பாருங்க'' எதிர்திசையில் கையைக் காட்டினாள் தீபா.
இருவரும் அவனருகே சென்றனர்.

``சார் அஞ்சு ரூபா குடுங்க தச்சித்தாரேன்''.

``சரி சீக்கிரம் தச்சிக்குடு'' செருப்பை பையனிடம் நகர்த்தினான் ராஜேஷ்.
ஒட்டிய கன்னங்களும், குழிவிழுந்த கண்களும் கிழிந்த சட்டையும் அவன் ஏழ்மையை பறைசாற்றின. அவன் கேட்காவிட்டாலும் ஐந்து ரூபாய் கூட கொடுக்கலாம் என்று நினைத்தாள் தீபா.

``இந்தாங்க சார்''

செருப்பை போட்டுக் கொண்டு பாக்கெட்டிலிருந்து காசு எடுத்துக் கொடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான் ராஜேஷ்.

``சார், சார்'' பின்னாலே ஓடிவந்தான் சிறுவன்.

`` `ஒரு ரூபாய் அதிகமாகக் குடுத்திட்டீங்க இந்தாங்க சார்'' ஒரு ரூபாயை ராஜேஷிடம் கொடுத்தான்.

``பரவாயில்லப்பா நீயே வச்சிக்க''

``இல்ல சார் உழைப்புக்கு ஏத்த காசு போதும் சார். நான் எப்பவும் மத்தவங்க காசுக்கு ஆசைப்படமாட்டேன்'' போய் விட்டான் சிறுவன்.
தீபா கணவனை அர்த்தத்துடன் பார்த்தாள். தலை குனிந்து நின்றான் ராஜேஷ்.

0 comments: