முதலில் ஒரு சிநேகிதரின் வீட்டிற்கு சரஸ்வதி பூஜைக்காகப் பிரவேசித்து விட்டு, பின்பே ஆஸ்பத்திரி செல்வது என்பது முதலிலேயே தீர்மானிக்கப்பட்ட விஷயம்.
ஆஸ்பத்திரி செல்ல வேண்டியதென்பது தவிர்க்க முடியாத தவிர்க்கவும் இயலாத ஒன்று. என்றாவது செல்ல வேண்டியதுதான் என்று எண்ணினாலும் மனதில் சங்கடம். வீட்டு வாயிற்படி இறங்கி நடக்க ஆரம்பித்தவுடனேயே எங்கோ பயங்கரமான இடத்துக்கு அவனையும் கூட்டிக் கொண்டு செல்ல நேர்ந்தது போல் பயம். இதைத் தற்போது தவிர்த்தாலும் இதன் பாதிப்பு தினமும் மனதில் ஏற்பட்டு, இருவரின் இடைவெளிக்கு அதுவே முக்கியமான காரணம் ஆகிவிடுமோ என சந்தேகம். இதன் பாதிப்பு இருவரின் மனதிலும் பெரிதாக வளர ஆரம்பித்துவிட்டது. வியாதியை விட சாயங்கால நிழலாய் அது நீள்வதில் இருவருக்கும் விருப்பமில்லை.
அவளும் அவனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட சிநேகித தம்பதிகளானதால் இதன் பாதிப்பை உணர ஆரம்பித்ததுமே அதைக் களைய முற்பட்டு விட்டனர். அவனுக்குத் தன் குறை பெரிதாக, சுமக்கமாட்டாமல் ஆகிவிட்டது மனத்தளவில். எல்லோரும் தன்னை இதற்காக வேவு பார்க்கத் தொடங்கி விட்டனர் என ஒளிந்து கொள்ள முடியாமல் விழிக்க ஆரம்பித்தான். முதுகில் பாவ மூட்டையைச் சுமக்கும் பாவியாய் தானும் தாங்க முடியாமல் சுமக்க ஆரம்பித்தான். எல்லாமே மனத்தில்தான். இதன் குறை மனதில் வளர்ந்து வரும் அளவு உடலை பாதிக்கவில்லை என்பது எப்பொழுதாவது தோன்றும் போதிமரம் தான். மற்ற சமயங்களில் எல்லாம் மரத்தின் மீதுதான் மனம், மரத்தடியில் அமர முடியாமல் செய்து விட்டது.
அவனை அவள் பார்க்கும்போது வெள்ளை பைஜாமா ஜிப்பாவில் பளீரிடுகிறான். அவன் முகம், அவள் பார்த்துச் சலிக்காத ஒன்று. திடீரென்று தானும் வெள்ளையிலேயே உடன் வருவதை அவள் உணர்ந்தாள். வெள்ளை அணிதலும், அணிந்தவரைக் காணுதலும் தக்காளிச் செடியில் பக்கக் குச்சு, புடலங்காயில் நுனிக்கல். இரண்டின் காரியமும் நிமிர்த்தலே. முதுகோடு குச்சி வைத்து நிமிர்த்தி விடுகிறது. வெள்ளை மனதை சந்தோஷப்படுத்துகிற வெள்ளை. வெள்ளை உடையைக் கண்டாலே மூச்சை உள் இழுத்து விடச் செய்கிறது. ஏதோ மணம் நுகர்ந்தாற் போல். `நான் மிகவும் மென்மை' என்று சொல்லும் வெண்மை. உப்புப் பாறையையும் மல்லிகைப் பூவாய் மாற்றிக் காட்டும் நிறம். `மசமச'வென்ற இருட்டில் பளீரென்று சிரிக்கும் நிறம்.
தாங்கள் போய் ஆஜர் கொடுக்கப்பட வேண்டிய வீடு வந்ததும் இருவரும் நுழைந்த னர். சிறிது நேரத்திற்குப் பின் வந்திருந்தோரில் ஒருத்தி வீட்டுக்கு உடையவளின் வற்புறுத்த லில் பாட ஆரம்பித்தாள். அட கஷ்டமே! என்று இவள் மனம் பாட்டைச் சலித்தது. பாடியவளின் குரலில் ஈர்ப்பு இல்லாமல் கேட்பவர்களின் கவனமும் ஒருங்கிணையாமல் சிதற ஆரம்பித்தபோது, இவள் மனதில் ஆஸ்பத்திரி நினைவு மேலோங்கியது.
ஆழமாய் இருக்கும் ஆற்றுநீர் அலை அடித்து தன்னை விளம்பரம் செய்யாது. ஏதோ ஓரிரு சுழிகள் மட்டுமே. இவள் மனதிலும் இப்போது சுழிகள் தோன்ற ஆரம்பித்தது ஆழத்தை அதிகப்படுத்தின. பாட்டு முடியும் வரை காத்திருக்க பொறுமை இல்லை. பாதியில் உடைத்தாள் தன் இரு கைகளையும் தட்டி. சறுக்கி விழுந்தது பாடுபவள் முகம்.
``நீங்கள் இவ்வளவு நல்லா பாடுவீங்கங் கறது எனக்கு இதுவரைக்கும் தெரியவே தெரியாது!''
``அதனாலேதான் பாதீலே கை தட்டினீங்களாக்கும்.''
``எனக்கு அவசரமா ஒரு இடத்துக்குப் போகணும்.''
``எங்கே?''
``ஆஸ்பத்திரிக்கு. இவருக்கு நாளைக்கு ஆபரேஷன். இன்னிக்குப் போய் அட்மிட் செய்யணும்'' இவள் சிரித்தபடி கூறினாள். தன் உணர்ச்சிகளை தேவையற்று மற்றவர்களின் காட்சிப் பொருளாக்க என்றுமே விரும்பியவள் இல்லை.
``என்ன உடம்புக்கு?'' இவன் பார்வைக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே! இருவரும் நன்றாக டிரஸ் செய்து கொண்டுதானே வந்துள்ளார்கள் என்று இவளின் சிரிப்பைப் பற்றி கண்களால் சந்தேகத்துடன் கேள்வி கேட்கப்பட்டது.
``ஒண்ணும் மேஜர் விஷயமில்லே, சின்ன ஆபரேஷன்தான்.'' இவள் பதில் தந்தாள். தலை விரித்து அழுது கொண்டேவா கூறச் சொல்கிறாய் என்ற அலட்சியத்தில்.
ஆஸ்பத்திரியில் நுழைந்தவுடனேயே கண்ட காட்சி கல்யாணக் கோலம் கொண்ட கட்டிடம்தான். அன்று ஆயுதபூஜையை, அந்த ஆஸ்பத்திரியைச் சேர்ந்தவர்கள் பட்டுப் புடவையும் தலைநிறையப் பூவும் கட்டிடம் முழுவதும் விளக்குகளுமாக, ஊதுபத்தி சாம்பிராணி புகையுடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இதற்குச் சற்றும் பொருந்தாமல் எல்லோருடைய துக்கங்களையும் சோர்வையும் தங்களுக்குள் தேக்கிக் கொண்டு இருமலும் முனகலுமாக நோயாளிகள் வரிசையாக!
ஆபரேஷன் தியேட்டர் அகலத் திறந்துகொண்டு வெளிகாற்றைத் தன்னுள் வாங்கி பூஜையை அனுபவித்துக் கொண்டிருந்தது. உண்மையிலேயே ஆயுதம் என்றவுடனே நமக்கு நினைவில் வரும் கத்தி, கத்திரிக்கோல் முதலியன இந்துக்களாக மாறிப் பொட்டு இட்டுக் கொண்டன.
டாக்டர் வீட்டுப் பெண்கள் சலங்; சலங் என்று சப்திக்க நடந்து ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்து, சிங்கத்தின் வாயில் தலையை நுழைத்து, பின் சிரித்தபடி வெளிவரும் சர்க்கஸ்காரனைப் போன்றொத்தவராய், கத்திக் காயமின்றி ரத்தமின்றி வெளிவந்து கொண்டிருந்தனர்.
அங்குள்ள சோர்ந்த நோயாளித் தோற்றம் கொள்ளாததால் டாக்டரின் வீட்டைச் சேர்ந்தவர்கள் பக்கம் ஒதுக்கப்பட்டனர் இருவரும். முதல் முறையாக வருவதால் டாக்டர் யாரெனத் தெரியாமல் இவள் அவர்களில் சிலரை டாக்டரின் அச்சில் வார்த்துக் கொண்டிருந்தாள். டாக்டரைத் தவிர யாருக்கும் இவளைப் பற்றின அறிமுகம் இல்லாததால் அங்கு வேலை செய்பவர்கள் இருவரையும் நோயாளி அச்சில் வார்த்துப் பார்த்து தோற்றுக் கொண்டிருந்தனர்.
டோக்கன் எண் கூப்பிட்டதும் இருவரும் டாக்டரின் அறையை அடைந்தனர். இவளுக்கு ஏமாற்றம், தான் பார்த்த யாரும் இல்லாத புது டாக்டர்.
``நாளைக்கு ஆபரேஷனுக்கு வரச் சொன்னீங்க. டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் வந்தாச்சுதா?
``எல்லாம் ஓ.கே. சார்! நாளைக்கு விடி காலை ஒண்ணும் சாப்பிடாமல் _ (காப்பி கூட) _ வந்திடுங்க. எட்டுமணிக்கெல்லாம் ஆபரேஷன் முடிச்சிடலாம்.''
டாக்டர் கூறிய உற்சாகம் நிறைந்த குரல் இவளின் அனாவசியக் கவலையைச் சிறிது தள்ளி நிறுத்தியது. ஆபரேஷன் என்பது சலூனில் நுழைந்து வெளிவருவது போல; அந்த அளவே கத்தி, கத்திரிக் கோலின் பிரயோகம் என நினைத்தாள்.
மறுநாள் காலை இருவரும் சீக்கிரமே எழுந்தனர். இவள் அவனை விட்டுவிட்டுத் தான்மட்டும் காப்பி குடித்தாள் சங்கடப்பட்டுக்கொண்டே. அவன் ஷேவ் செய்து கொண்டான். தன் நோயாளித் தனத்தை வெளிக்காட்டாது ஷேவிங் என்பது ஒன்று. இன்னமும் சில நாட்களுக்கு ஷேவ் செய்து கொள்ள முடியாது. குறைந்தபட்சம் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரையிலாவது என்பது மற்றொன்று.
குளித்துவிட்டுக் கிளம்பினர். ஆஸ்பத்திரி சென்று இருவரும் ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து, அவைகளை எதிர் எதிராக இழுத்துவிட்டுக் கொண்டு ஒருவர் முகத்தை மற்றவர் வசதியாகப் பார்த்துக் கொண்டே சிரித்துப் பேசினார்கள். கவலையை ஒருபுறம் தள்ளி வைத்தார்கள்; யார் போட்டாலும் உடைந்துவிடும் கண்ணாடி என்று.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து இவர்களைப் பார்த்து மலர்ந்து ``குட்மார்னிங் சார்! எட்டு மணி போல அனெஸ்தீஷியா டாக்டர் வருவார். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க'' என்றதும். ``சரி சார்.''
தொடர்ந்து உண்டான விஷயங்கள் அனைத்தும் இருவராலும் பேசப்பட்டது. இவளால் அவன் முகத்தைப் பார்க்காமல், பார்த்துச் சிரிக்காமல் பேச முடியாது. சிரிப்பு + பேச்சு என்பது எப்போதும் இவளிடம் உள்ள ஒன்று.
மணி போனது தெரியாமல், வெயில் சிறிது ஏறியது தெரியாமல் இருந்த இருவரின் நினைவுகளையும் டாக்டர் இழுத்து வந்து உலக முனையில் இறுக்கிக் கட்டி வந்தார்.
``உங்கள்ளே யார் பேஷண்ட்? எழுந்து வாங்க ஷேவ் செய்யணும்'' நர்ஸ் வந்து அடையாளம் கேட்டாள்.
அவன் எழுந்து சென்றான்.
அவன் எழுந்து சென்றவுடனேயே தள்ளி வைத்திருந்த கவலை, இவளை வந்து இறுக்கமாக அப்பிக்கொண்டது.
ஷேவ் செய்யப்பட்டு, எனிமா கொடுக்கப் பட்ட பின்னர் அவன் வாடாத பூவாய் ஆபரேஷன் அறைக்குள் இவளிடம் போய்வருகிறேன் என்பதாகக் கையை ஆட்டிக்கொண்டே சென்றான், இவளும் சிரித்து அனுப்பினாள்.
இன்று தியேட்டர் எல்லாக் கதவு ஜன்னல்களையும் மூடிக்கொண்டு முழு உடையும் அணிந்துகொண்டு இவனை உள்வாங்கிக் கொண்டது. சப்தங்கள், வாசனைகள், விளக்குகள் அனைத்தையும் இழந்திருந்த அதில் அவன் நுழைந்தபோது, அவள் மனதில் எங்கோ சுழற்சி மறுபடியும் ஏற்பட்டது.
தியேட்டரின் எதிர்புறம் நாற்காலியில் அமர்ந்து கையில் புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்க முயற்சி செய்தாள். மனம் அறையுள் வட்டமிட்டது. கத்தியால் கீறினால் ரத்தம் வருமே? அதை எவ்வாறு நிறுத்தி வைப்பார்கள்? தையல் போடும்போது வலிக்குமே! இப்போது நினைவில்லா விட்டாலும் அப்புறம் வலிக்குமே!
இவளுக்குத் தன்னையும் தையலையும் இணைத்த பிரசவத்தின் வலி மறுபடி எழுந்தது.
``டாக்டர் நானே பெத்துக் கொடுத்துடு வேன். எனக்குக் கிழிச்சு, தையல் போட்டு அதெல்லாம் ஒண்ணும் செய்யக்கூடாது என்ன?'' முதலிலேயே சட்டம் பேசப்பட்டது.
சிரித்துக் கொண்டே டாக்டரும் `சரி' என்றார்.
``எனக்கு இடுப்பு வலி கூடப் பெரிசில்லே டாக்டர்! எப்போ குழந்தை வேணும்னு ஆசையா ஏத்துண்டேனோ அப்பவே வலியையும் சேர்த்து தாங்கிப்பேன். ஆனா அது எக்ஸ்ட்ரான்னு தோணறது. மறத்துப் போறத்துக்குக் கூட மருந்து போடறதில்லையே!''
``இப்ப என்ன அதபத்தி? அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். படுத்துக்கோ, எங்களுக்கு உதவியா இருந்தாக்க ஏதும் வராது. உடம்பத் தளர்த்திவிடு, முறுக்கிக்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் ஜரிகை விளக்கினடியில் பளபளப்பது போல் எங்கெங்கோ பளீர் பளீர் என்ற வலி வெட்டுக்கள் அவளைத் தாக்கின. கட்டிலை இறுக்கிப் பிடித்த கைகளைத் தளரவிடவே தோன்றவில்லை. உடம்பும் சேர்ந்து வெயிலில் வைத்த பலகையாய் விடைத்தது.
நெடுநேர அவஸ்தைக்குப் பின் தான் பெற்றெடுத்த குழந்தையைப் பற்றி எண்ணம் கூட எழவில்லை. எவ்வளவோ தவிர்த்தும் தன் உடல், வாயில் வைத்து ஊதிய பூவாய் கிழிந்துவிட்டதற்காகக் கவலைப்பட்டாள். அடுத்த வினாடி கணவனின் நினைவு வந்தது. அவன் தன்னுடன் கூடவே இருந்திருந்தால் தன் வலி ஒரு பொருட்டாகத் தோன்றியிருக்காதே என்று சொல்லிக் கொண்டாள். திரும்பவும் தையல் என்றதும் வெறுப்பு வந்தது.
``ஸிஸ்டர் கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திடுங்களேன். தைக்கும்போது நான் கத்திட்டேன்னா அது அவர் காதிலே விழுந்திடும். அவர் வேதனைப்படுவார்; நான் கஷ்டப்பட்டாக்க சத்தம் வெளியே கேட்காதபடி பண்ணுங்களேன்.'' அவள் தன் கணவனின் அடையாளத்தைச் சொன்னாள்.
``அவருதான் உன் ஹஸ்பெண்டா? நீ இங்கே ஒரு புள்ள பெத்த; அவரு அங்கே மூணு புள்ள பெத்தாப்ல வேதனைப்படுறாரு. இப்பத்தான் புள்ளப் பெத்திருக்கிறே; அதுக்குள்ளார புருஷனைப் பத்திப் பேசற மொதப் பொம்பளை நீதான்!''
சட்டென்று கோபம் வந்தது இவளுள். மடஜென்மங்கள் அன்பு என்றால் என்னவென்றே அனுபவிக்காத வெறும் பெண் உடலை வைத்துக் கொண்ட ஜீவன்கள்.
டாக்டர் இங்கிதமாகத் தடவியபடி சொன்னாள். ``பாரு! தையல் கூடாதுன்னு கண்டிஷன் போட்டே. நாங்களா `கட்' செய்திருந்தா இவ்வளவு மோசமா கிழிஞ்சு இருக்காது. இப்ப உள்ள வெளியே எல்லாம் தைக்கணும். கொஞ்சம் வேண்டான்னு சொல்லி நிறைய வாங்கிக்கொண்டியே அம்மா!''
இவள் பல்லைக் கடித்தபடி தன் வலி பொறுத்துக் கொண்டாள். அவனும் செய்தி தெரிந்து தன்னைக் குற்றவாளியாய் எண்ணிக் குறுகிக் கொண்டான்.
``அவருக்கு இன்னாம்மா ஆபரேசன் செய்யறாங்க'' யாரோ முன்பின் அறிமுகமற்றவள் முகம்நிறைய சோகம் தேக்கி, இவளிடம் வந்து துக்கம் கேட்டாள்.
இவள் `திரும்ப வந்து' ``சின்னஆபரேஷன் தான் பயப்பட ஏதுமில்லே'' என்று அவளுக்குச் சிரித்துக் கொண்டே ஆறுதல் கூறவும், அவள் தேவையில்லாமல் இவளிடம் பேசினோமே என்று நொந்து கொண்டே சென்றுவிட்டாள்.
பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். டாக்டர் இவளிடம் வந்து ``முடிச்சாச்சு! எல்லாம் ஓ.கே.'' என்றபோது பாரம் இறங்கியது. உடைத்த பின்பு தெரியும் அழுகல் தேங்காய் உருவெடுத்துவிடக்கூடாதே என்ற பயம் நீங்கியது. எல்லோரிடமும் எல்லா விஷயங்களுக்குமே பயங்கர அனுபவம் இருக்குமே மற்றவர்களை பயமுறுத்த, அந்த அறிவுரைகளும் அனுபவங்களும் இவளுக்கு நிறையவே கிடைத்தன. ``டாக்டர்! நான் தியேட்டர் உள்ளே போய் பார்க்கட்டுமா?''
``கூடாதும்மா! இன்னும் கொஞ்ச நேரத்திலே ரூம்லே கொண்டு வந்து விடுவாங்க அப்பப் பார்த்துக்கங்க. எல்லோரும் தியேட்டர் உள்ள போனா கிருமிகள் பரவும் அதன் சுத்தம் கெட்டுவிடும்'' என்ற டாக்டரின் விளக்கமான பதில் இவளுக்குப் பிடித்தது.
சிறிது நேரத்தில் தியேட்டரின் இரு கதவுகளும் விரியத் திறக்கப்பட்டு, அவனை ஸ்டெச்சரில் கிடத்தி நால்வர் கஷ்டப்பட்டுத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த இவளுக்குச் `சொரேர்' என்றது. அவன் முகம் முழுவதும் வீங்கிக் கண்கள் திறந்திருந்தும் இவளை அடையாளம் கொள்ள இயலாமல் வெட்ட வெளியில் மிதக்க முகம் முழுக்க, உடல் முழுக்கச் சோர்ந்து வியாதிக் களையையும் தன்னுடன் ஒட்டுமொத்தமாகத் தேக்கிக் கொண்டு போகும் அவனைக் கண்டதும் இவள் கலங்கித்தான் போனாள்.
கீரையைக் கூட இளசாக இருக்கும் காரணத்தால் நறுக்க அழும் இவள் மனம், அதிகாலைச் செடிபோலிருந்த அவனை வாடச் செய்துவிட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு உட்பட்டது.
அவனைக் கொணர்ந்து படுக்கையில் கிடத்தியபின், சிறிது நேரம் வரையில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்த இவளுக்கு, அவனை மாத்திரை சாப்பிட வேண்டி தாங்கி அணைக்க, அவன் துவள விழுந்து, ``என்னாலே முடியவேயில்லை! ரொம்ப டயர்டா இருக்கு'' என்று குழறி குழறிப் பேசியதைக் கேட்க, இவளை மீறிக் கண்ணீர் கண்களைத் திறந்து கொண்டு வெளியேற ஆரம்பித்தது.
மனம் முழுக்க கனத்துப் போய் இவள் அழத் தொடங்கினாள்
Monday, July 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment