Friday, July 18, 2008

கர்ப்பமாக இருக்கும் போது அதிக சோர்வும் வந்தியும் ஏன் ஏற்படுகிறது ?

கர்ப்பமாக இருக்கும் முதல் 3 மாதங்கள் வரை, பெண்கள் அதிக சோர்வாக உணர்வது சகஜம்தான். இதனால் அதிகமான தூக்கமும், கண் விழிப்பதில் கஷ்டமும் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், ஏற்கெனவே ஒரு குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் மேலே சொன்ன பிரச்னையைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். உங்களுடைய ரொட்டீன் வாழ்க்கையில் இதற்காக தனி எனர்ஜியைத் தேடுவது உங்களுக்கு கஷ்டம்தான். மேலும் நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் உங்களுக்கு தலை பாரமாகவும், களைப்பாகவும் இருக்கலாம்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஓய்வு எடுப்பது ரொம்ப முக்கியம். உங்கள் உடல்நிலை சொல்வதைக் கேட்டு எந்த நேரத்தில் ரெஸ்ட் தேவையோ அந்த நேரத்தில் ரெஸ்ட் எடுங்கள். ஆனால் நாள் முழுவதும் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை! நிறைய வேலைகளை ஒரே நாளில் இழுத்துப் போட்டுச் செய்யாதீர்கள். இரவில் முடிந்தவரை சீக்கிரமாகத் தூங்கச் சென்று உங்களுக்குத் தேவையான மொத்தத் தூக்கத்தையும் தூங்கி விடுங்கள். உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் குழந்தையை உங்கள் கணவர் சில மணி நேரங்கள் பார்த்துக் கொண்டாலே உங்களுக்குத் தேவையான ரெஸ்ட்டும் அமைதியும் கிடைத்து விடும்.

இந்த அறிகுறிகள் எல்லாம் கர்ப்பமடைந்த 12-14 வாரங்களில் மறைந்து விடும். உங்கள் உடலில் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்கள் சில நாட்களில் தானாகவே பழகி பிறகு அந்த அறிகுறிகள் அடங்கிவிடும். கூடிய விரைவில் நீங்கள் இழந்த எனர்ஜி தானாகவே திரும்பி வந்துவிடும். இந்த நேரத்தில் நிறைய பெண்கள் `நான் கர்ப்பமாக இருக்கின்றேன்' என்று தோன்றவில்லை என்பார்கள்!

ஏன் இப்படி டயர்டாக தோன்றுகிறது?

கர்ப்பமாக இருக்கும் போது அதிக அளவில் உற்பத்தியாகும் புரோஜெஸ்ட்ரான் (Progesterone) ஹார்மோன்தான் மேலே சொன்ன அறிகுறிகளுக்குக் காரணம்! இந்த ஹார்மோன்தான் கர்ப்பமான பெண்களுக்கு சோர்வையும், தூக்கத்தையும் வரவழைப்பது. சில பெண்களுக்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் உள்ள மனஉளைச்சலால் கூட சோர்வு அதிகமாகும். இந்த நிலையில் சில பெண்கள் வேலைக்கும் சென்று, காலையில் சமையலும் செய்யவேண்டிய சூழ்நிலையால் கஷ்டப்படுவார்கள். இந்தச் சமயத்தில் ஒரு கணவர் தன் மனைவியின் வேலைகளில் பாதியைப் பங்கிட்டு அவளை இன்னும் சில நேரத்துக்குத் தூங்க விட்டால் இந்த கணவர் அமைந்தது அவளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

குமட்டல் மற்றும் வாந்தி

முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் சாதாரண நிகழ்வு இது. துரதிர்ஷ்ட வசமாக சில பெண்களுக்கு மட்டும் இந்த அறிகுறி கர்ப்பகால கட்டம் முழுவதும் இருக்கும். இந்த சமயத்தில் நிறைய பெண்களுக்கு தாளித்தல் போன்ற சாதாரண வாசனைக்குக் கூட குமட்டலும், வாந்தியும் வரும். கர்ப்பமான முதல் வாரத்தில் வரும் இந்த மார்னிங் சிக்னெஸ்_க்கு காரணமான உணவுப் பொருட்கள் காபி, பால் பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் அசைவ உணவுகள்.

இதை `மார்னிங் சிக்னஸ்' என்று அழைத்தாலும், உண்மையில் இதை `எனிடைம் சிக்னஸ்' என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் 80 சதவீத பெண்களுக்கு நாள் முழுவதுமே இந்த குமட்டல் இருக்கும். பொதுவாக இந்தக் குமட்டல் கர்ப்பமான ஆறு வாரங்களில் ஆரம்பிக்கும். (அல்லது பீரியட்ஸ் மிஸ்ஸாகி 2 வாரங்களுக்குப் பிறகு) சில பெண்களுக்கு பீரியட்ஸ் தவறிய சில நாட்களிலேயே கூட குமட்ட ஆரம்பித்து விடும். இந்த அறிகுறிகள் கர்ப்பமான 12 முதல் 14 வாரங்கள் வரைக்கும் தொடரும். எப்படியிருந்தாலும் இந்த மார்னிங் சிக்னஸ் கர்ப்பமான 6 வாரங்கள் கழித்து ஆரம்பித்து, 20 வாரம் வரை தொடரும். 90 சதவீத பெண்கள் இந்தப் பிரச்னையிலிருந்து 22 வாரங்களில் ரிலீஃப் ஆகி விடுவார்கள். சில பெண்களுக்கு மட்டும் கடைசி 2 மாதங்கள் வரை கூட குமட்டல் இருக்கலாம். இது கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு அசிடிட்டியின் அளவு அதிகரித்ததாலோ, வயிற்றிலுள்ள குழந்தை வளர்வதால் உண்டாகும் அழுத்தத்தாலோ உண்டாகலாம்.

மார்னிங் சிக்னஸைப் பொறுத்த வரைக்கும் உங்களுக்கு குமட்டல் தொடர்ந்தோ அல்லது வெவ்வேறு நேரங்களிலோ வரும். சில பெண்களுக்கு சில வாசனைகள் மற்றும் சுவைகளினால் குமட்டல் வரும். பல பெண்கள் சொல்வது என்னவென்றால், அவர்கள் பல் தேய்க்கும் போதுதான் குமட்டல் வருவதாக...

வாந்தி வருவதைப் பொறுத்தவரை, ஏதாவது சில குறிப்பிட்ட ஒரு வாசனையால் பெண்களுக்கு தொடர்ந்தும், சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலும் வரும்.

கர்ப்பமான புதிதில் எச்சில் அதிகமாக சுரக்கும் என்பதால் இதுவும் கூட குமட்டலுக்கும், வாந்திக்கும் காரணமாகும். இந்த எச்சில் கசப்பாகவோ அல்லது மெட்டல் டேஸ்ட்டுடனோ இருப்பதாக சில பெண்கள் கூறுவார்கள்.

கர்ப்பமான சில வாரங்களில் பசி குறைந்தோ அல்லது முழுவதுமாக இல்லாமலோ இருக்கலாம். இதனால் சில பெண்கள் வெயிட் ஏறாமலோ அல்லது சில பெண்களுக்கு வெயிட் குறைந்தோ இருக்கலாம். வெயிட் குறைந்தாலும் பயப்படத் தேவையில்லை. இது சகஜம்தான். நீங்களும் உங்கள் கணவரும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குப் போதுமான சத்து கிடைக்கவில்லை என்று கவலைப்படலாம். ஆனால் இது உண்மையில்லை. உங்களுக்கு பசி இல்லையென்பதால் அல்லது நீங்கள் சரியாக சாப்பிடவில்லையென்பதால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாது. மிகவும் அரிதாக சில பெண்களுக்கு மட்டும் தொடர்ந்து வாந்தி நிற்காமல் இருந்தாலும் 4 முதல் 5 கிலோ வரை எடை குறைந்தால்தான் கர்ப்பத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். இதை `ஹைப்பர் மீஸிஸ் க்ராவிடரம்' என்பார்கள்.

குமட்டல் மற்றும் வாந்தி வருவதற்கான காரணங்கள்...

இந்த அறிகுறிக்கான காரணமே கர்ப்பத்தின் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஹெச்.சி.ஜி பி.சி.நி. ஹார்மோன்கள் அதிகமாக உருவாவதுதான்! இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கருவில் இருக்கும் போது இந்த ஹார்மோன்கள் இன்னும் அதிகமாக சுரப்பதால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு `மார்னிங் சிக்னஸ்' இன்னும் சிவியராக இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் போது சரியாகச் சாப்பிடவில்லையென்றால் அசிடிட்டி அதிகமாதல், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைதல் போன்ற காரணங்களாலும் குமட்டல் மற்றும் வாந்தி வரும். இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வருவது நல்லது. இவர்களுக்கு மசாலா மற்றும் எண்ணெய் சேர்ந்த உணவுப் பொருட்களுக்குப் பதில் உலர்ந்த, எண்ணெய் சேராத உணவுப் பொருட்கள் நல்லது. உப்பு பிஸ்கட், டோஸ்ட், இட்லி போன்ற உணவுகள் இவர்களுக்கு நல்லது.

எமோஷனல் ஸ்ட்ரெஸ் கூட குமட்டல் மற்றும் வாந்திக்குக் காரணமாகும். இது நாளுக்குநாள் அதிகரித்தும், சிலருக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் கூட தொடரலாம். இதுபோன்ற சமயங்களில் உங்கள் மனதில் இருக்கும் பயங்களை சொல்லி உங்களுக்கு நம்பிக்கையானவரிடமோ அல்லது டாக்டரிடமோ உதவியை நாடலாம்!

0 comments: