செந்தாமரை உற்சாகமாகவும், மிகுந்த சந்தோஷத்துடனும் இருந்தாள். அவள் கடந்த சில மாதங்களாகவே கர்ப்பமாவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த மாதம் பீரியட்ஸ் மிஸ்ஸாகிவிட்டது. அப்படியென்றால் அவள் உண்மையிலேயே கர்ப்பமாகி விட்டாளா?
சுப்புலட்சுமிக்கு எப்போதுமே பீரியட்ஸ் ஒழுங்கற்றுதான் வரும். நிறைய மாதங்கள் அவளுக்கு பீரியட்ஸ் வந்தது இல்லை. இந்த சமயத்தில் அவளுக்கு சோர்வும், குமட்டலும் இருக்கும். நேற்று அவளுக்குப் பிடித்த உருளைக் கிழங்கு வறுவலின் வாசனை பிடிக்காமல் வாந்தி எடுத்து விட்டாள். சுப்புலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாளா?
பொதுவாக ஒரு பெண் கேட்கும் ஒரு கேள்வி ``நான் கர்ப்பமாக இருக்கிறேனா?'' என்பதுதான்.
இதுவரை கர்ப்பமாகாத பெண்ணுக்கும் தான் கருவுற்று இருப்பதற்கான அறிகுறிகள் சுமாராக தெரிந்திருக்கும். இரண்டாவது தடவையாக கருத்தரிக்கும் பெண்கள், தங்கள் முந்தைய கர்ப்பத்தின்போது ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து மறுமுறை தாங்கள் கர்ப்பமாகி இருப்பதை கன்ஃபார்ம் செய்து கொள்வார்கள். ஒரு கர்ப்பத்தில் தெரியும் கடினமான அறிகுறிகள் மற்றொரு கர்ப்பத்தில் குறைவாக தெரியலாம். உண்மையில் ஒவ்வொரு கர்ப்பமும் வித்தியாசமானது. ஒரு பெண்ணுக்கு அவளுடைய எல்லா கர்ப்பத்தின் போதும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. ஒரே அளவிலும் இருக்காது.
எப்போது கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படுவது?
கர்ப்பமாக இருக்கிறோமா என்று சந்தேகம் வருவதற்கான காரணங்களில் பீரியட்ஸ் தவறுதல் மிக முக்கியமான ஒன்று. பீரியட்ஸ் ரெகுலராக வரும் பெண்களுக்கு இது கர்ப்பமடைந்து இருப்பதற்கான முதல் அறிகுறி. கருத்தரிப்பதை கண்டுபிடிப்பதற்கான யூரின் அல்லது பிளட் டெஸ்ட்டும், உள் பரிசோதனையும்தான் சரியாக கர்ப்பத்தை கன்ஃபார்ம் செய்யும். எப்போதாவது, கர்ப்பமாகாத போதும் ஹார்மோன் பிரச்னைகளால் பீரியட்ஸ் தள்ளிப்போகும்.
நீங்கள் கர்ப்பமாக விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் பீரியட்ஸ் முறையை கவனமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காலண்டரில் உங்கள் பீரியட்ஸின் முதல் தேதியைக் குறித்து வையுங்கள். இதை வைத்து டெலிவரி தேதியை கண்டுபிடிக்க முடியும்.
பீரியட்ஸ் ஏன் மிஸ்ஸாகிறது?
ஒவ்வொரு மாதமும் மூளையிலிருந்து கிடைக்கும் சிக்னலால் ஓவரீஸ் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த ஈஸ்ட்ரோஜன் கருப்பையின் உள்ளிருக்கும் உள் திசுவை தூண்டி விடும். கருத்தரிக்கும் என்ற ஆவலில் இந்த திசு தடிமனாகவும், மென்மையாகவும் ஆகிவிடும்.
பீரியட்ஸ் வந்த 11ம் நாள்முதல் 16ம் நாள் வரை பெண்களுக்கு சாதாரணமாக கருமுட்டை உருவாகும்.இந்த கருமுட்டை கருத்தரிக்கவில்லையென்றால் கருப்பையின் உள்ளேயிருக்கும் திசு வெளியேற்றப்படும். இந்த நிகழ்ச்சிதான் மாதவிலக்கு ஆகும். இதைத்தான் ``தோல்வியடைந்த கருப்பையின் ரத்தக் கண்ணீர்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
எப்போது கர்ப்பம் தரிக்கிறோமோ, அப்போது புரோஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவு மிக அதிகமாக அதிகரிக்கும். தவிர கருப்பையில் இருக்கும் என்டோமெட்ரியம் இன்னும் திக்காகி கருவை தாங்க ரெடியாகி விடும். இந்த சமயங்களில்தான் பீரியட்ஸ் மிஸ்ஸாகும்.
டெலிவரி ஆகப்போகும் நாளை எப்படி கணக்கிடுவது?
கருத்தரித்துள்ள பெண்ணுக்கு கடைசியாக வந்த பீரியட்ஸின் முதல் நாளிலிருந்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து தான் கருத்தரிக்கும். இதை வைத்து கிட்டத்தட்ட டெலிவரிக்கான தேதியை கணக்கிட்டு விடலாம். எப்படியென்றால், கடைசியாக பீரியட்ஸ் வந்த முதல் நாளுடன் 7 நாளை கூட்டி, பிறகு அதில் இருந்து 3 மாதத்தை கழித்தால் கண்டுபிடித்து விடலாம். உதாரணத்துக்கு, கடைசியாக வந்த பிரியட்ஸின் முதல் தேதி ஜுன் 01 என வைத்துக் கொண்டால், ஜுன் 01ம் தேதியுடன் 7 நாட்களை கூட்டினால் ஜுன் 08 தேதி வரும். இதிலிருந்து 3 மாதத்தை கழித்தால் மார்ச்' 2009 வரும். இதுதான் டெலிவரிக்கான தேதி!
மார்பகத்தில் வலி மற்றும் வீக்கம்!
இதுவும் கர்ப்பமாகி இருப்பதற்கான முன் அறிகுறிதான்.முதல் கர்ப்பத்தின்போது மார்பகத்தில் வலி வருவது நார்மல்தான். கர்ப்பமான இரண்டு மாதம் கழித்து மார்பகங்கள் வீக்கமாகவும்,பார்த்தாலே தெரியுமளவுக்கு நரம்புகள் மேலெழுந்தும் தெரியும். மார்பக காம்புகளும் பெரிதாகி, நிறம் இன்னும் கருப்பாகி வலியுடன் இருக்கும். காம்பைச் சுற்றி இருக்கும் கருத்தோல் இன்னும் அகன்று கருத்துப் போகும்.
தவிர அந்த கருத்தோலில் சிறு சிறு கட்டிகள் போல் எழும்பும். இதற்கு பயப்பட தேவையில்லை.இதுதான் அந்த கருத்தோலில் இருக்கு `செபாசியஸ் கிளான்ட்!'
கர்ப்பமடையும்போது மார்பகத்தில் வலி மற்றும் வீக்கம் ஏன் ஏற்படுகிறது?
கருத்தரிக்கும்போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிப்பதால்தான் மார்பகங்கள் மற்றும் காம்புகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. பால் உற்பத்தியாகும் கிளாண்ட் பெரிதாவாதால்தான் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது. இவையெல்லாம் குழந்தைக்கு பாலூட்டுவதற்குதான்.
Friday, July 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment