Friday, August 1, 2008

ஜானகி விரைந்தாள்!

அன்று காலை அற்ப விஷயத்திற்காக கணவன், மகன், மருமகள், பேரன், பேத்தி எல்லோரிடமும் கடுமையாகக் கோபப்பட்டு, கோயிலுக்கு வந்து யானை கட்டியிருக்கும் மண்டபத்து அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்துவிட்டாள் ஜானகி.

யானைப் பாகனின் மகன் சிறுவன், பத்து வயதிருக்கும். அவனைக் காவலுக்கு வைத்துவிட்டு கடைக்குச் சென்றான் பாகன். சிறுவனும் `சிவகாமி!' என்று செல்லமாக அழைத்தபடி யானையிடம் சென்று தும்பிக்கையைத் தடவ ஆரம்பித்தான். இதைப் பார்த்த ஜானகி பயந்து போய் பாகனிடம் ``என்னப்பா, சின்னப் பையனை அந்தப் பெரிய யானையைப் பாத்துக்கிடச் சொல்லுற! மதம் புடுச்சு அது கோபப்பட்டுட்டா விபரீதமா போயிடுமே'' என்றாள்.

அதற்கு பாகன் சொன்னான், ``அம்மா, இது பெண் யானை, மதம் பிடிக்காது. பொதுவா பெண் யானைகளுக்குப் பொறுமை அதிகம். காட்டுல கூட்டத்தையே பெண் யானைதான் நடத்துது. வீட்டுல நீங்க பொம்பளைங்கதானே கோபப்படாம குடும்பத்தை நடத்துறீங்க. உங்களுக்குப் பொறுமை போயிருச்சுன்னா குடும்பம் என்னவாகும்?''

மூளையில் ஒரு மின்னல் தெறிக்க, வீட்டை நோக்கி விரைந்தாள் ஜானகி..

0 comments: