Wednesday, July 16, 2008

பாசம் 1

உன்னால் முடியாட்டி என்ன, நான் பெத்துத் தரேனே! ஆசை தீர கொஞ்சு! சிரித்துக் கொண்டே சொன்னாள் சிந்து.

அவள் சொன்னதுதான் தாமதம். அங்கேயொரு பூகம்பம் வெடித்தது. சீதா_சிவராம் இருவருக்கும் வாக்குவாதம். சண்டை. ``என் தங்கச்சியும் நீங்களும் உள்நோக்கத்தோடதான் பழகுறீங்களா?'' எனக் கேட்டு, ஆர்ப்பாட்டம் செய்து.... வீடே அமர்க்களப்பட்டது.

சீதாவின் தங்கை சிந்து. தாயற்ற அவளை தன்னோடு வைத்து பார்த்துக் கொண்டாள். சிறுவயது முதலே இருவருக்கும் படிப்பு முதல் விளையாட்டு வரை அனைத்திலும் போட்டி.

சீதா - சிவராம் திருமணமாகி பல ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. அதைப்பற்றிய பேச்சு வந்தது. ``கவலைப்படாதே! நான் பெற்றுத் தருகிறேன் கொஞ்சு'' என்றாள் சிந்து.

அவ்வளவுதான். இப்பொழுது வாழ்க்கையிலும் போட்டியா என புயல் + பூகம்பம். ஒரு வாரமாகப் பட்டினி. வார்த்தையால் கொல்கிறாள் சீதா... பொறுக்க முடியாத ஒரு கட்டத்தில்.

``இதோ, பாருக்கா! அவரை ஒரு தகப்பன் ஸ்தானத்தில் மதிக்கிறேன். நான் பெற்றுத் தருவதாய் சொன்னது. மாமாவையும் என்னையும் இணைத்துப் பேசி அல்ல. எனக்கு மணமாகி.... பிறக்கிற குழந்தையை உனக்குத் தருகிறேன் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். தவறாகப் புரிந்து கொண்டாயே நீ?''

சிந்து கேட்க, அந்த வார்த்தை சீதாவை பளீரென அறைந்தது. தங்கையை கட்டிக் கொண்டு அழுகிறாள் சீதா... தவறை உணர்ந்து!

0 comments: