Tuesday, July 15, 2008

பார்வை !

கிருஷ்ணமூர்த்திக்கு தன் மகன் சுரேஷை நினைத்துக் கவலையாயிருந்தது.
வயது பதினைந்தாகிறது. படிப்பெல்லாம் பரவாயில்லை ரகம்தான். ஆனால் பள்ளிக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பையன் வீடே தங்குவதில்லை. விளையாட்டு, ஊதாரித் தனமாய் ஊரைச் சுற்றுவதென்று காலில் சக்கரம் கட்டாத குறையாய் திரிகிறான்.

பக்கத்து வீட்டு கோபாலின் மகன் சுந்தருக்கும் இவன் வயதுதான் ஆகிறது. என்ன ஒரு அடக்கம். அமைதி. அனாவசியமாய் வீட்டு காம்பெளண்டைக் கூட தாண்டுவதில்லை. பிள்ளை வளர்த்தால் அப்படி வளர்க்க வேண்டும்.
சுரேஷைத் திருத்த என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடி வாசலுக்கு வந்த கிருஷ்ணமூர்த்திக்கு, பக்கத்து வீட்டு கோபால் தன் மனைவியிடம் போடும் சத்தம் கேட்டது.

``புள்ளை வளர்க்கிற லட்சணமாடி இது.. பள்ளிக் கூடம் போற நேரம் தவிர மத்த நேரமெல்லாம் டி.வி. பொட்டியே கதின்னு கிடக்கிறான்.. வயசுப் பையன்னா ஓடியாடி விளையாட வேண்டாம்.. பக்கத்து வீட்டு சுரேஷுக்கு இவன் வயசுதானே ஆகுது.. அவன் எவ்வளவு சுறுசுறுப்பா. ஆக்டிவ்வா தைரியசாலியா இருக்கான்.

புள்ளன்னா அப்படியிருக்க வேண்டாமா?''
கேட்டதும் கிருஷ்ணமூர்த்திக்கு தலை கிர்...ரென்றது

0 comments: