கருத்தரிக்கும் பெண்களுக்கு_தங்களுக்குப் பிரசவம் நல்லபடியாக ஆகவேண்டும், இடையில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும்.
அந்த பயத்தைப் போக்கி, கர்ப்பத்தை ரட்சித்து, சுகப்பிரசவம் ஆக்கிக் கருணைமழை பொழிகிறாள் கர்ப்பரட்சம்பிகை.
இவள் ஆட்சிபுரியும் ஊரின் பெயரைப் பாருங்கள்... திருக்கருகாவூர்! அதாவது கரு, கருகாத ஊர். அன்னையை வணங்கினால் சுகமான குவா, குவா உத்தரவாதம்.
இதோ, கோயிலுக்குள் நுழைவோமா?
ஆலயம் அமைந்திருக்கும் இந்தப் பகுதி ஒரு காலத்தில் முல்லைக்கொடிகள் நிரம்பிய வனப்பகுதியாக இருந்தது. இங்கே சுயம்புவாகத் தோன்றிய ஈசன், முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் `மாதவி' என்றால் முல்லை என்று அர்த்தம். எனவே, மாதவிவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவராகையால், முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள். இவருக்குப் புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
அவருக்கு எதிரே கர்ப்பக விநாயகர் (கற்பக?) சுயம்பு நந்தி, சோமாஸ்கந்தர் ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மகாலக்ஷ்மி, முருகன், பிரம்மன், மகிஷாசுரமர்த்தினி, சண்டீசர் ஆகியோரும் இந்த சிவாலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.
சுவாமி கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் நந்தவனம் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் திருக்கோயில் அமைந்திருக்கிறது.
பத்மபீடத்தில், அமைதியே உருவாக அன்னை எழுந்தருளியிருக்கிறாள். லேசான புன்னகை வேறு. அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவளது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! பார்த்தாலே பரவசம் ஏற்படுகிறது. மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன. கர்ப்பரட்சாம்பிகையை ஒரு தடவை பார்த்தாலே புத்திர பாக்கியம் ஏற்படும் என்ற உணர்வு, நம்பிக்கை, பார்க்கும் பக்தர்களுக்கெல்லாம் ஏற்படுகிறது.இவள் கர்ப்பத்தை ரட்சிப்பவள் சரி, திருமணமே ஆகாதவர்களுக்கு? அதற்கும் இவளிடம் மருந்து இருக்கிறது. திருமணம் கூடிவராத பெண்கள், அன்னையின் சன்னதியில் நெய்யினால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவருவதாகச் சொல்கிறார்கள்.
மகப்பேறு இல்லாதவர்கள், 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும் என்றும் சுகப்பிரசவம் ஆக அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெயை நம்பிக்கையுடன் தடவி வந்தாலே போதும் என்பதும் பலனடைந்தவர்களின் வாக்கு.
திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத்தலம் இது. பிரம்மன், கௌதமர் ஆகியோர் இங்கே தங்கி இறைவனை பூஜித்திருக்கிறார்கள். அம்மன் கோயில் அருகில் இருக்கும் கௌதம லிங்கத்தை நிறுவியவர் கௌதம முனிவரே என்கிறது புராணம்.
இந்தத் திருக்கருகாவூர் ஆலயத்தில் நவகிரகங்கள் எல்லாம் வித்தியாசமாக அமைந்திருக்கின்றன. சூரியனைச் சுற்றி மற்ற எல்லா கிரகங்களும் சூரியனையே பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் அபய வரத முத்திரையுடன் காட்சி தருவதும் சிறப்பானது.
பிரதோஷம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், நவராத்திரி போன்ற தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு உண்டு. ராஜகோபுரத்தின் எதிரில் உள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளத்தில் சிவராத்திரி அன்று ஈசன், தீர்த்தமாடுகிறார். இந்தக் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
கருக்காத்தநாயகி என்னும் கர்ப்பரட்சாம்பிகை இந்தத் திருக்கருகாவூரில் தங்கி அருள்பாலிக்கும் கதைதான் என்ன? தெரிந்து கொள்வோமா? கர்ப்பம்
இப்போதைய திருக்கருகாவூர், முல்லைவனமாக இருந்த காலம் அது.
அமைதி தவழும் அந்தப் பிரதேசத்தில் கௌதமர் போன்ற முனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்தார்கள்.
தவம் செய்யும் முனிவர் பெருமக்களுக்கு உதவியாக நைத்ரூபர் _ வேதிகை என்ற தம்பதியர் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியமில்லாத அந்தத் தம்பதிகளுக்கு இவ்வாறு தொண்டு செய்தாலாவது இறைவன் தங்களைக் கண்திறந்து பார்க்க மாட்டானா? என்ற ஆதங்கம் இருந்தது.சிவனடியார்களுக்குத் தொண்டு, மற்றும் சிவனையும், பார்வதியையும் வழிபடுவது என்றே அந்தத் தம்பதியினரின் நாட்கள் கழிந்தன.
ஒருநாள், வேதிகை கர்ப்பவதியானாள்.
அவளுக்கும், நைத்ருபருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை, அகமகிழ்ந்தனர்.
கரு மெல்ல வளர்ந்து வந்தது.
அன்றைய தினம் நைத்ருபர், பணி காரணமாக வேறு ஊருக்குச் சென்றிருந்தார்.
அன்றைக்கு ஏனோ தெரியவில்லை, வேதிகை மிகவும் சோர்வாக இருந்தாள். பலவீனமாக உணர்ந்தாள். ஐந்து மாத கர்ப்பம் காரணமான அசதி. கிறுகிறுவென மயக்கம் வரும் போலிருந்தது. பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். பிறக்கப் போகும் குழந்தையை நினைத்தபடி கண்ணயர்ந்து கொண்டிருந்தாள்.
அதே நேரம் வாசலில் வந்து நின்றார் ஊர்த்துவபாதர் என்ற கோபக்கார முனிவர்.
முனிவருக்கு நல்ல பசி, ``அம்மா, பிட்சை போடுங்கள்'' என்று குரலெழுப்பினார்.
வேதிகைதான் மயக்கத்தில் இருக்கிறாளே, முனிவரின் பசிக்குரல் அவள் காதுகளில் விழவில்லை.
பசி மிகுதியில் கோபமும் மிகுந்தது முனிவருக்கு. ``ஏ பெண்ணே, நான் பிட்சைக்காக வந்திருப்பதைக் கூடக் கவனிக்காமல், உன் நினைவு வேறு எங்கே இருக்கிறது? நீ எதை நினைத்துக் கொண்டிருக்கிறாயோ அது அழிந்து போகட்டும்'' என்று சாபமிட்டுவிட்டார்.
குழந்தை
வேதிகை துடித்தாள்.
காரணம், அவள் அப்போது நினைத்துக் கொண்டிருந்தது _ தன் வயிற்றில் உள்ள கருவைத்தான். அதைப் போய் அழியுமாறு சாபம் கொடுத்துவிட்டாரே? அடிவயிற்றிலே `சுருக்'கென்று ஓர் அபாய வலி வலித்தது. வேதிகை அழுதாள், புரண்டாள்... ஆம்... அவள் வயிற்றிலேயிருந்த கர்ப்பம் கலைந்து போய் விட்டது. கரைந்து போய்விட்டது.
வேதிகை நடுநடுங்கினாள். ``அன்னையே, தாயே, தேவியே, கர்ப்பரட்சாம்பிகையே, என் நிலை இப்படி ஆகிவிட்டதே. உன் அருளால் கிடைத்த கர்ப்பம் இப்போது இல்லை என்று ஆகிவிட்டதே. நீ தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்'' என்று முறையிட்டாள். கதறினாள்.
உடனே கர்ப்பரட்சாம்பிகை அவள்முன் தோன்றினாள். கீழே சிதறியிருந்த கருவை எடுத்து ஒரு குடத்தினுள் இட்டாள். அது மட்டுமல்ல, அது குழந்தையாக உருவாகும்வரை காத்திருந்து, அதற்கு நைதுருவன் என்ற பெயரையும் சூட்டி வேதிகையிடம் தந்துவிட்டு மறைந்தாள். மெய்சிலிர்த்துப் போனாள் வேதிகை.
காமதேனு
குழந்தை மெல்ல வளர்ந்தது. தெய்வக் குழந்தையாயிற்றே. அதற்குச் சாதாரணப் பால் பிடிக்கவில்லை, சம்பந்தர் போல் சுவையான பாலுக்காகக் கதறியது.
பார்த்தார் சிவபெருமான். தேவலோகத்திலிருந்து காமதேனுவை அழைத்து குழந்தையைப் பாலூட்டி வளர்க்குமாறு ஆணையிட்டார்.
காமதேனு தன் சுவையான பாலைக் குழந்தைக்குத் தந்தது. அதோடு விட்டதா? தன் கால் குளம்பால் ஒரு குளத்தையே தோண்டியது. அதனுள் தன் பாலை நிரப்பிற்று. குழந்தை பாலில் விளையாடிற்று. (அந்தப் பால்குளம் இப்போதும் உள்ளது. இதில் நீராடுவோர் மகப்பேறு எய்துவர் என்கிறது புராணம்). கர்ப்பரட்சாம்பிகை
பணிக்காக வெளியூர் சென்றிருந்த நைத்ருபர் ஊர் திரும்பினார். நடந்ததையெல்லாம் அறிந்து மெய்சிலிர்த்தார்.
கர்ப்பரட்சாம்பிகையைத் துதித்தார். அவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.
``நைத்ருபனே, உனக்கு என்ன வேண்டும் கேள்...''
நமஸ்கரித்தார் நைத்ருபர். ``தாயே எங்களுக்கு அருள் பாலித்தது போல் இந்தத் தலத்திற்கு வந்து யார் வேண்டினாலும் நீங்கள் அவர்களின் கருவைக் காத்து சுகப்பிரசவம் நடக்க அருள் தர வேண்டும். அதுவே எனக்குப் போதும்.''
அம்பிகை புன்னகைத்தாள், ``அப்படியே ஆகுக'' என்று ஆசி புரிந்தாள். அன்று முதல், அன்னையை வணங்கிய பெண்கள் எல்லாம் பலன் பெற்று வருகிறார்கள். விதியை மாற்றும் வித்தகியான கர்ப்பரட்சாம்பிகையை நீங்கள் தரிசிக்கும் நாள், பொன்நாள்தான்
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment