Sunday, July 13, 2008

கீரை ஸ்பெஷல் !

இன்றைக்கு கண்பிரச்னை சர்க்கரை நோய் போன்ற நோய்களின் தாக்கம் இல்லாதவர்கள் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு பல வியாதிகள் மனிதர்களைத் தாக்கி வருகிறது. நோய்களுக்கான மருந்துகள் எடுத்துக் கொள்வது ஒரு பக்கம் என்றாலும் உணவுக்கட்டுப்பாடு தேவை என்பதே எல்லோராலும் சிபாரிசு செய்யப்படுகிறது. அந்த வகையில் காய்கறி உணவுகளே நல்லது என்று சொல்லப்படுகிறது. காய்கறி உணவில் கீரைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. அதனால் கீரைகளில் உள்ள சத்துக்களைத் தெரிந்து கொள்வது நல்லது.

முளைக் கீரை:
இதில் சுண்ணாம்புச் சத்து நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுவடைந்து நன்றாக வளரும். வயிற்றுப்புண்ணை ஆற்றுவதோடு மலச்சிக்கலையும் போக்கக்கூடியது. நீரடைப்பை போக்கும். கண்பார்வை தெளிவாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரை
பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதோடு கண் சம்பந்தமான வியாதிகளையும் குணமாக்கும். சொறி சிரங்குகளைப் போக்கும்.

புதினாக்கீரை
புதினாக்கீரையை சட்னி, துவையலாகச் செய்து பலகாரங்கள் மற்றும் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் புதினாத்துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். இதில் வைட்டமின் ஏ மற்றும் பி சத்துக்கள் நிறைந்துள்ளன.

தரைப் பசலைக் கீரை
மலச்சிக்கலை நீக்கும். சிறுநீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். உடல் உஷ்ணத்தைக் குறைத்துவிடும். குளிர்ச்சியான தேகம் உடையவர்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

கொடிப்பசலைக் கீரை
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும்.

சிறுகீரை
காசநோயை குணப்படுத்தக்கூடியது. இதற்கு விஷத்தை முறிக்கும் சக்தியுண்டு. சிறுநீர் சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும்.

வெந்தயக்கீரை
இந்தக் கீரை சுண்ணாம்புச் சத்தும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்தது. அஜீரணத்தைப் போக்கி பசியை உண்டு பண்ணும். கண் பார்வைக்கு நல்லது. சொறி சிரங்கைப் போக்கும்.

புளிச்ச கீரை
புளிச்சக் கீரைவாத சம்பந்தமான எல்லா வியாதிகளையும் இது போக்கக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நாளாவட்டத்தில் மலச்சிக்கல் ஏற்படாத நிலை வந்து விடும். காச நோயை சமன்படுத்தும்.

கீரைத் தண்டு
சீதபேதி உள்ளவர்களுக்குக் கொடுத்து வந்தால் சீதபேதி உடனே குணமாகும். பேதியுடன் இரத்தமாகப் போகும்போது இந்தக் கீரைத்தண்டை, காரம் சேர்க்காமல் சாப்பிட்டால் இரத்தப்போக்கு நின்று விடும்.

அகத்திக் கீரை
மூளைக் கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி இதை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் மூளைக் கோளாறு நீங்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும். நீர்ச்சளியை நீக்கும். நீரடைப்பு போன்ற நோய்களைக் குணப்படுத்தும். நோயாளிகள் மருந்து சாப்பிடும் பொழுது இக்கீரையை சேர்க்கக் கூடாது.

முருங்கைக் கீரை
இதில் சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் பாஸ்பரசும் அடங்கி உள்ளன. இக்கீரை பல வியாதிகளையும் தீர்க்கக்கூடிய அருமருந்தாக இருந்து வருகிறது. கண் எரிச்சல் தீரும். கண்பார்வை தெளிவடையும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். தாதுவை விருத்திப்படுத்தும். நீரழிவை நிவர்த்தி செய்யும்.

கொத்தமல்லிக் கீரை
சுண்ணாம்புச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைய உள்ளன. இரத்தத்தைச் சுத்தமாக்கும். மாலைக் கண், சிரங்கு, சொறி, புண் இவைகளைக் குணப்படுத்தும். சிறுநீர் சம்பந்தமான வியாதிகள், கண் சம்பந்தமான வியாதிகள், வாய்ப்புண், வயிற்றுப்புண், உதட்டுப்புண் ஆகியவைகளைஆற்றக்கூடியது.

கறிவேப்பிலை கீரை
இதில் வைட்டமின் ஏ.பி.சி. உயிர்ச்சத்துக்கள் நிறையவே உள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தைக் கொடுக்கவும், எலும்புகளுக்குச் சக்தியூட்டவும் செய்கிறது. மேற்கண்ட இரு கீரைகளையும் துவையலாகச் செய்து சாப்பாட்டுடன் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்லது

0 comments: