Sunday, July 13, 2008

பங்குனி உத்திரம் சிறப்பு

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் பௌர்ணமியில் வரும் பங்குனி விரதம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்தப் பங்குனி உத்திரத் திருநாளை சமய பேதமின்றி சைவர்களும், வைணவர்களும் இன்று நேற்று என்றில்லாமல் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானின் தோழர். தம்பிரான் தோழர் என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் திருவாரூர் தியாகேசப் பெருமானை வழிபட்டதுமன்றி மனைவி பரவை நாச்சியாரின் மாளிகையில் சிவனடியார்களுக்கு அன்னதானமும், உடை அளிக்கும் விழாவும் நடத்துவது வழக்கம்.

இதற்காக அவர் இறைவனிடமே பொன் பொருள் பெறுவது வழக்கம்.இறைவன் தரும் பொன் பொருள் மட்டுமின்றி அன்பர்களும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கு பொருள் வழங்குவதும் உண்டு. திருக்குவளை என்று வழங்கப்படும் திருக்கோஸிலி தலம் திருவாரூர்க்கு அருகாமையில் உள்ள தலம். இங்கு வாழ்ந்து வந்த குண்டையூர் கிழார் என்ற அடியவர் பங்குனி உத்திரப் பெருவிழா போன்ற பெரிய விழாக்கள் நடைபெற நெல் மூட்டைகளை வழக்கமாக அனுப்பி வைப்பது வழக்கம்.

அந்த ஆண்டு பயங்கரமாகப் பஞ்சம் வந்தது. நெல் விளைச்சல் இல்லை. குளம், குட்டை, வயல்வெளிகள் வறண்டு போயின. சுந்தரமூர்த்தி நாயனார்க்கு அனுப்ப நெல் இல்லையே என்று குண்டையூர்க் கிழார் வருந்திக் கொண்டிருந்தார். பரவையாரும் ``பங்குனி உத்திரப் பெருவிழா வரப் போகிறதே ஏன் இன்னும் நெல் மூட்டைகள் வந்து சேரவில்லை என்று திருக்கோஸிலி சென்று பார்த்து விட்டு வாருங்கள்'' என்று சுந்தரரை அனுப்ப, சுந்தரர் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

இறைவனிடம் முறையிட்டார்.இறைவன் திருக்கருணையில் தானியங்கள் நிறைந்தன. திருக்கோஸிலியில் தானிய மூட்டைகள் நிரம்பி என்ன பயன்? ஆரூரில் அல்லவா நிரம்ப வேண்டும்?

``கோஸினி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன். ஆளிலி எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே'' என்று பாட, மறுநாள் ஆரூரில் நெல் மலையெனக் குவிந்தது. பிறகென்ன? பங்குனி உத்திரம் ஜாம் ஜாம் என்று நடந்தது என்று சொல்லவும் வேண்டுமா?

தலயாத்திரையாகத் திருவொற்றியூர் வந்தார் சுந்தரமூர்த்தி நாயனார். அங்கே சங்கிலியாரை மணந்தார். சங்கிலியாரோ ஒற்றியூர் அப்பனை சாட்சியாக வைத்து சுந்தரர் தம்மை விட்டுப் பிரிந்து போகக் கூடாது என்ற உறுதி மொழியை வாங்கிக் கொண்டாள். சிறிது காலம் அங்கே தங்கினாலும், ஆரூராரை மறக்க இயலாமல் மீண்டும் திருவாரூர் வந்து சேர்ந்தார்.
சிவபெருமானை திருவாரூரில் பங்குனி உத்திரத்தன்று தரிசனம் செய்தார். சங்கிலியாரை மணந்ததால் பரவை நாச்சியார் சுந்தரரைப் பார்க்க மறுத்து விட்டார். சுந்தரரோ, பரவையாரிடம் சிவபெருமானையே தூது போகச் சொன்னார். சிவனாரும் ஆரூர் வீதியில் நடந்து பரவையாரிடம் தூது சென்று சுந்தரரை மன்னிக்கும்படி வேண்டினார்.அதற்குப் பரவையாரோ ``சங்கிலியாரிடம் கட்டுண்டவர்க்கு இங்கு பங்குனி உத்திரத் திருநாளோ?'' என்று கேலியாக வினவினார்.

கடைசியில் சிவபெருமானின் திருவருளால் பரவையாரின் ஊடல் தீர்ந்தது தனிக் கதை.

சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரம் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதை திருஞான சம்பந்தரின் தேவாரமும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
திருமயிலையில் சிவநேசச் செல்வரின் திருக்குமாரத்தி பூம்பாவை என்பாகள் பாம்பு கடித்து இறந்து விட்டாள். சிவநேசச் செல்வர் அவளுடைய அஸ்தியை ஒரு பொற் கலசத்தில் சேகரித்து வைத்திருந்தார். அவளை திருஞான சம்பந்தருக்கு மணம் முடித்து வைக்க எண்ணி இருந்தார். திருஞான சம்பந்தர் திருமயிலை வந்த சமயம் அந்த அஸ்தி இருந்த கலசத்தை அவரிடம் கொடுத்தார் சிவநேசர்.

இறந்து போன பூம்பாவையை எழுப்ப திருஞான சம்பந்தர் கபாலிசுரப் பெருமானுக்குக் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களைக் குறிப்பிடுகிறார். அப்படிக் குறிப்பிடப்படும்பொழுது, ``பங்குனி உத்திரத் திருநாளையும் காணாது போய் விட்டாயோ பூம்பாவை'' என்று பாடுகிறார்.

பூம்பாவை உயிர்பெற்று எழுந்திருக்கிறாள்.

இராமாயணத்தைப் பார்க்கலாம்.

மிதிலையில் ஸ்ரீராமர்-சீதாதேவி திருமணம். இந்தத் திருமணத்தை, வேதமுறைப்படி வசிஷ்டர் நடத்தி வைத்தார் என்று இராமாயணம் எடுத்துச் சொல்லுகிறது.

``பங்குனி உத்திரம் ஆன பகல் போது
அங்கண் இருக்கினில் ஆயிரம் ராமர்
சிங்கம் மணத்தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வளர்த்தான்''
என்கிறார் கம்பர்.

முருகப்பெருமானின் திருவிளையாடல்களைக் கண்டு களித்த திருமாலின் கண்களிலிருந்து இருசொட்டுக் கண்ணீர் வருகிறது. அந்தக் கண்ணீர்த் துளிகளே ஆனந்தவல்லி, சுந்தரவல்லி என்ற இரு நங்கையர்கள். இவர்கள் கந்தபெருமானை அடையத் தவம் புரிகின்றனர். முருகன் அத்தை மகன். முறை மாப்பிள்ளை.

கந்தவேள் அவர்கள் முன்பு தோன்றினார். ``யாம் சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு அவதாரம் செய்துள்ளோம். அதுவரை யாம் திருமணம் செய்து கொள்ள முடியாது. நீங்கள் இருவரும் ஒருத்தி தேவலோகத்திலும், இன்னொருத்தி பூவுலகிலும் பிறந்து எம்மை நினைத்து வணங்கி வர வேண்டும். சூரசம்ஹாரம் முடிந்து, உரிய சமயத்தில் யாம் உங்களைத் திருமணம் புரிந்து கொள்வோம்'' என்று கூறி அருளினார்.

அமிர்தவல்லி தேவேந்திரனின் மகளாக வளர்ந்து வருகிறாள். இவள் தேவேந்திரனிடம் சென்றதும் தேவேந்திரன் இவளை அப்படியே அணைத்து மகிழ்கிறான். தேவேந்திரன் சூரனுக்குப் பயந்து பயந்து ஓடி ஒளிந்த காலம் அது. இக்குழந்தையை அணைத்து மகிழ்ந்ததும் இழந்த சேனையை மீண்டும் அடைந்த ஒரு பேரின்ப உணர்வு ஏற்பட்டதாம். அதனால் அவளுக்கு ``தேவசேனா'' என்ற பெயரும் இடப்பட்டது.
தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம் இவளை எடுத்து வளர்த்ததால் ``தெய்வ யானை'' என்ற திருப்பெயரும் இக்குழந்தைக்கு இடப்பட்டது.

சுந்தரவல்லி என்ன ஆனாள்?
வள்ளி மலையிலே சிவமுனிவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். அங்கு ஒரு அழகிய மான் உலாவியது. அது வேறு யாருமல்ல. ஒரு சாபத்தினால் திருமால் சிவமுனிவராகவும், மகாலட்சுமி மானாகவும் பிறந்து வள்ளி மலையிலே இருந்தார்கள்.

சிவமுனிவரின் பார்வை பட்டதும் மானின் வயிற்றில் வள்ளி நாயகி தோன்றினாள். உரிய காலத்தில் வள்ளிக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் குழியில் மானாகிய மகாலட்சுமி வள்ளியைப் பிரசவித்தாள். இப்படி வள்ளி நாச்சியார் பிறந்த தினம் பங்குனி உத்திர நன்னாள் என்று நமக்கு கந்தபுராணம் கூறுகிறது.

வேத ஆகமங்கள் புகழும் இமயமலை. இதன் தலைவன் இமவான். இவனுடைய மகள் பார்வதி தேவி. இவள் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்கிறாள். இறைவன் பார்வதியை மணக்க இசைந்து சப்த ரிஷிகளையும் திருமணம் பேச இமயமலைக்கு அனுப்பி வைக்கிறாள். அவர்கள் திருமணம் பேசி திருமணத்திற்கு உகந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் திருமண நாள்தான் பங்குனி உத்திரத் திருநாளாகும்

0 comments: