``நடராஜா, இன்றைக்கு சாயந்திரம் ஃப்ரியா இருந்தா எங்க ஊருக்கு வாயேன்''.
ராஜாமணி சார்தான் சொல்லிக்கொண்டிருந்தார். தலை நிமிர்ந்து என்னைப் பார்க்கவில்லை. கையிலுள்ள பேனா, டைப் செய்த எழுத்துக்கள் மீது ஓடிக் கொண்டிருக்க, கண் தொடர்ந்து அதை வாசித்துக் கொண்டிருக்க, வாய் மட்டும் என்னைக் கேட்டது.
``என்ன சார், வீட்டில் ஏதேனும் விசேஷமா?'' நான் கேட்டேன்.
``விசேஷம்தான்; வீட்டில் இல்லை. எங்கள் ஊர் கோவிலில் நவராத்திரி உற்சவம். இன்றிரவு நீ பார்த்துவிட்டு அப்படியே என் வீட்டில் தங்கிவிடு. நாளை ஞாயிற்றுக்கிழமைதானே. காலையில் முதல் டிரெயினில், இல்லை பஸ்ஸில் தஞ்சாவூர் சென்று விடலாம். என்ன சொல்கிறாய்?''
இப்போதும் தலை நிமிரவில்லை. வாய்தான் பேசிக்கொண்டிருந்தது. நான் மனசுக்குள் கணக்குப்போட்டேன். இரவு எட்டரை, ஒன்பது மணி ஆனாலும் பஸ் பிடித்தால் பத்தரைக்குள் தஞ்சாவூர் சென்று விடலாம். பின் பஸ் ஸ்டாண்டில் போட்டிருக்கும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினால் புன்னை நல்லூர் பத்தே நிமிடங்களில். இரவு தங்கவேண்டாம்; ஊர் திரும்பிவிடலாம். ராஜாமணி சார் மற்றவர்களிடம் முகம் கொடுத்துப் பேசினாலே எல்லோரும் ராஜமரியாதை கிடைத்த மாதிரி பெருமிதம் அடைவார்கள். அப்படிப்பட்டவர் என்னை அவர் வீட்டுக்கு அழைக்கிறார். போக வேண்டியதுதான்.
நான் தலையாட்டினேன். ``ஆகட்டும் சார்; வருகிறேன்''
ராஜாமணி சாரைப் பற்றி உங்களுக்குக் சொல்லவேண்டும். அவர் என் மேலதிகாரி. என் அலுவலகத்தில் மூத்த கெஜட்டட் ஆபீஸர். ஆனால் என் போன்ற ஒரு சாதாரண ஊழியனிடம் அவருக்கு அன்பும், அக்கறையும் எப்படி ஏற்பட்டது என்று என்னால் யூகித்து அறியவே முடியவில்லை. ஏதோ ஒரு பாச உணர்வு எனக்கு அவர் மீதும், அவருக்கு என் மீதும் இருந்தது. எனக்கு அவரது கம்பீரத்தோற்றமும், எடுப்பான முகமும், உயரமும் ரொம்பவும் பிடிக்கும். அளந்து பேசுவார். செக்ஷனுக்குள் அவர் நுழைந்து விட்டாலே, அவரைப் பிடிக்காதவன் கூட சட்டென்று எழுந்து நின்று விடுவான். ஒரு வித `கமாண்டிங்' தோற்றம். அதுதான் என்னை முதன் முதலில் அவர் பால் ஈர்த்தது. அவர் கவனம் என் மீது படும்படிச் செய்தது நான் டிராஃப்ட் செய்த ஒரு கடிதம். தலைமையகத்துக்குச் செல்ல வேண்டிய அந்தக்கடிதம் மிக நேர்த்தியாக டிராஃப்ட் செய்யப்பட்டிருந்ததாக பாராட்டினார். எழுதியவனைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் சென்றபோது ``குட்;கீப் இட் அப்'' என்று நான்கே வார்த்தைகள் சொன்னார்.
அதன் பிறகு எப்போதாவது அவர் சேம்பருக்கு நான் செல்ல நேரிடும் போது என் கல்வித் தகுதிகள், ஏன் டிபார்ட்மெண்ட் தேர்வுகளை எழுதவில்லை என்பது போன்ற விஷயங்களைக் கேட்பார். நான் அவர் கேட்பதற்கு பதிலாக கொஞ்சமாகவும், கேட்காமலே நிறையவும் என்னைப் பற்றிக் கூறினேன். நேரிடையாக, வெளிப்படையாக கூறாமலே நாங்கள் மானசீக நண்பர்களாக ஆகிவிட்டோம். அவர் குடும்பத்தைப் பற்றியோ வீட்டைப் பற்றியோ சொன்னதில்லை. நானும் கேட்டதில்லை. ஆனால் அவர் மணமானவர் என்பதும், குழந்தைகள் இல்லை என்பதும் மற்றவர்கள் வாயிலாக நான் அறிந்து கொண்டேன்.
மாலை நான்கு மணி போலிருக்கும். மீண்டும் கூப்பிட்டு அனுப்பினார். ``ஐந்து மணி டிரெயினுக்குப் போவோம். நாலரைக்கெல்லாம் ரெடியாயிடு.
மாலை நாலரை மணி ஆனதும் இருவரும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். ஆளரவமற்ற பாதைகள். சனிக்கிழமையானதால், வொர்க்ஷாப்பும், ஆபீஸும் மதியம் வரைதான். அதனால் மாலைப் பொழுதில் ஆட்களின் நடமாட்டம், வண்டிகளின் போக்குவரத்து எல்லாமே குறைந்து நிசப்தமாக இருந்தது. ராஜாமணி சாரின் ஊர் மண்ணைத் தொட்டதுமே ராஜகோபுரம் பெரியதாய் தெரிந்தது. ஊரில் நவராத்திரி விழா களைகட்டி இருந்தது. பெய்யத் தொடங்கிய மழையைக்கூட பொருட்படுத்தாமல் எங்கு நோக்கிலும் மக்கள் கூட்டம். ராஜகோபுரத்தைத் தாண்டி இரண்டு தெருக்களைக் கடந்து, வலது பக்கமாகத் திரும்பினால் ராஜாமணி சாரின் வீடு, இரண்டு தெருக்களை இணைப்பது போல் வாசற்புறமும், கொல்லைப்புறமும்; ஓடும் தளமும் சேர்த்துக் கட்டப்பட்ட பழங்கால வீடு.
``வா நடராஜா, உள்ளே வா! உட்கார்'' ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டார். தாமும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். நான் அந்த ஹாலைச் சுற்றி என் பார்வையை சுழற்றினேன். சுவர்களில் நிறைய தெய்வப் படங்கள்; ராமனும், கிருஷ்ணனும், கலைமகளும், திருமகளுமாய்; சில படங்களில் தலைப்பாகை கட்டி மேல் கோட் அணிந்த ஆண்களும், அவர்கள் பக்கத்தில் பவ்யமாக முந்தானையால் தோளைப் போர்த்தியபடி நிறைய ஆபரணங்கள் அணிந்த பெண்களும்; நீளவாக்கில் இருந்த ஒரு போட்டோ மட்டும் கொஞ்சம் புதிது. அதில் சூட், கோட் சகிதம் ராஜாமணி சாரும், பக்கத்தில் கொஞ்சம் நோஞ்சான் போல் மெலிந்த ஒரு பெண்ணும்; அவர் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்; என் பார்வை அந்தப் படத்தில் நிலைத்து நிற்பதைப் பார்த்த ராஜாமணி சாரே சொன்னார். ``என் கல்யாணத்தின் போது ரிசப்ஷனில் எடுத்தது; அது ஆச்சு, பதினைந்து வருஷம். அப்போது நான் வெறும் சீனியர் கிளார்க்தான்.''
அதற்குள் கொல்லைப்புறத்தில் இருந்து ஒரு வயதான பெண்மணி ஒரு முதியவரை கையைப் பிடித்து அழைத்து வந்தார்.
``டேய் மணி! இத்தோடு பத்துத் தடவையாச்சு; மழைக்காலமா? தாங்க முடியலை போலிருக்கு! எனக்குப் புழக்கடைக்கும் வீட்டுக்கும் உங்கப்பாவை இழுத்துண்டு நடக்க முடியலை; கால் விட்டுப் போச்சு.'' அலுத்துக் கொண்டவாறே வந்து ஹாலின் ஒரு மூலையில் போட்டிருந்த கட்டிலில் முதியவரை இருத்தி விட்டு தானும் ஓர் ஓரமாய் உட்கார்ந்து கொண்டார்.
``என் அம்மா; அவர் என் அப்பா. அப்பாவுக்கு வயசு ஒன்னும் பெரிசா ஆகிடலை. ஆனாலும் தள்ளாமை; முதுமை கொஞ்சம் முன்னாடி வந்து விட்டது. அம்மாவுக்கும் முடியலை. வீஸிங் உண்டு. மழைக்காலம்; வயதானவர்கள்; இந்த வீட்டு முற்றத்தைக் கடந்து பாத்ரூம் போகவே சிரமப்படுகிறார்கள். சரி, நான் பாட்டுக்கு பேசிக்கொண்டே போகிறேன்; இரு வருகிறேன்;'' என்று உட்கார வைத்துவிட்டுப் போனார். சிறிது நேரத்தில் வேஷ்டியும், ஷர்ட்டும், மேல் துண்டுமாக வெளிப்பட்டார். சமையல் அறையில் இருந்து பாத்திரங்கள் கலகலக்கும் ஓசை கேட்டது. அவரது அம்மாவை அப்பாவுக்கு காப்பிகொடுத்தியா என்று அவரது குரல் விசாரித்தது. என்னை நோக்கி ``நடராஜா! அப்படியே பின்பக்கம் போய் முகம், கை கால் அலம்பிக் கொண்டு வந்துடு. டிபன் ரெடி'' என்றார். ``இந்த சந்துரு எங்கே போனான்? ஒரு பால் பாக்கெட் வாங்கி வர சொல்லலாம் என்றால் ஆள் இல்லை'' என்று யாரையோ விசாரித்தார்.
முகம் கழுவித் துடைத்து வந்ததும் ஆவி பறக்க அரிசி உப்புமாவை தட்டில் போட்டு ஸ்பூனுடன் கையில் தந்தார். ``சாப்பிட்டுக் கொண்டே இரு; இதோ வந்துடுறேன்'' என்றவாறு வேகமாய் சென்று பால் வாங்கி வந்தார்; காபி கலந்து தந்தார். இவ்வளவும் அந்த வீட்டில் ராஜாமணி சார், என் ஆபீஸர்தான் செய்தார். என்னால் பிரமிப்பைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் எப்படிப்பட்டவர்; என் ஆபீஸில் ஒரு சமஸ்தான மகாராஜா போல மற்ற ஆபீஸர்களையும் எழுந்து நில் என்று கட்டளையிடும் கம்பீரம்; அதுவா இப்போது சமையல் உள்ளுக்கும், வாசலுக்குமாக தட்டு வேஷ்டியை சுற்றிக் கொண்டு நடை போடுகிறது? கல்யாணம் ஆகி பதினைந்து வருஷம் ஆச்சு என்றாரே! அவர் மனைவி...? ஒரு வேளை... என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவர் மாதிரி ராஜாமணி சார் சட்டென்று சொன்னார்.'' என் மனைவியை உனக்கு அறிமுகப்படுத்த முடியாது; காட்டத்தான் முடியும்... இங்கே வா!''
ஹாலின் வலது கோடியில் இருந்த ஒரு அறையில் மந்தமான பல்பு எரிந்து கொண்டிருந்தது, அங்கிருந்த கட்டிலில் சுருண்டு கிடந்த ஒரு உருவத்தை, அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பதை சுற்றியிருந்த புடவை கூறியது, சுட்டிக் காட்டினார். ``அதோ அது என் மனைவி.''
இப்போது எனக்கிருப்பது பிரமிப்பா, சோகமா, துக்கமா, என்னவென்று சொல்ல முடியாத மனப்பாரம். ``நடராஜா! அப்பா இப்போ இப்படி இருக்கிறாரே என்று நினைக்காதே! அவர் ராஜா மாதிரி அரசாண்டவர். அவர் சொன்னது சொன்னபடி நடக்கும். அவர் ஜாதகம் கணித்து சொன்னால் ஒரு துளி கூட தவறாது என்பார்கள். என் அக்காக்களுக்கு என்ன தடபுடலாக கல்யாணம் நடந்தது தெரியுமா? இந்தத் தெருவை அடைத்து பந்தல் போட்டு, வந்த விருந்தாளிகளுக்கு ஒரு மாதமாய் தனி ஆள் போட்டு, சமையல் நடந்திருக்கிறது. எனக்கு ரயில்வேயில் வேலை கிடைத்த போது என் அப்பா எனக்கு ஐ.ஏ.எஸ். கிடைத்த மாதிரி பெருமைப் பட்டுக் கொண்டார். என் ஜாதகப்படி எனக்கு அரசாங்கத்தில் பெரிய வேலை கிடைக்கும் என்பது அவரது கணிப்பு.
ஆனால் அவரது கணிப்பும் ஒரு நாள் தவறியது. அதுதான் என் கல்யாணம். எங்களது ஜாதகப் பொருத்தம் என் தகப்பனார் கணித்ததுதான். அருமையான ஜாதகம்; இதுபோன்ற பொருத்தம் ரொம்ப அபூர்வம் என்றார். வைதேகியின் அப்பாவும் லேசுப்பட்ட ஆள் இல்லை; நிலம், நீச்சு என்று பெரிய தோதுதான். பெண் பார்த்த அன்றே, பெண் ரொம்ப ஒல்லியாக இருக்கிறாளே என்று லேசாக மனதில் உறுத்தியது. ஆனால் அவர்கள், அவளுக்காக வைத்திருப்பதாக காட்டிய வெள்ளிப் பாத்திரங்களும், நகைகளும் அந்த உறுத்தலை மறைத்தது. இந்த ஊரின் புகழ் பெற்ற ஜோசியரின் மகன் நான்; எனக்கு அரசாங்க உத்தியோகம்; இது போன்ற ஜாதகப் பொருத்தம் உலகிலேயே கிடையாது என்று அப்பாவே சொல்கிறார். பிறகு என்ன? நானும் ஒருவித மிதப்பில் இருந்த காலம் அது. வெகு ஜோராய் கல்யாணம் நடந்தது. இந்த வீட்டின் ஹாலும், முற்றமும், திண்ணையும் என் சந்ததிகளால் நிரம்பி வழியும் என்று என் தகப்பனார் ஆசிர்வதித்தார்.
அப்பாவின் ஆசிர்வாதம் பொய்த்துப் போனது. எனக்கு கல்யாணத்தன்று இரவே தெரிந்து விட்டது. அவள் ஒரு இதய நோயாளி. அவளுக்கு கல்யாணம் செய்து வைத்ததே தவறு! ஜாதகம், ஜோசியம், தங்கம், வைரம் என்று எது எதுவோ அதை மறைக்க வைத்து விட்டன. நானும் இடிந்து போனேன். ஒரு சாதாரண மனிதனுக்கு உள்ள சந்தோஷங்கள்கூட எனக்குக் கிடைக்காமல் போனது. அவள் அப்பா மேல் கேஸ் போட வேண்டும் என்றார்கள்; அவளை வெளியே துரத்து; டைவர்ஸ் வாங்கு; இரண்டாம் கல்யாணம் பண்ணு என்றார்கள்.
எனக்கும் கோபம் பொங்கிப் பொங்கி வந்தது; ஆனால் அந்த மாசு மருவற்ற வைதேகியின் முகத்தைப் பார்க்கும் போது, இவள் என்ன பாவம் செய்தாள் என்ற எண்ணம்தான் எழும். என் மந்த புத்தி தம்பிக்கு சோறு போடவில்லையா? அது போல் ஒரு வேளை இவளுக்கும் போடுவோமே; இவ்வளவு பெரிய வீட்டில், போனால் போகிறது அவளும் சுருண்டு கிடக்கட்டுமே என்று விட்டுவிட்டேன். எனக்கு பிராப்தம் அவ்வளவுதான் என்று என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். நடராஜா! அவளுக்கு ஆரம்பத்தில் எப்போதாவது நெஞ்சை வலித்தது. பிறகு அடிக்கடி வலித்தது; பிறகு நின்றால் வலித்தது; எழுந்தால் வலித்தது; இதோ இப்போது படுத்த படுக்கைதான்; ஏதாவது கஞ்சி போல ஆகாரம் படுக்கையில் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் அவள் உடம்பு அசைகிறதா என்பதை வைத்து அவள் உயிரோடிருக்கிறாளா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வேன். சமையல் எல்லாம் நான்தான்.
என் கதை இப்படி ஆன பிறகு அப்பா ஜோசியம் பார்ப்பதையே விட்டுவிட்டார். அன்று வந்த தள்ளாமைதான் இன்னும் தொடர்கிறது. ``என்ன எழவு ஜாதகம் பார்த்தேன்; எவன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டேன்? என் புள்ளைக்கி இப்படியாயிடுத்தே!'' என்று நினைத்து, நினைத்து புலம்புவார். இது போதாதென்று என் தம்பி சந்துரு! அவனுக்கு கொஞ்சம் மந்த புத்தி; வயதிற்கேற்ற மூளை வளர்ச்சி இல்லை; அவனைத் தேடிப் பிடித்து சாப்பாடு போடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பாரேன்! மணி ஏழரை ஆகப் போகிறது. இன்னும் அவனைக் காணும்''.
ராஜாமணி சார் சொல்லி முடித்தார். அனேகமாய் எல்லாம் தெரிந்தாயிற்று. ராஜா போல கம்பீரம் வெறும் வெளிப் பூச்சு; பச்சைப் பசேல் என்று நெடி துயர்ந்து நிற்கும் பெரிய மரம், உள்ளே செல்லரித்து, கூடு பாய்ந்து இருப்பதில்லையா? என் மனபாரம் கூடிற்று. கோவிலுக்குக் கூட போக வேண்டாம்; வீடு திரும்பினால் போதும் என்றாகி விட்டது.
``மணி, டேய் மணி!'' என்றவாறு சிறுவனைப் போல ஓடி வந்தான் ஒரு ஆள். என் வயது இருக்கும்; தாறுமாறாய் சுற்றிக் கட்டிய வேஷ்டி; மேலே சட்டையில்லை; நெற்றியிலும், நெஞ்சிலும் ஏதோ வேஷம் போட்டது போல் தாறுமாறாய் திருமண். ராஜாமணி சார் அவனை ஆசுவாசப்படுத்தினார்.
``நில்லு, நில்லு! எங்க போயிருந்தே? மதியம் ஏன் சாப்பிட வரல? எங்கே சுத்திட்டு இருந்தே? உள்ளே போ! கைகால், முகம் கழுவிட்டு சாப்பிடு!'' விரட்டினார் ராஜாமணி சார். அவன்தான் சந்துரு போலும்!
``இல்லடா, யானை போகுதுடா. நம்ம ஆண்டாள் இல்ல. அதுதான்; ஜிலுஜிலுன்னு நகையெல்லாம் போட்டிருக்கு; நிறைய மணிகட்டியிருக்கு; எப்பவும் உள்ள மணி இல்லை; பெரிசு பெரிசா ரொம்ப மணி; அது கொட்டாரத்த விட்டு கௌம்பறச்ச பார்த்தேன்; எழுந்து வெளியே வந்ததோ இல்லியோ எடுத்தேன் ஓட்டம்; என்னையே உத்து உத்து பார்க்கறது; நான் இன்னைக்கி கோவிலுக்குள்ளே வரவேமாட்டேன். யப்பா! என்னை முறைச்சு, முறைச்சு பார்க்கிறது, அந்த ஆண்டாள்; நான் தாயார் சன்னதிக்கு வந்தா அது என் மேல நொண்டியடிச்சுடும். மணி, நீ போறயா? எட்டு மணிக்கித்தான் அது நொண்டி நொண்டி குதிக்கும்; போனால் எட்ட நில்லு! உன்ன நான்னு நினைச்சு பிடிச்சிக்கப் போறது.'' மூச்சு விடாமல் சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டான். சந்துருவைப் பற்றி ராஜாமணி சார் விளக்கவே தேவையில்லை; எனக்கே புரிந்து விட்டது.
``வா நடராஜா! இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும்'' என்று கூறியவாறே இரண்டு குடைகளைக் கொண்டு வந்தார். வீட்டு வாசலை சார்த்தி உள்பக்கம் தாழ்போட்டார். இருவரும் கோவிலைநோக்கி நடக்கத் தொடங்கினோம். மழை வலுக்கத் தொடங்கியது. இடியும் `பளிச் பளிச்' என மின்னலும் வேறு. வேகமாய் நடையைப் போட்டு, கீழவாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்து விட்டோம். தாயார் சன்னதியில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. சந்துரு சொன்ன யானை பட்டு உடுத்தப்பட்டு, குடை பிடிக்கப்பட்டு, அழகிய முகப்படாம் கொண்டு அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஃபோகல் லைட்டுகளும், வீடியோ லைட்டுகளும், குழந்தைகளின் ஆரவாரங்களும், மண்டபம் களேபரப்பட்டுக் கொண்டிருந்தது.
நானும், ராஜாமணி சாரும் வேடிக்கை பார்ப்பதற்கு வசதியாய் ஒரு இடத்தை தேடிப் பிடித்து நின்று கொண்டோம். சரியாக எட்டு மணி ஆனதும், யானை தன் ஆபரணங்கள் கிணுகிணுக்க தாயார் சன்னதிக்கு எதிரே வந்து நின்றது. தன் துதிக்கையை உயர்த்தி தலையை ஆட்டி, மூன்று முறை தாயாருக்கு வணக்கம் செலுத்தியது. அதன் பிறகு, பாகன் ஏதோ கட்டளையிட, தன் இடது பின்னங்காலைத் தூக்கிக் கொண்டு மற்ற மூன்று கால்களால் குழந்தைகள் நொண்டியடிப்பது போல எகிறி எகிறி குதித்து, மண்டபத்தை அடைந்தது. சூழ்ந்திருந்தவர்கள் எழுப்பிய கைதட்டல் ஒலி பெய்யும் மழையையும், இடியையும் விஞ்சியது. அந்தப் பெரிய உருவம் குதித்த போது எனக்கு மனதை என்னவோ செய்தது. ராஜாமணி சாரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். ``என்ன நடராஜா, ரொம்ப டென்ஷனாய் இருக்கிற மாதிரி தெரிகிறது?''
``ஒன்றுமில்லை சார்; அந்த யானையைப் பாருங்கள்! எவ்வளவு கம்பீரம்! என்ன ஆகிருதி! அது ஒரு சத்தம் போட்டாலே பயந்து ஓடிவிடும் இந்த மக்கள் கூட்டம்; ஆனாலும் இந்த மிருகம் தன் பழக்கத்திற்கும், பழக்கியவனுக்கும் கட்டுப்பட்டு எவ்வளவு அமைதியாய் நிற்கிறது? மூன்று காலில் குதித்து நொண்டியடிக்கிறது; நாச்சியாரை வணங்குகிறது; இதெல்லாம் யானையின் இயற்கை குணங்களா? இல்லையே! ஆனாலும் எதற்கு கட்டுப்பட்டு அது அப்படி ஒரு காலைத் தூக்கி நின்றது? இதை நினைத்தால் மலைப்பு தோன்றுகிறது. யாருக்காய் இப்படி பணிந்து போகிறது என்று பிரமிப்பு தோன்றுகிறது. மனசுக்கு கஷ்டமாகவும் இருக்கிறது.''
``இல்லை நடராஜா! இந்தக் கூட்டம் கூடுவதே யானை நொண்டியடிப்பதைப் பார்க்கத்தானே! பார் மக்களுக்கு எவ்வளவு சந்தோஷம்''
``சார், மக்களுக்கு இப்படி மற்றவர்கள் படும் கஷ்டம் சில நேரம் சந்தோஷம்தான்; சிலருக்கு சகித்துப் போவதும், ஒன்றுமே நடவாதது போல மௌனமாய் இருப்பதுவும், மற்றவர்களை சந்தோஷப்படுத்த தன் இயற்கைக்கு விரோதமாய் ஒற்றைக் காலைத் தூக்கி நொண்டியடித்த'' அந்த யானையைப் போல தன் கம்பீரத்தைச் சுருக்கி, மறைத்து, மற்றவர்களை சந்தோஷப்படுத்த மூன்று காலில் குதிப்பதும் சந்தோஷம்தான்''
நானும், ராஜாமணி சாரும் கடலையை கொறித்துக் கொண்டே வீடு திரும்பினோம். சர்வாலங்கார பூஷிதையாய் ஆண்டாளும் தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தது. அதன் மணிகள் அது தன் கொட்டடியை எட்டிய பிறகும் கூட ஒலித்துக் கொண்டிருந்தது. நானும் சாரிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஏறினேன். புன்னை நல்லூர் சென்றடையும்போது மணி சரியாக பத்தரை. சாப்பிட்டதாக பேர் பண்ணி விட்டு படுத்தேன். புரண்டு, புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அந்த யானை நொண்டியும், ராஜாமணி சாரும் மாறி மாறி மனதுக்குள் வந்து கொண்டிருந்தார்கள்
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment