
சிவபெருமானுக்குக் குடுமி இருப்பதை, ஓவியங்களிலோ, சிலைகளிலோ நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் சிவலிங்கத்திற்கே குடுமி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அந்த அதிசயத்தைக் காணவேண்டுமென்றால் நீங்கள் செல்ல வேண்டிய ஊர், பி.வி.களத்தூர். அதாங்க, சென்ற வாரம் பார்த்த பொன் விைளந்த களத்தூரில்தான் இந்தப் பழம் பெருமை வாய்ந்த முன்குடுமீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது.
பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என்று மன்னாதிமன்னர்களின் ஆட்சிகளில் எல்லாம் சிறப்புப் பெற்றஇந்தக் கோயில், அதன் தொன்மை கருதி இப்போது,இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் கலைச்சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வைணவம் மட்டுமல்ல, சைவமும் தழைத்தோங்கும் இந்த ஊர், பல பெரியவர்களையும் நாட்டுக்குத் தந்த பெருமை மிக்கது.
63 நாயன்மார்களில் ஒருவரான சீற்றம் மிகுந்த, கூற்றுவ நாயனார் அவதரித்தது இந்த ஊர்தான். நளவெண்பா பாடிய புகழேந்திப் புலவர்; ஊனக்கண் தெரியாமல் போனாலும் ஞானக் கண்ணால் இந்த உலகைப் பார்த்த அந்தகக் கவி வீரராகவ முதலியார்; தொண்டை மண்டல சதகம், புள்ளிருக்கு வேளூர் கலம்பகம் போன்ற அரும்பெரும் நூல்களைப் படைத்த படிக்காசுப் புலவர்; நாக்பூர் காங்கிரஸ் மகாநாட்டில் தலைமையேற்ற சேலம் விஜயராகவாச்சாரியார் போன்றோர் பிறந்ததும் இந்த ஊர்தான்.
இத்தனை சிறப்புமிக்க இந்த ஊரில்தான் மேலும் சிறப்பாக, எங்குமே இல்லாத முன்குடுமி வைத்த சிவலிங்கமும் தரிசனம் தருகிறார்.
``தெரியாம நாம ஏதாவது தப்பு செஞ்சுட்டா ரொம்ப வருத்தப்படுவோம். கவலைப்படுவோம்... ராத்திரி தூக்கம் வராம அவதிப்படுவோம். அப்படிப்பட்டவங்க இந்த ஊருக்கு வந்து, முன்குடுமீஸ்வரரை வணங்கினாப் போதும். அவர் கட்டாயம் மன்னிச்சிடுவார். இனிமே இதுமாதிரி தப்பு பண்ணாதேன்னு மனசையும் மாத்திடுவாரு. இவரைக் கும்பிட்டாலே மனசு லேசாகிடும். மன்னர்கள் எல்லாம் வணங்கின இந்த இறைவனோட சிறப்பை இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்!'' பெருமையுடன் மெய்சிலிர்ப்பு கலந்து பேசுகிறார் ஊர்த் தலைவர் விஜயகுமார்.
அறியாமல் செய்த தவறுகள் மன்னிக்கப்படுவதற்கும் முன் குடுமீஸ்வரருக்கும் என்ன சம்பந்தம்?
இறைவனுக்கு இங்கே முன் குடுமி வந்ததே ஓர் இளம்பெண் அறியாமல் செய்த தவறினால்தான்! அவளை மன்னிப்பதற்காகத்தான் அந்த முடிசூடா மன்னனே முடிவளர்த்தான்!
இதோ அந்தக் கதை.
சோழமன்னன் செங்கோலோச்சிய சிறப்புக் காலம் அது.
சோழன் என்றாலே அவர்களது சிவபக்திதான் முதலில் அனைவருக்கும் நினைவு வரும்.
பொன்விளைந்த களத்தூரை ஆண்ட சோழமன்னனும் அப்படித்தான். அப்படி ஒரு பக்தி. அதுவும் பெருந்திருக்கோயில் என்று வழங்கப்படும் இந்தக் கோயில் இறைவன் மீது மாறாத பக்தி.
தினமும் காலையும் மாலையும் இறைவனுக்குச் சாற்றிய மலர் மாலை அரசனுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
பல்லாண்டுகளாய் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார் ஆலய அர்ச்சகர்.
அன்றைய தினம் விதி வேறுவிதமாய் வேலை செய்தது.
அர்ச்சகரின் மனைவிக்கு அந்த விபரீத ஆசை எழுந்தது. `தினம், தினம் என் கணவர் பூஜிக்கும் இறைவனின் மாலை அரசனுக்குத்தானே செல்கிறது! அதனை இன்று மட்டும் நான் சூடிக்கொண்டால் என்ன?' என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்போல் அந்த மாலையை எடுத்து தான் அணிந்துகொண்டாள். அழகு பார்த்தாள்.
அதற்குள் அரசவைப் பணியாளர் வந்துவிடவே அவசர அவசரமாய் மாலையை எடுத்து ஒன்றும் தெரியாததுபோல் கொடுத்து அனுப்பினாள். அவளுடைய நீண்ட தலைமுடி ஒன்று அந்த மாலையில் சிக்கிக் கொண்டது அவளுக்குத் தெரியாது.
மன்னன் கைக்கு மாலை போயிற்று. முதலில் அவன் கண்களில் பட்டது அந்த நீள தலைமுடிதான்.
வெகுண்டான் அரசன்.
அர்ச்சகரை அழைத்தான். காரணம் கேட்டான்.
பயந்து நடுங்கிய அவர் அந்தப் பொய்யை வேறு வழியின்றி சொன்னார் ``மன்னா, நம் கோயில் சிவலிங்கத்தின் தலையில் சிகை இருக்கிறதே. அதில்தான், ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது'' என்றார்.
அரசன் மேலும் எகிறினான். ``நாளைக் காலை ஆலயம் வருவேன். இறைவனாரின் கேசத்தைக் காட்டாவிட்டால், உன் சிரம் அறுக்கப்படும்'' என்று கர்ஜித்தான்.
அர்ச்சகரின் மனைவிக்குத் தான் செய்த பிழையால் தன் தாலிக்கே பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டது. இருவரும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு தங்கள் பிழை பொறுத்து, காக்குமாறு கதறினார்கள்.
``அஞ்சவேண்டாம். நான் உங்களை மன்னித்தேன். நாளை வாருங்கள்'' என்று அசரீரி எழுந்தது.
சொன்னபடி மறுநாள் காலை, அரசன் ஆலயத்திற்கு வந்துவிட, அங்கே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.
அத்தனை நாட்களும் மொழுமொழுவென்று இருந்த சிவலிங்கத்தின் தலையில் கூந்தல் பளபளக்க முன்குடுமி முளைத்திருந்தது!
அதனைக் கண்டு அரசன் பரவசமடைந்தான். ஆலய பூஜைகள் மேலும் சிறக்க ஏராளமான பொன்னும் பொருளும் அளித்தான்.
இன்றைக்கும் பொன் விளைந்த களத்தூர் சென்றால் இறைவன் முன்குடுமியுடன் காட்சி தருவதை நீங்கள் காணலாம். சுந்தரேஸ்வரர் என்ற அவரது பெயரே, இப்போது முன் குடுமீஸ்வரர் என்று ஆகிவிட்டது.
`செய்த தவறுக்காக மனம் வருந்தினால் மன்னிப்பு நிச்சயம்' என்பதை வலியுறுத்தும் முன்குடுமீஸ்வரர் ஆலயத்தில் நுழைவோமா?
மேலே கூரையின்றி, நான்கு கருங்கல் தூண்கள் மட்டும் நடப்பட்டிருக்க, அதன் நடுவில் வெய்யிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், இறைவனையே பார்த்துக்கொண்டிருக்கும் நந்தியைப் பார்க்கும்போதே கோயிலின் பழமை நமக்குப் புரிந்துவிடுகிறது. சோழர் காலத்திற்கே வந்துவிட்ட உணர்வு.
இங்கே ராஜகோபுரம் இல்லை. இரண்டு நுழைவாயில்கள்.
தெற்கே அம்மன் சன்னதிக்கு எதிரில் உள்ள நுழைவாயிலையே மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
கருவறையில் சிவலிங்கம் புடைத்த முன்குடுமியுடன், வேறெங்கும் இல்லாத அபூர்வக் கோலத்தில் காட்சியளிக்கிறது. கண்மூடி நின்று, `அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை மன்னித்துவிடப்பா' என்று வேண்டினாலே போதும், மனம் லேசாகிவிடும் என்று தோன்றுகிறது.
தனி சன்னதியில் மீனாட்சியம்மன் அரசாட்சி... அருளாட்சி புரிகிறார்.
விநாயகர், முருகன், துர்க்கை, நவகிரகங்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்கள்.
கோயிலெங்கும் ஏராளமான கல்வெட்டுகள் காட்சியளிக்கின்றன ஒரு தேவதாசி இந்தக் கோயிலுக்கு கொஞ்சம் நிலமும், சண்டிகேஸ்வரர் சிலையும் கொடுத்ததாக ஒரு கல்வெட்டு!
தூண்களிலும் கண்கவர் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. லிங்கோத்பவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்கண்டேயர், மகிஷாசுரமர்த்தினி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த ஊரில் பிறந்த கூற்றுவ நாயனாருக்கு தனி விக்ரஹமும் உண்டு.
நீங்கள் தெரிந்து என்ன தவறு செய்தீர்களோ, எனக்குத் தெரியவில்லை. ஆனால் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பும், அதன்பின்னர் தவறே செய்யக்கூடாது என்ற எண்ணமும் தோன்ற வேண்டுமானால், அபூர்வமான முன்குடுமீஸ்வரரின் முன்னால் சென்று உங்கள் முடி தரையில் படுமாறு அவர் காலில் விழுந்து பாருங்கள். நான் சொல்வதெல்லாம் உண்மை என்று உங்களுக்குப் புரியும்.
``முன்குடுமீஸ்வரர் கோயிலுக்கு எப்படிச் செல்வது?''
செங்கற்பட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பொன்விளைந்த களத்தூருக்குச் சென்றால்4 in 1 கோயில் மட்டுமல்ல, முன் குடுமீஸ்வரரையும் காணலாம்.
``எப்போது திறந்திருக்கும்?''
``காலை 8-10, மாலை5-7''
``தங்க, சாப்பிட?''
``எல்லாம் செங்கற்பட்டுதான். பார்சல் வாங்கிக் கொண்டு போய்விட்டால் நிம்மதி.''
``என்ன பலன்?''
``தவறுகளுக்கு மன்னிப்பு. தவறே செய்யாமல் இருக்கற மனக்காப்பு. வேறென்னவேண்டும்?''
0 comments:
Post a Comment