Wednesday, July 16, 2008

அமைதி

தனது மகள், வீட்டிற்கு வந்ததில் இருந்தே கவனித்தாள் சிவகாமி, `சின்னச் சின்ன.. விஷயத்திற்கெல்லாம், வாக்குவாதம் செய்து சின்னதாக சண்டையிட்டுக் கொள்ளும் மகளும் மருமகனும் இப்பொழுதெல்லாம் அமைதியாக இருக்கிறார்களே' என்று!

மகளை அழைத்து விசாரித்தாள்.

``ஆமாம்மா...! இப்பொழுதெல்லாம் அவர் என்னை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டார். எங்களுக்குள் எந்தச் சண்டையும் வருவதில்லை...'' என்றாள் பெருமை பொங்க!

துணுக்குற்ற சிவகாமி சொன்னாள். ``அட... அசடே! சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் போதுதான், சின்னதான சண்டைகளும், சுவாரஸ்யமும் வரும். ஆனால், இவளிடம் இதற்கு மேல் வேறு ஒன்றும் எதிர்பார்க்க முடியாது என்ற எண்ணம் வந்தால்தான்... இந்த அமைதி வரும். இதெல்லாம் ஐம்பது வயதிற்கு மேல்தான் வரவேண்டும்'' என்றவுடன் நிலைமையைப் புரிந்து கொண்டவளாகத் தயாரானாள், சின்னதாக ஒரு சண்டைக்கு!

0 comments: