Wednesday, July 16, 2008

விட்டுருங்க

சவுக்குத் தோப்புக்கு அருகே பிரியும் இந்த ஒற்றையடிப் பாதையில் திருடர் நடமாட்டம் அதிகம். சில கொலைகள் கூட இங்கே நடந்திருக்கின்றன. இவையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும், பக்கத்து ஊருக்கு இது ஒன்றுதான் குறுக்கு வழி என்பதால் இதில் சென்று கொண்டிருந்தேன்.

பாக்கெட்டில் கணிசமான பணம். விரலில் மோதிரம். கழுத்தில் சங்கிலி. இவற்றோடு அமாவாசை இரவில் இந்த வழியில் செல்வது தெரிந்தே செய்கின்ற தீக்குளிப்புதான். நரியின் ஊளையும், ஆந்தையின் அலறலும் சூழலின் திகிலை அதிகரித்தன.

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டேனோ என்று பயந்து கொண்டிருக்கும் போதே எதிரில் யாரோ வருவது தெரிந்தது. உடம்பு உதற ஆரம்பித்தது.

அடர்த்தியான மீசை, கன்னத்தில் பூரான் போன்ற தழும்பு, கட்டம் போட்ட கைலி, முண்டா பனியனோடு அவன் நெருங்கிக் கொண்டிருந்தான்.

``கடவுளே... என்னைக் காப்பாற்று...'' என்று குலதெய்வத்தை வேண்ட ஆரம்பித்தேன். இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. வேறு வழியே இல்லை... காலில் விழுந்துவிட வேண்டியதுதான்...

``சாமி... ஒண்ணும் பண்ணிடாதீங்க... நான் பிள்ளைகுட்டிக்காரன்... என்னை விட்டுருங்க...'' என்று அலறியபடியே என் காலில் விழுந்தான் அவன்..

0 comments: