Wednesday, July 16, 2008

முதலாளி

தேதி பதினைந்து ஆகியும் தன்னிடம் வேலை பார்க்கும் ராஜாவிற்கு சம்பளம் தராமலிருந்தார் மளிகைக் கடை முதலாளியான அன்பரசு.

இது குறித்து அன்பரசுவின் மனைவியிடம் ராஜா பேச, அவள் கணவனிடம் கேட்டாள்.

``ஏங்க ராஜாவுக்கு சம்பளம் தரலை?''

``ஒரு சின்ன ட்ரீட்மென்ட் தான்! இப்பெல்லாம் அவன் நைட் கடை மூட லேட்டாயிட்டா கோபத்தோட வேலை செய்யறான்! அது எனக்குப் பிடிக்கலை! நாம தர்ற சம்பளத்தை வெச்சித்தான் அவன் பொழைப்பு ஓடுது... இதை அவனுக்குப் புரியவைக்கணும் `சம்பளமில்லைன்னா பிழைக்கறது கஷ்டம்'ங்கிற நினைப்பை ஏற்படுத்தணும்னுதான் இத்தனை நாள் இழுத்தடிச்சேன்! இனிமேல் அவன் வாலைச் சுருட்டிக்கிட்டு வேலை செய்வான் பாரு... நாளைக்கு சம்பளத்தைக் கொடுத்துடறேன்'' என்றான் அன்பரசு.

மறு நாள் சம்பளம் வாங்கிய ராஜா அடுத்த நாள் வேலைக்குச் செல்லவில்லை.

``ஏங்க இன்னைக்கு வேலைக்குப் போகல?'' எனக் கேட்டாள் அவனது மனைவி.

``முதலாளி என்னை ரொம்ப சாதாரணமானவனா நெனைக்கிறார்! உழைக்கறதுக்கான கூலியை சரியான நேரத்துல கொடுக்கணும்ங்கிற நல்லெண்ணத்தை தொலைச்சிகிட்டிருக்கார்! நான் இல்லைன்னா எவ்வளவு கஷ்டம்னு அவருக்குப் புரியவைக்கணும்! இன்னும் மூணு நாளைக்கு லீவ் போடப்போறேன்'' என்றான் ராஜா..

0 comments: