புராண வரலாறு
மதுரையை ஆண்டுவந்த மலையத்துவஜன் என்ற பாண்டிய மன்னனும், இவரது மனைவி காஞ்சனமாலையும் குழந்தை பாக்கியத்துக்காக பார்வதி, பரமசிவனை வேண்டி யாகம் நடத்துகின்றனர். மனமிரங்கிய பார்வதி தானே 3 வயதுப் பெண் குழந்தையாக நெருப்பில் இருந்து வந்து காஞ்சனமாலையின் மடியில் வந்து விழுகிறாள். குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து போன அரசனும், அரசியும் அந்தக் குழந்தை மூன்று ஸ்தனங்களுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது வானில் தோன்றிய அசரீரி இவளை ஒரு ஆண்பிள்ளை போல வளர்த்து பட்டத்து ராணியாக முடி சூட்டுங்கள். மணப் பருவம் வந்த உடன் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறது.
வீரத்துடன் வளரும் தடாதகை திக்கெட்டும் போர் செய்து வெற்றிகளைக் குவிக்கிறாள். கைலாயத்துக்கே சென்று சிவகணங்களை தோற்கடிக்கிறாள். அங்கே இவளுடன் போரிட வந்த சிவபெருமானின் ஆண்மையும், கம்பீரமும் தடாதகையை நாணச் செய்து பெண்மையின் மென்மையைத் தருகின்றன. உடனே அவளது மூன்றாவது ஸ்னம் மறைந்து இயல்பான பெண்ணாகிறாள்! அடுத்த எட்டாம் நாளே சீரும் சிறப்புமாக மீனாட்சியின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சுந்தரபாண்டியன் என்ற பெயருடனும் தன் மனைவியுடனும் பன்னெடுங்காலம் மதுரையை ஆட்சி செய்யும் இறைவனும், இறைவியும் தங்கள் மகன் முருகனுக்கு, உக்கிர பாண்டியன் என்ற பெயர் சூட்டி மதுரைக்கு அரசனாக்கி விட்டு, கோயிலுக்குள் சென்று தெய்வமாக அமர்ந்துவிடுகின்றனர்.
திருக்கல்யாணம்
இந்தஸ்தலம்சுந்தரேஸ்வரருக்கும்,மீனாட்சிஅம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்த இடமாதலால் இது திருமணத் தலமாகப் போற்றப்படுகிறது.
அதனால்தான் எப்பேர்ப்பட்ட திருமணத் தடையும் மதுரை மீனாட்சி அம்மனைத் வணங்கினால் தவிடு பொடியாகிவிடுகிறதாம்! அதிலும் மூல நட்சத்திரத்தில் பிறந்து திருமணத் தடையால் அவதிப்படுபவர்களுக்கு தடை உடனே நீங்குகிறதாம்!
ஆலவாய் என்னும் நாகம் மதுரை மாநகரைத் தாங்கி இருந்ததால் மீனாட்சியை வணங்குபவர்களுக்கு கேது சம்மந்தமான பிரச்னைகள் தீர்ந்து விடுகிறது.
ஸ்தல விருட்சம்!
கடம்பமரம்தான் இந்தக் கோயிலின் தல விருட்சம். இந்த ஸ்தல மூர்த்தியின் சக்திகள் இந்த விருட்சத்தில் இறங்கியிருப்பதால் கணவனும், மனைவியுமாக இதை சேர்ந்து வலம் வந்தால் தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.
சிவனே சித்தன்!
ஒவ்வொரு தலத்திலும் ஒரு சித்தர் அடங்கியிருப்பார். இங்கு மட்டும்தான் இறைவனே சுந்தரானந்த சித்தராக பக்கத்தில் துர்க்கையுடன் ஐக்கியமாகியிருக்கிறார் என்பது ஐதீகம்! மதுரையை மையமாக வைத்தே நடந்ததால் இங்கு 64 திருவிளையாடல்களுக்கான அத்தனை விசேஷங்களும் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன!
புலவனுக்கு மரியாதை!
அன்னையின் மீது பிள்ளைத் தமிழ்ப் பாடிய குமரகுருபரர் ஒருமுறை அம்மன் சன்னதி முன்நின்று `தொடுக்கும் கடவுள் பழம் பாடல்' என்று குமரகுருபரர் மெய்யுருகிப் பாடிக் கொண்டிருந்தபோது அதைக் கேட்டு மனம் கசிந்த மீனாட்சி, சிறுமியாக மாறி, கருவறையை விட்டு வெளியே வந்து, அங்கு அன்னையை வணங்கிக் கொண்டிருந்த திருமலை நாயக்கரின் தோளின் மீது ஏறி அவர் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கழற்றி குமரகுருபரர் கழுத்தில் போட்டாளாம்.
கண் கொடுத்தகயல்விழியாள்!
திருமலை நாயக்கர்,கோயிலின் முன்புறம் புதுமண்டபம் என்ற மண்டபத்தைக் கட்டி தன் பட்டத்து ராணிக்கும், தனக்கும் சிலை வைக்க ஆணையிட்டார். இதை மேற்பார்வை பார்க்க சுமந்திரத்ரி என்ற ஸ்தபதியை நியமித்தார்.
ராணியின் சிலையின் முழங்கால்களுக்கு மேல் குறுமிளகு அளவு ஒரு மரு போன்ற ஒரு குறை சிற்பத்தில் இருந்தது. இதை ஸ்தபதி கோயில் அர்ச்சகரான நீலகண்ட தீட்சிதரிடம் சொல்ல, அதற்கு அவர் ``ராணிக்கு அந்த இடத்தில் அப்படித்தான் இருக்கும்'' என்ற சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஸ்தபதி இதை மன்னனிடம் சொல்ல கோபமும் சந்தேகமும் கொண்ட மன்னன் தீட்சிதரை இழுத்து வரும்படி உத்தரவிடுகிறார். வீரர்கள் வரும் பொழுது மீனாட்சி அம்மனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த தீட்சிதர் அம்மனுக்கு ஆரத்தி காட்டிக் கொண்டிருந்த கற்பூரத்தில் கண்களைக் காட்டி, தன் கண்களை தானே குருடாக்கிக் கொள்கிறார். விஷயமறிந்த மன்னன் திடுக்கிட்டுப் போய் நீலகண்ட தீட்சிதரிடம் காரணத்தைக் கேட்கும்போது, ``மீனாட்சி அம்மன் சொல்லித்தான் நான் ராணியின் கால்களில் மரு இருக்கும் என்று சொன்னேன். நீங்கள் அதை நம்பப் போவதில்லை. அதனால் நீங்கள் கொடுக்கப் போகும் தண்டனையை எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்'' !என்றாராம்.
பிறகு மீனாட்சி அம்மன் முன், இரவு பகலும் பாடி அவள் அருளால்தான், தன் கண்களைத் திரும்ப பெற்றார் தீட்சிதர்.
திருக்கல்யாண உற்சவம்!
பல நூறு ஆண்டுகளாக சித்திரை மாதத்தில் நடந்துவரும் மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண உற்சவத்தையும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் பல லட்சம் மக்கள் கண்டு பரவசம் அடைகிறார்கள்.
மீனாட்சியின் திருமணத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கவரும் பவழக்கனிவாய்ப் பெருமாளான இவர் பேரழகு வாய்ந்தவர். கள்ளழகர் ஆற்றில் இறங்கி வருவதற்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது.
காலத்திலேயே சைவமும், வைணவமும் ஒற்றுமையுடன் இருந்ததைத் தான் அடுத்தடுத்து நடக்கும் இந்த இரண்டு திருவிழாக்கள் நமக்கு உணர்த்துக்கின்றன.
உற்சவராக ஆற்றில் இறங்கும் கள்ளழகர் அபரஞ்சி மூலிகையும், உலோகமும் கலந்தவர். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை கண்ணாரக் கண்டவர்களின் இல்லத்தில் ஆண்டு முழுதும் சுபிட்சம் பெருகுமாம். பெருமாள் ஆற்றில் இறங்கும்பொழுது வைகுண்டத்தில் இருந்து தெய்வீக சக்தி முழுதும் வந்து ஆற்றில் இறங்குவதாக ஐதீகம். அதனால்தான் கள்ளழகர் இறங்கும் சமயம் ஆற்றுத் தண்ணீரை பக்தர்கள் மீது வாரி வாரி அடிக்கிறார்கள்.
தனது பிரம்மாண்டமான தோற்றத்துடன் இந்த நொடி வரை உலக மக்களைக் கவர்ந்து நிற்கும் இந்தத் திருக்கோயில் கிறிஸ்து பிறப்பதற்கும் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தென்னிந்தியாவிலேயே சிறந்த கோயிலான இந்தத் திருத்தலம் பிரம்மாண்டமான நான்கு கோபுரங்களுடன் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் தெரியும். அரசர்கள் தொடங்கி ஆண்டிகள் வரை எண்ணற்றவர்களின் திருப்பணிகளால் படிப்படியாக எழுப்பப்பட்டது இந்த ஆலயம்!
ஆயிரங்கால் மண்டபத்தில் தொடங்கி கிளிக்கூண்டு மண்டபம், முத்து மண்டபம், இசைத்தூண்கள் நிறைந்த மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், வீரவசந்தராயர் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், திருக்கல்யாண மண்டபம் என எண்ணற்ற மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
வேறு எந்தக் கோயில்களிலும் இல்லாத அளவுக்கு மண்டபங்கள் முழுதும் கலை நுணுக்கம் மிகுந்த உயிரோட்டமான சிற்பங்கள் கோயில் முழுக்க இருக்கின்றன.
மீனாட்சியின் திருமேணி முழுவதும் மரகதக் கல்லால் செய்யப்பட்டது என்பதால், புதன்திசை நடப்பவர்கள், மீனாட்சியை வழிபட்டால், அவர்கள் வாழ்வில் சுபிட்சமும் வளமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். மீன் போன்ற அட்சங்களை (கண்களை) உடைய மீனாட்சி. மீன் எப்படி அல்லும் பகலும் உறங்காது விழித்திருக்கிறதோ அது மாதிரி உறங்காமல் விழித்திருந்து தன் பக்தர்களைக் காத்து வருபவள். அப்படிப்பட்டவளை வணங்கி நாம் நலம் பெறுவோமா...
மீனாட்சிக்கு மிலிட்டரி காலணி கொடுத்த ஆங்கிலேயர்!
மதுரையா? சிதம்பரமா?
எல்லாச் சிவன் கோயிலிலும் பொதுவாக அம்பாள் இடப்பக்கமாகத்தான் அமர்ந்திருப்பாள்.ஒரு சில ஸ்தலங்களில் மட்டும் அம்பிகை வலப்பக்கமாக இருப்பாள்.
இந்த ஸ்தலத்திலும் அம்பாள் ஈசனின் வலப் பக்கமாக இருப்பதால் இங்கு அம்பாளுக்குத்தான் முதலிடம். அம்பாள் பெயரில்தான் அத்தனை சொத்துக்களும். அதனால்தான் நம் வீடுகளில் மனைவியின் செல்வாக்கு ஓங்கியிருந்ததால் ``என்ன, வீட்ல மதுரை ஆட்சியா?'' என்று கேட்கும்
வழக்கம் வந்தது.
கோவிலுக்குச் செல்ல
சென்னையில் இருந்து ட்ரெயின், ஆம்னி பஸ்கள், விமானம், கார் என அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி செல்லலாம். சாதாரணமாக ஒருவர் சென்று வர 2000 ரூபாய் வரை செலவாகும்
0 comments:
Post a Comment