Tuesday, July 8, 2008

எளிய உடற்பயிற்சி செய்வீர்; புற்றுநோயை வெல்வீர்!



அன்றாடம் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு உகந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், நாள்தோறும் தவறாமல் 30 நிமிடங்கள் மட்டுமே எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே, நம்மை புற்றுநோய் அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

ஸ்வீடனிலுள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்டின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவு, தினமும் உடற்பயிற்சி செய்வோருக்கு, அதைக் கடைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புற்றுநோய் பாதிப்பால் இறக்கும் வாய்ப்பு 34 சதவிகிதம் குறைவு என்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு, 45 முதல் 79 வயது வரையிலான 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி முறைகள் ஆகியவற்றை 7 ஆண்டுகள் கண்காணித்து மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலக்கட்டத்தில், 3,714 பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகினர்; அந்நோய்க்கு 1,153 பேர் பலியாயினர்.

புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து காப்பதில், உடற்பயிற்சி பெரும் பங்காற்றுகிறது என்பது அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

தினமும் காலை எழுந்தவுடன், சுமார் 30 நிமிடத்துக்கு நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சியை செய்தாலே போதுமானது என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்

0 comments: