Wednesday, July 16, 2008

நெஞ்சமெல்லாம்

குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிற்கும் அந்த தொலைதூரப் பேருந்து பயணிகள் சுமையுடன் பயணித்திருந்தது.

ஐம்பது ரூபாய் தந்த பெரியவரிடம்,

``ஐயா... மீதி முப்பது ரூபாய் நீங்க இறங்கையில தரேன்..''

டிக்கெட்டில் மீதத் தொகையை குறிப்பிட்டு பெரியவரிடம் கொடுத்து மற்ற பயணிகளை நெருங்கினார் பேருந்து நடத்துனர்.

இந்தச் செயல் மற்ற பயணிகளுக்கும் தொடர்ந்தது. பயணிகள் இறங்குமிடத்தில்

மீதத் தொகையை பையிலிருந்து எடுத்துத் தந்த நடத்துனரை கோபமாய் பார்த்தார் பெரியவர்.

``ஏங்க கண்டக்டர். உங்ககிட்ட சில்லறை பணம் இருந்துட்டும் டிக்கெட் வாங்கும் போதே மீதியைத் தர ஏன் உங்களுக்கு சங்கடம்... போய்ச் சேர வேண்டிய இடம் வரைக்கும் நாங்க உங்களையே பாத்துட்டே இருக்க வேண்டியதா இருக்கு...''

``ஐயா... ஒவ்வொருத்தரும் போய்ச் சேரவேண்டிய இடம் வரதுக்குள்ள குட்டித்

தூக்கத்தை அசதியா தூங்கிடுவாங்க... அந்த நேரம் பாத்து பிக்பாக்கெட்காரன் பணத்தை அபேஸ் பண்ணிடுவான்... இப்போ உங்களுக்கு வரவேண்டிய பணத்துக்காக நீங்க தூங்காம உங்களையே பாதுகாத்துகிட்டீங்கதானே...!''

பெரியவருக்கு சந்தோஷமாய் இருந்தது.

0 comments: