இரவு 10 மணி... இளைஞன் பாஸ்கர் அரண்மனை போன்ற தன் வீட்டில் டைனிங் டேபிளில் தானே சீட்டு விளையாடிக் கொண்டிருந்தான். சீட்டுக்கள் விளையாடும்போது அவனது கைவிரல்கள் நான்கிலும் வைரமோதிரங்கள் மின்னின. அவன் டீஷர்ட் பட்டன் போடாததால் மைனர்செயின் பளிச்சிட்டது. டேபிள் மேல் விரித்து இருந்த உயர்தர துணி டேபிளை முழுவதும் மறைத்திருந்தது. சுவரின் சித்திரங்கள் அவன் பணக்காரன் என பறை சாற்றியது. மேலே தொங்கிய மின் விளக்கு அவனது முகத்தையும் புஜங்களையும், மார்பையும் பிரகாசமாக்கி அவனுடைய கட்டுமஸ்தான தேகத்தை அழகுபடுத்தியது.
திடீரென அந்த அறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே ஒருவன் குதித்தான். ஒல்லியான தேகம் கறுப்பு நிறம். சுமார் உயரம். கையில் துப்பாக்கி. ``உன் மோதிரம், செயின் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து விடு, தகராறு செய்தால் என் துப்பாக்கி பேசும்'' என பாஸ்கரனை நோக்கிக் கத்தினான் அத்திருடன்.
பாஸ்கர் அவனை நன்கு நிமிர்ந்து பார்த்து நிதானமாக, ``ஏன் இப்படி அவசரப்படுகிறாய்? உன் கையிலோ துப்பாக்கி, நானோ நிராயுதபாணி. உட்கார் அப்படி'' எனக் கூறினான். ``நீ சீட்டு விளையாடுவது உண்டா?'' என கேட்டுக்கொண்டே, பாஸ்கர் தனது மோதிரத்தைக் கழற்றத் தொடங்கினான். ``இந்த மாதிரி சீட்டுகள் வந்திருந்தால், நீ எந்த சீட்டை முதலில் இறக்குவாய்? கிட்டேவந்து பார்'' என்றான் பாஸ்கர். திருடன் மேஜையில் சாய்ந்து குனிந்து சீட்டுக்களை பார்க்க முயன்றான்.
``நீ இப்படி மேஜை மீது சாய்ந்திருக்கிறாயே! நான் இப்போது இந்த மேஜைக்கு அடியில் உள்ள ஸ்விட்சை அமுக்கினால் இந்த மேஜை அப்படியே உன் மீது சாய்ந்து உன்னைக் கீழே தள்ளிவிடும். நகராதே, ஸ்விட்சை அமுக்க ஒரு வினாடிதான் ஆகும். என் புஜ பலத்தைப் பார்த்தாயா? மூணு வருஷம் `ஜிம்'போய் வந்த உடம்பு இது'' என நிதானமான, மிகக் கண்டிப்பான குரலில் கண் இமைக்காது பாஸ்கர் திருடனை மிரட்டினான்.
திருடன் திடீரெனப் பயந்து, பாய்ந்து ஜன்னல் வழியே, வந்த வழியாகவே குதித்து வெளியே ஓடி விட்டான். பாஸ்கர் சிரித்துக் கொண்டே தனது இருகைகளால் தான் உட்கார்ந்து இருந்த சக்கர நாற்காலியின் சக்கரங்களை தன் கைகளால் சுழற்றி மேஜையிலிருந்து வெளியே வந்தான். தன் கால்கள் இல்லாது திருடனை விரட்டிய பெருமை முகத்தில் ஜொலித்தது. றீ
Wednesday, July 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment