Saturday, July 19, 2008

மாத்திரை

நேற்று வாங்கிவந்த மாத்திரை அப்படியே பிரிக்கப்படாமல் அலமாரியில் கிடந்தது. ``இரண்டு நாளாய் காய்ச்சலென்று படுத்துக்கிடந்தது வெறும் நடிப்போ! வந்த புதுமருமகள் எல்லா வேலையையும் செய்யட்டுமே என்ற சராசரி மாமியாரின் மனநிலையோ! என்று எண்ணிய கணேசன், தன் மனைவியிடம் கேட்டார்.

``என்ன செண்பகம், ரெண்டு நாளா காய்ச்சல்ன்னு படுத்துக்கிடந்த. நேத்தி வாங்கி வந்த மாத்திரை அப்படியே இருக்கு, உனக்கு என்னாச்சு?''

``அது ஒண்ணுமில்லீங்க... மருமகள் வீட்டுக்கு வந்த மறுநாளே நம்ம பையன் பாலு `அம்மா காபி ரெடியா?', `அம்மா வெந்நீர் போட்டுட்டியா?'

`அம்மா டிபன், டைம் ஆச்சி', `அம்மா இன்னைக்கு லஞ்ச்க்கு வரமாட்டேன்' என ஒவ்வொரு முறையும் எங்கிட்ட சொல்லும்போதும் கூடயிருந்த மருமக புவனாவின் முகம் சுருங்கி வாடிப்போனதைப் பார்த்தேன். அதான்'' என்றாள் அவர் மனைவி.

மாமியாரென்றாலே இப்படித்தான் என்று மனதில் யூகம் செய்து வைத்திருந்த பிம்பம் கணேசன் உள்ளத்தில் உடைந்து சிதறியது..

0 comments: