நாட்டாமை பூமிநாதன் தலைமையில் ஊர்க் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
``நாட்டாமை, நம்ம ஊர் அம்மன் கோயிலுக்குத் தேர் செஞ்சு தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்யுங்க'' என்றார் ஒருவர். அதைப் பலரும் ஆமோதித்துப் பேசினர்.
இச்சமயம் கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் எழுந்து ``நாட்டாமை என்னை மன்னிக்கணும். தேர் செய்யுறது நல்லதுதான். அதுக்கு முன்னாலஒரு வண்டி செய்யணும்'' என்றான்.
``ஏய், என்ன பேசுற? வண்டியில ஏத்தித்தான் பொணம் சுடுகாட்டுக்குப் போகுமோ?பாடை கட்டித் தூக்கிட்டுப் போனா போகாதோ? போகமாட்டேன்னு சொல்லட்டும், அப்ப பார்த்துக்கிடலாம்'' என்று அந்த நடுத்தர வயதுக்காரர் கிண்டலடித்தார்.
அந்த இளைஞனின் கண்கள் சிவந்தன. அவரைப் பார்த்து ``நெஞ்சுல கை வைச்சுச் சொல்லுங்க. இன்னிக்கு வரைக்கும் முள்காட்டுக்கு நடுவுல இருக்கிற சுடுகாட்டுக்கு எப்பவாவது பொணம் சுமந்துருக்கீங்களா?'' என்றான்.
கூட்டம் தலை கவிழ்ந்தது.
நாட்டாமை எழுந்து ``தூக்குறவனுக்குத்தான் தோள் வலி தெரியும். அவன் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். நாம இப்ப தேரைப் பற்றிப் பேச வேண்டாம். அவன் சொன்னது மாதிரி வண்டிதான் தேவை. நாளைக்கே வண்டி செய்ய ஏற்பாடுகள் நடக்கும்'' என்றார்
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment