புரோக்கர் கொடுத்த ஜாதகங்களை அலசி, சங்கருக்கு ஏற்றாற்போல் இரண்டு பெண்களைத் தேர்வு செய்தாள் கமலம்.
சுமதி, வசந்தி இருவரும் டிகிரி முடித்திருந்தார்கள். அழகிலும் சமமாயிருந்தார்கள்.
சுமதியைவிட வசந்தியின் வீடு கொஞ்சம் வசதி.இருபது பவுன், இருபதாயிரம் செய்வதாகச் சொன்னார்கள்.
சுமதியைக் கட்டினால் பத்துப் பவுன், பத்தாயிரம்தான் தேறும். அதுவும் படித்து முடித்து அவளே வேலைக்குப் போய் அவள் கல்யாணத்திற்காக சேர்த்ததாம். வீட்டு நிலைமை அப்படி.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துதான் கமலம் வசந்தியைத் தேர்வு செய்தாள்.
ஆனால்,சங்கர் சுமதியைக் கட்டிக்கொள்கிறேன் என்றதும் கமலம் புரியாமல் விழித்தாள்.
அவன் நிதானமாகச் சொன்னான்.
``அம்மா... நாம மிடில் கிளாஸ்... காசு பணத்தோட அருமை தெரிஞ்சி சிக்கனமா இருந்து இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டிருக்கோம். வசந்திக்கு இருபது பவுன், இருபதாயிரம் போடறாங்கன்னா அது அவங்கப்பா பணம். ஆனா சுமதி அப்படியில்லை. அவள் கல்யாணத்துக்கு அவளே சம்பாதிச்சி பத்துப் பவுன், பத்தாயிரம் சேர்த்து வச்சிருக்கா. வசதியா வாழ்ந்த வசந்தியைவிட காசு, பணத்தோட அருமை தெரிஞ்ச சுமதியைக் கல்யாணம் பண்ணினா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்'' என்றான் சங்கர்
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment